Sun. Apr 20th, 2025

அதிமுக மற்றும் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்த கையோடு பிரசாரத்தைத் தொடங்கிவிட்டாகள். ஆளும்கட்சியான அதிமுக.வில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களில் பலருக்கு எதிராக அதிருப்தி தெரிவிக்கப்பட்டு, ஆர்ப்பாட்டம், சாலை மறியல், தீக்குளிப்பு, அலுவலகம் உடைப்பு என பல போராட்டங்கள் நடந்ததையெல்லாம் ஊர், உலகமெல்லாம் அறியும்.

அதற்கு சற்றும் குறையாமல், திமுக.விலும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக நிர்வாகிகளும் பல்வேறு மாவட்டங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேட்பாளர்கள் தேர்வில் யார் கில்லாடி என்பதை வெளிப்படுத்துவதற்கு கடந்த 2016 தேர்தலின்போது நடைபெற்ற ஒரு நிகழ்வைச் சுட்டிக் காட்டி பேசுகிறார்கள் சேலம் மாவட்ட பொதுஜனங்கள். 2016 சட்டமன்றத் தேர்தலின் போது அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, 234 தொகுதிகளிலும் அதிமுக.வே தனித்துப் போட்டியிடும் என்று அறிவித்தார். இருப்பினும் சின்னச்சிறிய கட்சிகளுக்கும் ஒன்றிரண்டு தொகுதிகளை ஒதுக்கினார்.

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளுக்கான வேட்பாளர் தேர்வை, அப்போதைய பொதுப்பணித்துறை செயலாளர் மற்றும் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளரான எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைத்திருந்தார். அவரின் உத்தரவின்பேரில் 11 தொகுதிகளுக்கும் வேட்பாளரை தேர்வு செய்து பட்டியலை போயஸ் கார்டனில் ஒப்படைத்தார் எடப்பாடி பழனிசாமி. ஏற்காடு தொகுதி பழங்குடியினருக்கான தொகுதி என்பதால், ஆத்தூர் அல்லது கெங்கவள்ளி தனித்தொகுதியில், ஏற்காடு அதிமுக பஞ்சாயத்து தலைவரும், பிரபல ஹோட்டல் அதிருபருமான ஏற்காடு முரளி, கெங்கவள்ளி அல்லது ஆத்தூர் தொகுதியில் தான் போட்டியிட வாய்ப்பு வழங்குமாறு, எடப்பாடி பழனிசாமியை அணுகி வாய்ப்பு கேட்டார்.

அப்போது அவர், கிண்டலாக, ஏற்காட்டில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கெங்கவள்ளி அல்லது ஆத்தூருக்கு பறந்து செல்வீங்களா என்று கிண்டலாக கேட்டார். ஆனால், அப்போதும் எதிர்க்கட்சியான திமுக.வில் சேலத்தைச் சேர்ந்த முன்னாள் வேட்பாளர் ரேகா பிரியதர்ஷினி, கெங்கவள்ளி வேட்பாளராக களமிறக்கப்பட்டார். ரேகா பிரியதரிஷினி. தொகுதி மாறி அவர் வந்து களமிறங்கியபோது, அந்த தொகுதியில் சலசலப்பு ஏற்பட்டது. அப்போதே அவர் மு.க.ஸ்டாலின் சிபாரிசு என்று திமுக.வினர் கிசுகிசுத்தனர். இருந்தபோதிலும், அவர், அதிமுக வேட்பாளரிடம் தோற்றுப் போனார்.

தற்போதைய தேர்தலிலும், ரேகா பிரியதரிஷினியே, கெங்கவள்ளி வேட்பாளராக மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளார். ஆனால், சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் இரண்டு தொகுதிகள் (சேலம் மேற்கு, மேட்டூர்) ஆகிய இரண்டு தொகுதிகள் பா.ம.க.வுக்கு ஒதுக்கப்பட, மீதியுள்ள 9 தொகுதிகளில், முதல்வர் போட்டியிடும் எடப்பாடி உள்பட மூன்று தொகுதிகளில் மட்டுமே சிட்டிங் எம்.எல்.ஏ.க்களுக்கு (ஏற்காடு எம்.எல்.ஏ.சித்ரா, ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ) வாய்ப்பு அதிமுக.வில் வழங்கப்பட்டுள்ளது. மீது 6 தொகுதிகளிலும் புதுமுகங்களையே களமிறக்கியுள்ளார், முதல்வர் இ.பி.எஸ்..

வேட்பாளர்களை தேர்வு செய்தததில் எடப்பாடி பழனிசாமி காட்டிய அக்கறை அளவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காட்டவில்லை என்று சேலம் மாவட்ட திமுக.வினர் புகார் வாசிக்கின்றனர். மேலும், ஐபேக் டீம் செலக்ஷன், தளபதியே பிரத்யேகமாக தேர்வு செய்தார் என்பதெல்லாம் கண்துடைப்புதான். சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை, மூன்று மாவட்டச் செயலாளர்கள் யார், யாரையெல்லாம் பரிந்துரைத்தார்களோ, அவர்களுக்குதான் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வேட்பாளராக அறிவிப்பதற்கு ஒரு சிலரிடம் கோடிக்கணக்கில் மாவட்டச் செயலாளர்கள் பணத்தை வசூலித்துள்ளனர் என்றும் வருத்தத்தை பதிவு செய்கிறார்கள், சேலம் மாவட்ட முன்னணி திமுக. நிர்வாகிகள்.