கொரோனோ தொற்று தாக்குதல், கடந்த 4 மாதங்களாக முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருந்தன. தமிழக அரசின் சுகாதாரத்துறை முனைப்பான நடவடிக்கைகள் மூலமும் மற்ற அரசுத்துறைகளுடன் இணைந்தும் மேற்கொண்ட செயல்பாடுகளின் காரணமாக, கொரோனோ என்ற பேச்சே இல்லாமல், சென்னை உள்பட மாநிலம் முழுவதும் மக்கள் நிம்மதியாக தங்கள் அன்றாட பணிகளை மேற்கொண்டு வந்தனர். ஆனால், அவர்களின் நிம்மதிக்கு வேட்டு வைக்கும் வகையில், கடந்த பல நாட்களாக மீண்டும் கொரோனோ தாக்குதல் அச்சம் தலைதூக்கியுள்ளது. அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் அவரவர் தொகுதியில் ஓட்டு வேட்டையாடி வரும் நிலையில், சுகாதாரத்துறைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், தனியொருவராக கொரோனோ தடுப்பு நடவடிக்கைகளிலும், தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு சிகிச்சை வழங்குவதற்காகவும், மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரத்துறை அலுவலர்களையும் பணியாளர்களையும் முடுக்கிவிட்டுள்ளார். மேலும், மாஸ்க் அணியாதவர்களுக்கு கட்டாயம் அபராதம் விதிக்க வேண்டும் என்று காவல்துறைக்கும், உள்ளாட்சி, வருவாய் துறை அதிகாரிகளுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உலகளவில், தமிழகத்தில்தான் கொரோனோ தடுப்பு நடவடிக்கைகளிலும், சிகிச்சை வழங்கும் முறைகளிலும் முன்னிலையில் இருந்தது என்பதை அனைத்து தரப்பு மக்களும் ஏற்றுக் கொண்டார்கள். அதன் வெளிப்பாடாகதான், மருத்துவர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு மாலையணிவித்து கொண்டாடிய நிகழ்வுகளும் மாநிலம் முழுவதும் கடந்தாண்டுகளில் நடைபெற்றது, அனைவருக்கும் நினைவில் நீங்காமல் நிறைந்திருக்கும். ஆனால், இன்றைக்கு மீண்டும் கொரோனோ தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் அரசுமருத்துவமனைக்கு செல்லும்போது, கடந்தாண்டு கிடைத்த அனுபவத்தை விட முற்றிலும் மாறுபட்டவையாக இருப்பதாக கண்ணீர் மல்க கூறுகிறார், சென்னையில் வாழும் நமது நலம் விரும்பி ஒருவர். அவரின் சோகத்தை அவரது வார்த்தைகளாலேயே படிப்போம்.
சென்னை உள்பட மாநிலம் முழுவதும் தேர்தல் ஜுரம் களைக்கடடிக் கொண்டிருக்கிறது. மீடியாவின் கவனமும், தேர்தலில் போட்டியிடுவோர் பக்கமும், அரசியல் தலைவர்கள் மீதும்தான் விழுந்து கிடக்கிறது. ஆனால், கொரோனோவால் பாதிக்கப்படுபவர்களுக்கு கடந்தாண்டு கிடைத்த மாதிரிகவனிப்பும், முக்கியத்துவமும் இல்லாமல், மருத்துவத்துறை அலட்சியப் போக்குடன் நடந்து கொள்கிறதோ என்ற சந்தேகம்தான் எனக்கு இருக்கிறது. தயவுசெய்து, அரசு மருத்துவர்களை தவறாக சித்தரிப்பதாக நினைத்துவிடாதீர்கள். கடந்தாண்டு கொரோனோ பரவியபோதும், உச்சத்தைத் தொட்டபோதும், மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்களின் சேவை, கடவுளையே கண்முன் கொண்டு வந்து நிறுத்தியது போல பார்த்தோம். அவர்களின் அர்ப்பணிப்பு சேவைக்கு முன்பு எதுவுமே ஈடாகாது.
ஆனால், இன்றைக்கு காணப்படும் அதே அலட்சியம் மருத்துவர்களிடமும் காணப்படுவதுதான் வேதனையை தருகிறது. சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.ஸிடம் யார் வேண்டுமானாலும் போனில் பேசிவிட முடியும். என்னாலும் பேச முடியும். இருந்தாலும் உங்கள் மூலமாக எனது குறை, அவரது கவனத்திற்குச் செல்ல வேண்டும் என விரும்புகிறேன்.
சென்னையின் இதயப்பகுதியில் குடும்பத்துடன் வசிக்கிறேன். வேலைக்குச் செல்லும் மகன், மகள் இருக்கிறார்கள். மனைவியோடு நான்கு பேர். அலுவலக பயணமாக வெளியூர் சென்றிருந்த மகன் வீடு திரும்பிய மறுநாள் காய்ச்சல் மற்றும் சளி இருந்தது. குடும்ப மருத்துவரின் பரிந்துரையில் மாத்திரை வாங்கி கொடுத்தோம். இரண்டு நாள் ஆகியும் காய்ச்சல் குறையவில்லை. இருமல் வேறு வந்துவிட்டது. சைதாப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனோ பரிசோதனை மேற்கொண்டான்.
மறுநாள் பாசிட்டிவ் என கைபேசியில் தகவல் சொல்லி வீட்டில் உள்ளவர்களின் விவரங்களை கேட்டார்கள். பழைய மாதிரி, ஆம்புலன்ஸ் வரும், அழைத்துச் செல்வார்கள் என்று காத்திருந்தோம். போன் வந்த நாள் முழுவதும் யாரும் வரவில்லை. மறுநாள் எதற்கும் இன்னொரு பரிசோதனை மேற்கொள்ளலாம் என அண்ணாசாலையில் உள்ள ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனைக்கு சென்றான். அங்கு எக்ஸ்ரே பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள், பாசிட்டிவ் இல்லை. இருப்பினும் 7 நாள்கள் தனியாக இருந்து கொள் என்று கூறி அனுப்பி வைத்தார்.
ஒரு படுக்கையறை கொண்டு வீட்டில்தான் நால்வரும் இருக்கிறோம். இரண்டு நாட்கள் கழித்து, அதாவது மார்ச் 24 ஆம் தேதி அதிகாலையிலேயே எனக்கு மிதமான உடல்வலி. அசதியும் அதிகமாக இருந்தது. சந்தேகத்தை தீர்த்துக் கொள்ளலாம் என்று ஓமந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனைக்கு நானும் சென்றேன். அண்ணா சிலையில் இருந்து உழைப்பாளர் சிலைக்கு செல்லும் வழியில் தீயணைப்பு நிலையத்திற்கு அருகில் உள்ள அரசு மருத்துவமனையின் நுழைவுவாயிலை கடந்து உள்ளே சென்றேன். முதலில் வரவேற்பு இடத்தில் இரண்டு பேர், விண்வெளிக்கு செல்லுவோர் அணிந்திருக்கும் உடை போல கவச உடை அணிந்து அம்ர்ந்திருந்தனர். அவர்கள் முன்பு இருக்கை இருந்தது. அமரச் சொன்னார்கள். பெயர், முகவரி , கைபேசி எண் உள்பட அனைத்தையும் பதிவு செய்து கொண்டு, உடலின் வெப்பத்தையும் பதிவு செய்து கொண்டு அவர்கள் அருகிலேயே இருந்த இன்னொரு மருத்துவக் குழு அமர்ந்திருக்கும் இடத்திற்கு அனுப்பி வைத்தார்கள்.
அங்கு மூன்று மீட்டர் இடைவெளியில் டா வடிவில் மருத்துவர் மற்றும் செவிலியர்கள் அமர்ந்திருக்கிறார்கள். வரவேற்பு இடத்தில் பதிவு செய்யும் காகிதத்தை வாங்கி, சளி மாதிரி எடுக்க வேண்டுமா அல்லது எக்ஸ்ரே, சி.டி. ஸ்கேன் எடுக்க வேண்டுமா என்று பரிந்துரை செய்வதுதான் அவர்களின் பணியாக இருக்கிறது. மருத்துவர்களை அணுகி விடாதபடி கயிறு கட்டி தடுத்து நிற்க வைத்தே விசாரிக்கிறார்கள். நீதிமன்றங்களில் குற்றவாளி கூண்டில் ஏற் நிற்கும் நபரை போல அவர்கள் முன் நின்று பதிலளிக்க வேண்டும். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருமே அவர்கள் முன்பு ஒரே நிலைதான். ஒரு தொற்றாளருக்கும் இன்னொரு தொற்றாளருக்கும் இடையே பத்து பதினைந்து நிமிடங்கள் காத்திருக்க வேண்டியிருக்கிறது. வயதானவர்கள் பாவம். நிற்க முடியாமல் மிகவும் அவதிப்படுகிறார்கள். அவர்கள் கூறும் விஷயங்களைக் கூட மருத்துவர்கள் காதுகொடுத்து கேட்பதில்லை. தீண்டதகாதவர்கள் மாதிரி அவர்கள் நடத்துவதைப் பார்த்து, வயதானவர்கள் கண்ணீர் சிந்துகிறார்கள்.
சளி பரிசோதனைக்கு பரிந்துரைத்தால், அதை வாங்கிக் கொண்டு சளி மாதிரி எடுக்கும் அறைக்கு செல்ல வேண்டும். அங்கு அமர்வதற்கு இடவசதி செய்திருக்கிறார்கள். ஆனால், அதைவிட கொடுமையானது என்னவென்றால், ஆதார் விண்ணப்பம் மாதிரி பெரிய காகிதம் தருகிறார்கள். அதில், ஏற்கெனவே வரவேற்பு இடத்தில் என்ன கேட்டார்களோ, அதே விவரம்தான் அந்த காகிதத்திலும் கேட்கப்பட்டிருக்கிறது. பேனா கையோடு கொண்டு போய் இருந்தால் உடனே எழுதிக் கொடுத்துவிட்டு, சிரமம் இன்றி சளி மாதிரி கொடுத்துவிடலாம்.
ஆனால் பேனா இல்லையென்றால், அங்கு வருபவர்கள் யாராவது பேனா வைத்திருக்கிறார்களா, மருத்துவமனை வளாகத்தில் யாராவது பேனா வைத்திருக்கிறார்களா என்று அலைய வேண்டியிருக்கிறது. கொரோனோ விண்ணப்பம் பூர்த்தி செய்ய வேண்டும் என்ற சொன்னாலே,,இல்லை, இல்லை கையில் இருக்கும் காகிதத்தை பார்த்தவுடனேயே பக்கத்தில் வர அனுமதிக்கவோ, பேனா கொடுக்கவோ யாரும் முன்வருவதில்லை. அந்தநேரத்தில் ஏற்படும் அவமானம், புறக்கணிப்பு இருக்கிறதே..அந்த இடத்தில் இருந்து அதைப் பார்த்தால், உண்மையிலேயே நாமே கூனி குறுகிப் போய்விடுவோம். இந்த விண்ணப்பம் பூர்த்தி செய்து தருவதே வெட்டி வேலை. இதை எதற்கு வாங்குகிறார்கள் என்று தெரியவில்லை.
கஷ்டப்பட்டு, அந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்தவுடன் வரிசையில் வரச் செய்து சளி மாதிரி எடுக்கிறார். அந்த பணியாளருக்கு பயம் இருக்காது போல. அமர வைத்து நிதானமாகவே சளி மாதிரி எடுக்கிறார். கடந்தாண்டு எல்லாம் சளி மாதிரி கொடுத்துவிட்டு வந்தால் மறுநாள், அவர்களே போன் செய்து பாசிட்டிவ் இருந்தால் தகவல் தெரிவித்து அழைத்துச் செல்வார்கள். தொற்று பாதிப்பு இல்லை என்றால் கைபேசி அழைப்பு வராது. ஆனால், இப்போது நிலைமை வேற லெவலில் இருக்கிறது. 9499966103 என்ற எண்ணுக்கு 24 மணிநேரம் அல்லது 48 மணிநேரம் கழித்து போன் செய்து கேட்டால், கொரோனோ தொற்று பாதிப்பு இருக்கிறதா இல்லையா என்று தகவல் தெரிவிக்கிறார்கள்.
பரிசோதனைக்கு செல்வோர் அனைவருக்கும் காய்ச்சல் மற்றும் சத்து மாத்திரை வாங்க சீட்டு தருகிறார்கள். மாத்திரை கொடுக்கும் இடத்திற்குச் சென்றால், தொற்றாளர் மற்றும் பரிசோதனைக்கு வந்தவர் என அனைவருமே ஒருவரோடு ஒருவர் மோதிக் கொள்ளும் வகையிலேயே நிற்கிறார்கள். தனித்து நிற்க வேண்டும். முன்னெச்சரிகையாக இருக்க வேண்டும் என்ற உணர்வு மக்களிடமும் இல்லை. இவ்வளவு அலட்சியம் பரிசோதனைக்கு வரும் மக்களிடமே காணப்படுகிறது என்றால், சாதாரணமாக சாலைகளில் சுற்றிக் கொண்டிருப்பவர்கள் எவ்வளவு அலட்சியமாக இருப்பார்கள்.
பயமாக இருக்கிறது. மீண்டும் ஊரடங்கு அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள். இன்னொரு ஊரடங்கை சந்தித்தால், மாதச் சம்பளம் வாங்குவோர், அன்றாட கூலிகள் ஒரு வேலை சாப்பாட்டிறக்கு கூட வழியில்லாமல் அவதிப்படும் நிலை ஏற்பட்டுவிடும்.
கொரோனோ தாக்கம் குறித்த பரிசோதனையை எளிமைப்படுத்தலாம். விரைவாக மேற்கொள்ள கூடுதலாக மருத்துவக் குழுக்களை நியமிக்கலாம். கொரோனோ தொற்றை எல்லோரும் சாதாரணமாக விஷயமாகப் பார்க்கத் தொடங்கிவிட்டார்கள். என்ன சொல்வது என்றே தெரியவில்லை என்றார் அந்த நண்பர்.