Sat. Nov 23rd, 2024

பிரதமர் மோடி, 2 நாள் பயணமாக வங்கதேசம் சென்றுள்ளார். வங்கதேசத்தின் 50-வது சுதந்திர தின விழாவில் பங்கேற்கவுள்ள பிரதமர் மோடி, இருநாடுகளுக்கு இடையேயான பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவார்.

15 மாதங்களுக்கு பிறகு பிரதமர் மோடி மேற்கொள்ளும் முதல் வெளிநாடு பயணம் இதுவாகும்.

வங்கதேசத்தின் 50 வது ஆண்டு சுதந்திர தின விழாவையொட்டி, அந்த நாட்டில் உள்ள முன்னணி நாளிதழ் ஒன்று வரலாற்றுச் சிறப்பு கட்டுரைகளை வெளியிட்டுள்ளது. அதில், பிரதமர் மோடியின் கருத்துகளும் இடம் பெற்றுள்ளது. அந்த கட்டுரையில், வங்கதேசத்துடன் வரலாற்று சிறப்புமிக்க இந்த ஆண்டில் இந்தியா-வங்கதேசம் இடையேயான நட்பு உறவு நீடிக்கவும், அகவுரா-அகர்தலா ரயில் இணைப்பு போன்ற முக்கியமான இணைப்பு திட்டங்களை நிறைவடையும் என்று  இந்தியா எதிர்பார்ப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இருநாடுகளுக்கு இடையேயான நீடித்த நல்லுறவின் மூலம் நிலம் தொடர்பான விவகாரங்கள் ஆக்கப்பூர்வமான தீர்வு, கடல் எல்லை விவகாரங்கள் மற்றும் இணைப்பு, வர்த்தகம், மக்களிடையே நல்லுறவு போன்ற முக்கிய துறைகளில் முன்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இருநாடுகளும் இணைந்து நிகழ்த்தியுள்ள பல்வேறு சாதனைகளையும்  நினைவு கூர்ந்துள்ள பிரதமர் மோடி, இந்தியா-வங்கதேசம் கூட்டாட்சியின் தைரியமான லட்சியத்தை மீண்டும் பட்டியலிட வேண்டிய நேரம் இது என்றும் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.