Sun. Apr 20th, 2025

தமிழ்த் தேசிய உணர்வு கொண்ட வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு தமிழ்நாடு மக்களுக்கு பழ.நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார்..

அவரின் அறிக்கை விவரம் இதோ…

சனநாயகத்தைக் காக்க வாக்களிப்பீர்!

அரசியல் சட்டம் வழங்கிய மக்களின் உரிமைகள், மாநிலங்களின் அதிகாரங்கள் ஆகியவற்றை பறித்து மத்தியில் அதிகாரத்தைக் குவிக்கும் போக்கு காங்கிரசு ஆட்சியில் தொடங்கி பா.ச.க ஆட்சி வரை தொடரும் அவலம் நீடிக்கிறது, ஆனால் மாநில சுயாட்சிக்காக அமைக்கப்பட்ட கட்சிகள் மாறி மாறி மேற்கண்ட இருகட்சிகளுடன் கூட்டுச் சேரும் சந்தர்ப்பவாதப் போக்குத் தொடர்கிறது.

பல்வேறு மொழி வழித் தேசிய இனங்களும், பல்வேறு மதங்களைச் சார்ந்தவர்களும் வாழும் நாட்டில் மதவெறி அரசியல் தலைத்தூக்க அனுமதிப்பது சனநாயகத்தை அழித்து சர்வதிகார ஆட்சிக்கு வழிவகுத்துவிடும். இந்த அபாயத்தைத் தடுத்து நிறுத்தி மக்களாட்சியின் மாண்பைக் காப்பது மக்களின் கடமையாகும்.

சனநாயக நெறிமுறைகளைக் காக்கவும் தமிழ், தமிழர், தமிழ்நாடு ஆகியவற்றின் நலன் சார்ந்த பிரச்சனைகளில் சட்டமன்றத்தில் குரல் கொடுக்கவும் அவற்றுக்காகப் போராடவும் உறுதி பூண்ட தமிழ்த் தேசிய உணர்வு கொண்ட வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு அனைவரையும் வேண்டிக் கொள்கிறேன்.

இவ்வாறு பழ. நெடுமாறன் தனது அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.