Mon. Nov 25th, 2024

மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதி, திமுக மற்றும் அதிமுக.வுக்கு பெரிய தலைவலியை கொடுத்து வருகிறது. இந்த தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ., வான அதிமுக.வைச் சேர்ந்த எம்.பரமேஸ்வரிக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. தொகுதியில் ஓரளவுக்கு நல்ல பெயரை பெற்றிருந்த அவரை, அதிமுக தலைமை புறக்கணித்தது, தொகுதி அதிமுக.வினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அந்த விரக்தியில்தான், கடந்த சில நாள்களுக்கு முன்பு திருச்சி வந்த முதல்வா இ.பி.எஸ். காலில் விழுந்து கண்ணீர் விட்டு கதறினார், பரமேஸ்வரி முருகன். என்னை ஏன் அண்ணா கைவிட்டீங்க என்று கூறி அவர் கலங்கியதைப் பார்த்து, அதிமுக வி.ஐ.பி.க்களே சோகத்தில் ஆழ்ந்தனர். இதையும் நல்லரசு தமிழ் செய்திகளில் வெளியிட்டிருந்தோம்…

இப்போது, திமுக.விலும் உட்கட்சி பூசலும், சாதிப் பிரச்னையும் தலைதூக்கியுள்ளது. மண்ணச்சநல்லூர் தொகுதிக்குட்பட்ட இனாம்சமயபுரம் ஊராட்சியில்தான் தற்போது தேர்தலை எதிர்கொள்ளும் திமுக வேட்பாளர் கதிரவனுக்கு சொந்தமான மருத்துவ கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரி உள்ளது. ஆனால், அவரை நன்கு அறிந்த அந்த ஊர் மக்களே அவருக்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளனர் என்பதுதான் அதிர்ச்சிக்குரிய விஷயம். காரணம், சாதிப் பிரச்னைதான்.

https://nallarasu.com/unlucky-women-mla/

2016 நடந்த சட்டமன்றம் தேர்தலில், மணச்சநல்லூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவியவர், திமுக கட்சி சார்பில் முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்த காட்டுகுளம் கணேசன் என்பவர். கடந்த முறை 7 ஆயிரம் வாக்குளில்தான் அதிமுக வேட்பாளரான பரமேஸ்வரிடம் தோல்வியை தழுவினர். இந்த முறை பரமேஸ்வரிக்கு அதிமுக.வில் வாய்ப்பு தராததால், கணேசனுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தால், அனுதாப வாக்குகள் விழுந்து எளிதாக வெற்றிப் பெற்றிருப்பார். மேலும், கடந்த முறை பல கோடி ரூபாய் செலவு ஆனதால், பொருளாதார ரீதியாக மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார். கட்சிக்காக தனது சொத்தை எல்லாம் இழந்த கணேசன் மீண்டும் அரசியல் அங்கீகாரம் பெறுவதற்கான வாய்ப்பை திமுக தலைமை உருவாக்கி தர வேண்டாமா என்று ஆவேசமாக கேள்வி எழுப்புகிறார்கள்.

ஐ பேக் டீம், உதயநிதி ஸ்டாலின் விசாரணை, மாவட்ட செயலாளர் அறிக்கை என தொகுதியில் யாருக்கு செல்வாக்கு இருக்கிறது, யாரை நிறுத்தினால் எளிதாக வெற்றி பெற முடியும் என்பதை எல்லாம் தெரிந்து கொள்ளாமல், திமுக முதன்மைச் செயலாளர் கே.என். நேருவின் பேச்சை கேட்டு, அவரது சாதியைச் சேர்ந்த ரெட்டியார் சமூகத்தினைச் சேர்ந்த கதிரவன் திமுக சார்பில் போட்டியிட திமுக தலைமை வாய்ப்பு கொடுத்துவிட்டது என்று கொதிக்கிறார்கள் இனாம்சமயபுரம் ஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள்.

திருச்சி மாவட்ட திமுக.வை இப்போதும் தனது கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்கும் கே.என்.நேருவின் பேச்சை கேட்டு, முத்தரையர் சமுதாயத்தை திமுக கட்சி தலைமை புறக்கணிப்பதாக கூறி, நேற்றிரவு படையை திரட்டி ஆவேசமானாக்ள் இனாம்சமயபுரம் கிராம மக்கள். அதே நேரம், மண்ணச்சநல்லூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிரவன் வாக்கு சேகரிப்பதற்காக, அந்த  கிராமத்திற்குள் வந்தார். அப்போது, நுழைவு பகுதியிலேயே திரண்ட இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் அரண் போல நின்றும், சாலையின் குறுக்கே இரும்பு குழாய்களை போட்டு தடுத்து நிறுத்தியும் ஆவேசமாக முழக்கங்களை எழுப்பினர். கதிரவனே திரும்பி போ என அவர்கள் போட்ட முழக்கம், இரவு நிசப்தத்தை கிழித்துக் கொண்டு, மற்ற கிராமங்களுக்கும் கேட்டது. 
ஊர்மக்கள் ஒட்டுமொத்தமாக திரண்டு ஆவேசமாக முழக்கம் எழுப்பியதை கண்டு, வாக்கு சேகரிப்பை கைவிட்டு, திரும்பிச் சென்றார் திமுக வேட்பாளர் கதிரவன். 

முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்தவரை திமுக வேட்பாளராக அறிவிக்காததால், முத்தரையர் சமுதாய மக்கள் வசிக்கும் எல்லா கிராமங்களிலும் திமுக வேட்பாளர் கதிரவனை நுழைய விட மாட்டோம் என ஊர் பெரியவர்களும் கோபத்துடனேயே கூறினார்கள். 

இனாம்சமயபுரம் கிராமத்தில் தனக்கு எதிராக எழுந்துள்ள எதிர்ப்பை கண்டு அதிர்ந்து போய்வுள்ள திமுக வேட்பாளர் கதிரவன், திமுக முதன்மை செயலாளர் கே.என். நேருவை நேற்றிரவே சந்தித்து முறையிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

திமுக முதன்மை செயலாளர் என்ற உயர்ந்த பதவி வரை தனது கடுமை உழைப்பால், விசுவாசத்தால் எட்டியுள்ள கே.என். நேரு, தனது சொந்த மாவட்டத்தில் இன்றும் சாதி அரசியலை முன்னெடுப்பதாலும், தனது சாதியை சேர்ந்தவர்களுக்கே தொடர்ந்து முக்கியத்துவம் தருவதாலும்தான், அவரின் விசுவாசிகள், பக்தர்கள் எல்லோரும் அதிருப்தியடைந்து, அன்பில் மகேஷ் பொய்யாமொழி பக்கம் அணி திரள்கிறார்கள். இந்த உண்மையை இப்போதும்கூட புரிந்துகொள்ளாத கே.என்.நேரு, மகேஷை, உதயநிதி வளர்த்துவிடுகிறார், தளபதி வளர்த்துவிடுகிறார் என தனக்கு நெருக்கமான விசுவாசிகளிடம் புலம்புகிறார் கே.என்.நேரு.

தப்பித்தவறி திமுக ஆட்சிக்கு வந்துவிட்டாலும், கே.என்.நேரு, தனது சாதிப் பாசத்தை கைவிடாமல் தொடர்ந்து பழைய பாணியையையே கடைப்பிடித்தால், ஒட்டுமொத்த திருச்சி மாவட்ட திமுக.வும், அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் தலைமையை ஏற்றுக் கொண்டுவிடும். அப்போது கே.என்.நேரு புலம்புவதை காது கொடுத்து கேட்க கூட திருச்சியில் ஒரு திமுக.காரன் அவர் பக்கம் நிற்கமாட்டார் என்கிறார்கள், அரசியலுக்கு அப்பாற்பட்ட கே.என்.நேருவின் நலம் விரும்பிகள்.

சட்டமன்றத் தேர்தலில் சாதி ஓட்டுகள் பலன் அளிக்காது என்று ஒரு கருத்தாக்கம் எழுந்துள்ளது. சிறுதுளி பெருவெள்ளமாக மாறாமல் பார்த்துக் கொள்வாரா திமுக முதன்மைச் செயலாளர் கே.என். நேரு…

மே 2 அன்று பதில் கிடைத்துவிடும்…