சி.கே.வி. இளங்கதிர்.,சிறப்பு செய்தியாளர்…
தமிழக அரசை வழிநடத்துவதற்கு அச்சாணி கொம்பாக நிற்கும் ஐஏஎஸ், ஐபிஎஸ் தலித் அதிகாரிகள்…
கலைஞர் வழியில் முதல்வர் மு.க.ஸ்டாலின்தான் உண்மையான சமூக நீதி காவலர்…
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியின் முதன்மையான நோக்கமே, சமூக நீதியை நிலைநாட்டுவதுதான் என்று திமுக முன்னணி தலைவர்கள் உரக்க கூறிவருகிறார்கள்.
ஆதி தமிழர்கள் என்று அடையாளப்படுத்தப்படும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களின் கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட ஆட்சி என்ற பெருமையும் திமுகவையே சாரும்.
அரசுத்துறைகளில் மட்டுமின்றி நீதித்துறை மற்றும் மத்திய அரசுப் பணிகளிலும் இட ஒதுக்கீடு பெற்று தந்த பெருமையும் திமுக ஆட்சிக்கே உரியதாகும்.
50 ஆண்டுகளுக்கு மேலான தமிழக அரசியல் வரலாற்றில், திமுக ஆட்சிகளின்போது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட எண்ணற்ற சலுகைகளால்தான், இன்றைய தேதியிலும் தமிழக அரசு நிர்வாகத்திலும் மத்திய அரசு பணிகளிலும் பல்லாயிரக்கணக்கானோர் உயர் பதவிகளில் சேவையாற்றி வருகிறார்கள்.
தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு பொது வாழ்க்கையில் எந்தவொரு அவமரியாதையும் உருவாகிவிடக் கூடாது என்பதை முதன்மை நோக்கமாக கொண்டிருந்தவர் மறைந்த திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி.
அதன் காரணமாகதான், மறைந்த முதல்வர் எம்ஜிஆர் காலத்திற்குப் பிறகு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெரும்பான்மையான மக்கள், திமுக ஆட்சிக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கி வருகிறார்கள்.
அரசியல் மற்றும் பொது வாழ்க்கையில் சமுதாய முன்னேற்றத்திற்காக அயராது பாடுபட்ட தலித் தலைவர்களை அடையாளம் கண்டு, திமுக கூட்டணியில் இணைத்து அங்கீகாரம் அளித்தவரும் மறைந்த திமுக தலைவர் கலைஞர்தான்.
தமிழ்நாட்டில் சமூக நீதியை நிலைநாட்டுவதற்கு தன் உயிர் உள்ளவரை போராடியவர் கலைஞர் என்பதால், அவரது அழைப்பை ஏற்று திமுகவுடன் கூட்டணி அமைத்தவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன்.
கலைஞரின் தலைமையில் அமைந்த வெற்றிக் கூட்டணி மூலம் சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் குரல் ஓங்கி ஒலித்ததை அடுத்து, இந்தியா முழுவதும் தலித் அரசியல் எழுச்சியோடு வீறுநடை போட்டுக் கொண்டிருக்கிறது.
அரசியலில் மட்டுமின்றி ஆட்சி அதிகாரத்திலும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் அதிகமாக செல்வாக்கு பெற வேண்டும் என்று பாடுபட்டவரும் கலைஞர்தான்.
தமிழ்நாடு அரசு துறைகளின் உயர்ந்த பதவிகளில் பல்லாயிரக்கணக்கான தலித் அதிகாரிகளை அமர வைத்து அழகுப் பார்த்தவர் கலைஞர் என்று பெருமிதமாக கூறும் தலித் தலைவர்கள், தந்தை வழியிலேயே திராவிட மாடல் ஆட்சியின் முதல்வர் மு.க.ஸ்டாலினும் தாழ்த்தப்பட்ட சமுதாய அரசு அதிகாரிகளை அடையாளம் கண்டு, அவர்களது அசாத்திய திறமைகளை கொண்டாடி வருகிறார்.
கடந்த 50 ஆண்டு காலத்தில் தலித் அதிகாரிகள் ஆட்சி அதிகாரத்தில் கொடிகட்டி பறந்தார்கள் என்று சொன்னால், அப்போதெல்லாம் திமுக ஆட்சிதான் தமிழ்நாட்டில் நடைபெற்றிருக்கிறது என்று வரலாறு சுட்டிக்காட்டுகிறது.
திராவிட மாடல் ஆட்சிக்கு தலைமை பொறுப்பை ஏற்றிருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் தலித் அதிகாரிகள் எண்ணற்றவர்கள் உயர் பதவிகளை அலங்கரித்துக் கொண்டிருக்கிறார்கள். அதன் உச்சமாகதான், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக என். முருகானந்தம் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசு வரலாற்றில் மூன்றாவது தலித் தலைமைச் செயலாளர் என்ற அந்தஸ்த்தை பெற்றிருப்பவர், கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தத்தை கொண்ட முருகானந்தம் ஐஏஎஸ் என்று சொன்னாலும், அவருக்கு முன்பாக தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகளும் தலைமைச் செயலாளர் பதவியில் அமர வைத்து ஆராதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
மறைந்த திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி ஆட்சி பொறுப்பை ஏற்றிருந்த 2001 முதல் 2006 வரையிலான காலத்தில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக ஏ.பி.முத்துசாமி ஐஏஎஸ் நியமிக்கப்பட்டார்.
தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியை, தமது அதிகாரத்திற்கு இணையான பதவியில் நியமித்து இந்தியாவிற்கே வழிகாட்டியவர்தான் கலைஞர் மு.கருணாநிதி.
அதற்கு முன்பாகவும் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த ஆ.பத்மநாபன் ஐஏஎஸ் அதிகாரியும் தலைமைச் செயலாளர் பதவியை அலங்கரித்து இருக்கிறார்.
தமது மரணம் வரை சமூக நீதியை உயர்த்தி பிடித்த கலைஞர் மு.கருணாநிதியின் உண்மையான வாரிசாகவும், அரசியல் வாரிசாகவும் அவதாரம் எடுத்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு அரசு நிர்வாகத்தில் எண்ணற்ற தலித் சமுதாய உயர் அதிகாரிகளுக்கு செல்வாக்குமிகுந்த பதவிகளில் அமர வைத்து அங்கீகரித்துள்ளார் என்பதுதான், திராவிட மாடல் ஆட்சியின் மகுடமாகும்.
தமிழ்நாடு அரசின் 50 வது தலைமைச் செயலாளராக என்.முருகானந்தம் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், தலித் அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் தொடர்ந்து வழங்கப்பட்டு வரும் முக்கியத்துவத்தை பார்த்து பூரித்து போய் இருக்கும் பிற அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு மழை பொழிந்துள்ளனர்.
தமிழ்நாடு அரசின் புதிய தலைமைச் செயலாளராக எம்.முருகானந்தம் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார் என்ற அறிவிப்பு வெளியானவுடனேயே, காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் செல்வப்பெருந்தகை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்பி ஆகியோர் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உள்அன்போடு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்கள்.
திமுக கூட்டணிக் கட்சித்தலைவர்கள் மட்டுமே முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்த நேரத்தில், பல்லாண்டு காலமாக, அரசியல் மேடைகளில் திமுகவுக்கும் திராவிட மாடல் ஆட்சிக்கு எதிராகவும் வசை பாடிக் கொண்டிருக்கும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் கூட தலைமைச் செயலாளர் என்.முருகானந்தம் ஐஏஎஸ் நியமனத்தை வெகுவாக பாராட்டியுள்ளார் என்பதுதான் வியப்பிற்குரிய அம்சமாகும்.
தலைமைச் செயலாளராக ஐயா முருகானந்தம் அவர்களின் நியமனம், தமிழர்கள் இழந்த உரிமையை மீட்கவும், இருக்கும் உரிமையைப் பாதுகாக்கவும் கிடைத்த நல்வாய்ப்பாகும் என்று குறிப்பிட்டுள்ள சீமான், தத்துவ அறிஞர் ஐயா இறையன்பு அவர்களுக்குப் பிறகு , தமிழர் ஒருவரைத் தலைமைச் செயலாளராக நியமித்துள்ள தமிழ்நாடு அரசிற்கு தன்னுடைய உளப்பூர்வமான பாராட்டுகள் என்று அரசியல் மாச்சரியங்களை கடந்து தனித்த ஆர்வத்துடன் அறிக்கை வெளியிட்டுள்ளார் சீமான்.
தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் பதவியில் மட்டுமல்ல, தமிழ்நாடு அரசின் முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் ஒன்றான உள்துறை செயலாளர் பதவியிலும் கூட தலித் ஐஏஎஸ் அதிகாரியை நியமனம் செய்து, அதிகாரத்தின் உச்சத்திலும் அமரக்கூடிய ஆற்றல், திறமை படைத்தவர்கள்தான் தலித் அதிகாரிகள் என்று உரக்க கூறியவர்தான் திராவிட மாடல் ஆட்சியின் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் என்கிறார்கள் சமூக நீதி போராளிகள்.
உள்துறை செயலாளராக அமுதா ஐஏஎஸ்ஸை நியமித்ததைப் போலவே, தமிழ்நாடு அரசின் முக்கியத்துவம் வாய்ந்த துறைகளின் செயலாளராகவும் தலித் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியாற்றி வருகிறார்கள்.
மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் சுப்ரியா சாகு ஐஏஎஸ், இந்து சமய அறநிலையத்துறை செயலாளர் சந்திரமோகன் ஐஏஎஸ் என பத்து பதினைந்து ஐஏஎஸ் அதிகாரிகள், தமிழ்நாடு அரசின் நாடித் துடிப்பான அரசு துறைகளில் பணியாற்றி வருகிறார்கள்.
ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு இணையாகவே, காவல்துறையிலும் உயர் பொறுப்புகளிலும் கூட தலித் ஐபிஎஸ் அதிகாரிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நியமனம் செய்துள்ளதால்தான், இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் சமூக நீதி கொள்கைகள் உயிரோட்டமாக இருப்பது தமிழ்நாட்டில் மட்டும்தான் என்கிறார்கள் தலித் தலைவர்கள்.
சென்னை மாநகர காவல்துறை ஆணையராக பணியாற்றி வரும் அருண் ஐபிஎஸ், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்தான்.
சட்டம் ஒழுங்கு பிரிவில் மட்டுமின்றி சென்னை மாநகர போக்குவரத்து துறை கூடுதல் ஆணையராக சேவையாற்றி வரும் சுதாகர் ஐபிஎஸ், தென்சென்னை சரக காவல்துறை இணை ஆணையர் சிபி சக்ரவர்த்தி ஐபிஎஸ் ஆகியோரும் தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்தான்.
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த காவல்துறை பணிகளிலும் கூட தலித் ஐபிஎஸ் அதிகாரிகளை தேர்ந்தெடுத்து பணியாற்றும் நல்வாய்ப்பை வழங்கியிருப்பவர் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
தமிழ்நாடு அரசு நிர்வாகத்தில் சாதிபேதம் தலை தூக்கிவிடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக மக்கள் சேவையாற்றி வரும் திராவிட மாடல் ஆட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற தீய எண்ணத்துடன் அவதூறுகளை பரப்பி வரும் பிழைப்புவாதிகள் சிலர், தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் பதவியில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர் அமர முடியுமா என்று கேள்விகளை முன்வைத்து, அரசியல் ஆதாயம் தேட முனைந்திருக்கிறார்கள்.
10 ஆண்டுகளுக்கு மேலாக திமுக கூட்டணியில் நீடித்து வரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை, திமுக கூட்டணியில் இருந்து பிரித்துவிட வேண்டும் என்ற நயவஞ்சகத்துடன் அரசியல் செய்து கொண்டிருக்கும் சிலர், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவனுக்கும் இடையே உள்ள ஆத்மார்த்தமான நட்பில் விரிசல் ஏற்படுத்துவதற்காக, படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழ்நாடு அரசு நிர்வாகத்தை வழிநடத்தும் ஒட்டுமொத்த பொறுப்பும் இன்றைக்கு தலித் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளிடம்தான் ஒப்படைத்திருக்கிறார் திராவிட மாடல் ஆட்சியின் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைப் போலவே, மக்கள் தொகையில் பெரும்பான்மையாக உள்ள நான்கு ஆதிக்க சமுதாய அதிகாரிகளுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த முக்கியத்துவத்தை குறைத்தவர் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
கல்வி மற்றும் வேலைவாய்ப்பு ஆகிய இரண்டு முக்கிய துறைகளில் சமூக நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதை உயிர் மூச்சாக கொண்டிருக்கும் திராவிட இயக்க ஆட்சிகளில், திமுகவை மிஞ்சிய வேறு எந்தவொரு இயக்கமும் இல்லை என்று கூறும் அளவுக்குதான் மறைந்த திமுக கலைஞர் மு.கருணாநிதியின் ஒட்டுமொத்த ஆட்சி காலத்திலும் சாதி பேதம் தலை தூக்கியதே இல்லை.
தந்தையிடம் அரசியல் பாடத்தை கற்றுக் கொண்டிருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலினும், தமது தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் தலித் சமுதாயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்று பெருமிதமாகவே கூறுகிறார்கள் தலித் அரசியல் தலைவர்கள்.
திமுகவுக்கும் திராவிட மாடல் ஆட்சிக்கு எதிராகவும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை திசை திருப்பி, அரசியல் ஆதாயம் அடைந்துவிட துடிக்கும் எதிர்க்கட்சிகளின் கனவு ஒருபோதும் நிறைவேறாது என்ற வகையில்தான் முதல்வர் மு.க.ஸ்டாலினின் சமூக நீதி செயல்பாடுகள் அழுத்தமாகவும் அர்த்தமுள்ளதாகவும் ஆணித்தரமாகவும் இருக்கிறது என்று பாராட்டு மழை பொழிகிறார்கள் திராவிட இயக்க சித்தாந்தவாதிகள்.
fvt5af
bwlfyx