கொரோனோ தொற்று பரவல் அச்சம் காரணமாக, மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்வதை தவிர்த்துவிட்ட பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பாமக.வினர் போட்டியிடும் தொகுதிகள் மற்றும் அதிமுக வி.ஐ.பி.க்கள்போட்டியிடும் தொகுதிகளில் மட்டுமே பிரசாரம் செய்து வருகிறார்.
அந்தவகையில், திருவள்ளூர்மாவட்டம் தண்டலத்தில் கும்மிடிப்பூண்டி பா.ம.க வேட்பாளர் எம்.பிரகாஷை ஆதரிதது பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
உலகளவில் மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ள நாடுகள் குறித்து எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில், நார்வே, சுவீடன், பின்லாந்து உள்ளிட்ட நாடுகள் இடம் பெற்றுள்ளன. அந்த நாடுகளில் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட துறைகள் மிகவும் சிறந்து விளங்குகின்றன.
அதன் காரணமாக மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் மூன்று நாடுகளும் இடம் பெற்று சொர்க்க பூமியாக திகழ்கின்றன . அந்த மூன்று நாடுகளைப் போல தமிழ்நாடும் சொர்க்க பூமியமாக மாற வேண்டும் என்றால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும்.
இதனிடையே, பாமக தலைவர் ஜி.கே.மணி போட்டியிடும் பென்னாகரம் தொகுதியில் இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர், அ.தி.மு.க ஆட்சியில் தமிழ்நாடு சிறப்பான வளர்ச்சியை பெற்றுள்ளது. அதற்கு மாறாக, தி.மு.க.வுக்கு ஆதரவு தந்தால், பல ஆண்டு காலம் பின்னோக்கி தமிழகம் சென்று விடும். திமுக கூட்டணிக்கு வாக்களித்தால், தமிழகத்தின் வளர்ச்சி கேள்விக்குறியாகிவிடும், என்றார் அன்புமணி.