வடநாட்டு ஊடகங்கள் மற்றும் தமிழகத்தில் உள்ள பிரபல தொலைக்காட்சிகள் வெளியிடும் கருத்துக்கணிப்புகளின்படி, திமுக 150 தொகுதிகளுக்கு மேல் வெற்றிப் பெறும் என்பதை முதல்வர் இ.பி.எஸ் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார் என்ற தகவல், சேலத்தில் இருந்து கசிய விடப்பட்டிருக்கிறது.
சேலத்தில் இருந்து நேற்று கரூர் பிரசாரத்திற்கு புறப்படுவதற்கு முன்பாக, அங்கு தனியார் ஹோட்டலில் தங்கியிருந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார். ஏறக்குறைய 15 நிமிடம் வரை நீடித்த இந்தப் பேச்சுவார்த்தையின் போது, அதிமுக.வுக்கான வெற்றி வாய்ப்புகள் குறித்தும் இருவருக்கும் இடையே கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெற்றுள்ளன.
முக்கியமாக, வடநாட்டு ஊடகங்கள் மற்றும் தமிழகத்தில் உள்ள ஊடகங்கள் வெளியிடும் கருத்துக் கணிப்புகள் குறித்து சில தகவல்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளிப்படுத்தியதாகவும், அதனை உன்னிப்பாக கேட்டுக் கொண்டார் முதல்வர் என்றும் சேலம் அதிமுக பிரமுகர்கள் தகவல் தெரிவிக்கின்றன்ர்.
கருத்துக் கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டவாறு திமுக 150 தொகுதிகளுக்கு மேல் வெற்றிப் பெறும் என்பதை முதல்வர் பழனிசாமி ஏற்றுக் கொள்ளவே இல்லை. அதிமுக.வுக்கு அந்தளவுக்கு குறைவான தொகுதிகள் கிடைக்கும் என்பதை ஒருபோதும் தன்னால் ஏற்றுக் கொள்ளவே முடியாது. கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக நான் பிரசாரம் செய்து கொண்டிருக்கிறேன். மக்களின் முகங்களில் தெரியும் உற்சாகத்தை நான் கவனிக்கிறேன்.
அதிமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியமைக்கும் நிலை உருவாகுமே தவிர, ஆட்சியை விட்டுக் கொடுக்கும் சூழல் ஒருபோதும் உருவாகாது. தமிழக மக்கள் மீது தனக்கு அந்தளவுக்கு நம்பிக்கை இருக்கிறது என்று உறுதியாக கூறினாராம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினைப் பற்றி நான் விமர்ச்சிக்கும் போதெல்லாம் அதிகமான கைத்தட்டல்கள் எழுகின்றன. அதிமுகவினரை விட பொதுமக்களிடம் இருந்துதான் இந்த எழுச்சி வருகிறது என்பதை என்னால் யூகிக்க முடிகிறது. அதிமுக ஆட்சிக்கு எதிராக அதிருப்தி அலை இருக்கிறது என்று கூறுகிறார்கள். கிராமப்புறங்களில் நான் பிரசாரம் செய்த இடங்களில் எல்லாம் அந்த மாதிரியான அதிருப்தியை பார்க்க முடியவில்லை.
நகரப்பகுதிகளில் வேண்டுமானால், அதிமுக ஆட்சி மீது அதிருப்தி இருக்கலாம். அதற்கு காரணம் நாமாக இருக்க முடியாது. உள்ளூரில் உள்ள அதிமுக.வினரின் செயல்பாடுகளால் மக்கள் நம்மீது கோபமாக இருக்கலாம்.
அதிமுக.வினர் போட்டியிடும் இடங்களில் எல்லாம், அதிமுக ஆட்சியின் சாதனைகளையும், முந்தைய திமுக ஆட்சியில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களை எல்லாம் மக்களிடம் நினைவூட்டினாலே போதும். அதிமுக வெற்றியை திமுக.வால் பறித்து விட முடியாது. மேற்கு மாவட்டங்களில் அதிமுக.வை விட குறைவான இடங்களில்தான் திமுக வெற்றி பெறும். டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் இன்னும் கூடுதலாக கவனத்தை செலுத்தினால், ஆட்சி அமைக்கும் அளவுக்கான தொகுதிகளை பெற்று விட முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
நீங்கள் பிரசாரம் மேற்கொள்ளும் தொகுதிகளிலும், கருத்துக் கணிப்பை பற்றி பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று அதிமுக வேட்பாளர்களிடம் சொல்லுங்கள். அதிமுக வேட்பாளர்கள் சோர்ந்து விட போகிறார்கள். இனிவரும் நாட்களில்தான் நாம் உஷாராக பணியாற்ற வேண்டும்.
உங்கள் பிரசாரமும் நாளுக்கு நாள் சூடு பிடித்து வருகிறது. திமுக.வுக்கு எதிராக ரத்தின சுருக்கமாக நீங்கள் வைக்கும் விமர்சனங்களை மக்கள் மிகவும் ரசிப்பதாக எனக்கு தகவல் கிடைத்திருக்கிறது. இதேபோல, இருவரும் வரும் நாட்களிலும் திமுக.வையும், மு.க.ஸ்டாலினையும் விமர்சனம் செய்து பேசினாலே போதும். அதிமுக.வுக்கான வாக்குகள், சிதறாமல் நமக்கு கிடைத்துவிடும்.
இப்போதும் உறுதியாகச் சொல்கிறேன். திமுக ஆட்சிக்கு வராது என்றுதான் நான் அழுத்தமாக நம்புகிறேன். மே 2 ஆம் தேதிக்குப் பிறகு எனது கணிப்பு சரியானது என்றே நீங்களே என்னை பாராட்டுவீர்கள். மே 2 க்குப் பிறகு நீங்கள் நினைத்திருப்பது எல்லாம் நடக்கும். இணைந்தே அதிமுக.வை வழிநடத்துவோம்.
உங்கள் ஆலோசனைகளை ஒருபோதும் புறக்கணிக்க மாட்டேன் என்றெல்லாம் ஓ.பி.எஸ்.ஸே வியந்து போகிற அளவுக்கு முதல்வர் பழனிசாமி மனம் திறந்து பேசிதயாக கூறுகிறார்கள், அவருக்கு மிக, மிக நெருக்கமான சேலத்தில் உள்ள அதிமுக முன்னணி நிர்வாகிகள். ,இந்த வார்த்தைக்குள்தான் சசிகலாவை அதிமுக.வில் சேர்ப்பது, டிடிவி தினகரனின் அமமுக.வை அதிமுக.வோடு இணைப்பது போன்ற விவகாரங்களும் அடங்கியிருப்பதாக நாங்கள் யூகிக்கிறோம் என்கிறார்கள் இபிஎஸ்.ஸுக்கு நெருக்கமான அதிமுக நிர்வாகிகள்.
எடப்பாடி பழனிசாமியின் கடைசி அஸ்திரமா இது…..