Sat. May 4th, 2024

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்ககையை, தலைவி எனும் தலைப்பில் திரைப்படமாக இயக்கியுள்ளார் ஏ.எல். விஜய். 1987 ல் எம்.ஜி.ஆர் மறைவுக்கு முன்பாக அவரது திரையுலக வாழ்க்கையும், பிந்தைய அரசியல் வாழ்க்கையும், பொய் கலப்பின்றி உண்மையான நிகழ்வுகளை கதையாக்கி விறுவிறுப்பை கூட்டியுள்ளார் இயக்குனர்.

ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தை ஏற்றிருப்பவர், ஹிந்தி பிரபல நடிகை கங்கனா ரணாவத். அண்மையில் இவரின் பெயர் செய்திகளில் பிரபலம். மகாராஷ்டிரா சிவசேனா அரசுக்கு எதிராக அவர் பொங்கிய நேரங்கள் எல்லாம், ஜெயலலிதாவின் மறுபிம்பம் போலவே இருந்ததாக கூறுவார்கள், தமிழக திரையுலக பிரபலங்கள்.

திரையுலகில் ஜொலிப்பதற்கும், அரசியல் உலகில் உச்சத்தைத் தொடவும், செல்வி ஜெயலலிதாவுக்கு வழிகாட்டியாகவும், ஆசானாகவும் இருந்தவர் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர். அவரின் கதாபாத்திரத்தில், இருவர் திரைப்படத்தில் கலக்கிய நடிகர் அரவிந்த்சாமி ஏற்றிருக்கிறார். இவர்களுடன் இயக்குனர் சமுத்திரகனி, மதுபாலா, பாக்யஸ்ரீ உள்ளிட்டோரும் முக்கிய பாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர்.

விஷ்ணு வர்தன் இந்தூரி, சாய்லேஷ் ஆர் சிங் ஆகியோர் இணைந்து தலைவி படத்தை தயாரித்துள்ளனர். பாகுபலி திரைப்படத்தின் கதாசிரியர் கே.வி.விஜயேந்திர பிரசாத் கதை எழுத, ஜி..வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

ஜெயலலிதா வாழ்வில் நிகழ்ந்த சுவாரஸ்யமான நிகழ்வுகள், எம்.ஜி.ஆரின் இறுதி ஊர்வலத்தின்போது ராணுவ வண்டியில் இருந்து தள்ளப்பட்டது, சட்டமன்றத்தில் தாக்கப்பட்டது உள்ளிட்ட அவர் எதிர்கொண்ட அனைத்து சவால்களையும் ஒன்றுவிடாமல் அழகாக தொகுத்து வழங்கியிருக்கிறார் இயக்குனர் ஏ.எல்.விஜய்.

ஜெயலலிதாவை ஒருமுறையாவது கங்கனா ரணாவத் சந்தித்து பேசியிருப்பாரா? தெரியவில்லை. ஆனால், அவரைப் போன்ற மிடுக்கும், கம்பீரம் காட்டும் அழகும், மறைந்த ஜெயலலிதாவே மீண்டும் உயிரோடு வந்தது மாதிரி இருக்கிறது என்கிறார்கள் அம்மா பக்தர்கள்.. டிரைலரே விறுவிறுப்பை கூட்டியுள்ளது. முழுப்படத்தையும் திரையில் பார்த்தால், அம்மா பக்தர்கள், அதிமுக நிர்வாகிகள், தலைவியை கொண்டாடி மகிழ்வார்கள். .