Sun. Nov 24th, 2024

திமுக வேட்பாளர் பட்டியலைவிட காங்கிரஸுக்கு ஒதுக்கப்படும் தொகுதியைப் பார்த்துதான் படு டென்ஷனில் இருக்கிறார்கள் திமுக. நிர்வாகிகள். அறந்தாங்கி தொகுதியை காங்கிரஸுக்கு ஒதுக்கக் கூடாது என்று புதுக்கோட்டை திமுக.வினர் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வர, கோவை தெற்கு தொகுதி திமுக.வினரும் போர்க்கொடி தூக்க தயாராகி விட்டனர்.

கோவை தெற்கு தொகுதிக்குட்பட்ட 18 வார்டுகளில் ஐந்தே ஐந்து வார்டுகளில் மட்டும்தான் பாஜக.வுக்கு செல்வாக்கு இருக்கிறது. மீதி 13 வார்டுகளில் திமுக மிகவும் பலமாக இருக்கிறது. கோவை தெற்கு தொகுதியில் திமுக. போட்டியிட்டால், எளிதாக வென்றுவிடுவார் என்று வேடபாளர் தேர்வில் ஈடுபட்ட ஐபேக் டீமிடம் அந்தப் பகுதியைச் சேர்ந்த நிர்வாகிகள் அழுத்தமாக தெரிவித்துள்ளனர். அதனை செவிமடுத்த ஐபேக் டீமும், பாஜக போட்டியிடும் தொகுதிகளில் எல்லாம் திமுக வேட்பாளர்கள்தான் போட்டியிடுவார்கள் என உறுதியளித்துள்ளனர்.

ஆனால், கோவை தெற்கு தொகுதியை தங்களுக்குதான் ஒதுக்க வேண்டும் என்று காங்கிரஸ் காட்டி வரும் பிடிவாதம், சென்னையில் இருந்து விநாடிக்கு விநாடி கோவை தெற்கு தொகுதி திமுக.வினருக்கு எட்ட, எட்ட, கொந்தளிக்க தொடங்கி விட்டனர் அங்குள்ள திமுக நிர்வாகிகள்.

அதுவும் கோவை தெற்கு தொகுதியை தனக்கு ஒதுக்கினால் 25 கோடி ருபாயை தாரளமாக செலவு செய்வேன். கஞ்சத்தனம் காட்ட மாட்டேன் என்று கூறும் பெண் பிரபலம் மீனா ஜெயக்குமார், தான் தேர்தல் செலவுக்காக வைத்துள்ள ஒட்டுமொத்த பணத்தையும் திமுக தலைமையிடமே நேரடியாக காட்டி அசத்தியுள்ளாராம்.

இவர் திமுக மாநில மகளிர் தொண்டரணி துணைச் செயலாளராக உள்ளார். கோவை மேற்கு தொகுதி மட்டுமின்றி கோவை மாவட்டம் முழுவதும் மீனா ஜெயக்குமார் பிரபலமாக உள்ளார்.

இவரைப்போலவே, திமுக பொதுக்குழு உறுப்பினர் மு.ம.ச.முருகனும், தொகுதியில் பிரபலமாக உள்ளார். திமுக.வினரிடம் மட்டுமல்ல, பொதுமக்களிடமும் இவருக்கு நல்ல பெயர் இருக்கிறது.

பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை வீழ்த்தி திமுக வெற்றி வாகை சூட மிகமிக எளிதான தொகுதியான கோவை தெற்கு தொகுதியை காங்கிரஸுக்கு ஒதுக்கி, ராசியில்லாத மயூரா ஜெயக்குமாரை மீண்டும் வேட்பாளராக அறிவித்தால், பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் படுத்துக் கொண்டே ஜெயித்திடுவார் என்று ஆவேசம் தீராமல் குரல் கொடுக்கிறார்கள் கோவை தெற்கு திமுக நிர்வாகிகள்.

இஸ்லாமியர்கள் அதிகமாக உள்ள கோவை தெற்கு தொகுதியில் திமுக நின்றால் மட்டுமே அவர்களின் ஓட்டுகள் மொத்தமாக விழும். இல்லையென்றால், அவர்கள் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பக்கம் சாய்ந்திடுவார்கள் என்றும் வேதனையோடு கூறுகிறார்கள் திமுக முன்னணி நிர்வாகிகள்.

கோவை மாவட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை எதிர்த்து வெற்றி பெறுவதற்கு கடுமையாக போராட வேண்டிய நிலையில் உள்ள போது,எளிதாக வெற்றிப் பெறக் கூடிய வாய்ப்பை விட்டு தருவது திமுக தலைமையின் ராஜதந்திரமாக இருக்காது.

திமுக வேட்பாளராக முருகனையோ அல்லது மீனா ஜெயக்குமாரையோ, இல்லை இவர்கள் இரண்டு பேரைத் தவிர, முகவரியே இல்லாத திமுக தொண்டனை நிறுத்தினால் கூட, கடுமையாக உழைத்து திமுக.வுக்கு வெற்றியைத் தேடி தருவோம் என கண்ணீ ர் விடாத குறையாக மன்றாடுகிறார்கள் கோவை தெற்கு திமுக நிர்வாகிகள்.

அவர்களின் கண்ணீர் குரல்கள், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எட்டுமா?