Sat. Nov 23rd, 2024

பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதன் விவரம் இதோ…

ஈழத்தமிழர்களுக்கு எதிரான போர்க்குற்றத்திற்குப் பொறுப்பான இலங்கை அரசினை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தும் தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமை மன்றக் கூட்டத்தில் நிறைவேற்ற வலியுறுத்தி இலண்டனில் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் சகோதரி அம்பிகையின் உணர்விற்கும், இலங்கையில் வாழும் ஈழத்தமிழர்களின் உணர்விற்கும் – தொப்புள் கொடி உறவாம் ஈழத்தமிழர்களின் மீது தமிழ்நாட்டில் வாழும் ஏழு கோடி தமிழர்களுக்கு இருக்கும் உணர்விற்கும் மத்திய அரசு மதிப்பளிக்க வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இதே கோரிக்கையை இலங்கையில் உள்ள ஈழத்தமிழர்களின் அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒருமுகமாக, ஏற்கனவே இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு முன்வைத்திருக்கின்றன. திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அந்தக் கோரிக்கைகளை ஆதரித்து பிரதமருக்குக் கடந்த ஜனவரி மாதத்திலேயே கடிதம் எழுதி – அதில் திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கையொப்பமிட்டிருந்ததை இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

அக்கடிதத்தில், “கடந்த காலத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்ததை இந்தத் தருணத்தில் நினைவூட்ட விரும்புகிறேன். ஆகவே ஐக்கிய நாடுகள் சபையில் உள்ள மனித உரிமை ஆணையத்தின் 46-ஆவது கூட்டத்தில் மற்ற உறுப்பினர்களுடன் இந்தியா ஒருங்கிணைந்து செயல்பட்டு – இலங்கையில் உள்ள தமிழர் கட்சிகளின் கோரிக்கை நிறைவேறுவதை நரேந்திர மோடி உறுதி செய்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” எனக் கோரிக்கை விடுத்திருந்தேன்.

ஆகவே, ஈழத்தமிழர்களுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணை மீதான வாக்கெடுப்பு ஐ.நா மனித உரிமை மன்றத்தில் நடைபெறவிருக்கின்ற இந்தத் தருணத்தில், ஈழத்தமிழர் அரசியல் கட்சிகளின் கோரிக்கைகளை ஆதரித்தும் – இலங்கையில் வாழும் ஈழத் தமிழர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையிலும் இந்தியா வாக்களிக்க வேண்டும் எனவும் – அதற்கு ஆதரவாக உறுப்பு நாடுகளைத் திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் எனவும் பிரதமர் நரேந்திர மோடியைக் கேட்டுக் கொள்கிறேன்.

ஈழத்தமிழர்களுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குச் செல்வதை ஐ.நா மனித உரிமை மன்றக் கூட்டத்தில் உறுதி செய்திடத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பிரதமர் நரேந்திர மோடி தனது நேரடிப் பார்வையில் எடுத்திட வேண்டும் எனவும் – இலங்கை அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டினை ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இந்தியா எடுத்துவிடக் கூடாது என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.