Sun. May 5th, 2024

கிருஷ்ணகிரியில் அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் மிகை மின்மாநிலமாக இருப்பதால், புதிய தொழில்கள் தொடங்க, பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான நிறுவனங்கள் வருவதாக தெரிவித்தார்.

தொழில் முனைவோர் மாநாடு நடத்தியதன் மூலம் 3 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு புதிய ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளதாகவும், அந்த நிறுவனங்கள் செயல்பாட்டிற்கு வரும் போது லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறினார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் நூற்றுக்கணக்கான ஏரிகள் தூர் வாரப்பட்டு நீர் நிலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதன் மூலம் விவசாயத் தொழிலும் வளர்ச்சிப் பெற்றிருப்பதாகவும், கல்வி, சுகாதாரம், தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பிற மாநிலங்களை விட தமிழகம் முன்னணியில் இருப்பதாகவும் முதல்வர் தெரிவித்தார்.

நீர் சேமிப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தமிழக அரசின் செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதாக கூறி மத்திய அரசு ஏராளமான விருதுகளை தமிழகத்திற்கு வழங்கியுள்ளது என்றும் முதல்வர் இ.பி.எஸ். கூறினார்.

பள்ளர், குடும்பர்,பண்ணாடி, காலாடி, கடையன், வாதிரியான்,தேவேந்திர குலத்தான் ஆகிய 7 உட்பிரிவினரின் நீண்டநாள் கனவான தேவேந்திர குல வேளாளர் எனும் பொதுப்பெயர் நம் பரிந்துரைப்படி நாடாளுமன்றத்தில் சட்டமாக நிறைவேறியுள்ளது. அம்மா அரசு சொன்னதை செய்து சமூக நீதி காத்ததில் தனக்கு பெருமகிழ்ச்சி என்றும் எடப்பாடி பழனிசாமி பெருமிதத்துடன் தெரிவித்தார்.