Mon. Nov 25th, 2024

இனிமேலும் காலதாமதம் செய்தால், ஊருக்குள்ளேயே தலையை காட்ட முடியாது என்ற நிலைமை உருவானதை அறிந்து, பிரசாரத்திற்கு கிளம்பிவிட்டார், துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம். கடந்த 18 ஆம் தேதி திருவொற்றியூரில் அதிமுக வேட்பாளர் கே.குப்பன், மாதவரம் தொகுதி வேட்பாளர் மூர்த்தி ஆகியோரை ஆதரித்து பிரசாரம் செய்தார். முன்னதாக பிரசித்தி பெற்ற வடிவுடை[யும்மன் உடனுறை தியாகராஜசுவாமி திருக்கோயிலில் தரிசனம் செய்தார்.

தொடர்ந்து, அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து கொண்டிருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்.அவர் போட்டியிடும் போடிநாயக்கனூர் தொகுதியில் அவரது நிலைமையே ஆட்டம் கண்டிருக்கிறது. இருந்தாலும், அந்த நடுக்கத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் கம்பீரமாகதான் பொதுமக்களிடம் ஆதரவு திரட்டி வருகிறார்.

அவருடன் பயணித்துக் கொண்டிருக்கும் தேனி மாவட்ட அதிமுக பிரமுகர்களிடம் பேசினோம். என்ன திடீரென்று ஓ.பி.எஸ்.ஸிடம் பிரசாரத்திற்கு செல்லும் மனமாற்றம் வந்திருக்கிறது.எப்படி என்று கேட்டோம். நொந்து நூடூல்ஸ் ஆன மாதிரியான சோகத்தில் அவர் பேசினார்.

அதிமுக.வில் இ.பி.எஸ்., கொடி உச்சத்தில் பறக்கிறது. டெல்லி பாஜக மேலிடமும் எடப்பாடியார் சொல்றதைதான் கேட்கிறது. சசிகலா, தினகரனை புறக்கணித்ததால், தென்மாவட்டங்களிலும் அண்ணனுக்கு கெட்டப் பெயர். தனது சொந்த தொகுதியில் ஜென்ம எதிரியான தங்கதமிழ்ச் செல்வன் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்.இப்படி எல்லா திசைகளிலும் அவருக்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. அதனால், தன்னை நம்பியிருக்கும் கொஞ்சம் நஞ்ச விசுவாசிகளையும் இழந்துவிடக் கூடாது என்று பிரசாரத்திற்கு கிளம்பிவிட்டார். உள்ளே அழுதுக் கொண்டிருந்தாலும், வெளியே சிரித்துக் கொண்டிருக்கிறார்.

இருந்தாலும் பணிவுக்கு பண்ணீர்செல்வம் என்ற அடையாளத்தை இழந்துவிடக் கூடாது என்பதற்காக, அவருக்கென பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் வாகனத்தை கூட பயன்படுத்தால், தொகுதியில் தயாராக இருக்கும் திறந்த ஜீப்பில் நின்றபடியே, தொகுதி வேட்பாளர்களை பக்கத்தில் நிறுத்திக் கொண்டு வாக்கு சேகரிக்கிறார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியோ, திமுக தலைவரோ அந்தந்த தொகுதி வேட்பாளர்களை தங்களது பிரசார வாகனத்திலேயே ஏற்றுவதில்லை.

ஆனால், அவர்களிடையே தான் மாறுபட்ட தலைவர் என்பதை வெளிப்படுத்தும் விதமாக, கொரோனோ அச்சுறுத்தலைப் பற்றி கவலைப்படாமல், வேட்பாளர்களை வலது மற்றும் இடது பக்கம் நிறுத்திதான், அறிமுகப்படுத்திதான் பிரசாரம் செய்கிறார், ஓ.பன்னீர்செல்வம். ஒரு தொகுதியில் மட்டுமல்ல, பிரசாரம் செய்கிற அத்தனை இடங்களிலும், வேட்பாளர்களை அருகில் நிறுத்திக் கொண்டுதான் பிரசாரம் செய்கிறார். திருவள்ளூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின்போதும் வேட்பாளர்கள் .B.V.ரமணா மற்றும் திருத்தணி கோ.அரியையும் ஆதரித்து, இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்த போதும், ஒருங்கிணைப்பாளர் என்ற பந்தாவே அவரிடம் இல்லை.

ஓ.பி.எஸ்.ஸின் எளிமையும், வேட்பாளர்களை அரவணைக்கும் பாங்கும், அதிமுக தொண்டர்களிடமும், கூட்டணி கட்சி நிர்வாகிகளிடமும் அவருக்கு மரியாதையை அதிகரித்து வருகிறது. அதிமுக தொண்டர்களிடமும், கூட்டணி நிர்வாகிகளிடமும் ஓ.பி.எஸ்.ஸுக்கு நல்ல பெயர் கிடைத்து விடக் கூடாது என்ற அடிப்படையில், எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிற முதல்வர் இ.பி.எஸ்.ஸின் விசுவாசிகள், ஓ.பி.எஸ்.ஸுக்கு எதிராக அவதூறு பரப்பும் வேலைகளிலேயே தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

சினிமாவில் நடிகர் வடிவேலு சொல்கிற மாதிரி, எவ்வளவு அடிச்சாலும் தாங்கறாண்டாங்கற மாதிரி ஓ.பி.எஸ்.ஸுக்கு எதிராக அதிமுக.வுக்குள்ளும் வெளியேயும் நடக்கிற அவதூறு பிரசாரத்தை கண்டுதான் அண்ணன் ஓ.பி.எஸ், நொந்து போகிறார். அவரை நல்லவராகவே மாற விட மாட்டாங்க போல…எதிரணியினிர் வாட்ஸ் அப்பில் பரப்பும் பொய் பிரசாரங்களை உங்களுக்கும் அனுப்பி வைக்கிறேன். பொதுமக்களுக்கு முன்பு கொண்டு செல்லுங்கள்.. யார் நல்லவர், யார் அம்மாவின் உண்மையான விசுவாசி என்று தமிழக மக்களுக்கு தெரியட்டும்.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கோ, மாவட்ட செயலாளர்களுக்கோ எந்த செலவையும் வைக்காமல், அவரது காரிலேயே வந்து பிரசாரம் செய்து கொண்டிருக்கிறார். ஆனால், அவர் மீதான செல்வாக்கு கட்சி நிர்வாகிகளிடம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவதுதான் எங்களுக்கு வேதனையை தருகிறது என்றார், அவரது தேனி மாவட்ட அதிமுக விசுவாசி.

அவர் அனுப்பி வைத்த வாட்ஸ் அப் மெசேஜ் இதுதான்….

இபிஎஸ் ஆட்சி பற்றி வாய் திறக்காத ஓபிஎஸ்: அதிமுகவில் மீண்டும் சலசலப்பு!

திருவொற்றியூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் எம்.எல்.ஏ கே.குப்பன், மாதவரம் தொகுதி வேட்பாளர் முன்னாள் அமைச்சர் மாதவரம் மூர்த்தி ஆகியோரை ஆதரித்து துணை முதல்வர் ஓபிஎஸ் திருவொற்றியூரில் பிரசாரம் செய்தார். அப்போது அவர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் செய்யப்பட்ட திட்டங்களைப் பற்றியும், திமுகவை எதிர்த்தும் மட்டுமே பேசினார். எடப்பாடி ஆட்சியில் செய்யப்பட்ட திட்டங்களை பற்றியோ அவரது ஆட்சியில் மக்கள் பெற்ற பயன்கள் பற்றியோ பேசவில்லை.

டந்த சில தினங்களாக எடப்பாடியை முன்னிறுத்தி ஓபிஎஸ் பேசுவதில்லை என்று அதிமுக வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. திருவொற்றியூரிலும் இதே பாணியை அவர் கடைபிடித்ததால் எடப்பாடி மீண்டும் பதவிக்கு வருவது ஓபிஎஸ்க்கு பிடிக்கவில்லையோ என்று அதிமுகவினர் முணுமுணுத்தனர். இது, சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.