Thu. Nov 21st, 2024

இந்தியாவிலேயே பாரதிய ஜனதாவுக்கு எம்பியே இல்லாத ஒரே ஒரு மாநிலம் தமிழ்நாடுதான்.
10 ஆண்டு காலம் பிரதமர் பதவியில் அமர்ந்திருந்த மோடியின் செல்வாக்கை தவிடு பொடியாக்கிய மாநிலம் தமிழ்நாடு என்பதால், மத்திய பாஜக அரசில் இடம் பெற்றிருக்கும் அனைத்து அமைச்சர்களும் திராவிட மாடல் ஆட்சிக்கு தலைமை ஏற்றிருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஆளுமையை பார்த்து அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள்.


வட இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் பாரதிய ஜனதாவுக்கு எதிரான மாநில கட்சிகள், பிரதமர் மோடியின் அரசியல் செயல்பாடுகளுக்கு அஞ்சி ஒடுங்கிக் கொண்டிருக்கும் போது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மட்டுமே தனியொரு தலை வராக பாரதிய ஜனதாவை விரட்டியடிப்பதில் தேர்தலுக்கு தேர்தல் விஸ்வரூபம் காட்டிக் கொண்டிருக்கிறார்.

தென்னிந்தியாவில், பாரதிய ஜனதா கட்சிக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து கொண்டிருப்பது திராவிட முன்னேற்றக் கழகம்தான் என்பதை அறிந்து, வடமாநில ஊடகங்கள் கூட, முதல்வர் மு.க.ஸ்டாலினின் அரசியல் வியூகத்தை வெகுவாக பாராட்டிக் கொண்டிருக்கின்றன.
கர்நாடகம், கேரளம், ஆந்திரம், தெலுங்கானா ஆகிய நான்கு மாநிலங்களில் பாரதிய ஜனதா எம்பிக்கள் நடமாடிக் கொண்டிருக்கும் நேரத்தில் தமிழ்நாட்டில் மட்டும் பாரதிய ஜனதாவுக்கும் சரி., அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் சேர்த்து ஒரு எம்பி கூட இல்லாத வகையில் அரசியல் சாணக்கியதனத்தை வெளிப்படுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்தான், சனாதனத்தை வேரோடு அழிப்பதற்கு ஆற்றல் பெற்றிருக்கும் ஒரே தேசிய தலைவர் என்று கொண்டாடுகிறார்கள் இந்தியா கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் பிரபலமான தேசிய தலைவர்கள்.


நாடாளுமன்றத் தேர்தலில் 40 க்கு 40 என்று வெற்றியை அறுவடை செய்ததன் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவையும் தமிழ்நாட்டின் பக்கம் திரும்பி பார்க்க வைத்து விட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்ற புகழ் நாடு முழுவதும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் திமுக கூட்டணிக்கு எதிராக எதிரிகளே இல்லை என்று வீர முழக்கம் எழுப்புவதற்கு முக்கிய காரணமே, திமுகவுக்கு உள்ள வலுவான கட்சி கட்டமைப்புதான் என்று இந்தியா முழுவதும் ஆச்சரியக் குரல்கள் எதிரொலித்துக் கொண்டிருக்கின்றன.
பாரதிய ஜனதாவை முழு மூச்சாக எதிர்க்க வேண்டும் என்றால் திமுகவிடம் இருந்தும் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இருந்தும்தான் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற நிலை, வடமாநில கட்சித்தலைவர்களுக்கு ஏற்பட்டுவிட்டது.


தமிழ்நாட்டில் அனைத்து தரப்பு மக்களின் ஆதரவை பெற்றிருக்கும் திமுகவின் செல்வாக்கைப் பார்த்து வியந்து போய் விட்டார் தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவ் என்கிறார்கள் அரசியல் திறனாய்வாளர்கள்.
தெலங்கானாவில் ஆளும்கட்சியாக கோலோச்சிய ராஷ்டிர சமிதி, சொந்த மாநிலத்தில் ஆட்சியை இழந்த சோகத்தில் இருந்து மீண்டு வருவதற்குள், 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் மோதி படுதோல்வி அடைந்துவிட்டது.
சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றம் ஆகிய இரண்டு பொதுத் தேர்தல்களில் அடைந்த படுதோல்வியில் இருந்து மீண்டு வருவதற்கு திட்டம் தீட்டியிருக்கும் சந்திரசேகர் ராவ், தமிழ்நாட்டில் செல்வாக்கு மிகுந்த திமுகவின் கட்சி கட்டமைப்பையும், அரசியல் செயல்பாடுகளையும் ராஷ்டிரிய சமிதி கட்சியிலும் அமல்படுத்த துடித்துக் கொண்டிருக்கிறார்.

Untitled design – 1


சந்திரசேகர் ராவின் நம்பிக்கைக்குரிய தெலங்கானா ராஷ்டிரிய சமிதியின் மூத்த தலைவர்கள் பல்கா சுமன், ஆஞ்சநேயலு கவுடா, ரவிந்தீர ரெட்டி ஆகியோர் தலைமையில் சிறப்பு குழு ஒன்றை தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைத்திருக்கிறார் சந்திரசேகர் ராவ்.
தெலங்கானா தலைவர்கள் 3 பேரும் தமிழ்நாட்டிற்கு வந்து பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து, மாவட்டங்களில் திமுகவின் கட்டமைப்பு எப்படி வலிமையாக இருக்கிறது, அரசியல் செயல்பாடுகள் எந்தவகையில் அமைந்திருக்கிறது என்பதை நேரிலேயே விசாரித்து அறிந்த போது, ஆச்சரியமடைந்திருக்கிறார்கள்.
குக்கிராமங்களில் கூட பொதுமக்களிடம் திமுக அபார செல்வாக்குப் பெற்றிருப்பதும், ஒவ்வொரு கிராமங்களிலும் வலுவான கட்டமைப்புடன் கட்சி திகழ்வதும் கிளை கழக நிர்வாகிகள் அன்றாட அரசியல் செயல்பாடுகளில் துடிப்புடன் செயல்பட்டுக் கொண்டிருப்பதையும் பார்த்து வியந்து போயிருக்கிறார்கள் தெலங்கானா அரசியல் தலைவர்கள்.


கிளை கழகம், நகர கழகம், பேரூர் கழகம், ஒன்றியக் கழகம், மாவட்டக் கழகம் என ஒட்டுமொத்தமாக 2 கோடி பேர் திமுக உறுப்பினர்களாக இருக்கிறார்கள் என்பதை நேரில் பார்த்த தெலங்கானா அரசியல் கட்சி தலைவர்கள், இந்தியாவில் எந்தவொரு மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு திமுக கட்சி மிகுந்த வலிமையுடன் திகழ்வதாக பாராட்டி பேசியிருக்கிறார்கள்.
தாய் அமைப்பான திமுகவுக்கு மேலும் மேலும் வலிமை சேர்க்கும் வகையில் இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, தகவல் தொழில் நுட்ப அணி என ஐந்தாறுக்கு மேற்பட்ட அணிகளை கொண்டிருக்கும் திமுகவைப் போல, வேறு எந்தவொரு மாநிலத்திலும் பிராந்திய கட்சிகள் வலிமையான கட்டமைப்பை கொண்டிருக்கவில்லை என்று மனம் திறந்து கூறுகிறார்கள் ராஷ்டிரிய சமிதி கட்சித் தலைவர்கள்.
மாநிலம் முழுவதும் அரசியல் ரீதியாக 70 மாவட்டச் செயலாளர்கள் துடிப்புடன் பணியாற்றி வருவதால், தேசிய கட்சிகள் மீது இல்லாத ஈர்ப்பு திமுக மீது தமிழக மக்களுக்கு அழுத்தமாகவும் அதிகமாகவும் இருக்கிறது என்பதை நேரில் பார்த்து ஊக்கம் அடைந்திருக்கிறார்கள் தெலங்கானா அரசியல் தலைவர்கள்.
சென்னை, கோவை, மதுரை போன்ற மக்கள் தொகை அதிகம் உள்ள மாவட்டங்களில் மட்டுமின்றி, திருவண்ணாமலை போன்ற குறைவான மக்கள் தொகை கொண்ட மாவட்டங்களிலும் கூட, திமுகவுக்கு அனைத்து தரப்பு மக்களிடமும் பெருமளவில் ஆதரவு இருந்து வருகிறது.
அரசியலிலும் திராவிட கொள்கையிலும் அழுத்தமான பிடிப்பையும் ஆழ்ந்த ஈடுபாட்டையும் கொண்டிருக்கும் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சரும் திமுக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினரும் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளருமான எ.வ.வேலு போன்ற இரண்டாம் கட்ட தலைவர்கள், வாழ்நாள் முழுவதும் திமுகவின் வளச்சிக்காகவே உழைத்துக் கொண்டிருப்பவர்கள்.
திமுக நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் உரமேற்றிக் கொண்டிருப்பதையே உயிர் மூச்சாக கருதியிருக்கிறார்கள்.


ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் போது மட்டுமல்ல, அரசியல் பணிகளின் போதும் கூட பொதுமக்களோடு இரண்டற கலந்து நிற்பதால்தான், அமைச்சர் எ.வ.வேலுவின் தலைமையை ஏற்று பல லட்சக்கணக்கான திமுக தொண்டர்கள், திருவண்ணாமலை மாவட்டம் முழுவதிலும் கம்பீரமாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.
ஆளும்கட்சியோ, எதிர்க்கட்சியோ திமுகவை பொறுத்தவரை மக்கள் சேவைதான் முதல் கடமை என்று முழங்குபவர்கள்தான் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் இரண்டாம் கட்ட திமுக தலைவர்கள்.
அமைச்சர் எனும் அந்தஸ்தோடு மாநிலம் முழுவதும் அரசு முறையிலான சுற்றுப் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும் நேரத்தில், அமைச்சர் எ.வ.வேலுவின் லட்சியத்தை நிறைவேற்றுவதற்காக, அவரது புதல்வரும் திமுக மாநில மருத்துவரணி துணை தலைவருமான மருத்துவர் கம்பன், பொதுமக்களின் கோரிக்கைகளை தீர்த்து வைப்பதற்கும், திமுகவினரின் சுக துக்கங்களில் பங்கேற்பதற்கும் முன்னுரிமை தந்து கொண்டிருக்கிறார்.

அமைச்சர் எ.வ.வேலுவை போல அனுபவம் மிகுந்த தலைவர்கள், கொள்கை உறுதியோடு அரசியல் பணிகளை முன்னெடுத்துச் செல்ல, அவர்களது வழியில் இளம்தலைமுறையைச் சேர்ந்த மருத்துவர் கம்பன் போல, வளரும் இளம்தலைமுறை தலைவர்களும் திராவிட சித்தாந்தங்களை அச்சமின்றி உரக்க கூறிக் கொண்டிருப்பதால்தான் 75 ஆண்டுக்குப் பிறகும் திமுக எனும் மாபெரும் இயக்கம், உயிர்ப்புடனும் துடிப்புடனும் இருக்கிறது என்பதை உள்வாங்கி கொண்டிருக்கிறார்கள் தெலங்கானா அரசியல் தலைவர்கள்.இடைவிடாது மக்கள் பணியாற்றி வருவதால் தான் இந்தியாவுக்கே சிறந்ததொரு அரசியல் கட்சியாக, திமுக முன்னுதாரணமாக மாறியிருக்கிறது என்று கூறும் தெலங்கானா அரசியல் தலைவர்கள், தெலங்கானாவிலும் திமுகவின் அரசியல் பாணியையே முன்னெடுக்க சபதம் ஏற்றிருக்கிறார்கள் ராஷ்ட்டிரிய சமிதி தலைவர்கள் என்பதுதான் திமுகவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெகுமதியாகும்.