தமிழக அரசின் உளவுத்துறை அதிகாரிகள் மீது முதல்வர் பழனிசாமி கோபமாக இருப்பதாக நம்பகமான நட்பு வட்டாரத்தில் இருந்து தகவல் கிடைத்தது. உண்மையான தகவலா? உறுதி செய்துகொள்ள வடக்கு மண்டலத்தில் உள்ள உளவுத்துறை அதிகாரிகயை தொடர்பு கொண்டோம். தேர்தல் நேரம்தானே, ஜாலியாகவே பேசலாம் என்ற பீடிகையோடு பேசினார் அந்த அதிகாரி…
கொரோனோவுக்கு முன்பு முதல்வர், தனது தலைமையிலான ஆட்சி மீது எந்த சந்தேகமும் இல்லாமல்தான் இருந்தார். ஆனால், கடந்தாண்டு மத்தியில் கொரோனோ உச்சத்தில் இருந்தபோதுதான், 2021 ல் மீண்டும் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்குமா? என்ற சந்தேகம் முதல்வருக்கு வந்தது. அவருக்கு இருந்த சந்தேகத்தை உறுதிப்படுத்தும் வகையில்தான் அவ்வப்போது வழங்கப்பட்டு வந்த உளவுத்துறையும் உண்மைத்தகவல் அடங்கிய அறிக்கையை வழங்கியிருந்தது.
அதன் எதிரொலியாகதான், கொரோனோ தடுப்புப் பணிகள், நிவாரண உதவிகள் உள்ளிட்டவற்றை முடுக்கிவிட்டு, கொரோனோ தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கைகளிலும், முதல்வரே களத்தில் இறங்கி வேகம் காட்டினார். மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் செய்து சுறுசுறுப்பாக பணியாற்றி, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதால், அன்றைய காலக்கட்டத்தில், மாநிலம் முழுவதும் மக்களிடையே ஆளும்கட்சி மீதான செல்வாக்கு அதிமாகவே இருந்தது.
அதன்பிறகு கடந்த ஜனவரி மாதம் பொங்கல் திருநாளையொட்டி அறிவிக்கப்பட்ட ரொக்கப்பரிசு உள்ளிட்டவற்றாலும் அதிமுக ஆட்சி மீது மக்களிட்ம் இருந்த செல்வாக்கு குறையவில்லை. ஆனால், பிப்ரவரி மாதத்தில், அதிமுக ஆட்சிக்கு எதிரான விமர்சனங்கள், தேர்தல் பரப்புரையின் போது அதிகமாக முன் வைக்கப்பட்டதாலும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி வி.கே. சசிகலா , சிறையில் இருந்து விடுதலையாகி சென்னை திரும்பிய காரணத்தாலும், அதிமுக அரசின் மீது, குறிப்பாக முதல்வர், துணை முதல்வர் மீதான செல்வாக்கு, கடகடவென சரிய தொடங்கியது.
சசிகலா வருகையால் ஏற்பட்ட பதற்றத்தின் காரணமாக, முதல்வர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். அவற்றையெல்லாம் தவிர்க்கலாம் என்று அதற்கு முன்பாகவே உளவுத்துறையில் இருந்து அவருக்கு ஆலோசனை கூறப்பட்டது.ஆனால், அவற்றை தவிர்த்துவிட்டு, ஜெயலலிதா நினைவிடத்தை மூடியது, அதிமுக தலைமை அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பை அதிகரித்தது போன்ற செயல்களால், ஆட்சி பீடத்தின் தலைமையில் இருந்த இரட்டையர் பயந்து போய் இருக்கிறார்கள் என்பதை அவர்களின் பதற்றமான செயல்கள் மூலமே வெளிப்பட்டது.
அதனைக் கண்டு அதிமுக ஆதரவு தரப்பு மட்டுமின்றி, அதிமுக.விற்குள்ளேயே சலசலப்பு எழுந்து, அதிமுக ஆட்சி ஆட்டம் காண்கிறதோ என்ற அச்சத்தை அவர்களிடம் ஏற்படுத்தியது. சசிகலா வருகை, அதனால் அடுத்தடுத்த நாட்களில் சென்னையில் ஏற்பட்ட அரசியல் நிகழ்வுகள் போன்றவற்றை மக்கள் உன்னிப்பாக கவனிக்கிறார்கள் என்று விரிவான ஒரு அறிக்கையையும் உளவுத்துறை முதல்வரிடம் வழங்கியது. அப்போதும் உளவுத்துறையின் ஆலோசனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.
அதுபோலவே, தேர்தல் நெருங்கிவிட்ட நேரத்தில், குறிப்பிட்ட ஒரு சமுதாயத்திற்கு சலுகை அளிப்பது போன்ற நடவடிக்கையையும் உறுதிமொழியாக அறிவித்துவிட்டு, தேர்தலுக்குப் பிறகு அதை நிறைவேற்றலாம் என உளவுத்துறை ஆலோசனை வழங்கியது. மேலும், அந்த அறிவிப்பினால் அரசியல் ரீதியாக ஏற்படும் பாதகம், சாதகம் போன்றவற்றை, பல்வேறு தரப்பினரிடம் இருந்து கருத்துகளைப் பெற்று விரிவான அறிக்கையை தயாரித்து வழங்கப்பட்டது. அதிலேயே அதிமுக.வுக்கு எங்கெல்லாம் செல்வாக்கு இருக்கிறது. எந்த எந்த பகுதிகளில் செல்வாக்கு சரியத் தொடங்கியிருக்கிறது என புள்ளிவிவரங்களோடு குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், அந்த எச்சரிக்கையையெல்லாம் புறம்தள்ளிவிட்டு, முதல்வர், அவரது எண்ணத்தில் தோன்றியவற்றை எல்லாம் செயல்படுத்தினார். மேலும் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை தரப்பட்ட விவகாரத்திலும் உண்மை நிலையை தெளிவாக குறிப்பிட்டிருந்தோம். அதன் மீதும் உரிய முறையில் கவனம் செலுத்தப்படவில்லை. இதுபோன்ற காரணங்களால் ஏற்பட்டுள்ள பிரதிபலிப்பைதான் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள இன்றைய தேதியில் முதல்வர் எதிர்கொண்டு வருகிறார்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிப்ரவரி 27 ஆம் தேதிக்குப் பிறகு, அதிமுக அரசுக்கு செல்வாக்கு இருக்கிறதா? எதிர்க்கட்சிகளுக்கு எந்தெந்த பகுதிகளில் எல்லாம் செல்வாக்கு இருக்கிறதா? என்பது போன்று, ஒரு அரசியல் கட்சிக்கு சார்பாக கள நிலவரங்களை சேகரித்து தாருங்கள் என்று எங்கள் துறை மேலதிகாரி ஒருநாளும் எங்களிடம் கேட்டதில்லை.
பொதுவான சட்டம் ஒழுங்கு நிலவரங்களையும், வாக்குச்சாவடிகள் அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள பகுதிகளில் பதற்றம் ஏற்படுமா, பொதுமக்களுக்கு அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறதா போன்ற தகவல்களை தான் திரட்டி வழங்கிக் கொண்டிருக்கிறோம். மற்றபடி, எந்தவொரு கட்சிக்கும் சாதகமாக, கடந்த மார்ச் 1 ஆம் தேதியில் இருந்து எங்களை செயல்பட யாரும் நிர்ப்பந்திக்க வில்லை. அதனால், நிம்மதியாக எங்களுக்குரிய பணிகளை செய்து கொண்டிருக்கிறோம்.
பொதுவாக, சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் தமிழகம் அமைதிப் பூங்கா என்று சொல்வார்கள். இந்த தேர்தலின்போதும், அந்த எண்ணத்திற்கு எந்த பங்கமும் வந்துவிடாது என்பதற்கான சூழல்தான் இன்றைய தேதியில் நிலவிக் கொண்டிருக்கிறது. அதனால், உளவுத்துறை மீது மார்ச் மாதத்தில் முதல்வருக்கு கோபம் வருவதற்கு வாய்ப்பும் இல்லை” என்று கூறி மறு கேள்வி கேட்பதற்கே வாய்ப்பு தராமல் போன் இணைப்பை துண்டித்தார், அந்த உளவுத்துறை அதிகாரி.