Thu. Nov 21st, 2024

தாரை.வே.இளமதி, சிறப்புச் செய்தியாளர்….

ஜிஎஸ்டி வரி விதிப்பால் பொதுமக்களிடம் ஏற்பட்டிருக்கும் மனவருத்தத்தை நகைச்சுவையாக வெளிப்படுத்திய கோவை ஸ்ரீஅன்னபூர்ணா குழும நிர்வாக இயக்குநர் சீனிவாசனின் வெள்ளந்திதனமான பேச்சு அடங்கிய வீடியோ, தமிழகம் மட்டுமின்றி இந்தியாவை கடந்து உலகம் முழுவதும் பரவியிருக்கும் தமிழர்களை உள்ளடக்கிய இந்தியர்களிடமும் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. உணவுப் பொருட்கள் மற்றும் இனிப்பு, கார வகைககளுக்கு விதிக்கப்பட்டிருக்கும் ஜிஎஸ்டி வரி என்பது சாதாரண மனிதர்களை கடுமையாக பாதித்துக் கொண்டிருக்கிறது. இதுதொடர்பாக தமிழக அரசு சார்பிலும் தமிழக வணிகர்கள் சங்கங்களின் சார்பிலும் பலமுறை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடமும் கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன.
பொதுமக்களை கடுமையாக பாதித்துக் கொண்டிருக்கும் ஜிஎஸ்டி வரியை குறைப்பதற்கு மனமில்லாமல், அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த நிதி அமைச்சர்களின் ஆலோசனைகளுக்குப் பிறகு கூட்டு முடிவாகதான் வரி விதிக்கப்படுகிறது என்று சாக்குப்போக்கு சொல்லி சமாளித்து வருகிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.


மத்திய நிதியமைச்சருக்குரிய அதிகாரத்தை பயன்படுத்தினால், உணவுப் பொருட்களின் மீதான அதிகபட்ச வரியை, பொதுமக்கள் தாங்கும் அளவிற்கு குறைத்துவிட முடியும் என்ற உண்மை அனைவருக்கும் தெரிந்திருந்த போதும் கூட, கருணையோ, கணிவோ இல்லாத நிர்மலா சீதாராமன், பொதுமக்களின் பொருளாதாரத்தை கடுமையாக சுரண்டி வரும் ஜிஎஸ்டி வரியை குறைப்பதற்கு தனிப்பட்ட முறையில் தயாராகவே இல்லை என்பதை பல்வேறு சந்தர்ப்பங்களில் அவரே வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஜிஎஸ்டி வரி அமல்படுத்தி பல ஆண்டுகளாக கொடூரமாக வரி வசூலித்து வருவதால் பொதுமக்களிடம் காணப்படும் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தும் வகையில்தான், செப்.11ம் தேதி கோவையில் நடைபெற்ற தொழில் அதிபர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்பு ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் சீனிவாசன். பொதுமக்கள் மற்றும் உணவக உரிமையாளர்களின் வேதனையை கூட சீனிவாசன் நகைச்சுவையாக முன்வைத்தது, வீடியோவாக பதியப்பட்டு, நாடு முழுவதும் தீயாக பரவிவிட்டது.


சீனிவாசனின் ஆதங்கக் குரலை, உணவக உரிமையாளர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் ஆரவாரமாக வரவேற்றார்கள். பொதுமக்களால் தாங்கி கொள்ள முடியாத அளவுக்கு ஜிஎஸ்டி வரி உள்ளது, உண்மைதான் என்பதால், ஒரே ஒரு நாளில் நாடு முழுவதும் பிரபலமாகிவிட்டார், கோவை ஸ்ரீஅன்னபூர்ணா குழும நிர்வாக இயக்குநர் சீனிவாசன். அவரின் பேச்சுக்கு, அதே நிகழ்வில் விளக்கம் அளிக்காமல் தவிர்த்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீனிவாசன், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, “ஜிஎஸ்டி வரி குறித்து சீனிவாசன் ஜனரஞ்சமாக பேசினார். அவர் பேசியதில் தவறு எதுவும் இல்லை. அவரது பேச்சு, ஜிஎஸ்டி வரிக்கு பரம விரோதியாக இருப்பவர்களுக்கு ஆதாயமாக அமையும்” என்று நாகரிகமாகவே பதிலளித்தார்.
இந்தளவுக்கு நல்லவரா நிர்மலா சீதாராமன் என்று கோவை மாவட்ட தொழில் அதிபர்களே ஆச்சர்யத்தை வெளிப்படுத்திய நேரத்தில்தான், அனைவரும் நினைக்கும் அளவுக்கு தான் அவ்வளவு நல்லவர் இல்லை என்பதை வெளிப்படுத்தி தொழில் அதிபர்களை மட்டுமல்ல அனைத்து தரப்பு மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டார் நிர்மலா சீதாராமன்.

சீனிவாசனை மன்னிக்கும் மனப்பான்மையிலேயே நிர்மலா சீதாராமன் இல்லை என்பதை வெளிப்படுத்தும் விதமாக, தான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அவரை நேரில் அழைத்து மன்னிப்பு கேட்கும் விதமாக மத்திய அரசின் அதிகாரப் போக்கை வெளிப்படுத்திய விதத்தை பார்த்த நொடியில் இருந்து, சமூக ஊடகங்களில் அதிகமாக கண்டனங்கள் எழுந்து வருவதை பார்த்து தமிழக பாஜக மூத்த தலைவர்களே மனம் நொந்து போய்விட்டார்கள்.
தமிழகத்தைச் சேர்ந்த முன்னணி தொழில் அதிபர்களிடையே மத்திய அரசுக்கு எதிராக இருக்கும் மனவருத்தத்தை போக்க முயற்சிக்காமல், அதை மேலும் மேலும் அதிகரிக்கும் வகையில், தமிழரான நிர்மலா சீதாராமன் நடந்து கொள்வது, தமிழக பாஜகவுக்குதான் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். மத்திய அரசுக்கு எதிராக கருத்து சொன்னால் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளை ஏவிவிட்டு தொழில் சாம்ராஜ்யத்தையே படுகுழியில் தள்ளும் அளவுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்திவிடுவார்கள் என்று அச்சம், தமிழக தொழிலதிபர்களிடம் உருவாகிவிட்டால், இதுவரை பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாக நிற்கும் பிரபல தொழில் அதிபர்கள்கூட தங்கள் ஆதரவு நிலையை விலக்கி கொள்வார்கள்.

அரசியல் கண்ணோட்டம் இருந்தாலும், தொழில்துறையில் பயணிக்கும் அனைத்து உரிமையாளர்களும், ஒருமித்த உணர்வுடன் நின்று தொழில் அதிபர்களை மிரட்டும் அரசியல்வாதியையும் அவர் சார்ந்த அரசியல் கட்சியையும் ஒருபோதும் மன்னிக்கவே மாட்டார்கள். இந்த உண்மையெல்லாம் நிர்மலா சீதாராமனின் சிந்தனையில் உதிக்காமல் போனதுதான் மிகப்பெரிய அவலம் என்கிறார்கள் பாஜக மூத்த தலைவர்கள் வேதனையோடு.
பாஜக மூத்த தலைவர்களிடம் எழுந்துள்ள அச்சத்தைப் போலவே, பாஜக ஆதரவு நிலையில் உள்ள பிரபல சமூக ஊடகர்களும் கூட, சீனிவாசன் மீதான ஆத்திரத்தை தணித்துக் கொள்ள, ஆட்சி அதிகாரத்தை காட்டி மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்த நிர்மலா சீதாராமன், அதனை புகைப்படமாகவும் வீடியோவாகவும் பதிவு செய்து பொது தளத்தில் பகிர்வதற்கு எப்படி அனுமதித்தார் என்பதை தான் ஜீரணிக்கவே முடியவில்லை.

இது ஒரு தொழிலதிபரை மிரட்டும் செயலாக, நாடு முழுவதும் உள்ள தொழில் அதிபர்கள் பார்க்க மாட்டார்கள். மத்திய பாஜக அரசுக்கு எதிராக ஏதாவது கருத்துகளை முன்வைத்தால், தங்களுக்கும் இதுபோன்ற மிரட்டல்கள் தான் விடுப்பார்கள் என்று நினைத்து பாஜகவுடனான நெருக்கத்தை குறைத்துக் கொள்ளவே முன்வருவார்கள். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அதிகார மமதையில் போடும் ஆட்டம், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசுக்குதான் கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்கிறார்கள் வடமாநிலத்தைச் சேர்ந்த வர்த்தகத்துறையைச் சேர்ந்த நிபுணர்கள்.

சீனிவாசனை மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்த நிர்மலா சீதாராமனின் ஆணவப்போக்கிற்கு சமூக ஊடகங்களில் பல்வேறு தரப்பினர் கண்டனங்களை தெரிவித்து வருவதைப் போலவே, மத்திய பாஜக அரசின் மக்கள் விரோதப் போக்கை தொடர்ந்து கடுமையாக எதிர்த்து வரும் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் கூட நிர்மலா சீதாராமனின் அறமற்ற செயலை கடுமையாக கண்டித்துள்ளனர்.

திமுக மகளிரணி தலைவரும் நாடாளுமன்ற திமுக குழு தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்பியும், நெற்றியடி போல திருக்குறளை சுட்டிக்காட்டி, நிர்மலா சீதாராமனுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மக்கள் விரோத ஜிஎஸ்டி வரி குறித்து கோவையில் சீனிவாசன் பேசிய வீடியோவை இந்தியா முழுவதும் பரப்பும் வகையில், அவரின் ஒவ்வொரு வார்த்தையையும் ஆங்கிலத்தில் மொழிப் பெயர்த்து காங்கிரஸ் சமூக ஊடகங்களில் பரவவிட்டுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கொடூர குணத்தை அம்பலப்படுத்தும் வகையில் கருத்துகளை பகிர்ந்ததுடன், கடும் கண்டனத்தையும் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்ததைப் போல, நிர்மலா சீதாராமனின் அடாவடித்தனமான செயலால், பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு மிகப்பெரிய தலைக்குணிவை ஏற்படுத்திவிட்டது என்று மனம் நொந்து கூறுகிறார்கள் வடஇந்தியா பாஜக மூத்த தலைவர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *