திமுக.வோடு மல்லுக்கு நின்று 25 தொகுதிகளை பெற்றுக் கொண்ட காங்கிரஸ் கட்சி, அந்த தொகுதிகளுக்கு தகுதியான வேட்பாளர்களை அறிவிக்காததால், மாவட்ட அளவிலான காங்கிரஸ் நிர்வாகிகள், தேர்தல் பணிக்கே செல்லாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். சொந்தக் கட்சியினர்தான் இப்படி பாராமுகமாக இருக்கிறார்கள் என்றால், கூட்டணிக்கு தலைமையேற்றுள்ள திமுக.வினரோ, காங்கிரஸ் வேட்பாளர் என்றால், வீட்டுக் கதவை இழுத்து வேகமாக முடுகிறார்களாம்.
25 வேட்பாளர்களில் ஒரு சிலரைத் தவிர, பெரும்பான்மையான வேட்பாளர்கள், காங்கிரஸ் மேலிடத்தில் இருநது தேர்தல் நிதி வரட்டும். வீட்டை விட்டு வெளியே செல்வோம் என்ற நிலையில்தான் இருந்து வருகிறார்கள். கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் கூட உண்டியல் குலுக்கி, அதன் மூலம் கிடைக்கும் தேர்தல் நிதியைக் கொண்டு, பிரசாரத்தில் பட்டையை கிளப்பி வருகிறார்கள். ஆனால், அவர்களை விட மிகமிக மோசமான நிலையில்தான் உள்ளார்களாம், காங்கிரஸ் வேட்பாளர்கள். திமுக தேர்தல் நிதி கொடுக்குமா, தொழிலதிபர்களிடம் தேர்தல் நிதி வசூலிக்கலாமா என்றுதான் கையை பிசைந்து கொண்டிருக்கிறார்களாம்.
காங்கிரஸ் போட்டியிடும் பெரும்பான்மையான தொகுதிகளில் இந்த நிலைமைதான் என்றால், கோவை தெற்கு தொகுதியின் நிலைமையோ அதை விட கேவலமாக இருக்கிறதாம். இந்திய அளவில் ஸ்டார் தொகுதியாகியுள்ள கோவை தெற்கில் மக்கள் நீதி மய்யத்தின் நிரந்தர ஒருங்கிணைப்பாளர் நடிகர் கமல்ஹாசன் போட்டியிடுகிறார்.அவரின் சொத்து மதிப்போ 177 கோடி ரூபாய்க்கு மேல். அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர், தேசிய மகளிரணி செயலாளர் வானதி சீனிவாசனின் சொத்து மதிப்பு 6 கோடி ரூபாய்க்கு மேல்.
இரண்டு பேரும், தொகுதியில் கலக்கி வருகிறார்கள். சகலகலாவல்லவனான கமல்ஹாசனுக்கே டஃப் பைட் கொடுத்துக் கொண்டிருக்கிறார் வானதி சீனிவாசன். இவர்கள் இருவரிடையே மோத வேண்டிய திமுக கூட்டணி வேட்பாளரான காங்கிரஸ் பிரமுகர் மயூரா ஜெயக்குமார், தமக்கும் தேர்தலுக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல வீட்டை விட்டு வெளியவே வரமாட்டேன் என்று அடம்பிடித்துக் கொண்டிருக்கிறாராம்.
காரணம், தேர்தல் செலவுக்கு காசு இல்லையாம். விதவிதமாக தலைக்கு வாங்கிய வீக்கிற்கு செலவிட்ட காசை சேமித்து வைத்திருந்தால்கூட,முதற்கட்டமாக பூத் கமிட்டி நிர்வாகிகள் செலவுக்கு காசு கொடுத்திருக்கலாம் என்று கிண்டலடிக்கும் காங்கிரஸ் நிர்வாகிகள், டெல்லி காங்கிரஸ் மேலிடத்தில் இருந்து தேர்தல் நிதி வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாராம்.
வேட்புமனு தாக்கல் செய்வதற்காக மட்டுமே வீட்டை விட்டு வெளியே வந்த மயூரா ஜெயக்குமார், வேட்பாளராக அவர் பெயர் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து, இன்று வரை சொந்த கட்சியினருக்கோ, கூட்டணி கட்சியான திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட் கட்சி நிர்வாகிகளுக்கோ ஒரு டீயோ, பஜ்ஜியோ கூட வாங்கித் தரவில்லை என்று புலம்புகிறார்கள் கோவை தெற்கு தொகுதியில் உள்ள திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள்.
கோவை மாவட்டத்தில் உள்ள மற்ற தொகுதிகளில் எல்லாம் தேர்தல் பிரசாரம் களைகட்டியிருக்கும் நிலையில், அங்குள்ள திமுக கூட்டணி கட்சியினர், மூன்று வேளையும் பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். கோவை தெற்கு தொகுதியில் உள்ள கட்சி நிர்வாகிகள் கம்மங்கூழுக்கு கூட வழியில்லாமல் ஏக்கத்துடன் இருக்கிறார்களாம்.
காங்கிரஸில் உள்ள நிர்வாகிகளின் வற்புறுத்தலால், தேர்தல் பணிமனை திறக்க சம்மதம் தெரிவித்துள்ள மயூரா ஜெயக்குமார், தொகுதிக்குட்பட்ட திமுக, காங்கிரஸ் தொழிலதிபர்களிடம் தேர்தல் நிதி திரட்ட ரகசியமாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளாராம். அதை மோப்பம் பிடித்துவிட்ட அவரது ஆதரவாளர்கள், அந்தந்த தொழிலதிபர்களுக்கு போனை போட்டு, தப்பி தவறி தேர்தல் நிதி கொடுத்து விடாதீர். அவருக்கு ஏகப்பட்ட கடன் இருக்கிறது. அதையெல்லாம் அடைத்துவிட்டு செட்டிலாகிவிட பிளான் போட்டிருக்கிறார்.
வானதி சீனிவாசன், கமல்ஹாசன் ஆகியோரின் போட்டிக்கு இடையே தன்னால் வெற்றி பெற முடியாது என்று அவரே முடிவுக்கு வந்துவிட்டார். அதனால், தேர்தல் நிதி என்று நீங்கள் கொடுக்கும் ஆயிரம்,இரண்டாயிரம் கூட அவரது சொந்த உபயோகத்திற்குதான் பயன்படும். தேர்தல் செலவுக்கு தரமாட்டார் என வத்தி வைக்கிறார்களாம். சொந்த கட்சியினரே சூன்யம் வைப்பதைப் பார்த்து நொந்து போய் இருக்கிறாராம் மயூரா ஜெயக்குமார்.
ஏற்கெனவே பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அவரின் பெயர் சந்தி சிரித்தது. இப்போது தேர்தல் நிதி திரட்டுவதாலும் பெயர் நாறி வருகிறது. திமுக.விடம் சண்டை போட்டு கோவை தெற்கு தொகுதியை வாங்காமல் விட்டுக் கொடுத்திருந்தால், கமல்ஹாசன் மற்றும் வானதி சீனிவாசன் கண்களில் விரலைவிட்டு ஆட்டியிருப்போம் என ஆவேசம் அடங்காமல் கொதிக்கிறார்கள் கோவை தெற்கு தொகுதி திமுக நிர்வாகிகள்.
என்னத்த சொல்ல….