Fri. Nov 22nd, 2024

அறந்தாங்கியில் காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கியுள்ள ராமச்சந்திரன், அதிமுக வேட்பாளர் ராஜநாயகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் முதல் சுற்றுப் பிரசாரத்திலேயே தடுமாறிக் கொண்டிருக்கிறார். இத்தனைக்கும் இவரது தந்தையான காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் எம்.பி.யின் செல்வாக்கும் கூட வெற்றிக்கோடு அருகே கூட அழைத்துச் செல்லவில்லை என்பதுதான் பரிதாபம். இந்த தொகுதியை காங்கிரஸுக்கு ஒதுக்கக் கூடாது என்று போராட்டம் நடத்திய திமுக.வினர், இப்போதும் அதே கோபத்தோடுதான் தான் இருக்கிறார்கள். மேலும், திருநாவுக்கரசர், தனது எம்.பி.தொகுதிக்குட்பட்ட மற்ற தொகுதிகளில் பிரசாரம் செய்யாமல் அறந்தாங்கியிலேயே தங்கியிருப்பதால், அறங்தாங்கி திமுக.வினர் ராமச்சந்திரன் வெற்றிக்காக உற்சாகமாக பணியாற்றவில்லை.இதனால், ராமச்சந்திரனின் வெற்றி கேள்விக்குறியாகதான் இருக்கிறது, என்கிறார்கள் காங்கிரஸ் பிரமுகர்கள்.

மயிலாடுதுறையில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ.,ராஜ்குமார் போட்டியிடுகிறார். 2006 தேர்தலில் வெற்றிப் பெற்று எம்.எல்.ஏ., வான அவர், பதவியில் இருந்த 5 ஆண்டுகளிலும் எந்தவொரு வளர்ச்சித்திட்டங்களையும் அமல்படுத்தாததால் பொதுமக்கள் அவர் மீது கோபத்தோடுதான் இருக்கிறார்கள். அதிமுக கூட்டணியில் பாமக மாநில துணைப் பொதுச் செயலாளர் பழனிச்சாமி போட்டியிடுகிறார்.

வன்னியரான இவர் தொகுதியில் உள்ள வன்னியர் வாக்குறுதிகளை பெரிதாக நம்பியிருக்கிறார். மேலும், தொகுதி பாமக.வுக்கு ஒதுக்கப்பட்டதால் அதிமுக சிட்டிங் எம்.எல்.ஏ., ராதாகிருஷ்ணனும் வருத்தத்தில்தான் இருக்கிறார். இதனால், அவரது ஆதரவாளர்களும், அதிமுக.வினரும் பிரசாரத்தில் சுணக்கம் காட்டுவதால், திணறிக்கொண்டிருக்கிறார் பழனிச்சாமி. இரண்டு கூட்டணியிலும் குளறுபடிகள் நிலவுவதால், ஏப்ரல் பிறந்தவுடன்தான் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பது தெளிவாகும் என்கிறார்கள் தொகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள்.

கிள்ளியூர் தொகுதியில் சிட்டிங் காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜேஷ்குமார் மீண்டும் களத்தில் நிற்க, அவருக்கு எதிராக அதிமுக கூட்டணியில் த.மா.கா. வேட்பாளர் ஜூடுவேல் போட்டியிடுகிறார். இவர், முன்னாள் எம்.எல்.ஏ., டாக்டர் குமாரதாஸின் மகன் என்பதால் தொகுதி முழுவதும் பிரபலமாக இருக்கிறார். ஆனால், அதிமுக.வினர் வாக்குசேகரிப்பில் உற்சாகம் காட்டாததால், முதல் சுற்றிலேயே பின்தங்கியிருக்கிறார் ஜூடுவேல். சிட்டிங் எம்.எல்.ஏ., என்ற அதிருப்தி இருந்தாலும் திமுக.வினரின் களப்பணியும், கூட்டணி கட்சியினரின் ஒத்துழைப்பும் நன்றாக இருப்பதால், மீண்டும் எம்.எல்.ஏ., வாக பதவியேற்பார் ராஜேஷ்குமார் என்பதுதான் களயதார்த்தம்.

விளவங்கோடு தொகுதியில் சிட்டிங் எம்.எல்.ஏ.வான விஜயதாரணி, மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார். இந்த முறை போட்டியிடுவதற்கான வாய்ப்பை பெறுவதற்கே காங்கிரஸ் தலைமையோடு கடுமையாக போராடியவர் இவர். இதற்கிடையே பாஜக.வுக்கு தாவப்போகிறார் என்ற வதந்தியையும் அவரது எதிரணியினர் கிளப்பிவிட்டனர். அதையெல்லாம் தவிடு பொடியாக்கியவர், தன்னை எதிர்த்து போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஜெயசீலனை எளிதாக வீழ்த்தி விடுவார் என்கிறார்கள் அங்குள்ள மூத்த ஊடகவியலாளர்கள்.

காங்கிரஸில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால், காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் சாமுவேல் ஜார்ஜ், சுயேட்சையாக போட்டியிட்டாலும், இந்த தொகுதி மக்கள் பாஜக. வெற்றி பெற ஒருபோதும் துணைபுரிய மாட்டார்கள் என்பதுதான் கடந்த கால வரலாறு.

குளச்சல் தொகுதியில் காங்கிரஸ் சிட்டிங் எம்.எல்.ஏ பிரின்ஸ் மீண்டும் போட்டியிடுகிறார். தொகுதி பிரச்னைக்காக சட்டமன்றத்தில் அதிகமாக குரல் கொடுத்தவர் என்பதால், அவரின் வெற்றிக்காக கூட்டணிக் கட்சியான திமுக உள்ளிட்டவர்கள் உற்சாகமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். எதிர்முகாமில், அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளர் ரமேஷ் போட்டியிடுவதால், மீனவர்கள் அதிகம் உள்ள தொகுதியில் காங்கிரஸுக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. 2016 தேர்தலில் போட்டியிட்டு, பிரின்ஸிடம் 26 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியபோதும் தொகுதியில் அனுதாபம் இல்லை என்பதுதான் பரிதாபம்.

நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் போட்டியிடுகிறார். பெரும் பணக்காரரான இவர், கொரோனோ காலத்தில் தொகுதி மக்களுக்கு தேவையான உதவிகளை தாராளமாக செய்ததால், வாக்காளர்களிடம் அபரிதமான செல்வாக்கு இருக்கிறது. திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினரையும் பலமாக கவனிப்பதால், வாக்கு சேகரிப்பில் உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது. இவரை எதிர்த்து களமிறங்கியுள்ள அதிமுக வேட்பாளர் கணேஷ்ராஜா, ரூபி மனோகரனின் தடபுடலான வாக்கு சேகரிப்பு பாணிக்கு ஈடு கொடுக்க முடியாமல் தடுமாறுகிறார். சொந்த செல்வாக்கு மற்றும் கட்சிச் செலவாக்கு பலவீனமாக இருப்பதால் பின்தங்கியே இருக்கிறார் கணேஷ்ராஜா. 2019 ல் நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர் ரூபி மனோகரன் என்பதால், அனுதாப அலையும் வெற்றி கொடியை உயர்த்திப் பிடிக்க துணை புரிந்து கொண்டிருக்கிறது.

தென்காசியில் காங்கிரஸ் வேட்பாரளாக போட்டியிடும் பழனி நாடார், திமுக வாக்குகள், சிறுபான்மையினர் ஆதரவு, பாஜக எதிர்ப்பு வாக்குகள் பெரிதாக கைக்கொடுக்கும் என உற்சாகமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். எதிர்முகாமில், அதிமுக சிட்டிங் எம்.எல்.ஏ செல்வமோகன்தாஸ் மீண்டும் போட்டியிடுகிறார். கடந்த 5 ஆண்டுகளில் தொகுதி வளர்ச்சிக்காக பெரிதாக எதுவும் செய்துவிடவில்லை என்ற அதிருப்தியும், வன்னியருக்கு உள் ஒதுக்கீடு கொடுத்ததால், தேவர் சமுதாய மக்களின் எதிர்ப்பும் அதிமுக.வை ஆட்டம் காண செய்து கொண்டிருக்கிறது. இவருக்கு எதிராக வீசும் எதிர்ப்பு அலை, பழனிநாடாரை விசிலடிக்க வைக்கிறது.

திருவைகுண்டம் தொகுதியில் சிட்டிங் எம்.எல்.ஏ., எஸ்.பி.சண்முகநாதன் 3 வது முறையாக போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். ஹாட்ரிக் சாதனை நிகழ்த்த துடிக்கும் எஸ்.பி.சண்முகநாதனுக்கு அதிர்ச்சி வைத்தியம் தருவார் அமிர்தராஜ் என்கிறார்கள் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் கருத்துக் கணிப்பு மேற்கொண்ட மூத்த ஊடகவியலாளர்கள்.


மேலூர் தொகுதியில் அதிமுக சிட்டிங் எம்.எல்.ஏ பெரிய புள்ளான் மீண்டும் களமிறங்கியுள்ளார். இவரை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கியிருப்பவர், ரவிச்சந்திரன். மாணிக் தாகூர் எம்.பி.யின் மாமனார் இவர் என்பதால், காங்கிரஸாரே ஆர்வமாக இல்லை. திமுக.வினரிடம் உற்சாகமாக இல்லை. திமுக கூட்டணி சோம்பலால் பெரிய புள்ளான், அதிமுக எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வைப்பார்.

சிவகாசியில் அதிமுக தனலட்சுமி போட்டியிடுகிறார். இவர் மீது மரியாதை இருந்தாலும் கூட அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது தொகுதி மக்களுக்கு இருக்கும் வெறுப்புணர்வு இவரை பழிவாங்கிவிடும் என்கிறார்கள் அதிமுக நிர்வாகிகள். அதிமுக அதிருப்தி அலையால், காங்கிரஸ் வேட்பாளர் அரசன் அசோகன் எளிதாக வெற்றிக் கோட்டை நெருங்குகிறார். தொழிலதிபர் என்பதால் பணத்தால், திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினரை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறார்.

திருவாடானையில் காங்கிரஸ் வேட்பாளர் கரு மாணிக்கம் போட்டியிடுகிறார். காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமியின் புதல்வர் இவர். திமுக உள்ளிட்ட கூட்டணியினரின் ஆதரவு, சிறுபான்மை வாக்குகள், அதிமுக எதிர்ப்பு அலை ஆகியவை கரு மாணிக்கத்தை உற்சாகப்படுத்தியுள்ளது. எதிர் முகாமில் அதிமுக வேட்பாளர் ஆனி முத்து, சொந்த கட்சியினரின் ஒத்துழைப்பு இல்லாமல் திணறுகிறார். அதிமுக கூட்டணியில் கடந்த முறை இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப் பெற்ற நடிகர் கருணாஸ், அதிமுக.வை 234 தொகுதிகளிலும் வெற்றி பெறாது என சூளுரைத்தார். அட்லீஸ்ட் அவரின் தொகுதியிலாவது அதிமுக.வை வீழ்த்து துணை புரிவார் என காங்கிரஸ் வேட்பாளர் கரு மாணிக்கம்உறுதியாக நம்பிக் கொண்டிருக்கிறார்.

எஞ்சிய 14 தொகுதிகளின் கள நிலவரம் நாளை வெளியாகும்….