சென்னை மாவட்டத்திற்குட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் மூன்று தொகுதிகள் நட்சத்திர அந்தஸ்தை பெற்றுள்ளது. முதலிடத்தில் இருப்பது, சுப்ரபாதம் போல நாள்தோறும் காலையில் தொலைக்காட்சிகளுக்கு பேட்டி கொடுத்துக் கொண்டிருந்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் போட்டியிடும் ராயபுரம். தேர்தல் பிரசாரத்தின் போதும் தன் முன்பு நிற்பது வாக்காளர்கள் என்ற நினைப்பு இல்லாமல், நிருபர்கள் என்ற நினைப்பிலேயே பேசி வருகிறாராம் ஜெயக்குமார்.
மகுடிக்கு கட்டுப்பட்ட பாம்பு போல, தான் சொல்வதை எல்லாம் அப்படியே பதிவு செய்து கொள்ளும் நிருபர்களைப் போல, வாக்காளர்களும் இருப்பார்கள் என்று நம்புகிறாராம் அமைச்சர். அதனால், சந்தடி கேப்பில் அவரை வீழ்த்திவிட, திமுகவேட்பாளர் ஐட்ரீம் இரா.மூர்த்தி துடித்துக் கொண்டிருக்கிறார்.
2001 ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து 4 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தபோதும் தொகுதி வளர்ச்சிக்காக அவர் ஒரு துரும்பையும் கிள்ளிப்போடவில்லை என்று அவர் சார்ந்த சமுதாய மக்களை தூண்டி விடும் வேலையில் மும்முரமாக இருக்கிறார் திமுக வேட்பாளர். 2021ல ஆம் ஆண்டில் சட்டமன்றத்திற்குள் அவர் நுழைவது, இந்தநிமிடம் வரை சாத்தியமில்லை என்கிறார்கள், அவருக்கு நெருக்கமான அதிமுக நிர்வாகிகள். உள்கட்சி உள்குத்தும் அமைச்சருக்கு பலமாக இருக்கிறதாம்.
இரண்டாவதாக, ஆவடி தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனின் தொகுதியும் இந்த நிமிடம் வரை சிக்கலாகதான் இருக்கிறது. திமிரில் அவர் செய்த ஒரு வேலையை நாளை ஹாட் நியூஸில் விரிவாக பார்ப்போம். அவரை எதிர்த்து களத்தில் நிற்கும் திமுக வேட்பாளர் சா.மு.நாசர்,
அரசியலில் மட்டுமல்ல, தேர்தல் சித்துவேலைகளிலும் சகலகலா வல்லவர். அதனால், அமைச்சரை மீண்டும் கோட்டைக்கு அனுப்பி வைக்க மாட்டார் நாசர் என்கிறார்கள், ஆவடி அதிமுக நிர்வாகிகள். உட்கட்சி அரசியல் உள்குத்துகளை விட, அமைச்சரின் பி.ஏ.க்கள் செய்துள்ள அக்கிரமங்களை கண்டுதான் நொந்து போயிருக்கிறார்களாம் தொகுதி அதிமுக நிர்வாகிகள்.
மூன்றாவது இடத்தில் உள்ள தொகுதியின் கதாநாயகன், பார்ப்பதற்கு பிள்ளைப்பூச்சியாக இருந்தாலும்கூட, தேள் கொட்டுவதைப் போல கமுக்கமாக உட்கட்சி உள்குத்து வேலைகளில் பிண்ணியெடுக்கும் அமைச்சர் பெஞ்சமின். மதுரவாயல் தொகுதியும், அதிமுக.வுக்கு சவால் நிறைந்ததுதான்.
ஆனால், திமுக சார்பில் வேட்பாளராக களம் இறங்கியுள்ள காரப்பாக்கம் கணபதிக்கு உட்கட்சியிலேயே நிறைய குடைச்சல்கள் எழுகிறதாம். அதுவும் தொகுதி முழுவதும் பிரபலம் இல்லாததாலும், அமைச்சரிடம் உள்ள கரண்ஸிகளும், நூலிழையிலாவது கரையேற்றிவிடும் பெஞ்சமினை என்று அவரது ஆதரவாளர்களே அதிர்ச்சி விலகாத ஆச்சரியத்துடன் இப்போதும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
தற்போதைய அமைச்சர்கள் மூன்று பேர் போட்டியிடும் தொகுதிக்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் இருக்கிறதோ, அதற்கு சற்றும் குறையாமல் ஊடகம் வெளிச்சம் அதிகமாக இருக்கும் தொகுதி ஆலந்தூர் தொகுதி. இங்கு அதிமுக மற்றும் திமுக சார்பில் போட்டியிடும் இரண்டு வேட்பாளர்களில் யார் வெற்றிப் பெற்றாலும், அவர் சார்ந்திருக்கிற கட்சி வெற்றிப் பெற்றாலும், நிச்சயம் அவருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்பதால், ஆலந்தூர் தொகுதியே அல்லோகலப்பட்டு இருக்கிறது என்பதுதான் கூடுதல் சிறப்பு. கூடவே இருவரும் முன்னாள் அமைச்சர்கள் வேறு.
திமுக சார்பில் களம் காண்பவர் சிட்டிங் எம்.எல்.ஏ தா.மோ.அன்பரசன். இவரைப்போலவே, இந்த தொகுதிக்கு நன்கு அறிமுகமானவர் அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி. 2001 ல் இதே தொகுதியில் நின்று வெற்றியும் பெற்றிருக்கிறார். 2006ல் இதே தொகுதியில், முதல்முறையாக தேர்தல் களம் கண்ட தேமுதிக வால், வெற்றி வாய்ப்பையும் இழந்திருக்கிறார். , தா.மோ.அன்பரசன், ஆலந்தூர் தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ., 2006 லும் இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றிருக்கிறார் தா.மோ.அன்பரசன். அப்போதைய திமுக ஆட்சியில் அமைச்சராகவும் இருந்திருக்கிறார். காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளராகவும் இவர் இருக்கிறார். இதனால், இந்த தொகுதியின் வெற்றியை கௌரவப் பிரச்னையாக பார்க்கிறார்கள் திமுக நிர்வாகிகள்.
ஆனால், தா.மோ.அன்பரசன் வெற்றிப் பெற்றுவிடக் கூடாது என்று பா.வளர்மதி நினைப்பதைவிட, அதிகமாக இரண்டு திமுக எம்.எல்.ஏ.க்களே நினைப்பதுதான், தற்போதைய தேர்தல் நேர டிவிஸ்ட். அதிர்ஷ்டவசமாக திமுக வெற்றி பெற்று, முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றால், நிச்சயம் அமைச்சராகிவிடுவார் தா.மோ.அன்பரசன் என்பதால், அவரின் வெற்றிக்கு மறைமுகமாக குழிபறிக்கிறார்களாம். தாம்பரம் சிட்டிங் திமுக எம்.எல்.ஏ., எஸ்.ஆர். ராஜாவும், பல்லாவரம் திமுக எம்.எல்.ஏ இ.கருணாநிதியும்.
இவர்கள் இருவருக்கும் இடையே அரசியல் மற்றும் தொழில் ரீதியாக பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஒரு விஷயத்தில் இருவருக்கும் இடையே ஒருமித்த கருத்தே நிலவுகிறதாம். அதை மோப்பம் பிடித்துவிட்ட அதிமுக வேட்பாளர் பா.வளர்மதி, இரண்டு திமுக எம்.எல்.ஏ.களின் சித்துவேலைகளை காட்டிக் கொள்ளாமல், அதி தீவிர பக்தி கொண்ட தனக்கு பிராமணர்கள், இந்து மத ஆதரவு நிலைக்கு வந்துள்ள இளம் வாக்காளர்கள், பாஜக. வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்யும் வகையில், தொகுதி முழுவதும் சுற்றி வந்து, தா.மோ.அன்பரசனின் தூக்கத்தை கெடுத்து வருகிறாராம்.
ஒருபக்கம் பலமான அதிமுக வேட்பாளரின் பிரசாரத்தை எதிர்கொண்டாலும் கூட, இரண்டு திமுக எம்.எல்.ஏ.க்களும் தங்களுக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை, எதிராளிக்கு இரண்டு கண் போக வேண்டும் என்று குறிக்கோளோடு, தன்னை குறித்து வைத்து அண்டர்கிரவுண்ட் அரசியல் செய்து வருவதை கண்டு தான் கொதித்து போய் இருக்கிறாராம் தா.மோ.அன்பரசன். தன்னுடன் பிரசாரத்திற்கு வரும் திமுக நிர்வாகிகளே எப்போது தனது காலை வாருவார்கள் என்று தெரியாமல், ஒவ்வொரு நாளும் பயத்துடனேயே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறாராம் தா.மோ.அன்பரசன்.
எதிராளி கோட்டைக்குள் சத்தமாக கேட்க தொடங்கிவிட்ட கலகக் குரலை தனக்கு சாதமாக பயன்படுத்தி, ஆலந்தூரில் வெற்றிக் கொடி நாட்ட முன்னேற்றிக் கொண்டிருக்கிறாராம் பா.வளர்மதி.
.