Sat. Nov 23rd, 2024

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான சிறப்பு டிஜிபி மீதான முதற்கட்ட விசாரணை அறிக்கையை சிபிசிஐடி போலீசார் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

தமிழக சிறப்பு டிஜிபி ஒருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக பெண் எஸ்.பி. ஒருவர் டிஜிபி-யிடம் புகார் அளித்தார். இதையடுத்து, சிறப்பு டிஜிபி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட நிலையில், புகாரை விசாரிக்க, கூடுதல் தலைமை செயலாளர் தலைமையில் 6 பேர் கொண்ட விசாரணைக் குழு (விசாகா கமிட்டி) அமைக்கப்பட்டது.

சிபிசிஐடி விசாரிக்க தொடங்கிய பின் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், பெண் எஸ்.பி. பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான விவகாரத்தை தானாக முன்வந்து வழக்காக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்து வருகிறார். கடந்த முறை வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பாலியல் தொல்லை குறித்து புகார் அளிக்க வந்த பெண் அதிகாரியை தடுத்த எஸ்.பி.-யை மட்டும் சஸ்பெண்ட் செய்த நிலையில், குற்றச்சாட்டுக்கு உள்ளான சிறப்பு டிஜிபி-யை சஸ்பெண்ட் செய்யாதது ஏன் என கேள்வி எழுப்பி சிறப்பு டிஜிபி மீதான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சிபிசிஐடி போலீசார் சார்பில் முதற்கட்ட விசாரணை அறிக்கையை சீலிடப்பட்ட கவரில் தாக்கல் செய்தனர். அப்போது, சிறப்பு டிஜிபியை ஏன் சஸ்பெண்ட் செய்யவில்லை என மீண்டும் கேள்வி எழுப்பிய நீதிபதி, வழக்கு விசாரணையை 23ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்துள்ளார்.