திருச்சி மேற்கு தொகுதிக்குட்பட்ட காவல் நிலையங்களில் பணிபுரிபவர்களிடம் இருந்து அஞ்சல் வாக்குகள் பெறப்பட்டன. தில்லை நகர், அரசு மருத்துவமனை, நீதிமன்றம், எடமலைப்பட்டிபுதூர், உள்ளிட்ட ஆறு காவல் நிலையங்களில் பணியாற்றும் அதிகாரிகள் முதல் காவலர்களிடம் அஞ்சல் வாக்குகளை திமுக.வுக்கு ஆதரவாக பெறுவதற்காக, 2000 க்கு மேல் கவரில் வைத்து பணம் வழங்கப்பட்டதாக காவல் ஆணையர் மேகநாதனுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் விசாரணை நடத்த அவர் உத்தரவிட்டார்.
இந்த 6 காவல்நிலையங்களிலும் 90 க்கும் மேற்பட்டவர்களுக்கு பணம் விநியோகிக்கப்பட்டுள்ளது என்பதும், சட்டவிரோதமாக பணம் வழங்கியதில் காவல் ஆய்வாளர் சிவக்குமார், எழுத்தாளர் பாலாஜி உள்ளிட்ட 6 பேருக்கு தொடர்பு உள்ளது என்பதும் உறுதியானது. இதனைத்தொடர்ந்து சிவக்குமார் உள்ளிட்ட 6 பேரை பணியிடை நீக்கம் செய்து காவல்ஆணையர் லோகநாதன் உத்தரவிட்டார்.
மேலும், திமுக.வுக்கு ஆதரவாக ஓட்டுப் போட காவல்துறையைச் சேர்ந்தவர்களுக்கு பணம் கொடுப்பதற்காக, காவல் ஆய்வாளர் சிவக்குமாரை உள்ளிட்டவர்களை மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் கே.என். நேரு தூண்டிவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாகவும் ரகசிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கே.என்.நேரு மீதான குற்றச்சாட்டு உறுதியானதால், அவருக்கு எதிராக திருச்சி காவல்துறை சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுக்கவும் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.