ஆகஸ்ட் 19 ம் தேதி சென்னையில் இருந்து சேலத்திற்கு பறந்த குட்டி விமானத்தில் அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பயணம் செய்திருக்கிறார்.
அதே விமானத்தில் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அருண் ஐபிஎஸ்ஸும் சேலத்திற்கு பயணமாகியிருக்கிறார்.
இந்த இருவரும் மட்டுமே பயணம் செய்திருந்தால், இதுதொடர்பான செய்திகள், தமிழக அரசியல் களத்திலும் தமிழ்நாடு காவல்துறை உயர் அதிகாரிகள் மட்டத்திலும் பெரும் பூகம்பத்தையே ஏற்படுத்தியிருக்கும்.
அரசியல் வதந்திகளை உண்மை என நம்புவதற்கு வாய்ப்பு தராத வகையில், இருவர் பயணம் செய்த குட்டி விமானத்தில் ஆளும்கட்சி எம்எல்ஏவும் சேலம் மாநகர் மத்திய மாவட்ட திமுக செயலாளருமான பனமரத்துப்பட்டி ராஜேந்திரனும் பயணம் செய்து இருப்பதால், அரசியல் ஆதாயத்திற்காக கயமைத்தனத்தோடு பரப்பப்பட்ட வதந்தி, புஸ்வானமாக மாறிவிட்டது.
மரியாதை நிமித்தமாக முன்னாள் முதல்வர் இபிஎஸ்ஸை நலம் விசாரித்த அருண் ஐபிஎஸ்ஸின் நற்பண்பை, அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்திக் கொண்டு விட்டார் ராஜேந்திரன் என்கிறார்கள் சேலம் திமுக மூத்த நிர்வாகிகள்.
எடப்பாடியாருடன் அருண் ஐபிஎஸ் மனம் திறந்து பேசினார். அமெரிக்காவில் அந்நிய முதலீடுகளை திரட்டுவதற்காக முகாமிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினின் உடல்நிலை குறித்தும் சர்ச்சையான கருத்தை எடப்பாடியாருடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார் அருண் ஐபிஎஸ் என்று, முதல்வரின் புதல்வரும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார் ராஜேந்திரன் எம்எல்ஏ என்ற தகவல்தான், ஐபிஎஸ் அதிகாரிகள் மட்டத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
உண்மையில் நடந்தது என்ன என்று எடப்பாடியாருக்கு மிக மிக நெருக்கமான நட்பு வட்டாரத்தில் நல்லரசு விசாரித்த போது கிடைத்த தகவல்கள் அதிர்ச்சியளிக்க கூடியவை.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திராவிட மாடல் அரசு பொறுப்பு ஏற்ற 2021 ஆம் ஆண்டிலேயே அமைச்சர் பதவி தனக்கு கிடைக்கும் என்று மிகவும் ஆவலுடன் காத்திருந்தார் ராஜேந்திரன் எம்எல்ஏ.
வீரபாண்டியார் மறைவுக்குப் பிறகு சேலம் மாவட்ட திமுகவில் அசைக்க முடியாத சக்தியாக தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள படாதபாடுபட்டு வரும் ராஜேந்திரன், அமைச்சர் பதவி தனக்கு கிடைத்தால் அந்த செல்வாக்கை வைத்து, சேலம் மாவட்டத்தில் தனக்கு எதிராக அரசியல் செய்யும் வீரபாண்டியாரின் வாரிசுகளின் செல்வாக்கை தரைமட்டமாக்கிவிட முடியும் என்ற நப்பாசையிலேயே காய் நகர்த்தி வந்து கொண்டிருக்கிறார்.
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 எம்எல்ஏ தொகுதிகளில் அதிமுக கூட்டணி 10 தொகுதிகளை கைப்பற்றிவிட தப்பித்தவறி ஒரே ஒரு திமுக எம்எல்ஏவாக வெற்றி பெற்றிருப்பவர் ராஜேந்திரன் மட்டுமே.
வீரபாண்டியர் மறைந்து 13 ஆண்டுகள் கடந்துவிட்ட பிறகும் கூட திமுக அமைச்சராக சேலம் மாவட்டத்தில் வர முடியவில்லையே என்று ஆதங்கத்துடனேயே நடமாடிக் கொண்டிருக்கிறார் திமுக எம்எல்ஏ ராஜேந்திரன்.
திமுக தலைமைக்கும் இளைஞரணி செயலாளர் உதயநிதிக்கும் மிகவும் நெருக்கமான அமைச்சர் எ.வ.வேலுவின் அதிதீவிர சீடராகவும் இருப்பவர்தான் எம்எல்ஏ ராஜேந்திரன்.
வன்னியர் சமுதாயத்தின் பிரதிநிதியான தனக்கு அமைச்சர் பதவி வழங்கிவிடுவார்கள் என்று ஆசையோடு இருந்தார். ஆனால், மூன்றாண்டுகள் கடந்து நான்காம் ஆண்டில் திமுக ஆட்சி அடியெடுத்து வைத்திருக்கும் நேரத்திலும் கூட அமைச்சர் பதவி கிடைக்காததால் விரக்தியின் உச்சத்திற்கே சென்றுவிட்டார் ராஜேந்திரன் எம்எல்ஏ.
அதிரடியாக ஏதாவது செய்து திமுக தலைமையின் கவனத்தை தன் பக்கம் ஈர்க்க வேண்டும் என்று தீய எண்ணத்தோடு அரசியல் செய்து கொண்டிருந்த ராஜேந்திரன் எம்எல்ஏவுக்கு, ஒரே விமானத்தில் எடப்பாடியாரும் அருண் ஐபிஎஸ்ஸும் பயணம் செய்த நிகழ்வை, அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்திக் கொள்ள சூழ்ச்சி செய்திருக்கிறார் என்கிறார்கள் ராஜேந்திரனின் நம்பிக்கைக்குரிய திமுக நிர்வாகிகள்.
அமைச்சர் பதவி கனவில் மிதக்கும் ராஜேந்திரன் எம்எல்ஏவைப் போலவே, கமிஷனர் அருண் ஐபிஎஸ் மீது கோபத்தில் இருக்கும் சென்னை மாநகர போலீஸாரும் இபிஎஸ்ஸுடனான விமான பயணத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள துடித்திருக்கிறார்கள்.
சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகளிலும் அதிரடி மாற்றங்களை அருண் ஐபிஎஸ் மேற்கொண்டு வருவதைப் பார்த்து லஞ்சப் பணத்தில் மஞ்சள் குளித்துக் கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் முதல் இணை ஆணையர்கள் வரையிலான சென்னை மாநகர போலீஸ் அதிகாரிகளில் ஒரு சிலர், அருண் ஐபிஎஸ்ஸின் உத்தரவுகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். போலீஸ் கமிஷனர் பதவியில் அருண் ஐபிஎஸ் நீடித்தால், லஞ்ச பணத்தை மூட்டை கட்ட முடியாது என்பதால், சென்னை போலீஸ் கமிஷனர் பதவியில் இருந்து அருண் ஐபிஎஸ்ஸை பந்தாடுவதற்கு ரகசியமாக காய் நகர்த்தி வந்தவர்களுக்கு, இபிஎஸ்ஸுடனான சந்திப்பு லட்டு போல கிடைத்துவிட்டது.
எடப்பாடியார் மற்றும் அருண் ஐபிஎஸ் ஆகியோரின் விமானப் பயணத்தில் உண்மையில் என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்வதற்கு முன்பே, ராஜேந்திரன் எம்எல்ஏ போலவே, காவல்துறை உயரதிகாரிகளும் அருண் ஐபிஎஸ் மீது முதல்வருக்கும் உதயநிதிக்கும் மனவருத்தம் ஏற்படும் வகையில், வதந்திகளை சமூக ஊடகங்களில் பரப்பி விட்டார்கள்.
இந்த பின்னணியை விட வீரபாண்டியாரின் தீவிர விசுவாசிகளிடையே சூடாக நடைபெற்று விவாதமும் அதிக அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.
எடப்பாடியாரின் நிழல் என்று கூறுப்படும் சேலம் இளங்கோவனுக்கும் திமுக எம்எல்ஏ ராஜேந்திரனுக்கும் இடையே ஆத்மார்த்தமான நட்பு நீண்ட காலமாகவே உண்டு.
சேலம் மாவட்டத்தில் எப்போது பொது தேர்தல் நடந்தாலும் திமுகவை விட அதிகமான இடங்களில் அதிமுக வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, கோடிக்கணக்கான பணம் கைமாறிவிடுவது வாடிக்கையான ஒன்றுதான் என்று மனம் நொந்து கொள்ளும் வீரபாண்டியாரின் தீவிர விசுவாசிகள், திராவிட மாடல் ஆட்சியில் ராஜேந்திரன் அமைச்சராக பதவியேற்றால் திமுகவினருக்கு கிடைக்கும் சலுகைகளை விட அதிமுகவினருக்குதான் அதிகமாக கிடைக்கும் என்று கூறி வேதனையை வெளிப்படுத்துகிறார்கள்.
சேலம் மாவட்ட திமுகவில் மறைந்த வீரபாண்டியார் கட்டி காப்பாற்றிய அரசியல் கண்ணியத்தை, அவரது மறைவுக்குப் பிறகு திமுக செயலாளர்களான பனமரத்துப்பட்டி ராஜேந்திரன், கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் டி.எம்.செல்வகணபதி எம்பி ஆகியோர் காற்றில் பறக்கவிட்டுவிட்டு, அதிமுக மூத்த தலைவர்களுடன் நெருக்கம் காட்டி திமுக தலைமைக்கு துரோகம் செய்து விட்டார்கள் என்று கடந்த பல ஆண்டுகளாக குற்றம் சாட்டி வருகிறார்கள் வீரபாண்டியாரின் விசுவாசிகள்.
எடப்பாடியாருடன் அருண் ஐபிஎஸ் பகிர்ந்து கொண்டதாக புரளி கிளப்பப்படும் தகவல்களை சேலம் அதிமுக நிர்வாகிகள் தானே ஊடகங்களில் முதலில் கசிய விட்டிருப்பார்கள்.
எடப்பாடியாருக்கு பெருமை சேர்க்கும் விவகாரத்தில், சேலம் அதிமுக நிர்வாகிகளும், இளங்கோவன் தரப்பும் அசட்டையாக ஒருபோதும் இருக்கவே மாட்டார்கள்.
சேலம் மாவட்ட அதிமுக நிர்வாகிகளிடம் இருந்து வரும் கண்ணியம் சேலம் திமுக எம்எல்ஏவிடம் எதிர்பார்ப்பது முட்டாள்தனம் என்பது நிரூபணமாகியிருக்கிறது.
அரசியல் ஆதாயத்திற்காகவும் தில்லுமுல்லுகளை செய்து எப்படியாவது அமைச்சர் பதவியில் அமர்ந்துவிடும் என்று துடித்துக் கொண்டிருக்கும் திமுக எம்எல்ஏ ராஜேந்திரன் மூலம் தான் ஊடகங்களுக்கு தகவல் கசிந்திருக்கிறது என்பது உறுதியாகிவிட்டது என்கிறார்கள் சேலம் மாவட்ட மூத்த செய்தியாளர்கள்.
அரசியல் விளையாட்டுகளுக்குள் சிக்குபவர் அருண் ஐபிஎஸ் இல்லை என்று ஆணித்தரமாக கூறும் ஓய்வுப்பெற்ற ஐபிஎஸ் அதிகாரிகள், முன்னாள் முதல்வர்கள் அல்லது எதிர்க்கட்சித் தலைவர்கள் பயணம் செய்யும் விமானத்தில் உயர் ஐபிஎஸ் அதிகாரிகள் தவிர்க்க முடியாமல் பயணம் செய்ய நேரும் போது மிகவும் எச்சரிக்கையாக இருப்பார்கள்.
சேலத்திற்கு பறக்கும் குட்டி விமானத்தில் எத்தனை இருக்கைகள் இருக்கும், அதில் எடப்பாடியார் எந்த இருக்கையில் அமரப் போகிறார் என்ற தகவல்களை எல்லாம் எளிதாக திரட்ட கூடிய சக்தி படைத்தவர்தான் அருண் ஐபிஎஸ். இருவருக்கும் இடைவெளி அதிகமாக இருக்கும் இருக்கையை முன்கூட்டியே தீர்மானித்துதான் பயணம் செய்திருப்பார் அருண் ஐபிஎஸ்.
அதைவிட முக்கியமாக, முன்னாள் முதல் அமைச்சரிடம் மரியாதை நிமித்தமாக நலம் விசாரிப்பது என்பது அரசியலுக்கு அப்பாற்பட்ட நாகரிகம் என்பதை காவல்துறையில் உள்ள அனைத்து உயர் அதிகாரிகளும் கடைப்பிடிக்க கூடிய ஒன்றுதான் என்பதையும் அருண் ஐபிஎஸ் விவகாரத்தில் பொருத்தி பார்க்க வேண்டும் என்கிறார்கள் அருண் ஐபிஎஸ்ஸிற்கு நெருக்கமான ஐபிஎஸ் உயர் அதிகாரிகள்.
அரசியல் களத்திலும் காவல்துறை தளத்திலும் பூதாகரமாக்கப்பட்ட இந்த விவகாரத்தை வெற்று வேட்டு என்று சொல்லும் அளவுக்கு திமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் உதிர்க்கும் வார்த்தைகள் வெடிகுண்டு போல அதிர வைக்கிறது.
முதல்வருக்கு அடுத்த நிலையில் உள்ள மூத்த அமைச்சர் துரைமுருகன் உள்பட திமுகவின் இரண்டாம் கட்ட திமுக தலைவர்கள் பலர் எடப்பாடியாருடனும் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் பலருடனும் தொழில் ரீதியாக பார்ட்டனர்களாக இருப்பவர்கள்தான் என்பதெல்லாம் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றாகவே தெரியும்.
அருண் ஐபிஎஸ் பகிர்ந்து கொண்டதாக கூறும் புரளியை விட பன்மடங்கு அதிமாகவே மு.க.ஸ்டாலினுக்கு மிகமிக நெருக்கமான அமைச்சர்களே, எடப்பாடியாருக்கு பல்வேறு தகவல்களை தெரிவித்துக் கொண்டிருப்பவர்தான் என்பதை உளவுத்துறையும் உறுதிப்படுத்தியிருப்பதை கவனத்தில் வைத்திருப்பவர்தான் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று கூறும் திமுக ஆதரவு ஐஏஎஸ் உயரதிகாரிகள்,
அருண் ஐபிஎஸ் மீது களங்கத்தை சுமத்தி, சென்னை போலீஸ் கமிஷனர் பதவியில் இருந்து தூக்கியெறிந்துவிடலாம் என்று கனவு காணும் சென்னை மாநகர போலீஸ் அதிகாரிகள், முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பியவுடன் அருண் ஐபிஎஸ் மீதான நம்பகத்தன்மையை வெளிப்படுத்துவதைப் போல செய்யும் அதிரடியை பார்த்து ஏமாற்றத்தை தான் எதிர்கொள்வார்கள் அருண் ஐபிஎஸ்ஸுக்கு எதிராக சதி வேலைகளை செய்யும் போலீஸ் உயர் அதிகாரிகள் என்கிறார்கள் திட்டவட்டமாக…
தமிழக அரசியல் வாதிகளிடம் காணப்படும் கயமைத்தனம், போலீஸ் உயர் அதிகாரிகளையும் தொற்றிக் கொண்டிருப்பதுதான் தமிழ்நாட்டின் சாபக்கேடு.