ஈரோடு மாவட்டத்தில் பிறந்திருந்தாலும் இளம்வயதிலேய தமிழகம் முழுவதும் பிரபலமானர், ஈரோடு எஸ்.முத்துசாமி. 1977 ஆம் ஆண்டு அதிமுக சந்தித்த முதல் சட்டமன்றத் தேர்தலிலேயே வெற்றிப் பெற்று எம்.எல்.ஏ., ஆன முத்துசாமி, எம்.ஜி.ஆர். தலைமையிலான அமைச்சரவையில் போக்குவரத்துத் துறையில் கொடி கட்டி பறந்தவர். அவரின் அன்புக்குரிய சிஷ்யராக வலம் வந்த எஸ்.முத்துசாமி, எம்,ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு ஜானகி அணியில் நீடித்தார்.
1991 ஆம் ஆண்டு அப்போதைய அதிமுக பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா தலைமையில் சட்டமன்றத் தேர்தலை சந்தித்து வெற்றிப் பெற்று,அவரது அமைச்சரவையிலும் பங்காற்றினார். அதன் பிறகு 1996 தேர்தலில் போட்டியிட்ட தோல்வியடைந்த முத்துசாமி, 2001 மற்றும் 2006 ஆகிய சட்டமன்றத் தேர்தல்களில் வாய்ப்பு தராமல் புறக்கணிக்கப்பட்டார். இருப்பினும் அதிமுக.விலேயே தொடர்ந்து நீடித்து வந்தார்.
இவரோடு சமகாலத்தில் அரசியலில் நுழைந்து எம்.எல்.ஏ. ஆன கே.ஏ.செங்கோட்டையன், எஸ்.முத்துசாமியின் சமுதாயத்தைச் சேர்ந்தவர்தான். அவர் 1987 ல் இருந்து தொடர்ந்து அனைத்து சட்டமன்றத் தேர்தல்களிலும் போட்டியிட்டு வெற்றிப் பெற்று அதிமுக எம்.எல்.ஏ.வாக இன்றைக்கும் நீடித்து வருகிறார். 8 வது முறையாக கோபிசெட்டிப்பாளையம் தொகுதியில் போட்டியிடுகிறார்.
ஆனால், கே.ஏ.செங்கோட்டையனை விட, கொங்கு மண்டலத்தில் கொண்டாடப்பட்ட எஸ்.முத்துசாமி, 1996 தேர்தலுக்குப் பிறகு சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அப்போதைய அதிமுக பொதுச் செயலாளரான செல்வி ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக, 2010ல் அதிமுக.வில் இருந்து எஸ்.முத்துசாமியும் அவரது ஆதரவாளர்களும் நீக்கப்பட்டனர். இதனைத்தொடர்ந்து, திமுக.வில் இணைந்தார் எஸ்.முத்துசாமி. கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு சவால்களை, குறிப்பாக என்.கே.கே.பி.ராஜா ஆதரவு கூட்டத்தின் தொல்லைகளை எல்லாம் கடந்து வந்தார்.
2011 சட்டமன்றத் தேர்தலில், ஈரோடு கிழக்குத் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட எஸ்.முத்துசாமி, எதிரணியில் அதிமுக.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் சந்திரகுமாரிடம் தோற்றுப் போகிறார்.
2016 சட்டமன்றத் தேர்தலில், அதே சந்திரகுமார், தேமுதிக.வில் இருந்து விலகி வந்து, திமுக ஆதரவோடு ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட, எஸ்.முத்துசாமி, ஈரோடு மேற்கு தொகுதிக்கு மாறினார். அன்றைய தேர்தலில் அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கே.வி.ராமலிங்கம், வெற்றி பெறுகிறார். முத்துசாமியை வீழ்த்தியதற்காக, அவருக்கு அமைச்சர் பதவியையும் வழங்கினார், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா.
1996 ஆம் ஆண்டுக்குப் பிறகு சட்டமன்றத் தேர்தலில் வெற்றிப் பெற்று எம்.எல்.ஏ., ஆக முடியாத எஸ்.முத்துசாமி, தற்போதைய தேர்தலை மிகவும் நம்பிக்கையுடன் எதிர்பார்த்தார்.
10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிடலாம் என்ற நம்பிக்கையில், அந்த தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளையும் சுற்றி வந்து, புதிய வாக்காளர்களிடமும் பிரபலமடைந்திருக்கிறார்.
கடந்த வாரம் திமுக தலைமை நடத்திய நேர்காணலிலும் கலந்துகொண்ட எஸ்.முத்துசாமியிடம் முன்னணி தலைவர்கள், ஈரோடு கிழக்கு தொகுதி உனக்குத்தான் என்று நம்பிக்கை வார்த்தைகளை விதைத்துள்ளனர். ஆனால், இன்று காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் ஈரோடு கிழக்கும் இடம் பெற்றிருக்கிறது.
இதனால் மனம் வெறுத்துப் போன எஸ்.முத்துசாமியின் ஆதரவாளர்கள், இந்த முறையும் ஈரோடு மேற்கு தொகுதியில்தான் அண்ணன் போட்டியிட வேண்டுமா.. ஏற்கெனவே கடந்த முறை (2016) ல் கே.வி.ராமலிங்கத்திடம்தான் அண்ணன் தோற்றுப் போனார். இந்த முறை அவரை எதிர்த்துப் போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு எப்படியிருக்குமோ தெரியவில்லை.
10 ஆண்டுகள் தொடர்ந்து ஆளும்கட்சி எம்.எல்.ஏ.வாக இருக்கும் ராமலிங்கம், பணத்தை தண்ணீராக செலவழிப்பார். அவரின் செலவுக்கு அண்ணனால் (எஸ்.முத்துசாமி) ஈடு கொடுக்க முடியுமா..
அண்ணனுக்கு ஜுனியாரான எடப்பாடி பழனிசாமி, 1989 ஆம் ஆண்டில்தான் சட்டமன்றத் தேர்தலில்தான் முதல்முறையாக எம்.எல்.ஏ.வாக ஆனார். எஸ்.முத்துசாமி அண்ணனைவிட அரசியலில் 12 ஆண்டுகள் ஜுனியராகவும், எம்.ஜி.ஆரை நேரில் பார்த்திராதவருமான எடப்பாடி பழனிசாமி, அதிமுக.வுக்கு தலைவர். இன்றைக்கு 234 தொகுதிகளிலும் யார் போட்டியிட வேண்டும் என்று முடிவு செய்கிற இடத்தில் அவர் இருக்கிறார்.
அவரை விட குணத்தால், பண்பால் உயர்ந்திருக்கும் எஸ்.முத்துசாமி, இன்றைக்கு தான் விரும்புகிற தொகுதியில் கூட போட்டியிட முடியாத பரிதாப நிலையில் இருப்பதை கண்டுதான் நாங்கள் மனம் நொந்து போய் இருக்கிறோம் என்று கண்ணீர் ததும்ப பேசுகிறார்கள், எம்.ஜி.ஆர் காலத்து அதிமுக விசுவாசிகள்.
அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா…