Sat. Nov 23rd, 2024

ஏம்ப்பா தலைவர் ஸ்டாலின் பிரசாரத்திற்கு வந்தாரா? திமுக வேட்பாளர்களே ஒருவருக்கு ஒருவர் இப்படிதான் இன்றைக்குக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் கொதி நிலையில் இருக்கிறது….இந்த நேரத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் பிரசார சுற்றுப்பயணம் மிகவும் சொதப்பலாக இருக்கிறது என்று கொந்தளித்துப் பேசுகிறார்கள், திமுக. வேட்பாளர்கள். தனது தொகுதிக்கு வருவார், வருவார் என எதிர்பார்த்து காத்திருந்து நொந்துப் போன ஒன்றிரண்டு திமுக வேட்பாளர்கள், நம்மை கைபேசியில் அழைத்து அவர்களுடைய ஆத்திரத்தை கொட்டி தீர்த்தார்கள்.

“வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட நாளில் இருந்து இன்று வரை ஒரு வாரத்திற்குள்ளாகவே 5 கோடி ரூபாயை இரைத்திருக்கிறோம். கிளை கழகச் செயலாளர்கள் முதல், மாவட்ட நிர்வாகிகள் வரை பணத்தை காட்டினால்தான் தேர்தல் ஆலோசனைக் கூட்டத்திற்கு, பிரசாரத்திற்கு உடன் வருகிறார்கள். 7 நாட்கள் ஆகியும் தொகுதி முழுவதும் ஓரு ரவுண்ட் கூட இன்னும் முழுமையாக போகவில்லை. தி.மு.க.வுக்கு ஓட்டு போட வேண்டும் என்ற ஆர்வம் இல்லாமல் இருந்தாலும் கூட, பத்தாண்டு கால அதிமுக ஆட்சின் மீது மக்களிடம் கடுமையான அதிருப்தியிருக்கிறது. தி.மு.க. காரர்களே எங்களுக்கு ஓட்டுப் போட வேண்டாம் என்று சொன்னால்கூட, இரட்டை இலைக்கு மாற்றாக வேறு எந்த சின்னமும் இல்லாததால், தலையெழுத்தே என்றுதான் உதயசூரியனுக்கு ஓட்டுப் போட மக்கள் தாயராகி வருகின்றனர்.

இப்படிபட்ட பொன்னான வாய்ப்பை மு.க.ஸ்டாலின் வீணடித்து விடுவாரோ என்ற பயம்தான் எங்களை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. தொகுதிகளில் மக்களிடம் காணப்படும் மனமாற்றத்தையும், பத்தாண்டுகளாக ஆட்சியில் இல்லாததால் நொடிந்து போய் இருக்கும் திமுக தொண்டர்களையும் உற்சாகப்படுத்த ஊர், ஊராக மு.க.ஸ்டாலின் பிரசாரத்திற்கு வர வேண்டாமா-? உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய தொகுதிகளுக்கு எல்லாம் தற்போது ஸ்டாலின் வருவதில்லை. அந்த தொகுதிகளை எல்லாம் தவிர்த்துவிட்டு மாவட்டத்திற்கு ஓர் இடம், இரண்டு இடம் என்று பிரசாரம் செய்துவிட்டு விமானத்தில் அடுத்த மாவட்டத்திற்கு பறந்துவிடுகிறார் மு.க.ஸ்டாலின்.

கடந்த 15 ஆம் தேதி மாலை திருவாரூரில் பிரசாரத்தை தொடங்கினார். மறுநாள் அவர் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் வாக்கு சேகரிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அன்று அவர் ஆலங்குடி செல்லாமல் காலையிலேயே சேலம் வந்துவிட்டார். அவரின் சுற்றுப்பயணத்தின்படி மாலையில்தான் சேலம் வந்திருக்க வேண்டும்.ஆனால், காலையிலேயே வந்துவிட்டார்.

முன்கூட்டியே அறிவிக்கப்படாததால் பகம் முழுவதும் அவருக்கு எந்த நிகழ்ச்சியும் இல்லை. அதனால்,வேறு வழியின்றி நேரத்தை வீணடிக்கக் கூடாது என்று வணிகர்கள் கூட்டமாக இருக்கும் செவ்வாய்பேட்டையில் வீதியில் நடந்து சென்று பிரசாரம் செய்தார். அந்த வகையில் சேலம் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.வும், மத்திய மாவட்ட செயலாளருமான ராஜேந்திரன் எம்.எல்.ஏ.வுக்கு அதிர்ஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும்.

அன்று மாலை, சேலத்தில் இருந்து ஈரோடு செல்லும் சாலையில் நகரின் புறநகர் பகுதியில் வீரபாண்டி மற்றும் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தவிட்டு நாமக்கல்லுக்கு சென்றுவிட்டார். சேலத்தில் மொத்தம் 11 தொகுதிகள் இருக்கின்றன.அதுவும் அதிமுக முதல்வர் எடப்பாடி பழனிசாமி போட்டியிடும் எடப்பாடி தொகுதிக்கு கூட மு.க.ஸ்டாலின் சென்று பிரசாரம் செய்யவில்லை.

விமானத்தில் பறந்து பறந்து சென்று பயணம் செய்யும் வகையில்தான் மு..க.ஸ்டாலின் பிரசாரம் அமைந்திருக்கிறது. அதிலும் கூட சொதப்பல்தான். 234 தொகுதிகளிலும் திமுக. உட்கட்சியிலேயே நிறைய பஞ்சாயத்து இருக்கிறது. எங்களுக்கு எங்கள் தலைவலியே பெரிசு என்கிற நிலையில், கூட்டணி கட்சியினரின் பொருமல்களை காது கொடுத்து கேட்கவே முடியவில்லை.

இப்படி சொந்த கட்சிக்குள்ளேயே சூன்யம் வைக்க மூத்த நிர்வாகிகளே தேர்தலை பயன்படுத்திக் கொள்ள பார்க்கிறார்கள். இந்த நேரத்தில் தொகுதி வாரியாக பிரசார வாகனத்தில் வந்து வாக்கு சேகரித்தால், ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்கு செல்லும் வழியில் தொகுதிக்குள் முரண்டு பிடிக்கும் திமுக நிர்வாகிகளை பற்றி தலைவர் ஸ்டாலினிடம் புகார் தெரிவிக்க முடியும். அதை கேட்டு, தலைவரே கூப்பிட்டு கண்டித்தால், முறைச்சுக்கிட்டு இருக்கிற திமுக நிர்வாகிகளுக்கு கொஞ்சமாவது பயம் வரும். கட்சிக்கு துரோகம் செய்யாமல் வேலை பார்ப்பார்கள்.

மறைந்த திமுக தலைவர் கலைஞர், இந்த பாணியைதான் கடைப்பிடித்து வந்தார். தேர்தல் பிரசாரத்திற்காக காலையிலேயே ஒரு மாவட்டத்திற்கு வந்து விடும் கலைஞர், காலை முதல் மாலை வரை கட்சிக்குள் நிலவும் கோஷ்டி மனப்பான்மையை பஞ்சாயத்து பேசியே களைய வைத்துவிடுவார். பிரசாரத்தை முடித்த பிறகும் திமுக வேட்பாளர்களை, மாவட்ட நிர்வாகிகளை அழைத்து திமுக வெற்றிப் பெறவில்லை என்றால், என்னமாதிரியான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை கடுமையாக எடுத்துக் கூறி, ஒற்றுமையாக தேர்தல் வேலை பார்க்க அறிவுறுத்துவார்.

கலைஞரின் தேர்தல் பாணியையே மு.க.ஸ்டாலின் கடைபிடிக்கவில்லை. வயதான காலத்தில் கூட கலைஞர், வாகனத்தில்தான் ஊர், ஊராக சுற்றி வந்து வாக்கு சேகரித்தார். கலைஞரைப் போல 30 நிமிடம், ஒருமணிநேரம் கூட பேச வேண்டாம். பத்து நிமிடம், நாள் ஒன்றுக்கு 20 என குறைந்த எண்ணிக்கையில் ஊர், ஊராகச் சென்று பிரசாரம் செய்தால், திமுக 150 தொகுதிகளுக்கு மேல் வெற்றிப் பெறுவது உறுதி. ஆனால், இப்போது பறந்து பறந்து சென்று மு.க. ஸ்டாலின் செய்யும் பிரசாரம், அனைத்து தொகுதி வாக்காளர்களையும் சென்று சேர்க்கிறதா, மதில் மேல் பூணையாக உள்ளவர்கள் திமுக.வுக்கு ஓட்டுப் போடுவார்களா? இந்த நிமிடம் வரை சந்தேகமாகத்தான் இருக்கிறது.

மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்து விட்டு செல்லும் ஊர்களில் எல்லாம் முதல்வர் இ.பி.எஸ். பிரசாரம் செய்கிறார். துணை முதல்வர் ஓ.பி.எஸ். பிரசாரம் செய்கிறார். நடிகர் சீமான் பிரசாரம் செய்கிறார். மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் பிரசாரம் செய்கிறார். பா.ம.க. அன்புமணி ராமதாஸ் பிரசாரம் செய்கிறார். இப்படி திமுக.வுக்கு எதிரான சிந்தனையில் உள்ளவர்களின் பிரசாரம் அதிகமாக இருப்பதால், திமுக. ஆதரவு நிலையில் உள்ள மக்கள் கூட, இவர்களின் பிரசாரத்தை கேட்டு உதயசூரியனுக்கு ஓட்டுப் போடாமல் வேறு சின்னத்திற்கு ஓட்டு போடும் ஆபத்து உள்ளது.

234 தொகுதிகளிலும் திமுக மற்றும் கூட்டணிக்கட்சி வெறறி பெறும் என்று ஊர், ஊராக சொல்லி வருகிறார் மு.க.ஸ்டாலின். ஆனால் அவரின் சொதப்பல் பிரசாரத்தால் தனித்த பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைக்குமா அல்லது 2016 ல் நேர்ந்த நிலை மாதிரி மீண்டும் உருவாகிவிடுமா? நள்ளிரவில் படுத்தாலும் தூக்கமே வர மாட்டேங்கிறது. இன்னும் எத்தனை கோடிகளை கொட்டவேண்டுமோ.. அப்படியே சொத்தை விற்று செலவழித்தாலும் எம்.எல்.ஏ., ஆகிவிடுவோமா.. இந்த நிமிடம் வரை நிச்சயமாக தெரியவில்லை.

எங்களின் புலம்பல்களை எல்லாம் திமுக தலைவரின் காதில் விழும் படி சொல்வதற்கு வாய்ப்பிருக்கிறதா பாருங்கள் என்று ஒரே மூச்சாக பேசி சோகத்தோடு இணைப்பு துண்டித்தனர், திமுக வேட்பாளர்கள்.

ஊதற சங்கை ஊதி விட்டோம்….