Sat. May 18th, 2024

சிறப்புச் செய்தியாளர் …

உள்ளாடசித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மட்டும் செக் வைக்கவில்லை. பாஜக மேலிடமும் செக் வைத்துவிட்டது அல்லது கைகழுவி விட்டது என்பதற்கான அடையாளமாகதான் கோவை மாவட்ட ஆட்சியர் ராஜாமணி, காவல் ஆணையர் சுமித்சரண் ஆகியோர் அதிடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதை பார்க்கிறார்கள் கோவை மாவட்ட திமுக முன்னணி நிர்வாகிகள்.

கடந்த 23 ஆம் தேதி நள்ளிரவில், கோவை மாநகரத்திற்குட்பட்ட பகுதியில் இருந்து நமக்கு அறிமுகமான திமுக நிர்வாகி ஒருவர் கைபேசியில் அழைத்தார். தூக்க கலக்கத்தில் இருந்த நான் தொடர்பை இணைத்த போது, நண்பரே, தொண்டமுத்தூர் தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் காவல்துறையில் உள்ள கீழ்மட்ட அதிகாரிகள் மூலம் வாக்காளர்களுக்கு பணம் கொண்டு செல்வதாகவும், இதுதொடர்பாக மாநகர காவல்துறை அதிகாரிகளுக்கு புகார் கொடுத்த போதும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறினார்.

கோவை மாநகரில் மட்டுமல்ல, மாவட்டம் முழுவதும் அனைத்து துறைளிலும் உள்ள அரசு அலுவலர்களும், ஒட்டுமொத்த காவல்துறையும், அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் விருப்பத்திற்கு ஏற்பதான் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் மூலம் அரசு வாகனங்கள், காவல்துறை வாகனங்களில் பணம் கடத்தப்படுகிறது. இதுதொடர்பாக நேர்மையான தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். உங்களுக்கு தெரிந்த அதிகாரிகள் இருந்தால் சொல்லுங்கள் என்றார்.

எனக்கு உடனடியாக யார் பெயரும் நினைவுக்கு வராததால், இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில், மெயில் ஐடி இருக்கும். தேடிப்பாருங்கள். அந்த மெயில் ஐடிக்கு, திமுக வழக்கறிஞர்கள் மூலம் புகார் மனு அனுப்பி வையுங்கள் என்று தெரிவித்தேன். அவர்கள் புகார் மனு அனுப்பி வைத்தார்களா இல்லையா என்பது பற்றி நண்பர் இந்த நிமிடம் வரை எதுவும் சொல்லவில்லை.

ஆனால், தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட பகுதியில் பணியாற்றும் ஒரு அரசு அதிகாரி கூட அரசு நிர்வாகத்திற்கு விசுவாசமாக இல்லை என்பதும், அத்தனை அதிகாரிகளும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்குதான் ஆதரவாக இருக்கிறார்கள் என்பதும் அங்கிருக்கும் ஊடக நண்பர்கள் மூலம் பலமுறை விசாரித்து அறிந்து இருக்கிறேன். ஒன்றிரண்டு அரசு அதிகாரிகள் மூலம் நேரிடையாவே தெரிர்ந்து கொள்ள முடிந்தது.

ஆட்சியர் ராஜாமணி, அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் விருப்பத்திற்கு ஏற்பதான் செயல்பட்டு வந்தார் என்பதற்கு பல்வேறு உதாரணங்கள் இருக்கின்றன. அடுத்து காவல்துறை ஆணையர் சுமித் சரணும் எஸ்.பி.வேலுமணியின் விருப்பத்திற்கு மாறாக ஒரு காரியத்தையும் செய்தது கிடையாது.

தற்போது இவர்கள் இருவருக்கும் மாற்றாக தேர்தல் ஆணையத்தால் ஆட்சியர் நாகராஜன், காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இருவருமே அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு அணுசரணையாக நிச்சயம் நடந்துகொள்ள மாட்டார்கள் என்பதை உறுதியாக சொல்ல முடியும். ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ள நாகராஜன், நிச்சயமாக அமைசசர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பார் என்பதுதான் கடந்த கால அவரின் நிர்வாக செயல்பாடுகள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.

அதற்கு உதாரணமாக 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது நடைபெற்ற நிகழ்வை பார்க்கலாம். அந்த தேர்தலின்போது, அப்போது மதுரையில் மாவட்ட ஆட்சியராக இருந்தவர் நடராஜன், அந்த தேர்தலில் வாக்குகள் பதிவான எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறைக்கு வட்டாட்சியர் சம்பூர்ணம் என்பவர் 4 ஊழியர்களுடன் சென்று வாக்குப்பதிவு ஆவணங்களை நகல் எடுத்தாக புகார் எழுந்தது. அதன் மீது உரிய விசாரணை நடத்தி முறையான நடவடிக்கை எடுக்காமல் கண்துடைப்பு நாடகம் தான் நடத்தப்பட்டதாக கூறி, அப்போதைய திமுக கூட்டணி வேட்பாளரும் தற்போதைய மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் எம்.பி.யுமான வெங்கடேசன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில், நடராஜனை மாற்ற உத்தரவிட்ட நீதிமன்றம், எஸ்.நாகராஜனை மதுரை மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யவும் பரிந்துரைத்தது.

மதுரை மாவட்ட ஆட்சியராக பொறுப்பு ஏற்ற நாகராஜன், வாக்கு எண்ணிக்கையை நியாயமாக நடத்தியதுடன், திருப்பரங்குன்றம் சட்டமன்றத் இடைத்தேர்தலையும் நேர்மையுடனும் கண்டிப்புடனும் நடத்தி காட்டினார். தேர்தலுக்குப் பிறகும் மதுரையில் ஆட்சியராக தொடர்ந்த அவர், ஆளும்கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ., அமைச்சர்களின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு எதிராகவே செயல்பட்டவர். இதனால், மதுரையில் இருந்து குறுகிய மாதங்களிலேயே பணியிடமாற்றம் செய்யப்பட்டு, செல்வாக்கு இல்லாத துறையில் பணியமர்த்தப்பட்டார். இந்த பின்னணியை கொண்ட புதிய ஆட்சியர் நாகராஜன், எஸ்.பி.வேலுமணிக்கு சிம்ம சொப்பனமாக இருப்பார்.

இதேபோல காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள டேவிட்சன் தேவாசீர்வாதமும், தேர்தல் ஆணையத்தின் உத்தரவுகளுக்குதான் தலைவணங்குவாரே தவிர, எஸ்.பி.வேலுமணியின் கண் அசைவுக்கு ஏற்ப செயல்படமாட்டர் என உறுதியாக நம்பலாம். 6 மாதத்திற்கு முன்பாகதான் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டவர் அவர். 2018 ஜுன் மாதம் மதுரை ஆணையராக நியமிக்கப்பட்ட டேவிட்சன் தேவாசீர்வாதம், அங்கு சமூக விரோத கும்பல்களை குறிவைத்து அழித்தார்.

கடந்த ஆண்டு பிப்ரவரியில் கூடுதல் டிஜிபி ஆக பதவி உயர்வு பெற்ற நிலையில், பணியிடம் மாற்றம் செய்யும் போது, சட்டம் ஒழுங்கு பிரிவில் நியமனம் செய்யதான், தற்போதை டிஜிபி திரிபாதி விரும்பினார். ஆனால், அவரை சந்தித்த டேவிட்சன், தனக்கு சட்டம் ஒழுங்குப் பிரிவில் பணியிடம் வேண்டாம் என்று கூறி தமிழ்நாடு காவல்துறை பயிற்சி நிறுவனத்திற்கு பணிமாறுதலை விரும்பி கேட்டு வாங்கிச் சென்றவர் டேவிட்சன் தேவாசீர்வாதம்.

கடந்தாண்டு ஜூலையில் பணிமாறுதல் பெற்று பயிற்சி நிறுவனத்திற்குச் சென்ற டேவிட்சன், அந்த பயிற்சி நிறுவனம் அலங்கோலமாக காட்சியளித்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். கணினி அறிவியல், தொழில் நுட்பம் உள்ளிட்ட படிப்புகளை படித்துவிட்டு காவல்துறை துணை கண்காணிப்பாளராக தேர்வாகி வந்தவர்களுக்கு முறையான பயிற்சி வழங்காமல், கல்லூரி விடுதி போல, அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப செயல்பட அனுமதித்திருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து முறையான கள பயிற்சியும், சட்டம் ஒழுங்கு, நீதித்துறை செயல்பாடுகள், காவல்துறை விதிமுறைகள், நடவடிக்கைகள் உள்ளிட்ட அனைத்து விதமான பயிற்சிகளையும் தனது நேரிடையான மேற்பார்வையின் மூலம் வழங்குவத்ற்கு நடவடிக்கை எடுத்தவர்.

மேலும், போலீஸ் வளாகம் முழுவதும் புதர் மண்டி இருந்ததுடன், கட்டடங்களும் பேய் பங்களா மாதிரி இருந்ததை சீரமைத்து, பயிற்சி நிறுவனத்திற்கு உரிய தோற்றத்தை, பொலிவை உருவாக்கியவர். இதுபோன்ற பயிற்சி நிறுவனங்களுக்கு பணியிட மாற்றம் கேட்டு, விரும்பி எந்த உயரதிகாரியும் செல்ல மாட்டார். ஆனால், சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட முக்கிய துறைகளிலேயே பல ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றியதால், அயர்ச்சி ஏற்பட்டதாகவும், உத்வேகம் பெறுவதற்காகவும் பயிற்சி நிறுவனத்திற்கு செல்கிறேன் என்று விரும்பி சென்றவர் கூடுதல் டி.ஜி.பி டேவிட்சன் தேவாசீர்வாதம்.

நேர்மைக்கு பெயர் பெற்ற இரண்டு அதிகாரிகளும் கோவை மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் ஆட்டத்திற்கு முற்றுப்புள்ளி விழுந்துவிட்டதாகவே பிரதான எதிர்க்கட்சியான திமுக.வினர் இரட்டடிப்பு மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். இரட்டிப்பு மகிழ்ச்சிக்கு மற்றொரு காரணமாக கோவை திமுக பிரமுகர்கள் கூறுவதுதான் அதிர்ச்சி ரகம்.

“திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகியோருக்கு எதிராக ஒரு குற்றச்சாட்டை அடிக்கடி கூறுவார். அது என்னவென்றால், இந்திய அரசியல் வரலாற்றில் மட்டுமின்றி உலக அரசியல் வரலாற்றிலும் இல்லாத சாதனையாக, அதிமுக அரசு பாஜக மேலிடத்திற்கு மாதந்தோறும் கப்பம் கட்டி வந்தது. அந்த கப்பத்தை முறையாக டெல்லிக்கு சென்று சேர்கிறதா? என்று கண்காணிக்கும் பொறுப்பை இந்த இரண்டு அமைச்சரிடம்தான் இ.எஸ். ஒப்படைத்திருந்தார். மேலும், தமிழக பாஜக பிரபலங்களுக்கும் மாதந்தோறும், அதிமுக அரசு அவரவர் செல்வாக்கிற்கு ஏற்ப குறிப்பிட்ட அளவுக்கு சன்மானம் வழங்கி வருகிறது என்று மேடைதோறும் பேசி வந்தார் எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின்.

இப்படி தமிழக பாஜக தலைவர்களின் மனம் கோணாமலும், டெல்லி பாஜக தலைவர்களே வியந்து போகிற அளவிற்கு மாதம் தவறாமல் கப்பம் கட்டி வந்த எஸ்.பி.வேலுமணிக்கு ஆதரவாக நிற்காமல், திமுக புகார் தெரிவித்த சில மணிநேரங்களிலேயே தேர்தல் ஆணையம் விரைந்து நடவடிக்கை எடுக்கும் அளவிற்கு பின்னணியாக பாஜக மேலிடத்தின் கண்ணசைவு இருந்திருக்கிறது என்ற இனிப்பான செய்தியை கேட்டுதான் கோவை மாவட்ட திமுக.வே மிகுந்த மகிழ்ச்சியில் திளைக்கிறது.

பாஜக மேலிடத்தின் செல்வாக்கை வைத்துக் கொண்டுதான், கோவை மாவட்டத்தில் எஸ்.பி.வேலுமணி குதி,குதியென குதித்து வந்தார்.அவரின் ஒட்டுமொத்த ஆட்டத்திற்கும் வேட்டு வைத்துவிட்டது டெல்லி பாஜக மேலிடம். இனிமேல் தொகுதிக்குள் அவர் எப்படி பணம் பட்டுவாடா செய்கிறார் என்பதை ஒரு கை பார்க்க நாங்களும் தயாராக இருக்கிறோம்” என்று தைரியமாக பேசி வருகிறார் கள் தொண்டாமுத்தூர் திமுக முன்னணி நிர்வாகிகள்.

பரமசிவன் கழுத்து பாம்புவின் கழுத்தையே நெரிச்சிட்டாங்களே….