திருநெல்வேலியில் மட்டுமல்ல, மாவட்டத்தில் உள்ள பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக கொடியே உயர உயர பறக்கிறது.
பாஜக வேட்பாளராக களமிறங்கியுள்ள நயினார் நாகேந்திரன் மீது தொகுதி மக்களுக்கு பரிதாபம் இருந்தாலும் கூட, காவித் தொண்டை அணிந்து கொண்டு வரும் அவரைப் பார்த்து வாக்காளர்கள் காத தூரம் ஓடுகிறார்கள். அமமுக வேட்பாளர் மகேஷ் கண்ணனின் ஆர்ப்பரிப்பால், திமுக எம்.எல்.ஏ, ஏ.எல்.எஸ்.லெட்சுமணன், இப்போதே புதுவேட்டி, சட்டையோடு சென்னைக்கு புறப்பட தயாராகிவிட்டார்.
அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதியில் திமுக.வின் முன்னணி தலைவர் இரா.ஆவுடையப்பன் வெற்றிக் கோட்டை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறார். ஆனால், அதிமுக.வில் களமிறக்கப்பட்டுள்ள இசக்கி சுப்பையா, பண பலம், படை பலத்தில் பெரிய ஆள் என்பதால், ஆவுடையப்பனுக்கு முட்டுக்கட்டை போட்டுக் கொண்டிருக்கிறார். அதிமுக.ஆட்சிக்கு எதிராக மூடுபனி போல இருக்கும் அதிருப்தி அலை வேகமாக அடித்தால், ஆவுடையப்பன் கழுத்தில்தான் வெற்றி மாலை விழும்.
பாளையங்கோட்டையில், அதிமுக வேட்பாளர் ஜெரால்டு கொடியே உயர, உயர பறந்துக் கொண்டிருக்கிறது. கிறிஸ்துவ நாடாரான இவரை முதல்வர் இ.பி.எஸ். களம் இறங்கியிருப்பதால், 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட கிறிஸ்துவர்கள் ஓட்டுகள் ஒட்டுமொத்தமாக ஜெரால்டுக்கே விழுகிற மாதிரி பேசி முடித்து இருக்கிறார்கள். திமுக வேட்பாளர் அப்துல் வஹாப் மீது பரிதாபம் இருந்தாலும் முஸ்லீக் ஓட்டுகளை எஸ்.டி.பி.ஐ முகம்மது முபாரக்கும் கைப்பற்றுவார் என்பதால், கொஞ்சம் திண்டாடிக் கொண்டிருக்கிறார் வஹாப். அவரது வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என்றால், அதிமுக ஆட்சி அதிருப்தி அலைதான் கைகொடுக்க வேண்டும்.
நாங்குநேரி தொகுதியில் கண்ணை மூடிக் கொண்டு சொல்லலாம் திமுக கூட்டணியில் களமிறங்கியிருக்கும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன்தான் வெற்றிவேட்பாளர் என்கிறார்கள் தொகுதியில் உள்ள நடுநிலை வாக்காளர்கள். அவரை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கணேச ராஜா, உட்கட்சி உள்குத்தையும், அமமுக வேட்பாளர் பரமசிவ ஐயப்பனின் அதிரடி ஆட்டத்தையும் சமாளித்து வருவதற்குள் வாக்குப்பதிவே முடிந்துவிடுமாம்.
ராதாபுரம் தொகுதியில் திமுக, அதிமுக என இரண்டு கட்சியிலும் போட்டியிடுபவர்கள் சகலகலா வல்லவர்கள். அப்பாவுக்கும் இன்பதுரைக்கும் இடையே நடக்கும் மல்லுகட்டில் ஏப்ரல் 6 ம் தேதி கூட முடிவு தெரியாது. மே 2 ஆம் தேதிதான் வெற்றி மாலை யார் கழுத்தில் விழுந்திருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியும் என்கிறார்கள் தொகுதி மக்கள். கடந்த 2016 ஆம் ஆண்டில் நடந்த கூத்து, மீண்டும் நடப்பதற்கான வாய்ப்பே இல்லை என்கிறார்கள்.
தென்காசி தொகுதியில் அதிமுக வேட்பாளராக களமிறங்கியுள்ள செல்வமோகன்தாஸ் பாண்டியன், சிலுப்பிக் கொண்டிருந்தாலும், அவரது வெற்றி உறுதியில்லை என்பதுதான் இன்றைய கள யதார்த்தம். திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பழனிநாடார், சில ஆயிரம் ஓட்டுகளில் வெற்றி மாலை சூடுவாராம். 2016 தேர்தல் ரிசல்ட் தலைகீழாக மாறும் என்றும் மீண்டும் எம்.எல்.ஏ என்ற கனவம்பறிபோகக் கூடும் என்று உறுதியாக கூறுகிறார் தொகுதி மக்கள்.
சங்கரன்கோவில் தொகுதியில் அமைச்சர் ராஜலெட்சுமி, கடுமையான போராட்டங்களை சந்தித்துதான் வெற்றிக் கோட்டிற்கு முன்னேறுவாராம். தொகுதியின் பல இடங்களில் காணப்படும் அதிருப்தியை சரிகட்டுவதில் மும்முரமாக இருப்பதால் பிரசாரத்தில் தொய்வு ஏற்பட்டு இருக்கிறதாம். அவரை எதிர்க்கும் திமுக வேட்பாளர் இ.ராஜா, அமைச்சருக்கு ஈடுகொடுக்கும் அளவுக்கு பணம் இல்லாததால் திணறிக் கொண்டிருக்கிறார். அதிமுக ஆட்சியின் அதிருப்தி அலையை பெரிதாக நம்பிக் கொண்டிருக்கிறார்.
கடையநல்லூர் தொகுதியில் கள நிலவரமே வித்தியாசமாக இருக்கிறதாம். திமுக கூட்டணி வேட்பாளருக்கும் அமமுக.வுக்கும்தான் நேரடி போட்டியாம். மூன்றாம் இடத்தில்தான் இருக்கிறதாம் அதிமுக. நூறு, இருநூறு என குறைந்த வாக்குகளிலாவது மீண்டும் எம்.எல்.ஏ.,வாகிவிடுவார் முகம்மது அபுபக்கர் என்கிறார்கள் தொகுதி மக்கள். தனிப்பட்ட செல்வாக்கு, பண பலம் அதிமுக.வை காலி செய்கிறதாம்.
வாசுதேவநல்லூரில் மதிமுக வேட்பாளர் சதன்திருமலைக்குமாரின் நிலையை பார்த்து பரிதாப்படுகிறார்கள் தொகுதி மக்கள். நல்லவர்தான். ஆனால், தேர்தலுக்கு செலவழிக்க கூட பணம் இல்லாமல் தவிக்கிறாரே என பரிதாபம் அதிகமாக இருக்கிறது. திமுக கூட்டணியினர் உற்சாகமாக இருந்தாலும், காசு, பணம், துட்டு இல்லாமல் பிற்பகலிலேயே வாக்குசேகரிப்பு களையிழந்து விடுகிறதாம். அதிமுக மதிவாணன் எம்.எல்.ஏ, உற்சாகமாக இருந்தாலும், ஆட்சிக்கு எதிரான அதிருப்தி அலையை கண்டு பயந்து போய் இருக்கிறாராம். மீண்டும் வாகை சூடிவிடுவோம் என்ற நம்பிக்கை அவருக்கு இல்லை என்கிறார்கள் அவரது விசுவாசிகள்.
ஆலங்குளம் தொகுதியில் திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சி வேட்பாளர்களையும் தொகுதி மக்களே விரும்பவில்லை. விரக்தியில் இரண்டு கட்சியினரும் மட்டுமல்ல, தொகுதி மக்களும் உள்ளார்களாம். அதிமுக ஆட்சியின் அதிருப்தி அலை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்ற கட்சியினரின் உத்வேகம் ஆகியவற்றால்தான் கரையேறுவார் பூங்கோதை ஆலடி அருணா என்பதுதான் இன்றைய தேதி கள யதார்த்தம்.
ஒட்டுமொத்தமாக திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் அதிமுக தேர்தல் அறிக்கையின் விலையில்லா அம்மா வாஷிங் மிஷின் வாக்குறுதியை காது கொடுத்து கேட்காத வாக்காளர்கள், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள 7 துறைகளின் தொலைநோக்கு திட்டங்கள் குறித்து ஆர்வமாக விவாதிக்க தொடங்கியிருக்கிறார்களாம்.