கன்னியாகுமரி சரக்கு பெட்டகம் தொடர்பாக துறைமுக கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையை திரும்பபெறாவிட்டால், மிகப்பெரிய போராட்டம் நடக்கும் என்று, துறைமுக எதிர்ப்பு இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
கன்னியாகுமரி பன்னாட்டு சரக்கு பெட்டக மாற்று முனைய எதிர்ப்பு மக்கள் இயக்கத்தின் சார்பில் நாகர்கோவிலில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதன் பின்னர், அமைப்பின் ஆலோசகர் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி தேவசகாயம் நிருபர்களிடம் கூறியதாவது:
கன்னியாகுமரி மாவட்டத்தில் சரக்கு பெட்டக துறைமுகம் அமைக்க வேண்டும் என்று கடந்த 2015 அக்டோபரில் அறிவிப்பு வெளியிட்டனர். முதலில் இனையம் என்று இருந்ததை மாற்றி கன்னியாகுமரி – கோவளம், வடக்குத்தாமரைகுளம் இடையே என்று அறிவிக்கப்பட்டது. துறைமுகம் அமைய 5 சாத்தியக்கூறுகள் மிகவும் முக்கியமானது. தொழில்நுட்பம், பொருளாதாரம், சமூக நலன், சுற்றுச்சூழல், நிதி நிலை ஆகும்.
ஆனால் இந்த 5 சாத்தியக்கூறுகளும் இந்தத் திட்டத்தில் கிடையாது. இதை மத்திய அரசு அமைத்த குழுவே தெளிவுப்படுத்தி உள்ளது. எனவே கடந்த 2019 ல் இந்த திட்டம் கைவிடப்பட்டது. கைவிடப்பட்ட இந்தத் திட்டத்தை தற்போது தனியார் பங்களிப்புடன் நிறைவேற்ற வேண்டும் என்று அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்கள். கடந்த வாரம் தூத்துக்குடி துறைமுக பொறுப்பு கழகத்தில் இருந்து கன்னியாகுமரியில் துறைமுகம் அமைக்க தனியார்கள் விண்ணப்பிக்கலாம் என கூறி உள்ளனர்.
நாங்கள் விசாரித்தவரை அதானிக்கு தாரைவார்க்க திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. விழிஞ்ஞம் துறைமுகம் பணி மேற்கொண்டு வரும் அதானிக்கு, அங்கு நிறைய சிக்கல்கள் உருவாகி இருக்கிறது. அந்த சிக்கலுக்கு தீர்வு கிடைக்கும் வகையில் தற்போது கன்னியாகுமரியை அழிக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.
இது விவசாய, மீனவர்கள் மற்றும் குமரி மாவட்ட மக்கள் அனைவரையும் பாதிக்கிற திட்டமாகும். கடலுக்கு அடியில் 3 கோடி டன் வரை பாறைகள் உடைக்கப்பட வேண்டும். அவ்வாறு உடைக்கப்படும் போது என்ன நிகழும் என்பதை யூகித்துக் கொள்ளுங்கள். தூத்துக்குடி துறைமுக கழகத் தலைவர், அரசு அதிகாரிபோல் செயல்படவில்லை. அவர் யாருக்கோ சாதகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
குமரி மாவட்டத்திலிருந்து சந்திக்க சென்ற பிரதிநிதிகளையும் அவர் சந்தித்து பேசவில்லை, அனைவரையும் உதசாசீனப்படுத்தியிருக்கிறார், வெகுநேரம் அலைக்கழிக்கிறார், இது கண்டனத்துக்குறியது. தற்போது தூத்துக்குடி துறைமுக கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும். இந்த திட்டத்தை ரத்து செய்வதாக அறிவிப்பு வெளியிட வேண்டும்.
அவ்வாறு இல்லையெனில் மீண்டும் துறைமுக எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பில் மிகப் பெரிய போராட்டங்கள் அகிம்சை வழியில், ஜனநாயக உரிமையோடு நடத்தப்படும். அரசியல் போராட்டங்களாக, அறவழி போராட்டங்களாக இது அமையும்.
முன்னாள் மத்திய அமைச்சர் “பொன் ராதாகிருஷ்ணன்” கூட சமீபத்தில் நிருபர்களிடம் இந்த திட்டத்துக்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று தெரிவித்திருக்கிறார்.
எக்காரணத்தை கொண்டும் குமரி மாவட்ட மக்கள் டெல்லிக்கு அடிமையாக மாட்டார்கள் . அதானி, அம்பானிகளிடம் குமரி மாவட்டத்தை காவு கொடுக்க ஈடுபட மாட்டார்கள் நம் தமிழ் இனம், குமரி மாவட்டத்தின் அழகும், அதன் கொடைகளும் ஏறாளம். அத்தகைய நம் மாவட்டத்தை மலட்டு பூமியாக்க ஒருபோதும் நம் மக்கள், மற்றும் தமிழகம் அரசும் விட்டுக் கொடுத்துவிடாது. இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது கன்னியாகுமரி வட்டார முதல்வர் ஜோசப் ரொமால்டு, கடலோர அமைதி மற்றும் வளர்ச்சிகுழு இயக்குனர் ஸ்டீபன், எதிர்ப்பு மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் S.பிரபா, R.S.பார்த்தசாரதி செயலாளர் வெனிஸ் , துணை ஒருங்கிணைப்பாளர்கள் சம்சுதீன், முருகேசன், தரன் மற்றும் கன்னியாகுமரி ஜமாத் தலைவர், செயலர், நிர்வாகிகள், கோவளம் பங்குப் பணியாளர் பிரபுதாஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.