Sun. May 5th, 2024

தமிழ் தொலைக்காட்சி ஊடகங்களில், நடைபெற்று வரும் விவாதங்களில் பிரதமராகவே மாறி கொக்கரிக்கும் இரண்டு பாஜக பிரபலங்களை டெல்லி மேலிடம் கைகழுவி விட்டு விட்டதே என்று சோகப்பாட்டு பாடுகிறார்கள், அவர்களது விசுவாசிகள். அவர்களின் ஆதங்கத்தை மேலும் தூண்டிவிட்டுள்ளார், மற்றொரு பாஜக பிரமுகர்,

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துச் சொன்ன நிகழ்வு...இந்த அதிசய சந்திப்பு, தமிழக பாஜக மேல்மட்ட தலைவர்களிடம் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறினார்கள் அவர்கள்.

அவர்களில் அறிமுகமான ஒரு நிர்வாகியிடம் பேசினோம். தமிழக பாஜக தலைவர்களிடையே, கடந்த சில நாட்களாக புகைந்து கொண்டிருக்கும் உட்கட்சிப் பூசல் விவகாரத்தை விலாவாரியாக விவரித்தார்.

தமிழகத்தில், பாஜக.வின் செல்வாக்கு கடந்த ஒன்றிரண்டு வருடங்களில் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்திருக்கிறது என்று சொன்னால், அதற்கு முக்கிய காரணம், தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி பிரமுகர்களின் விவாதங்களுக்கு சூடாகவும், திமிராகவும் பதிலளித்து வரும் பாஜக பிரமுகர்களால்தான் என்பதை மேலிட தலைவர்கள் வரை புரிந்து வைத்திருக்கிறார்கள்.

அந்த வகையில், தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், முன்னணி நிர்வாகிகள் ஹெச்.ராஜா, வானதி சீனிவாசன், கே.டிராகவன், நாராயண திருப்பதி, டாக்டர் ராம சுப்பிரமணியன் உள்ளிட்டோரின் பாஜக ஆதரவுக் கருத்துகளை பார்த்துதான் தமிழக இளைஞர்கள் பலர், பாஜக.வில் இணைய தொடங்கினார்கள்.

திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களுக்கு அஞ்சாமல், பாஜக.வுக்கு ஆதரவாகவும், மத்திய பாஜக அரசின் சாதனைகளை பட்டியலிடுவதிலும், பிரதமர் மோடியை புகழ்ந்தும், கே.டி.ராகவன், நாராயண திருப்பதி உள்ளிட்ட முன்னணி தலைவர்கள் காலம் நேரம் பார்க்காமல் தொலைக்காட்சி விவாதங்களில் சூடாக பேசி வருகின்றனர். முன்னாள் தலைவர் தமிழிசையின் உழைப்பிற்கும், விசுவாசத்திற்கும் ஆளுநர் பதவி வழங்கப்பட்டது.

அந்த அங்கீகாரத்தைப் பார்த்து சோம்பலாக இருந்த முன்னணி தலைவர்கள் எல்லோரும் வீறுகொண்டு, பாஜக வளர்ச்சிக்காக கடுமையாக உழைக்கத் தொடங்கினார்கள்.அதன் வெளிப்பாடுதான், கடந்த காலங்களில் பாஜக பொதுக்கூட்டங்களுக்கு விரல்விட்டு எண்ணி விடும் அளவுக்கு வந்துக் கொண்டிருந்த கூட்டம், இன்றைக்கு ஆயிரக்கணக்கில் கூடும் அளவுக்கு செல்வாக்கு அதிகரித்திருக்கிறது.

தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் இருக்கிற இளைஞர்களுக்குகூட இன்றைக்கு வானதி சீனிவாசனை தெரிந்திருக்கிறது. கே.டி.ராகவன், நாராயணன் திருப்பதி, ராம சுப்பிரமணியம் உள்ளிட்ட பாஜக பிரமுர்களை தெரிந்திருக்கிறது. அவர்களின் வாதத் திறமையில் மயங்கி, திராவிட சிந்தனையில் உள்ள இளைஞர்கள் கூட பாஜக பக்கம் தாவும் அதிசயமும் இன்றைக்கும் கூட நடந்து கொண்டிருக்கிறது.

இவர்களின் வீராவேச பேச்சுகளால், தமிழக சட்டமன்றத்தில் பாஜக.வின் குரல் எதிரொலிக்கும் என்ற நம்பிக்கையில் நாங்கள் இருந்த நேரத்தில், தமிழக பாஜக.வின் முக்கிய முகமாக அறியப்பட்ட கே.டி.ராகவனும், நாராயணன் திருப்பதியும் மன உளைச்சலில் இருப்பதை பார்த்துதான், நாங்கள் சோகமாயிட்டோம் என்றார் அந்த நிர்வாகி.

சில விநாடி மௌத்திற்குப் பிறகு அவரே மீண்டும் பேச்சை தொடங்கினார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாஜக.வுக்கு மயிலாப்பூர், வேளச்சேரி ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்படும் என்றும் அதில் முறையே கே.டி.ராகவனும், நாராயணன் திருப்பதியும் போட்டியிடுவார்கள் என்ற பேச்சு கடந்த பல மாதங்களாக பாஜக தலைமை அலுவலகமான கமலாயத்திலேயே எழுந்தது. ஆனால், அந்த இரண்டு தொகுதிகளும் பாஜக.வுக்கு ஒதுக்கப்படவில்லை. அதற்குப் பதிலாக, ஆயிரம்விளக்கும், துறைமுகமும் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த இரண்டு தொகுதிகளிலும் முறையே நடிகை குஷ்பு, வினோஜ் பி.செல்வம் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

நடிகை குஷ்பு, சில மாதங்களுக்கு முன்புதான் பாஜக.வில் இணைந்தார். வினோஜ், கட்சியில் ரெம்ப, ரெம்ப ஜுனியர். அவர்களுக்கு தேர்தலில் போட்டியிடும் அங்கீகாரம் கிடைத்த நிலையில், கே.டி.ராகவனுக்கும், நாராயணன் திருப்பதிக்கும் தேர்தலில் போட்டியிடும் அதிர்ஷ்டம் கைகூடவில்லை. இத்தனைக்கும் கே.டி.ராகவன், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக அகில இந்திய தலைவர் ஜே.பி. நட்டா ஆகிய மூத்த தலைவர்களுடன் மிக,மிக நெருக்கமான நட்பு கொண்டிருப்பவர்.

இன்னும் சொல்லப்போனால், தமிழகத்தில் இரண்டு கழகங்களின் அரசியல் சித்துவேலைகளை உளவுப்பார்த்து, பாஜக மேலிடத்திற்கே சொல்பவர்தான் கே.டி.ராகவன். இந்தளவுக்கு நம்பிக்கைக்குரியவராக உள்ள தனக்கே தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை மேலிட தலைவர்கள் உருவாக்கித் தரவில்லையே என்ற விரக்தியில், கே.டி.ராகவன் கடந்த சில நாட்களாக மிகுந்த மனஉளைச்சலில் உள்ளார்.

அவரை சந்தித்து பேசினால், உற்சாகமின்றியே பேசுகிறார். அவரை பார்ப்பதற்கே பரிதாபமாக இருக்கிறது. அவரைப் போலவே நாராயணன் திருப்பதியும் மனஉளைச்சலில் இருக்கிறார். ஒரீரு மாதங்களுக்கு முன்பு நல்லரசு தமிழ் செய்திகளில்தான், இந்த இரண்டு பேரையும் திமுக. தன் பக்கம் இழுக்க தயாராக இருக்கிறது. ஆனால், மு.க.ஸ்டாலின்தான், இருவரையும் டிஸ்டர்ப் செய்ய வேண்டாம் என்று சொன்னதாக செய்தி வெளியிட்டு இருந்தீர்கள்.

அந்த செய்தியை இன்றைய நிலையில் பொருத்தி பார்த்தால், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்தான் தன்னை சந்திக்க விரும்பியதாக டாக்டர் ராமசுப்பிரமணியம் கூறி வருவதை வைத்துப் பார்த்தால், கே.டி.ராகவனையும், நாராயணன் திருப்பதியையும் திமுக பக்கம் இழுக்க நடந்த முயற்சி உண்மைதானோ என்று நம்ப தோன்றுகிறது.

அந்த முயற்சி ஒருவேளை வெற்றிப் பெற்றிருந்தால், பிராமணர்கள் அதிகம் உள்ள மயிலாப்பூர் தொகுதியில் கே.டி.ராகவனுக்கு திமுக சார்பில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்திருக்கும். வேளச்சேரியில் நாராயணன் திருப்பதிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கலாம். இந்த விஷயத்தில், இரண்டு பேருமே பாஜக.வுக்கு விசுவாசமாக இருந்திருக்கிறார்கள்.இருக்கிறார்கள் என்பதை நினைத்து பெருமைப்படுகிறோம்.

இந்த இரண்டு பேருக்கும் தொகுதி கிடைக்க கூடாது என்று சதிவேலைப் பார்த்து, அதிமுக.விடம் மயிலாப்பூர் தொகுதியையும், வேளச்சேரி தொகுதியையும் தமிழக பாஜக தலைமை அழுத்தம் கொடுத்து பெறவில்லையோ, அல்லது மேலிட பொறுப்பாளர்கள் யாராவது, கே.டி.ராகவனும், நாராயணன் திருப்பதியும் தேர்தல் அரசியலில் வெற்றிப் பெற்றுவிடக் கூடாது என்று மறைமுக காய்நகர்த்தலில் ஈடுபட்டார்களோ என்ற சந்தேகமும் எழுந்திருக்கிறது.

எவ்வளவு அவமதித்தாலும், புறக்கணித்தாலும், அதையெல்லாம் கடந்து கே.டி.ராகவனும், நாராயணன் திருப்பதியும் தமிழக பாஜக.வின் இரட்டைக் குழல் துப்பாக்கியாக தொடர்ந்து இயங்குவார்கள். அவர்களின் விசுவாசத்திற்கு உரிய அங்கீகாரம் வரும் காலத்தில் நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நாங்கள் மனதை தேற்றிக் கொண்டு வருகிறோம் என்று தனக்கு தானே ஆறுதல் கூறியவாறே பேச்சை துண்டித்தார், இருவரின் பாஜக விசுவாசி…

பரமசிவன் கழுத்தில் இருந்த பாம்பையே படம் எடுக்காமல் தடுத்து சதி செய்த, அந்த நல்லவர்கள் யாரப்பா….