Tue. May 7th, 2024

திருநெல்வேலி மாவட்டத்தில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணி வேடபாளர்கள் ஐ.எஸ். இன்பதுரை(ராதாபுரம்) கணேசராஜா (நாங்குநேரி) ஜெரால்டு (பாளையங்கோட்டை) ஆகியோரை ஆதரித்து பணகுடி, நாங்குநேரி, மேலப்பாளையம் குறிச்சி ஆகிய இடங்களில் முதல்வர் பழனிசாமி இன்று பரப்புரையில் ஈடுபட்டார்.

முதல்வரின் பேச்சு விவரம் இதோ…..

தீய சக்தியான திமுகவை அப்புறப்படுத்த வேண்டும் என்று அன்றே புரட்சித்தலைவர் எம்ஜிஆர் கூறியிருந்தார். இந்த தேர்தலில் திமுகவிற்கு முற்றுப்புள்ளி வைத்து, புரட்சித்தலைவரின் லட்சியத்தை நிறைவேற்றுவோம்/

தி.மு.க.வில் கருணாநிதிக்குப் பின் மு.க. ஸ்டாலின், அவருக்குப் பின் உதயநிதி என ஒரே குடும்பத்தில் இருந்தே வருகிறார்கள். இதுபோன்ற வாரிசு அரசியல் தமிழகத்திற்கு மட்டுமல்ல, இந்திய திருநாட்டுக்கே நல்லத்தல்ல. தி.மு.க ஒரு குடும்பக் கட்சி.

தமிழகத்தில் கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்த வாரிசுகள்தான் தி.மு.க.வில் உயர்ந்த பதவிக்கு வர முடியும். மத்தியில் ஆட்சியில் பங்கு வகித்த போதும் செல்வாக்கு மிக்க அமைச்சர் பதவிகளை அவரது குடும்பத்தினர்தான் பெற்றார்கள். அதற்கு முற்றிலும் மாறுபட்ட இயக்கமாக இருப்பதுதான் அதிமுக. நாம் உண்மையான விசுவாசத்துடன் உழைத்தால் முதல்வர் உள்ளிட்ட எந்தவொரு பதவிக்கும் எளிதாக வரமுடியும்.

பல்வேறு துறைகளிலும் முதல் மாநிலமாக நமது தமிழகம் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது.

அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்குப் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். விவசாயிகள் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு அதிமுக அரசின் திட்டங்கள்தான் காரணம்.

தமிழக மக்களின் நலனுக்காக அம்மா அரசின் எண்ணற்ற முன்னெடுப்புகள் மூலம், அடுத்த 5 ஆண்டுகளிலும் தொடர்ந்து நாம் வெற்றிநடை போடுவோம் என்பதில் எனக்கு எள்ளளவும் ஐயமில்லை.

குடிமராமத்து திட்டத்தால் மழை நீர் வீணாகவில்லை. வருண பகவான் கருணையால் ஏரி, குளங்கள், குட்டைகள் நிரம்பியுள்ளன.

கடவுளும் நம்ம பக்கம், இயற்கையும் நம்ம பக்கம். நமது ஆட்சி வருவதற்கு இயற்கை நமக்கு சாதகமாக இருக்கிறது. நீர்நிலைகள் நிரம்பியதால் அதிக விளைச்சல் இந்த ஆண்டு கிடைத்திருக்கிறது.

கிராமத்திலிருந்து ஒரு விவசாயி முதலமைச்சராக இருப்பது பிடிக்காமல் பொய் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார் ஸ்டாலின். என்னை கொச்சைப்படுத்தி பேசுவதாக நினைத்துக் கொண்டு எல்லா விவசாயிகளையும் கொச்சைப்படுத்தி பேசி வருகிறார் இந்தத் தேர்தலில் திமுகவிற்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்,

இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.