தேர்தலில் போட்டியிடுகிற உண்மை கூட்டணி எதுன்னு உங்களுக்கு தெரியுமா.. சேலம் மேற்கு தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாமக மாநில துணைப் பொதுச் செயலாளர் இரா.அருள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். கடந்த 2016 ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு மூன்றாம் இடத்தை பிடித்திருந்தாலும், 5 ஆண்டுகளுக்குப் பிறகும், தொகுதி முழுவதும் இப்போதும் அருள் பிரபலமாகவே இருக்கிறார்.
அதிமுக, பா.ம.க. கூட்டணி வலுவாக இருந்தாலும், அதிமுக சிட்டிங்க எம்.எல்.ஏ., வான வெங்கடாசலம், கடந்த ஐந்தாண்டுகளில் தொகுதி மக்களின் கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்றதால், கிராமப் புற மக்களிடம் அதிருப்தி இருக்கிறது. அதனை அகற்றி, தன் மீது வாக்காளர்களுக்கு முழு நம்பிக்கை வரும் வகையில் பிரசாரம் செய்கிற அனைத்துப் பகுதிகளிலும் மக்களின் மனங்களை கரைக்கிற வகையில் பேசி வருகிறார். மாம்பழத்தையே கையில் ஏந்திக் கொண்டு பா.ம.க.நிர்வாகிகளும் ஒவ்வொரு வீட்டின் கதவையும் தட்டி மாம்பழத்திற்கு வாக்கு சேகரிக்கிறார்கள்.
கூடவே செல்லும் இரா.அருளும், என் வீட்டு கதவு எப்போதும் திறந்து இருக்கும். எந்த விஷயமாக இருந்தாலும் தொகுதி மக்கள் தன்னை வந்து அணுகலாம் என்று வெள்ளந்தியாக அவர் பேசும் பேச்சு, கிராம மக்களிடம் வரவேற்பை பெற்று வருவதாக, தொகுதியில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதைவிட சிறப்பாக, அவர் சொல்லும் உவமை கலகலப்பை ஏற்படுத்துகிறது. உண்மை கூட்டணி, அதிமுகதான் என்றும் எடப்பாடியார், டாக்டர் ராமதாஸ், டாக்டர் அன்புமணிராமதாஸ், பிரதமர் மோடி ஆகியோர் அமைத்துள்ள கூட்டணிதான் உண்மை கூட்டணி, எதிரணி கூட்டணி பொய்யர்களால் உருவாக்கப்பட்டது என்று கூறி இரா.அருள் செய்யும் பிரசாரத்தை நடுநிலை வாக்காளர்கள் ரசிக்கவே செய்கிறார்களாம்.
அவரின் வெற்றியை எளிதாக்கி விடக்கூடாது என்று டஃப் பைட் கொடுத்துக் கொண்டிருக்கிறார், திமுக வேட்பாளர் சேலத்தாம்பட்டி அ.ராஜேந்திரன். ஆனால், ராஜேந்திரன் எப்படி உழைத்தாலும் அவர் வெற்றிப் பெற்றுவிடக் கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டு சேலம் திமுக பெருசுகள், பழம்தின்னு கொட்டைப் போட்ட ஒரு கூட்டம், மறைமுகமாக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறது.
சொந்தக் கட்சியினரின் குழிப்பறிப்பு வேலைகளை எல்லாம் கடந்து, வெற்றிக் கோட்டைக்கு நெருங்குவதற்கு இஸ்லாமியர்கள் ஓட்டு மொத்தமாக கிடைத்தால், ராஜேந்திரன் முகத்தில் மகிழ்ச்சியை பார்க்கலாம். அந்த வாக்குகளில் பிளவு ஏற்பட்டால், ராஜேந்திரனுக்கு முன்பாகவே, வெற்றிக் கொடியை ஏந்திக்கொண்டு, தைலாபுரத்திற்கு பயணப்பட்டுவிடுவார் பா.ம.க. அருள் என்பதுதான், இன்றைய கள யதார்த்தம்…