தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி துக்கடா கட்சித் தலைவர்கள் எல்லாம், புது வேட்டி, சட்டையைப் போட்டுக் கொண்டு பிரசாரத்திற்கு கிளம்பிவிட்டார்கள். ஆளும்கட்சியான அதிமுக.வின் ஒருங்கிணைப்பாளர், துணை முதல்வர், மூன்று முறை முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், தனது தொகுதியில் கூட பிரசாரத்தை முழு வீச்சில் மேற்கொள்ளாமல் பதுங்கிக் கொண்டு இருக்கிறார்.
தென்மாவட்டங்களில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் உள்பட கூட்டணி கட்சி வேட்பாளர்கள் போன் மேல் போன்போட்டு, தங்களை ஆதரித்து பிரசாரத்திற்கு வாருங்கள் என ஓ.பன்னீர்செல்வத்தை அழைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், கோடி ரூபாயில் நவீனப்படுத்தப்பட்டு, திருப்பதியில் சிறப்பு பூஜைப் போடப்பட்ட அவரது பிரசார வாகனம், முழு எலுமிச்சைப் பழத்தை நசுக்கி நகராமல் அப்படியே நிற்கிறதாம்.
அவரது அரசியல் எதிரியான (நிறைய பேர் இருக்கிறார்கள்) சொந்த கட்சியில் உள்ள மூத்தவர், முதன்மையானவர், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பகல்,இரவு என்று பாராமல் பிரசாரத்தில் பிஸியாக இருக்கிறார். தொண்டை கிழிய, கிழிய இரட்டை இலைக்கும், மாம்பழத்திற்கும் ஓட்டு வேட்டையாடி வருகிறார். ஆனால், ஓ.பன்னீர்செல்வமோ, தாய்மார்களே, ரத்தத்தின் ரத்தங்களே என்று கூவமால் மௌன விரதத்திலேயே இருக்கிறார்.
ஏன் பிரசாரத்திற்குச் செல்லாமல், மௌனம் காத்து வருகிறார் ஓ.பி.எஸ், என்று அவருக்கு நெருக்கமான, அவரது சமுதாயத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகளிடம் பேசினோம். மனம் நொந்துபோய் பேசினார்கள் அவர்கள்.
சின்னம்மா விடுதலையாகும் வரை, தென் மாவட்ட அமைச்சர்கள் வீராப்பாகதான், அவருக்கு எதிராக பேசி வந்தார்கள். பிப்ரவரி 8 ஆம் தேதி பெங்களூருவில் இருந்து சென்னைக்கு அவர் திரும்பி வந்தபோது, மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதா நினைவிடத்திற்கு போகாமல் கூட பூட்டி வைத்தது, அவரது சமுதாயத்தைச் சேர்ந்த தென் மாவட்ட நிர்வாகிகளிடம் எரிச்சலை அதிகப்படுத்தியது. அதற்கடுத்து, பிப்ரவரி 24 ஆம் தேதியன்று கூட, அம்மா நினைவிடத்தை திறக்காமல் பூட்டி வைத்ததும், விசேஷ நாட்களில் கூட அம்மா நினைவிடத்திற்கு சின்னம்மா சென்று மரியாதை செலுத்தி விடக்கூடாது என்று எடப்பாடி பழனிசாமி செய்யும் சதிச் செயல்களுக்கு ஓ.பி.எஸ்.ஸும் துணைப் போய் கொண்டிருப்பது, தென் மாவட்டத்தில் உள்ள ஒட்டுமொத்த தேவர் மக்களிடமும் ஒருவிதமான ஆத்திரத்தை ஏற்படுத்திவிட்டது.
மேலும், பாஜக மேலிடம், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வலியுறுத்திய பிறகும், சின்னம்மாவை, அதிமுக.வில் சேர்க்க மறுப்பதும், அமமுக.வை இணைக்க மறுத்து பிடிவாதம் காட்டுவதும், சசிகலா ஆதரவு நிலையில் இல்லாத எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகர்களின் மனங்களையும் வெறி கொள்ள வைத்துவிட்டது.
பிப்ரவரி 8 ஆம் தேதிக்கு முன்பாக, எடப்பாடியார் தலைமையில் அதிமுக தேர்தலை சந்திப்பதற்கும், மீண்டும் தேர்தலில் வெற்றிப் பெற்று அம்மாவின் லட்சியத்தை நிறைவேற்றவும், சசிகலாவுக்கு கூட ஆதரவு தெரிவிக்காமல் இருந்து வந்த தென்மாவட்ட அதிமுக முன்னணி நிர்வாகிகள், மனம் வெறுத்துப் போய் அரசியலில் இருந்து சசிகலா ஒதுக்கும் நிலைக்கு தள்ளிய எடப்பாடியார் மீது கோபத்தை வெளிப்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள்.
வெள்ளாள கவுண்டர்களும், வன்னியர்கள் மட்டும் இருந்தாலே போதும் ஆட்சியை மீண்டும் அமைத்துவிடலாம் என்ற எடப்பாடியாரின் வியூகத்திற்கு ஓ.பி.எஸ்.ஸும் துணைபோய்விட்டதைக் கண்டு கொந்தளிக்க ஆரம்பித்துவிட்டார்கள், தென் மாவட்ட தேவர் சமுதாய பிரமுகர்கள்.
இந்த நேரத்தில்தான் வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடாக 10.5 சதவிகிதம் வழங்கும் மசோதாவை, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளன்று சட்டப்பேரவையில் அவசர, அவசரமாக இ.பி.எஸ்., தாக்கல் செய்ததைக் கண்டு, கட்சி ரீதியாக பிளவுப்பட்டு கிடந்த தேவர் சமுதாய மக்களை ஒன்றிணைய வைத்துவிட்டது. இதே விவகாரத்தில் அதிருப்தியாக இருக்கும் நாடார் சமுதாய மக்கள், பட்டியலினத்தில் உள்ள ஒரு பிரிவை, பொதுப்பிரிவுக்கு கொண்டு வரும் நடவடிக்கையில், அந்த பிரிவின் பெயரோடு வேளாளர் என்ற பட்டப்பெயரை சூட்டிக் கொள்ள சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுத்ததைக் கண்டும், பிள்ளைமார்கள் ஆத்திரத்தில் இருக்கிறார்கள்.
இப்படி தென்மாவட்டங்களில் பெரும்பான்மையாக உள்ள இரண்டு சமுதாயங்களும், பல தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை நிர்ணயிக்கிற அளவுக்கு வாக்கு வங்கி உள்ள சில சமுதாயத்தினரும் ஒரு குடையின் கீழ் திரண்டு விட்டனர். அவர்களின் கோபம் எல்லாம், எடப்பாடிக்கு எதிராக இல்லை. ஓ.பி.எஸ்.ஸுக்கு எதிராகதான் வலுவாக கனன்று கொண்டிருக்கிறது.
கடந்த சில நாட்களாக பார்த்தீர்கள் என்றால், அமைச்சர் உதயகுமார் உள்ளிட்ட ஒன்றிரண்டு அமைச்சர்கள், தேவர் சமுதாய மக்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளுக்கு சுதந்திரமாக பிரச்சாரத்திற்கு செல்ல முடியவில்லை. எதிர்ப்பு வரும் ஊர்களில் எல்லாம் முன்கூட்டியே போலீசாரை அனுப்பி வைத்து பாதுகாபபை உறுதி செய்து கொண்ட பின்னரே, வாக்கு சேகரிப்புக்கு செல்கிறார்கள்.
தேனி மாவட்டத்தில் மட்டுமல்ல, தென் மாவட்டங்களில் எங்கு சென்றாலும், ஒன்று திரண்டிருக்கிற சமுதாய மக்களால், ஓ.பி.எஸ்.ஸுக்கு கடும் எதிர்ப்பு காட்டப்படலாம். அவரை அவமானப்படுத்துகிற வகையில் கூட சில நிகழ்வுகள் நடைபெறக்கூடும் என்ற அச்சம் எங்களுக்கு இருக்கிறது. தனது பிரசாரத்தால், அதிமுக.வுக்கு இழுக்கு வந்துவிடக்கூடாது என்று ரெம்பவே யோசித்துக் கொண்டிருக்கிறார் ஓ.பி.எஸ்.
அதிமுக அரசின் மீதான எல்லா விமர்சனத்திற்கும் பதில் சொன்னால்கூட, சசிகலாவை அரசியலில் இருந்தே விரட்ட எடுத்த எடப்பாடியாரின் முடிவுக்கு தலையாட்டி பொம்மைபோல ஓ.பன்னீர்செல்வம் இருக்கிறாரே, அப்படியென்ன அவருக்கு பதவி மேல் அவ்வளவு வெறி என குமறுகிறார்கள் எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த பெரியவர்கள். இன்றைக்கு சசிகலாவை அரசியல் இருந்தே விரட்டுவார்கள். நாளைக்கு ஆட்சியில், கட்சியில் தேவர் சமுதாயத்திற்கு எந்த செல்வாக்கும் இல்லாத அளவுக்கு செய்வார்கள். இதையெல்லாம் பொறுத்துக் கொண்டு, நாங்கள் அதிமுக. வெற்றிக்கு பாடுபட வேண்டுமா என்பதுதான் தென்மாவட்ட மக்களில் பெரும்பான்மையாக ஒலிக்கும் கோபக் குரலாக இருக்கிறது.
தேவர் சமுதாயத்திற்கு எடப்பாடியார் செய்த துரோகத்தை மன்னித்தால் கூட சசிகலாவுக்கு ஓ.பி.எஸ்., செய்த துரோகத்தை மன்னிக்கும் நிலையில் தேவர் சமுதாய மக்கள் இல்லை என்பதுதான் இப்போதைய கள யதார்த்தம். ஓ.பி.எஸ்.ஸுக்கு எதிராக இயல்பாகவே பொங்கியெழும் இந்த கோப அலை, நாளுக்கு நாள் பெருகி, தேர்தல் பிரசாரம்சூடுபிடிக்கும் போது எந்தமாதிரியான விஸ்வரூபம் எடுக்கும் என்பதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை…இதையெல்லாம் யோசித்துப் பார்த்துதான் பிரசாரத்திற்கு செல்ல தயங்கிக் கொண்டிருக்கிறார் ஓ.பி.எஸ்.. இந்த நிலைமையை அவரே தேடிக் கொண்டார். இதில் இருந்து எப்படி அவர் மீளப் போகிறார் என்பதை நினைத்துதான் நாங்கள் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறம் என்று சோக கீதம் வாசித்தனர், அவரது சமுதாய அதிமுக பிரமுகர்கள்..
ஓ.பி.எஸ்.ஸின் சோகக் கதையை கேட்கவே பாவமாக இருக்கிறது….