Sat. Nov 23rd, 2024
அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் மர்மமனிதர் ஒருவர் காட்டுமிராண்டித்தனமாக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் போலீஸ் அதிகாரி உட்பட 10 பேர் பலியாகியுள்ளனர். 

 போல்டர் நகரில் உள்ள ஷாப்பிங் பிளாசாவில் இந்திய நேரப்படி இன்று காலை மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்தது. அங்குள்ள பல்பொருள் அங்காடிக்குள் துப்பாக்கி ஏந்தியபடி நுழைந்த மர்மமனிதன், கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்த பொதுமக்களை பார்த்து கண்மூடித்தனமாக சுட்டான். துப்பாக்கிச் சத்தம் கேட்டு, மக்கள் அலறியடித்தபடி நாலாபுறமும் ஓடினர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், பல்பொருள் அங்காடியை சுற்றி வளைத்து, மர்ம மனிதனை உயிரோடு பிடிக்க, துப்பாக்கியால் எதிர்தாக்குதல் நடத்தபடியே முன்னேறினர். 

இந்த தாக்குதலின்போது துப்பாக்கிச் சூடு நடத்தியவனும் காயமடைந்துள்ள நிலையில், அவனை காவல்துறையினர் மடக்கி பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

துப்பாக்கிச் சூடு நடைபெற்ற போது அங்கிருந்தவர்கள் செல்போன் மூலம் அதை படம் பிடித்து, உடனுக்குடன் யூ டியூப்பில் பதிவேற்றம் செய்துள்ளனர். அதைப்பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

உயிரிழந்தவர்களின் உடல்களை வைத்து அடையாளம் காணும் பணி நடைபெற்றது. இதில்,  51 வயதான எரிக் டேலி என்ற போலீஸ் அதிகாரி, துப்பாக்கிச் சூட்டுக்கு முதல் நபராக பலியாகியுள்ளார். 

மேலும், இந்த தாக்குதலில் ஒன்பதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அவர்களைப் பற்றிய மேல் விவரம் வெளியிடப்படவில்லை. 


மாகாணத்தின் தலைநகர் டென்வரில் இருந்து சுமார் 30 மைல் (50 கி.மீ) தொலைவில் உள்ள வட மத்திய கொலராடோ நகரமான போல்டரில் எப்போதுமே பரபரப்பாக காணப்படும்  ஷாப்பிங் பிளாசாவில், இந்த பல்பொருள் அங்காடி அமைந்துள்ளது. துப்பாக்கிச் சூடு நடைபெற்ற வளாகத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ள காவல்துறை, தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. 

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்றப் பிறகு நடைபெறும் முதல் துப்பாக்கிச் சூடு நிகழ்வு என்று அங்குள்ள ஊடகவியலாளர்கள் தெரிவித்தனர்.