Thu. Nov 21st, 2024

தாரை வே இளமதி., சிறப்புச் செய்தியாளர்…

அதிமுக ஆட்சியை விட திமுக ஆட்சிக் காலங்களில்தான் பள்ளி மற்றும் உயர்கல்வித்துறை மிகவும் சிறப்பாக செயல்படும் என்பது பிரபல கல்வியாளர்களின் கடந்த கால நற்சான்றிதழாகும். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் பள்ளி மற்றும் உயர்கல்வித்துறைகள் மேலும் மேலும் பொலிவு பெறுவதை விட, கடந்த கால பெருமைகளை இழக்கும் வகையில்தான் கடந்த 3 ஆண்டுகளில் பல்வேறு அவமானகரமான நிகழ்வுகள் பலமுறை நடைபெற்று இருக்கின்றன என்பதுதான் திமுக ஆட்சிக்கு ஆதரவான மனநிலை கொண்ட பிரபல கல்வியாளர்களின் மனவருத்தமாகும்.

பணத்திற்காக, ஜனநாயக மாண்புகளை குழி தோண்டி புதைக்கும் செயல்களில் துணிந்தே ஈடுபட்ட சவுக்கு சங்கர், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேசுடன் நெருக்கமான தொடர்பில் இருந்து வந்திருக்கிறார். பள்ளிக் கல்வித்துறையின் செயல்பாடுகளையும் அமைச்சர் அன்பில் மகேஷின் நடவடிக்கைகளையும் புகழ்ந்து வீடியோ வெளியிட்டு, அன்பில் மகேஷ் தலைமையிலான பள்ளி கல்வித்துறையின் சீர்கேடுகளை மூடி மறைக்க முயற்சிகள் நடைபெற்றிருக்கின்றன.

Add a heading – 1


அதைவிட கொடுமையாக, வலதுசாரி சிந்தனையாளரும் மூத்த ஊடகவியலாளரும் புகழ்பெற்ற யூ டியூப் பிரபலமான ரங்கராஜ் பாண்டேவின் அன்பு பிடியில் அன்பில் மகேஷ் சிக்குண்டு கிடந்தார் என்பதற்குரிய நிகழ்வுகளும் அம்பலமாகி, திராவிட மாடல் ஆட்சிக்கு அவப்பெயரை தேடி தந்தது. தமிழ்நாடு அரசிற்கு சொந்தமான கல்வி தொலைக்காட்சியின் தலைமை நிர்வாக பொறுப்பில், ரங்கராஜ் போலவே சிந்தனையோட்டம் உள்ள அவரது நண்பருக்கு தாரை வார்க்கப்பட்டது. இதுபோன்ற நியமனம், திமுக ஆட்சிக்கு மிகப்பெரிய அளவில் அவமானத்தை தேடி தரும் என்ற சிறிதளவு கூட முன்யோசனை இல்லாமல் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் இருந்திருக்கிறாரே என்று பிரபல கல்வியாளர்களே மனம் வெறுத்து கதறியிருக்கிறார்கள்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் பள்ளிக் கல்வித்துறைக்கு மூன்று செயலாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள். திறமை வாய்ந்த, பள்ளிக் கல்வித்துறையில் மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றுகிற உயர் ஐஏஎஸ் அதிகாரிகளை கூட ஒரு வருட காலத்திற்கு மேலாக கூட பணியாற்ற விடாமல் தூக்கியடிப்பது ஏன் என்று நெற்றிக்கண்னை திறந்த பிரபல கல்வியாளர்கள் பலர் உண்டு. உதாரணத்திற்கு பள்ளிக்கல்வித்துறை செயலாளராக உயர் ஐஏஎஸ் அதிகாரி காக்கர்லா உஷா நியமனம் செய்யப்பட்டார். அதே பதவியில் அவர் மூன்றாண்டுகளுக்கு மேல் நீடிக்க வாய்ப்பு வழங்கப்படவில்லை.

பத்தாண்டுகளுக்கு முன்பு இதே பள்ளிக்கல்வித்துறை செயலாரளாக காக்கர்லா உஷா ஐஏஎஸ் பணியாற்றிய காலத்தில்தான், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. மாணவிகளுக்கு நாப்கின் வழங்கும் திட்டமும் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. பொதுத்தேர்வுகளுக்கான சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டன. பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர்களுக்கு கல்விசாரா பணிகள் பெருமளவில் குறைக்கப்பட்டன. இப்படி எண்ணற்ற சிறப்பு திட்டங்களை அமல்படுத்தியவர் காக்கர்லா உஷா ஐஏஎஸ்.

தற்போதைய ஆட்சியின் துவக்கத்திலேயே பள்ளிக் கல்வித்துறையில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் ஆணையர் எனும் புதிய பதவி அறிமுகப்படுத்தப்பட்டு, பள்ளிக் கல்வித்துறை தலைமையில் பணியாற்றும் பல்வேறு பிரிவு இயக்குனர்களும் ஆணையர் நிர்வாகத்திற்கு கட்டுப்பட்டவர்கள் என்ற நிர்ப்பந்தம் உருவாக்கப்பட்டது. ஆணையர் பணி நியமனத்தால், தொடக்க கல்வி இயக்குநரகம், பள்ளி கல்வி இயக்குநரகம், ஆசிரியர் தேர்வு வாரியம், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி, தமிழ்நாடு பாடநூல் கழகம், பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி என பல்வேறு பிரிவுகளில் திறமைவாய்ந்த அதிகாரிகளை நியமனம் செய்து, பள்ளிக் கல்வித்துறை மீண்டும் புத்தெழுச்சி பெற பாடுபட்டவர் முதன்மை செயலாளரான காக்கர்லா உஷா ஐஏஎஸ்.

பெரிய அளவில் சர்ச்சையில் சிக்காத உஷா ஐஏஎஸ்ஸை தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்ற அனுமதிக்கப்படவில்லை. பள்ளிக்கல்வித்துறை நிர்வாகத்தில் கடந்த மூன்றாண்டுகளில் நடைபெற்ற குளறுபடிகளை பட்டியலிட்டு மனம் வருத்தப்படும் பிரபல கல்வியாளர்கள் பலர், பள்ளிக் கல்வித்துறையை நிர்வகிக்கும் அளவுக்கு அன்பில் மகேஷுக்கு திறமை இல்லை என்று வெளிப்படையாகவே குற்றம் சுமத்துகிறார்கள்.

பள்ளிக் கல்வித்துறையில் இதற்கு முன்பு எப்போதும் இல்லாத அவலமாக, இந்தாண்டு துவக்கத்தில் மார்ச் மாதம் 19 நாட்கள் நடைபெற்ற இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷின் நிர்வாக திறமையின்மையை வெளிச்சம் போட்டு காட்டியது.

நகரம் மட்டுமின்றி கிராமங்களில் உள்ள பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் மேல்நிலைப் பள்ளி வரையிலான ஆசியர்களுக்கு, கற்பித்தல் பணியை தவிர அலுவல் ரீதியாக தேவையற்ற சுமைகள் வழங்கப்படுவதுதான் திமுக ஆட்சியின் முன்னோடி திட்டங்களாக இருக்கிறது என்றும் மனம் நொந்து கொள்கிறார்கள் ஆசிரியப் பெருமக்கள்.

அன்றாடம் மாணவர்கள் வீட்டுப் பாடம் செய்கிறார்களோ இல்லையோ, 6 ஆம் வகுப்புக்கு மேல் ஆசிரியர்களாக உள்ளவர்கள், பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர்கள் நாள் தவறாமல் வீட்டுப் பாடம் செய்யும் அளவுக்கு, கல்வித்துறை அதிகாரிகளால் பல்வேறு இன்னல்கள் வழங்கப்பட்டிருப்பதாக மனம் குமறுகிறார்கள். வெறும் வான வேடிக்கை போல, ஆட்டம் பாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகளுக்குதான் அதிக முக்கியத்துவம் தரப்படுவதாகவும் பிரபல கல்வியாளர்களும் ஆவேசமடைகிறார்கள்.

திராவிட மாடல் ஆட்சியில் பள்ளிக் கல்வித்துறையில் முன்னேற்றமே ஏற்பட்டுவிட வில்லை என்று அடித்து கூறும் பிரபல கல்வியாளர்கள், பள்ளிக் கல்வித்துறையை விட உயர்கல்வித்துறையின் நிர்வாகம் படுபாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிறது என்கிறார்கள் மனவேதனையுடன்.

அமைச்சர் பொன்முடி, ஊழல் வழக்கில் மட்டுமல்ல, அமலாக்கத்துறையின் கிடுக்குப்பிடியிலும் சிக்கி இருப்பதால், உயர்கல்வித்துறையில் பணியாற்றும் உயர் அலுவலர்கள், பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், தனியார் கல்லூரி நிர்வாகிகள் என எந்தவொரு தரப்புமே அமைச்சர் பொன்முடியை ஒரு பொருட்டாக மதிப்பதே இல்லை என்கிறார்கள். சனாதன வெறியரான ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் பொன்முடியின் பலவீனத்தை நன்றாக அறிந்து வைத்திருப்பதால்தான், பல்கலைக் கழக நிர்வாகத்தில் தனிக்காட்டு ராஜா போல செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

கல்வித்துறையில் மிகவும் மோசமாக இருக்கும் வட மாநிலங்களில் கூட நடக்காத அராஜகம், அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில் போலி பேராசிரியர்கள் கல்வி கற்பித்தல் போன்ற கூத்துகள் எல்லாம் நடந்து, இதுவரை தமிழ்நாட்டின் கல்வித்துறைக்கு இருந்து வந்த ஒட்டுமொத்த பெருமைகளையும் குழி தோண்டி புதைத்துவிட்டது என்கிறார்கள் ஓய்வுபெற்ற நேர்மையான துணைவேந்தர்கள்.
மத்திய அரசின் கட்டுப்பாடிற்கு கொண்டு செல்லப்பட்ட கல்வியை, மீண்டும் மாநிலத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு கடுமையான போராட்டங்களை முன்னெடுத்துள்ள திராவிட மாடல் அரசு, தற்போதைய நடைமுறையில் மாநில நிர்வாகத்தின் கீழ் இயங்கும் கல்வித்துறை எந்தளவுக்கு தரம் தாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை திறந்த மனதுடன் சீர்தூக்கி பார்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறார்கள் பிரபல கல்வியாளர்கள்.

பள்ளிக் கல்வியோ, உயர் கல்வியோ இரண்டு துறைக்குமே தகுதியான, திறமையான, நேர்மையான அமைச்சர்கள் நியமிக்கப்படவில்லை என்பதுதான் பிரதான குற்றசாட்டாக உள்ளது. க.பொன்முடி, அன்பில் மகேஷ் ஆகிய இருவரையும் மாற்றிவிட்டு, அமைச்சர்கள் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், தங்கம் தென்னரசு போன்றவர்கள் பள்ளி மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர்களாக நியமிக்க வேண்டும் என்பதுதான் , பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகளின் முக்கிய வேண்டுகோளாக இருக்கிறது.

பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களின் ஒளிமயமான எதிர்காலத்தின் மீது உண்மையிலேயே திராவிட மாடல் அரசுக்கு அக்கறை இருக்குமானால், தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்து கொண்டு, மாணவர் சமுதாயத்தின் மேம்பாட்டிற்காக அரும்பாடுபட்டு கொண்டிருக்கும் ஓய்வு பெற்ற தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறை அன்பு ஐஏஎஸ் தலைமையில் சிறப்பு குழு அமைத்து, பள்ளி மற்றும் உயர்க்கல்வித்துறைகளை அவர்களிடம் முழு மனதோடு ஒப்படைத்து விட வேண்டும் என்று அறிவுரை கூறுகிறார்கள் பிரபல கல்வியாளர்கள்.


தலைமைச் செயலாளர் பதவியில் இருந்து 2023 ஆம் ஆண்டு ஜூலை மாத நிறைவில் ஓய்வுப்பெற்ற வெ.இறை அன்பு ஐஏஎஸ், கடந்த ஓராண்டுக்கு மேலாக கல்லூரிகளில், இலக்கிய கூட்டங்களில், பொது மேடைகளில் தன்னம்பிக்கை உரைதான் ஆற்றி வருகிறார்கள். கல்வித்துறையில் சிறப்பான இடத்தை பிடித்திருப்பவர்கள் எல்லோருமே தன்னம்பிக்கை வகுப்புகளை நடத்தி விட முடியாது. பொது வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் நேர்மை, பல்துறை சார்ந்த ஞானம், அர்ப்பணிப்பு, தனிமனித ஒழுக்கமும் தலையாய பண்புகளாக இருப்பவர்கள்தான் மாணவ, மாணவியர்களுக்கு முன்னூதரணமாக திகழ முடியும். அந்த வகையில் வெ.இறை அன்பு ஐஏஸ் அனைத்து தரப்பினரிடமும் நற்பெயரை பெற்றிருப்பவர். அவரின் முழு உழைப்பையும் மாணவர்களின் ஒளிமயமான வாழ்க்கைக்கு அர்ப்பணித்திருக்கிறார். பொதுத் தேர்வுகள் மட்டுமல்ல போட்டி தேர்வுகளிலும் வெற்றித் திருமகனாக தன்னை நிரூபித்திருப்பவர் முனைவர் வெ.இறை அன்பு ஐஏஎஸ் என்பதால், அவரை கல்வியாளர்கள் குழுவிற்கு தலைவராக நியமித்தால், விமர்சனங்கள் கூட எழாது.


வெ.இறை அன்பு ஐஏஎஸ்ஸைப் போலவே, தன்னலமற்ற சிறந்த கல்வியாளர்கள் பலர், கடந்த பல ஆண்டுகளாகவே, மாணவ சமுதாயத்தின் நல்வாழ்விற்காக தங்களின் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் அர்ப்பணித்திருக்கிறார்கள்.


நல்லரசுக்கு தெரிந்த கல்வியாளர்களின் பெயர்களை மட்டுமே சுட்டிக்காட்டுகிறோம். இவர்களைப் போல, மாணவர்களின் நலனில் அக்கறை உள்ள ஆன்றோர்கள் நிறையவே இருக்கிறார்கள். அவர்களை அடையாளம் கண்டு அறிவிக்க வேண்டியது, தமிழக அரசின் கடமையாகும். பிரபல கல்வியாளர்களாக, ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி கலியமூர்த்தி, ஜெய பிரகாஷ் காந்தி, மருத்துவர் சிவராமன், தா.நெடுஞ்செழியன், பாரதி பாஸ்கர்,நல்லகீரை ஜெகன், மருத்துவர்கள் நிறைமதி, சுரேந்தர், விதுபாலா போன்ற எண்ணற்ற சான்றோர்கள் எந்தவிதமான எதிர்பார்ப்பும் இன்றியும் அரசின் அங்கீகாரத்தையும் கூட எதிர்பார்க்காமல் தமிழ்நாட்டில் விழிப்புணர்வு மற்றும் தன்னம்பிக்கை உரையாற்றி வருகிறார்கள்.

தமிழ்நாடு கல்வித்துறையில் புரையோடியிருக்கும் எண்ணற்ற தீயவைகளை முழுமையாக மறைப்பதற்கு ஆபாச மனிதர் மகாவிஷ்ணு விவகாரத்தை ஊதி பெரிதாக்குவதில் முழுசக்தியை செலவிடாமல், காவல்துறையினரிடம் ஒப்படைத்துவிட்டு, தமிழ்நாட்டின் கல்வித்துறையை, உலக தரத்திற்கு மேம்படுத்துவதற்கு முனைவர் வெ.இறை அன்பு ஐஏஎஸ் உள்பட ஆகச் சிறந்த சான்றோர்களை வாழ்நாள் முழுவதும் பயன்படுத்திக் கொள்ள தமிழக அரசு உடனடியாக முன்வர வேண்டும் என்பதே பிரபல கல்வியாளர்கள், ஓய்வுபெற்ற நேர்மையான ஐஏஎஸ் அதிகாரிகள், பன்னாட்டு நிறுவனங்களில் தலைமைப் பொறுப்பை அலங்கரிக்கும் இளம்தமிழர்கள், அனைத்து நிலை மாணவ, மாணவியரின் பெற்றோர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாகும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *