Sun. May 5th, 2024

ஏற்காடு தொகுதி சிட்டிங் அதிமுக எம்.எல்.ஏ சித்ரா மீண்டும் போட்டியிடுகிறார். அவரை வெற்றி பெற வைக்கும் பொறுப்பு, சேலம் புறநகர் மவாட்ட அதிமுக ஜெயலலிதா பேரவைச் செயலாளர் ஆர். இளங்கோவனிடம் ஒப்படைத்துள்ளார், முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கித்தலைவராகவும் இருக்கும் இளங்கோவன், இன்று ஏற்காட்டில் முகாமிட்டுள்ளார். மலை வாசஸ்தலமான ஏற்காட்டில் உள்ள அனைத்து அதிமுக நிர்வாகிகளிடமும் சித்ரா எம்.எல்.ஏ.வுக்கு கடுமையான எதிர்ப்பு உள்ளது. அதிமுக வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்ட போது, ஏற்காடு தொகுதியில் மீண்டும் சித்ராவே போட்டியிடுவார் என்று தெரிந்ததும், ஏற்காடு தொகுதி அதிமுக நிர்வாகிகள் வீட்டுக் கதவை இழுத்து மூடிக் கொண்டனர். மரியாதை நிமித்தமாகவும், ஆதரவு கேட்டும் ஏற்காடு தொகுதி அதிமுக நிர்வாகிகளை வீடு வீடாக சென்று பார்த்தபோது, சித்ரா எம்.எல்.ஏ.வை ஒரு நிர்வாகியும் வீட்டிற்குள்ளேயே அழைக்கவில்லையாம். வீட்டு வாசலிலேயே நிற்க வைத்து அசிங்கப்படுத்தி அனுப்பி வைத்தார்களாம்.

இளங்கோவனின் செல்வாக்கு நிரந்தரமாக நமக்கு இருக்கும் என்ற திமிரில், கடந்த ஐந்தாண்டுகளாக ஒரு அதிமுக நிர்வாகிகளையும் மதிக்காமல், பந்தா பண்ணிக் கொண்டிருந்த சித்ரா எம்.எல்.ஏ.வை, கடந்த பத்து நாட்களாக தண்ணி குடிக்க வைத்து விட்டார்களாம் அதிமுக நிர்வாகிகள். இதே நிலைமை நீடித்தால், சித்ரா எம்.எல்.ஏ மண்ணை கவ்வி விடுவார் என்ற அதிர்ச்சி தகவல், பரவலாக இளங்கோவனுக்கு கிடைக்க, அலறியடித்துக் கொண்டு, ஏற்காடு மலைக்கிராமங்களில் இன்று ஒருநாள் முழுவதும் முகாமிடும் திட்டத்துடன் காலை ஏற்காடு சென்றாராம்.

ஏற்காடு நகரம் மற்றும் ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் உள்ளடக்கிய ஆலோசனைக் கூட்டத்தை இன்று காலை கூட்டியிருக்கிறார் இளங்கோவன். நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் முன்னிலையிலேயே சித்ரா எம்.எல்.ஏ.வை கடுமையான வார்த்தைகளில் வறுத்தெடுத்தாராம்.

தொகுதி முழுவதும் மக்களிடம்தான் அதிருப்தியை சந்தித்து வைத்திருக்கிறாய் என்றால், அதிமுக நிர்வாகிகள் ஒருவர் கூட உன்னை ஏற்றுக் கொள்ளவில்லையே. இங்கு இருக்கிற நிர்வாகிகளைவிட நீ பெரிய ஆளு ஒன்றும் இல்லை. அதிமுக நிர்வாகிகள் எல்லோரும் எனக்காகவும், முதல்வர் எடப்பாடியாருக்காகவும்தான் கட்சிக்கு விசுவாசமாக இருக்கிறார்கள். நாங்கள் இல்லையென்றால், உன்னை மதிப்பதற்கு ஒருத்தர் கூட தொகுதியில் இல்லை. இப்படியா கட்சி வேலைப் பார்ப்பது.

அதிமுக எம்.எல்.ஏ., என்ற தகுதி உனக்கு இல்லையென்றால், ஓட, ஓட விரட்டியடிக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள். அவ்வளவு கோபத்தை சம்பாதித்து வைத்திருக்கிறாய்…கொஞ்சம் ஏமாந்தால் திமுக வேட்பாளர் ஏற்காட்டில் வெற்றி பெற்றுவிடுவார். அப்படியொரு நிலை ஏற்பட்டால், உனக்கு அசிங்கம் இல்லை. எனக்கும், முதல்வர் எடப்பாடியாருக்கும்தான் அவமானம். இவ்வளவு பேரின் அதிருப்தியை, கோபத்தை சம்பாதித்து வைத்துள்ள உன்னை மீண்டும் வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதா எங்கள் தலையெழுத்து.. நீ பண்ணிய தவறுக்கு எல்லாம், அடாவடிக்கு எல்லாம் நான் ஒவ்வொரு நிர்வாகியிடம் மன்னிப்புப் கேட்டு கொண்டிருக்கிறேன்..

தேர்தல் முடியுட்டும். உன்னை எந்த இடத்தில் வைத்திருக்கிறோம் என்பதை மட்டும் பொறுத்திருந்து பார் என்று ஆவேசம் அடங்காமல் கத்தினாராம் இளங்கோவன். அவரின் சீற்றத்தை கண்டு, ஏற்காடு தொகுதி அதிமுக.வினர் ஒட்டுமொத்தமாக அதிர்ச்சியில் உறைந்துப்போய் இருக்கிறார்களாம்…

இளங்கோவின் சித்துவேலைகளில் ஏற்காடு தொகுதி மீண்டும் அதிமுக கோட்டையாகிவிடும் என்ற நம்பிக்கை இப்போது பிறந்திருக்கிறது என்கிறார்கள் ஏற்காடு அதிமுக நிர்வாகிகள்.