Sat. May 18th, 2024

அதிமுக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவையில் எல்லோரும் நடிகர்கள் தான் என்றாலும் உலக மகா நடிகர்,மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர்தான்.

 நான் கோட்டைக்கு போனால் அமைச்சர். மருத்துவமனைக்கு போனால் மருத்துவர். ஜல்லிக்கட்டுன்னு வந்துட்டா வேட்டிய மடித்து கட்டிக் கொண்டு களத்தில் காளையின் மூக்காணாங் கயிற்றை அறுக்கும் தமிழன் நான்.”

யாராவது ஒருத்தர் ஜல்லிக்கட்டு போட்டி நடக்கும் போது, அமைச்சரை காளை மாடு முன்பு தள்ளிவிட்டு வேடிக்கை பார்த்திருக்க வேண்டும், அமைச்சர் விஜயபாஸ்கர், பச்சை தமிழனா என்று அப்போது தெரிந்திருக்கும். கடந்த பத்தாண்டுகளில் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. வரும் காலத்திலாவது அந்த வாய்ப்பு கிடைத்தால், தமிழகம் அவரிடம் இருந்து தப்பித்துக் கொள்ளும் என்கிறார்கள், புதுக்கோட்டை அதிமுக.நிர்வாகிகள்.

எந்த மேடையாக இருந்தாலும் வீராவேசமாக பேசித் திரியும் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கரின் உச்சி முதல் பாதம் வரை ஊழல், முறைகேடு உள்ளிட்ட எண்ணற்ற புகார்கள் சுற்றிக் கொண்டு இருக்கின்றன. ஊழலை ஒழிப்பதாக கூறி ஆட்சிக்கு வந்த மத்திய பா.ஜ.க. அரசுக்கு உண்மையிலேயே ஆண்மையிருந்திருந்தால், அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், இந்த நேரம் திகார் சிறையில் கம்பி எண்ணிக் கொண்டியிருந்திருக்க வேண்டும்.

அவர் மீதான குட்கா முறைகேடு புகாரில் இருந்து, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா, குவாரி முறைகேடு, மருத்துவர்கள் பணியிட மாற்றம் உள்ளிட்ட எண்ணற்ற புகார்கள் மீது நேர்மையான, நியாயமான விசாரணைகள் நடந்து தண்டனை அறிவிக்கப்பட்டிருந்தால், அவரின் ஒட்டுமொத்த வாழ்க்கையையே, நீதிமன்றத்திலும், சிறைச்சாலைகளிலும் கழிக்க வேண்டிய அவல நிலையில்தான் இருந்திருக்கும்.

ஆனால், தன் உயரத்தைவிட ஊழல் முறைகேட்டில் உயர்ந்து நிற்கும் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், 2011 மற்றும் 2016 ஆகிய இரண்டு தேர்தல்களிலும் விராலிமலை சட்டமன்றத் தொகுதியில் நின்று வெற்றிப் பெற்றுள்ள நிலையில், அதே தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். எந்த தைரியத்தில் போட்டியிடுகிறார் என்றால், முறைகேடாக ஈட்டி வைத்துள்ள ஆயிரக்கணக்கான கோடியை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற பதைபதைப்பிலும், கழிவுப் போல 20, 30 கோடி ரூபாய்களை இரைத்து, மீண்டும் வெற்றிப் பெற்று விடலாம் என்ற நம்பிக்கையில் விராலிமலையில் வீதி வீதியாகச் சுற்றி வருகிறார்.

தேர்தல் வெற்றிக்காக அவர் ஆடும் நாடகங்களைப் பார்த்து, பிரதான எதிர்க்கட்சியான திமுக.வே வியர்த்துப் போய் நிற்கிறது. அக்கட்சியின் வேட்பாளர் பழனியப்பன், அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் தண்ணீராய் பணத்தை இரைத்து தேர்தல் களத்தை கலக்கி வருவதை பார்த்து அயர்ச்சி அடைந்துள்ளார்.

வெற்றி ஒன்றே குறிக்கோள் என்று அடிப்படையில் தேர்தல் பிரசாரத்திற்கு தனது மகள் பிரியதர்ஷினியை கூடவே அழைத்துச் செல்கிறார். பிஞ்சிலேயே பழுத்த பழம் போல, அவரது தந்தையை விட அதிகமாக புழுகிக் கொட்டுகிறது. தாங்கள் வாழும் இன்றைய வாழ்க்கை, ஊழல் பணத்திலும், முறைகேடு செய்து சம்பாதித்த பணத்திலும்தான் என்ற குற்ற உணர்வு துளிகூட இல்லாமல், டாக்டர் விஜயபாஸ்கரின் பிரஸ்தாபங்களை சொல்லி வாக்கு சேகரிக்கிறார்.

2017 ஆம் ஆண்டு ஆர்.கே.நகர் தொகுதியில் பணம் பட்டுவாடா செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், சென்னையில் உள்ள சுகாதார அமைச்சரின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய போது, தனது வீட்டையே முடக்கி விட்டனர், எனது மகள்களை பள்ளிக்குக் கூட அனுப்ப முடியவில்லை என்று முதலைக் கண்ணீர் வடித்தார் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர். அன்றைக்கு வருமான வரித்துறை கைப்பற்றி எடுத்துச் சென்ற ஆவணங்களைப் பற்றியெல்லாம், இன்றைய பிரசாரத்தின் போது, அந்த பெண் பிள்ளை பேசுமா… அதுவும் டாக்டர் விஜயபாஸ்கரின் சாதனைகளில் ஒன்றுதானே.. இப்படியெல்லாம் கேள்வி கேட்டு பொதுமக்களை சந்தித்துக் கொண்டிருக்கிறார் திமுக வேட்பாளர் பழனியப்பன்.

தனது மறுபக்கம் வாக்காள பெருங்குடிகளுக்கு தெரிந்துவிடக் கூடாது என்று பதைபதைப்போடு இருக்கும் டாக்டர் விஜயபாஸ்கர், ஒவ்வொரு நாளும் விதவிதமாக வேடம் தரித்து மக்களை ஏமாற்ற பார்க்கிறார். சுகாதார துறை அமைச்சரான 2013 ஆம் ஆண்டில் இருந்து தேர்தல் தேதி அறிவிக்கப்படும் வரை, கிராமங்களில் கூலி வேலை செய்யும் விவசாய தொழிலாளர்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு, தீர்த்து வைத்ததாக, டாக்டர் விஜயபாஸ்கர் தனது மனசாட்சியை தொட்டு சொல்ல முடியுமா என்று புதுக்கோட்டை அதிமுக.வினரே கேள்வி கேட்கிறார்கள். ஆனால், தேர்தல் வந்தவுடன் வேட்டியை மடித்துக் கொண்டு வயல்களில் இறங்கி, விஜயபாஸ்கர் போடும் வேஷம், கூலி தொழிலாளர்களையே மயக்கம் போட்டு விழ வைத்துவிட்டது என்கிறார்கள், அவரோடு பிரசாரத்திற்கு செல்லும் அவரது விசுவாசிகள். .

சுகாதாரத்துறையில், கடந்த 7 ஆண்டுகளாக பல ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்ததாக கூறும் அதிமுக பிரமுகர்கள், தேர்தல் அறிவிப்புக்கு முதல்நாள் கூட, டாக்டர் விஜயபாஸ்கர் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள உணவு பாதுகாப்புப் பிரிவில் Designated Officers என்ற பெயரில் உள்ள அதிகாரிகள், பணியிட மாற்றம் செய்து, கோடிக்கணக்கில் பணம் வசூலித்துள்ளார் என்று அந்த துறையைச் சேர்ந்த நேர்மையான அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

அந்த பிரிவின் ஆணையராக நியிமிக்கப்பட்டுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரியின் பின்னணி குறித்தும், அந்த பதவிக்கு அவர் எப்படி வந்தார் என்பதை குறித்தும், Designated Officer ஆக சென்னைக்கு பணிமாறுதல் பெற்று வந்துள்ள சோமு என்ற அதிகாரியின் தகுதி, திறமை பற்றியும் நேர்மையான அதிகாரிகளை கொண்டு விசாரணை நடத்த தைரியம் உண்டா? என்று கேள்வி எழுப்புகிறார், அதே அதிகாரிகள்.

இதேபோல, கடைசி கட்ட வசூலாக, கொரோனோ காலத்தில் நோய் தொற்று உள்ளதா என்பதை கண்டறிய அனுமதி கொடுத்த பரிசோதனை கூடங்களிலும், கொரோனோ நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு அனுமதிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளிடம் இருந்தும் பல கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டதாக, அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிராக புகார்கள் கூறப்படுகின்றன.

தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட கொரோனோ நோயாளிகளின் சிகிச்சை செலவாக, காப்பீட்டு நிறுவனத்திற்கு தமிழக அரசு 190 கோடி ரூபாய் ஒதுக்கியிருக்கிறது. இந்த தொகையில் 20 சதவிகித கமிஷன் தொகையை கறாராக கேட்டு பெற்றிருக்கிறார் அமைச்சர் என்கிறார்கள், சுகாதாரத்துறையில் உள்ள நேர்மையான உயரதிகாரி ஒருவர். 190 கோடியில் 20 சதவிகிதம் கமிஷன் என்றால், 38 கோடி ரூபாய்..

இந்த தொகை போதாதா, விராலிமலை தொகுதியை விலைக்கு வாங்க…விராலிமலை தொகுதியில் டாக்டர் விஜயபாஸ்கர் மீண்டும் வெற்றிப் பெற்றால், எத்தனை ஜென்மங்கள் ஆனாலும் தமிழகத்தை ஆண்டவனால்கூட காப்பாற்ற முடியாது.