Thu. May 2nd, 2024

அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய குடியுரிமை திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற நாளில் இருந்து, பல அதிரடியான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக, அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் உள்பட வெளிநாட்டினரின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளவராக பைடன் காட்சியளிக்கிறார்.

முந்தைய அதிபர் டிரம்ப்பின் அடாவடி சட்டங்களையும் எல்லாம் தூள் தூளாக்கும் பைடன், அமெரிக்காவிலேயே பல்லாண்டுகளாக வாழும் பிறநாட்டினருக்கு, குறிப்பாக இந்தியர்களுக்கு, அதிலும் சிறப்பாக தமிழர்களுக்கு பால் வார்த்துக் கொண்டிருக்கிறார் பைடன் என்பதுதான், மகிழ்ச்சிக்குரிய செய்தி.

பணியாற்றும் இடத்தில் நிம்மதியான சூழல் நிலவினால்தான், பணியும் சிறக்கும், அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்துள்ள நாட்டின் வளர்ச்சியும் அமோகமாக இருக்கும் என்பதை புரிந்து வைத்திருக்கிறார், அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோ பைடன்.

கடந்த ஆண்டு நவம்பருக்கு முன்பு இருளடைந்து கிடந்த வெளிநாட்டினரின் முகங்களில் எல்லாம், பைடன் பதவியேற்புக்குப் பின்புதான் புன்னகையையே காண முடிகிறது. அந்த புன்னகையை மேலும் அதிகரிக்கும் வகையில், புதிய குடியுரிமை திருத்த மசோதாவை அதிபர் ஜோ பைடன் தாக்கல் செய்தார்.

ஆவணங்களின்றி பணியாற்றும் 1.1 கோடி பேருக்கு குடியுரிமை வழங்க புதிய மசோதா வழிவகுக்கிறது. எச்1 பி விசா வைத்திருப்போரின் மனைவிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க மசோதா வழிவகை செய்கிறது என்பதுதான் அமெரிக்காவில் வாழும் வெளிநாட்டினருக்கு இனிப்பான செய்தியாகும்.