Sat. Nov 23rd, 2024

மதுரை மாவட்டத்தில் இரண்டு அமைச்சர்கள் போட்டியிடுகிறார்கள். கடந்த 5 ஆண்டுகளாக எலியும், பூனையுமாக இருந்தவர்களில் ஒருவர் வெற்றிக் கோட்டை நெருங்கும் நிலையில், மற்றொரு அமைச்சரின் வெற்றியை, இரண்டு சமதாய மக்கள், கால்கட்டுப் போட்டு தடுத்துக் கொண்டிருக்கிறார்கள். பணத்தை தண்ணீராக வாரி இரைத்து கடந்த 5 ஆண்டுகளில் அவர் ஆடிய ஆட்டத்திற்கு எல்லாம் பலன் இல்லாமல் போகப் போகிறது என்று பரிகாசம் செய்கிறார்கள் அவரின் ஜென்ம எதிரியான இருவர்.

எதிரிக்கு எதிரி நண்பன் என்ற அடிப்படையில் இரண்டு பேர் சேர்ந்துக் கொண்டு ஒருவருக்கு குழி பறிக்கும் கூத்துகளால் மதுரையை நாறிக் கிடக்கிறது என்கிறார் எம்.ஜி.ஆர். காலத்து அதிமுக விசுவாசி.

அவரிடம் பேசினோம். தன் ஆதங்கத்தை எல்லாம் கொட்டித் தீர்த்தார்.

மதுரை மாவட்டம் எப்போதுமே அதிமுக.வின் கோட்டையாகவே இருந்து வந்திருக்கிறது. எம்.எல்.ஏ., யார், அமைச்சர் யார் என்று பார்க்காமல், அதிமுக.காரன் தெம்பாகவே சுற்றி வருகிற ஊர் என்றால், அது மதுரைதான். அம்மா (செல்வி ஜெயலலிதா) உயிரோடு இருந்த காலத்தில் அடங்கி ஒடுங்கி இருந்தவர்கள், அவரின் மறைவுக்குப் பிறகு போட்ட ஆட்டத்தால் சாதாரண மக்கள் கூட அரண்டு போய் இருக்கிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி முதல்வரான பிறகு, மதுரையில் மூவரின் ஆட்டமும், அதகளமாக இருக்கிறது. அமைச்சர்களாக உள்ள செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார் ஆகிய இருவருக்கு இடையே, நடக்கும் ஈகோ யுத்தம் உலக பிரபலம்.

இவர்கள் இருவருக்கு இடையே நானும் ரவுடிதான் என்ற கணக்காக ராஜன் செல்லப்பாவும் அடிக்கடி கம்பு சுற்றுகிறார் இப்படி இந்த மூன்று பேர்களின் ஆட்டம் நாளுக்கு நாள் அதிகரித்த வந்ததால், திமுக காரர்கள் உற்சாகமாக தேர்தல் களத்தில் சுற்றிக் கொண்டு இருக்கிறார்கள்.

அமைச்சர்களில் செல்லூர் ராஜுவை விட, ஆர்.பி.உதயகுமார், கடந்த 5 ஆண்டுகளில் சம்பாதித்த பணத்தில், 30, 40 சதவிகிதம் செலவழித்திருப்பார். ஜெயலலிதா பேரவையின் மாநில செயலாளராக இருக்கும் ஆர்.பி.உதயகுமார், அவரின் பிறந்தநாளாகட்டும், ஜெயலலிதா பிறந்தநாளாகட்டும் ஆயிரம், இரண்டாயிரம் என பல்லாயிரக்கணக்கானோருக்கு நலத்திட்ட உதவிகளை வாரி வழங்கியிருக்கிறார். இதற்காக மட்டுமே பல கோடி ரூபாய்களை செலவு செய்திருக்கிறார்.

மேலும், அதிமுக நிர்வாகிகள் கூட்டம் என்றாலும் சரி, பொதுக்கூட்டமாக இருந்தாலும் சரி அவரின் பகுதியில் பிரமாண்டமாக இருக்கும். அண்மையில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய இருவருக்கும், அவரது திருமங்கலம் தொகுதிக்குட்பட்ட டி.குன்னத்தூரில் கோயில் கட்டி, தென் மாவட்டங்களே வாய் பிளந்து நிற்கும் வகையில் 100 கோடி ரூபாய் செலவில் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ் ஆகியோரை அழைத்து குடமுழுக்கு விழா நடத்தினார். இந்த விழாவுக்கு தொகுதி முழுவதிலும் இருந்து பெண்கள் உள்பட 50 ஆயிரம் பேரை திரட்டினார்.

தலைக்கு 200 ருபாய், புதிய புடவை, வேட்டி என வாரி வழங்கி, நவீன கால கொடை வள்ளலாக காட்சியளித்தார். கொரோனோ காலத்துக்கு முன்பும், கொரோனோ காலத்துக்குப் பின்பும், அவரது தொகுதியில் அவர் வாரி இரைத்த பணம், ஒவ்வொரு வீட்டிலும் பால் பாக்கெட்டுகள் மாதிரி விழுந்து கிடந்தன.

ஆனால், கோடிக்கணக்கில் பணத்தை இரைத்து செலவு செய்ததெல்லாம் தேர்தல் நேரத்தில் ஆர்.பி. உதயகுமாருக்கு கைகொடுக்கவில்லை, என்பதுதான் சோகம். திருமங்கலம் தொகுதியில் அமைச்சர் இருந்த போதெல்லாம், தொகுதிக்குட்பட்ட அதிமுக.காரனுக்கு கிடா வெட்டி பொங்கல் வைத்த சந்தோஷம்தான். ஆனால், நூறு, இருநூறு என பணம் வாங்கிக் கொண்டு கூட்டத்திற்கு வந்த ஒட்டுமொத்த கூட்டமும், அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருக்கு எதிராக தான் கொந்தளித்துக் கிடக்கிறது என்னத்த கொடுத்தாரு.. 100 நாள் வேலைக்கு போயிருந்தா கூட இந்த பணத்தை சம்பாரிச்சு இருப்போமே என்று கிண்டலடிக்கிறார்கள்.

அதுபோல, வீட்டுக் கதவைத் தட்டி வாஷிங் மெஷின் கொடுப்போம் என்று அமைச்சா ஆர்.பி. உதயகுமாரின் பிரசாரமும் கேலியும், கிண்டலுக்கும் உள்ளாகியிருக்கிறது. ஆட்சியில இருந்த போது கிழிச்சிட்டாரு..இப்ப வந்துட்டாரு என்ற ஏளனப் பேச்சுகள்தான் அதிகமாக கேட்கிறது தொகுதி முழுவதும்.

பெண்கள் உள்ளிட்ட தொகுதி மக்கள் பாதிக்கு மேல், அமைச்சர் ஆர்.பி உதயகுமாருக்கு எதிராக எரிமலையாக வெடிக்க, தொகுதியில் பெரும்பான்மையாக உள்ள இரண்டு சமுதாய மக்களும் அமைச்சருக்கு எதிராக ஆவேசமாக களத்தில் இருக்கிறார்கள். நேருக்கு நேராக அவரை எதிர்க்கவும் செய்வதால்தான், பரிதவித்துக் கொண்டிருக்கிறார் அமைச்சர்.

சசிகலாவை புறக்கணித்ததால் முக்குலத்தோர் சமுதாயமும், தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்திற்கு அளிக்கப்பட்ட அங்கீகாரமும், கூடவே, தங்கள் சாதிப் பெயரான வேளாளர் என்பதை அவர்கள் பயன்படுத்தி கொள்ள வழங்கப்பட்ட உரிமையையும் எதிர்த்து, பிள்ளைமார் சமுதாய மக்கள், முண்டாசு கட்டிக் கொண்டு, உதயகுமாரை வீழ்த்த இரவு பகலாக வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

அதுவும், முக்குலத்தோர் சமுதாய ஓட்டுகள் ஒன்று கூட அமைச்சருக்கு விழுந்து விடக்கூடாது என்ற வெறியோடு, அவருக்கு எதிராக களத்தில் குதித்திருக்கும் மருது சேனை தலைவர் கரு. ஆதிநாராயண தேவர், தொகுதியில் பட்டையை கிளப்புகிறார். இளைஞர் கூட்டம் எழுச்சியோடு அவரோடு இணைந்து மல்லுக்கு நிற்கிறார்கள். ஏற்கெனவே, பிள்ளைமார் சமுதாயம் ஆவேசமாக எதிர்க்க, அதை விட பலமடங்கு உஷ்ணம் காட்டும் ஆதிநாரயாண தேவரையும் சமாளிக்க முடியாமல் திணறுகிறார் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்.

அமமுக கூட்டணியில் போட்டியிடும் ஆதிநாராயண தேவர், ஆர்.பி.உதயகுமாரின் தேர்தல் கால ராஜதந்திரங்களை எல்லாம் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொண்டு பார்ப்பது போல, அமைச்சருக்கு செக் வைத்துக் கொண்டே இருக்கிறார்.

இப்படி, தொகுதி முழுவதும் தனக்கு எதிராக எதிர்ப்பு அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைக் கண்டு கலங்கிப் போய் இருக்கும் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருக்கு மற்றொரு அதிர்ச்சியாக,  திருமங்கலம் அதிமுக.வில் செல்வாக்கான முன்னாள் எம்.எல்.ஏ.ம.முத்துராமலிங்கமும், கடந்த சில நாட்களுக்கு முன்பாக திமுக.வில் ஐக்கியமான நிகழ்வு அமைந்தது.

தொகுதியில் எவ்வளவு பணத்தை கொட்டினாலும் தான் வெற்றி பெற்றுவிடக் கூடாது என்ற சதித்திட்டத்தோடு ஒரு கும்பல் இறங்கி வேலை பார்ப்பதாகவும், அந்த கும்பலுக்கு பின்னால் நின்றுக் கொண்டு அமைச்சர் செல்லூர் ராஜுவும், ராஜன் செல்லப்பாவும் தூண்டி விடுகிறார்கள் என்று மனம் நொந்து போன நிலையில் தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்புகிறாராம் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.

இன்றைய நிலையில், செல்லூர் ராஜும், ராஜன் செல்லப்பாவும் அவரவர் தொகுதியில் வெற்றிக் கோட்டை நெருங்கிவிட்ட நிலையில், இருவரும் கைகோர்த்து ஆர்.பி.உதயகுமாரை பழிவாங்குகிறார்களோ என்ற சந்தேகம், மதுரை மாவட்ட அதிமுக.வினரிடம் அதிகமாகவே இருக்கிறது என்று மூச்சுவிடாமல் பேசினார் எம்.ஜி.ஆர்.கால அதிமுக விசுவாசி.

பணம் பாதாளம் வரை பாயாது என்பதை இப்போது புரிந்துக் கொண்டிருப்பார் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார். பரிதாபம்தான்.

அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக திருமங்கலம் தொகுதியில் நாளுக்கு நாள் அதிவேமாக அனலடித்துக் கொண்டிருப்பதால், உதயசூரியன் உச்சிக்கே சென்று விட்டது என்று இப்போதே பட்டாசு கொளுத்த தயாராகிவிட்டார்கள் திருமங்கலம் திமுக.வினர்… குறைவாக தூக்கும் நேரத்தில் கூட பட்டாசு சத்தமே கேட்பதாக கூறி சிரிக்கிறாராம் திமுக வேட்பாளர் மணிமாறன்.