Thu. Nov 21st, 2024

முதல் நிகழ்வு…

சென்னை ஆழ்வார்பேட்டையில் புகழ் பெற்ற ஸ்டார் ஹோட்டல்., அடையார் கேட்டில் 2010 ஆம் ஆண்டில் ஒருநாள் பகல் பொழுது. தரை தளத்தில் கண்ணை விட்டு அகலாத தூரத்தில் நீச்சல் குளம்.. மூன்று இருக்கைகள். பாரதி தமிழன், ரஜினி, நான் (தாரை.இளமதி) அமர்ந்திருக்கிறோம். எங்கள் முன்பு உணவு பரிமாறும் மேஜை. எதிர்புறம் ஒற்றை இருக்கை. அதில் அமர்ந்திருப்பவர், ஆந்திராவை பூர்வீகமாககொண்ட பன்னாட்டு தொழில் அதிபர். அவரது கையில் அழகான கண்ணாடி கோப்பையில் விலையுயர்ந்த மதுபானம். எங்களுடன் இணைந்து அருந்த விரும்பினார். மூவருமே அதிர்ச்சிக்குள்ளானோம். எங்களின் அருகிலேயே சுடச்சுட உணவு தயாரித்து கொடுக்கும் வசதி கொண்ட மேஜையுடன் நின்றுக் கொண்டிருந்த நிபுணர், அவரது பணியில் கண்ணும் கருத்துமாக இருந்தார்.
சென்னை பிரஸ் கிளப்பின் செயல்பாடுகளைப் பற்றி ஆர்வமுடன் விசாரித்த தொழிலதிபர், மன்றத்திற்கு தேவையான அனைத்து வசதிகளையும் எத்தனை லட்சங்கள் செலவானாலும் செய்து தருவதாக வாக்குறுதி தந்தார். அவரின் ஒவ்வொரு வார்த்தைகளும் மூவரையும் வியப்பில் ஆழ்த்திய நேரத்தில், மதிய உணவை அவருடன் இணைந்தே உட்கொண்டோம்…அதற்கு முன்பு கேள்விப்பட்டிராத உணவு வகைகள் பட்டியலில் இருந்தாலும் கூட மூவருக்குமே உணவை ருசிக்கும் ஆர்வம் துளியுமில்லை. தொழிலதிபர் அளித்த வாக்குறுதிகள்தான் கண் முன்னே நிழலாடியது. மூன்று பேருமே சாதாரண வகையான உணவை தான் உட்கொண்டோம் என்றாலும்கூட, அதன் தொகையே 5000 த்தில் இருந்து 10 ஆயிரம் ரூபாய் வரை கட்டணமாக இருந்திருக்கலாம். உரையாடல் நிறைவுற்றடன் அவரவர் திசையில் புறப்பட்டோம். ஆந்திர தொழிலதிபர், நண்பர் ரஜினிக்கு அறிமுகமானவர். ரஜினியின் அழைப்பின் பேரில் நான் இணைந்து கொண்டேன். இன்றைக்கு கம்பீரமாக உயர்ந்து நிற்கும் சென்னை பிரஸ் கிளப்பின் ஒவ்வொரு செங்கல்லும் ரஜினியின் பெயரை சொல்லும். அந்தளவுக்கு ரஜினியின் உழைப்பு இருந்திருக்கிறது. 420 என்ற வார்த்தை அடிபட தொடங்கிய துவக்கத்திலேயே, பிரஸ் கிளப்பின் நிர்வாகக் குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டவர் ரஜினி. அதனாலேயே, செய்தியின் தலைப்புக்கு உரியவராகிறார்.

2 ஆம் நிகழ்வு…

2003 ஆம் ஆண்டில் ஒருநாள். சேலம் காலைக்கதிர் செய்தியாளர் அடையாளத்தோடு சென்னைக்கு வந்திருந்த நான் பிரஸ் கிளப்பிற்கு சென்றேன். தற்போதைய கட்டடத்திற்கான அஸ்திவாரம் தோண்டப்பட்டிருந்தது. மொத்த நிலத்தில் நான்கில் ஒரு பகுதியில் குளம் போல, வட்ட வடிவில் பத்து அடி ஆழத்திற்கு அஸ்திவாரம் தோண்டப்பட்டிருந்தது. என் அருகில் பெருமாள் என்கிற பாரதி தமிழன் நின்று கொண்டிருந்தார். இன்னொரு ஊடகவியலாளரும் அப்போது உடனிருந்தார். பாரதி தமிழனை முதன் முதலில் சந்தித்த போது ஊடகவியலாளராக எனக்கு அறிமுகமாகியிருக்கவில்லை. இவ்வளவு பரந்த இடத்தில் ஒரு மூலையில் வட்ட வடிவில் அஸ்திவாரம் தோண்டப்பட்டிருக்கிறதே.. சதுர வடிவில் அல்லது செவ்வக வடிவில் பிரஸ் கிளப் கட்டடம் கட்டினால் வசதியாக இருக்குமோ.. இவ்வளவு குறுகிய இடத்தில் கட்டடம் கட்டுவது, எதிர்கால பயன்பாட்டிற்கு உதவாதே என்று எனது எண்ணத்தை வெளிப்படுத்தினேன். சென்னையில் உள்ள பிரபல கட்டட பொறியாளர்தான், பிரஸ் கிளப்பின் வரைப்படத்தை தயாரித்து கொடுத்திருக்கிறார் என்றார் பாரதி தமிழன். முதல் மாடியில் தங்கும் அளவிற்கு அறைகள் இருக்கிறதா..வெளிமாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் நிருபர்களுக்கு வாடகைக்கு தங்குவதற்கு அறைகள் தரலாமே.. என்று கேள்வி எழுப்ப, அந்த மாதிரியெல்லாம் கட்டட அமைப்பு இல்லை என்றார் பாரதி தமிழன். முகத்திலும் உள்ளத்திலும் கவலை ரேகைகள் படிந்தது.

3 ஆம் நிகழ்வு…

ஆந்திர தொழிலபதிபரை சந்தித்த சில நாட்களுக்குப் பிறகு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ரஜினியை சந்தித்த போது, என்னென்ன வசதிகளை செய்து தருவதாக கூறினார் என்று கேட்டபோது, கிடைத்த தகவல் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொழிலதிபர் சென்னை பிரஸ் கிளப்பிற்கு வந்து பார்வையிட்ட போது, மறைந்த MUJ மோகன் அங்கிருந்திருக்கிறார். தொழிலதிபரிடம் விசிட்டிங் கார்டை பெற்ற மோகன், பிரஸ் கிளப்பின் நிர்வாகத்தில் உள்ள குளறுபடிகளை கூறி, தொழிலதிபரின் மனதை மாற்றி விட்டார் என்பதாக இருந்தது. இது உண்மையா.. இந்த நிமிடம் வரை எனக்கு தெரியாது. ஆனால், சென்னை பிரஸ் கிளப்பின் அஸ்திவாரம் முதல் அதன் திறப்பு விழா வரை ரஜினியின் உழைப்பு, அசாத்தியமானது. கட்டடம் எழுந்த போது விஜய் டிவியின் குற்றம்,நடந்தது என்ன என்ற நிகழ்ச்சி தொகுப்பில் ரஜினி பணியாற்றி வந்ததால், சென்னை மாநகர காவல்துறையில் அனைத்து நிலை அதிகாரிகளுடனும் நெருக்கமான நட்பு பாராட்டி வந்தார். செங்கல் வருவதில் தாமதமா.. போக்குவரத்து நெரிசலா.. உரிய நேரத்திற்கு தண்ணீர் லாரி வரவில்லையா..என கட்டடம் வளர வளர ரஜினியின் உதவி, கூடிக் கொண்டே போனது. காலைப் பொழுது அல்லது மாலைப் பொழுது செங்கற்களுக்கு தண்ணீர் அடிக்கும் வேலையை எல்லாம் செய்தவர் ரஜினி. சென்னை பிரஸ் கிளப் நிர்வாகத்திற்கு எதிராக மோகன் போராட்டத்தை தீவிரப்படுத்திய நேரத்தில், அதுவும் 420 என்ற வார்த்தையை பயன்படுத்திய போதே, நிர்வாக குழுவில் இருந்து முதல் நபராக விலகியவர் ரஜினி.

4 ஆம் நிகழ்வு…

2007 ஆம் ஆண்டிற்குப் பிறகு ஒருநாள்.. பிரஸ் கிளப்பின் தற்போதைய சந்திப்பு கூடத்தில் விருந்தினர்கள் அமரும் மேடை உருவாக்கப்பட்டு கொண்டிருந்தது. அதன் நுழைவுப் பகுதியில் கால் வைத்தவுடனேயே, இந்த இடம் செய்தியாளர் சந்திப்புக்கு போதுமானதாக இருக்காதே.. இவ்வளவு பெரிய மேடையா…அரங்கமே 50 பேருக்கு மேல் அமர முடியாத அளவுக்கு சிறியதாக இருக்கிறதே.. மைக்கில் பேசினால் தெளிவாக கேட்க முடியாதே என பல சந்தேகங்களை முன் வைத்தேன். உடனிருந்த பாரதி தமிழன், சென்னையில் பல தியேட்டர்களை பார்வையிட்டோம். அதில் கிடைத்த அனுபவத்தை வைத்தே செய்தியாளர் சந்திப்பு கூடம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்றார். அவர் வார்த்தையில் தெறித்த கடுப்பினால், எதுபற்றியும் கருத்து தெரிவித்தால் வரவேற்பு இருக்காது என்று அமைதியாகிவிட்டேன். பிரஸ் கிளப்பின் போர்ட்டிகோ, முன்பக்க இரண்டு அறைகள் தவிர, ஒட்டுமொத்த கட்டடத்தின் வடிவமைப்பையும் பைத்தியக்காரன் கூட ஏற்றுக் கொணடிருக்க மாட்டான். இதை விட கொடுமையாக, முழுமையாக கட்டப்பட்ட பல சுவர்களை இடித்து இடித்து கட்டப்பட்டதும் எஸ்ஆர்எம் கல்லூரியால் நியமிக்கப்பட்ட கட்டட பொறியாளரே ரத்தக் கண்ணீர் வடிக்க வைத்த நிகழ்வை எல்லாம் கேட்டு கேட்டு துயரமடைந்தவன் நான்.

5 ஆம் நிகழ்வு…

பாரதி தமிழனை இணை செயலாளராக பதவியில் அமர்த்திய, இன்றைக்கும் பிரஸ் கிளப்பின் பொதுச் செயலாளராக இருக்கும் சிவக்குமாருக்கு (முன்னாள் ஹிந்து செய்தியாளர், தற்போது ஆஸ்திரேலியாவில் வசிப்பவர்) பாரதி தமிழன் செய்த உதவியை விட, ரஜினி, நான் உள்பட சிலர் பேருதவி செய்திருக்கிறோம். ஆஸ்திரேலியாவில், அவர் சேர விரும்பிய பணிக்காக, சென்னை அசோக் நகரில் தனியார் நிறுவனத்தில் டிப்ளமோ படிப்பை மேற்கொண்ட போது, ஏதோ சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. அந்த நிறுவன உரிமையாளரை மிரட்டும் வகையில், எங்களை அடியாள் போல பயன்படுத்தியிருக்கிறார் சிவக்குமார் என்பதையே, அந்த நிறுவனத்திற்கு சென்ற பிறகுதான் உணர்ந்து கொள்ள முடிந்தது.

6 ஆம் நிகழ்வு

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் முனைவர் அப்துல் கலாம் அவர்களின் பொற்கரங்களால் திறந்து வைக்கப்பட்ட பின்னர் ஓராண்டு காலத்திற்குள்ளாகவே பிரஸ் கிளப்பிற்கு, அதற்கு முன்பு இருந்த பெருமை, மளமளவென குறையத் தொடங்கின. அப்போதே பாரதி தமிழனிடம், மன்றத்திற்கு தேர்தல் நடத்துங்கள் என நேரிலேயே வலியுறுத்தினேன். முக்கிய நிகழ்வுகளில் திரு. எம்.வி.ராஜதுரை, திரு.சாவித்திரி கண்ணன் ஆகியோரை ஒருசேர சந்திக்கும் போது, சென்னை பிரஸ் கிளப்பிற்கு எப்போது தேர்தல் நடைபெறும், எப்படி நடைபெறும் என்பது தொடர்பாக ஆழ்ந்த கவலையுடன் கருத்து பரிமாற்றங்கள் நடந்து வந்திருக்கின்றன. என்னை தவிர மற்ற இரண்டு நண்பர்களுடன் பாரதி தமிழன் அடிக்கடி உரையாடுகிறார் என்ற தகவலின் காரணமாகவே, பிரஸ் கிளப்பிற்கு எதிராக வீசப்படும் அவப்பெயர்களை உடனடியாக தடுத்த நிறுத்த வேண்டும் என பாரதி தமிழனுக்கு அழுத்தம் கொடுங்கள் என வேண்டுகோள் வைத்திருக்கிறேன். அன்றையே தினம் போலவே, ஒவ்வொரு நாளும் கடந்து கொண்டு இருந்த நேரத்தில், 5 ஆண்டுகளுக்கு முன்பே பிரஸ் கிளப்பின் பொறுப்பு தலைவரை, அவரது இல்லத்தில் சந்தித்த போது தலைவர் பதவியில் இருந்து உடனடியாக விலகுங்கள் என்று வலியுறுத்தியிருக்கிறேன். இன்றைக்கு கொண்டாடப்படுகிற நிர்வாக குழுவால், பொறுப்பு தலைவருக்கு எந்தளவுக்கு மரியாதை வழங்கப்பட்டது என்பதை எல்லாம் நன்றாகவே அறிந்து வைத்திருந்தாலும் அதை வெளிப்படுத்த வேண்டும் என மனமே எனக்கு இல்லை.

7 ஆம் நிகழ்வு

பிரஸ் கிளப்பை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளவர்களில் திரு. சாவித்திரி கண்ணன் மற்றும் திரு. சுரேஷ்குமார் ஆகியோர் மீது நான் வைத்திருக்கும் தனிப்பட்ட மரியாதையால், அவர்களுடன் சில மணிநேரம் செலவழிக்கும் வாய்ப்பிற்காகவே, தன்னார்வலராக என்னை இணைத்துக் கொண்டிருக்கிறேன். பிரஸ் கிளப்பை தவிர வேறெங்கும் திரு. பகவான் சிங் சாரை நான் சந்தித்ததே இல்லை. ஆனால், அவர் அங்கம் வகிக்கும் குழுவினருக்கு உதவி தேவைப்படும் நேரத்தில் வரும் அழைப்பை உதாசீனப்படுத்தாமல் பயணிப்பதற்கு பேரார்வம் கொண்டவனாகவே இருக்கிறேன். அதற்கு முக்கிய காரணம், உறுப்பினர் புதுப்பித்தலின்போது கிடைக்கும் அனுபவங்கள் பேரின்பமாக மாறிவிடுவதுதான். வழக்கம் போல, ஒருநாள் அஸ்ஸாமிலில் இருந்து இளம் ராணுவ அதிகாரி ஒருவர், திரு.பகவான் சிங் சார் அவர்களை சந்திப்பதற்காக பிரஸ் கிளப்பிற்கு வந்திருந்தார். அவர், முன்னாள் ஊடகவியலாளர். சிங் சார் ஆசிரியராக இருந்த ஆங்கில நாளிதழிலில் சென்னை செய்தியாளராக பணியாற்றியிருக்கிறார். நன்றாக தமிழும் பேசினார்.

நக்கீரன் ஆசிரியர் திரு. கோபால் அவர்கள், தன்நிலையை பற்றி சிறிதும் கவலைப்படாமல், இளம் ராணுவ அதிகாரியுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள காட்டிய ஆர்வம், என்னை வியப்பில் ஆழ்த்தியது. இதுபோன்று வாழ்நாளை உற்சாகப்பட வைக்கும் அனுபவங்களுக்காகவே பிரஸ் கிளப் புனரமைக்கும் பணியில் என்னை உள்ளன்புடன் ஈடுபடுத்திக் கொள்ள தயார்படுத்திக் கொண்டு இருக்கிறேன்.

420 என்ற வார்த்தை தராத வலியை, DSK குழுவோடு பயணிப்பது தருகிறது என்றால் அதைப்பற்றி எனக்கு துளியும் வருத்தமில்லை..

குறிப்பு: இந்த குழுவில் மட்டுமே இதை பகிர்கிறேன்…

3 thoughts on “மானஸ்தன் ரஜினி…. சென்னை பிரஸ் கிளப்., மகிழ்ச்சியும் துயரமும்…..”
  1. மிக அருமையான தகவல்கள் நன்றி நல்வாழ்த்துகள்
    —.
    சென்னை பத்திரிகையாளர் மன்ற வரலாறு தொடர்பாக அடியேன் ஒரு தொகுப்பு நூல் எழுதி வருகிறேன். உங்கள் இந்த பதிவில் உள்ள சில தகவல்களை பயன்படுத்தி கொள்ள விரும்புகிறேன்.

    இராசமு ஹமீது MGR TV Hameed 9941086586 (06-09-2024)

  2. மிக அருமையான தகவல்கள் நன்றி நல்வாழ்த்துகள்
    —.
    சென்னை பத்திரிகையாளர் மன்ற வரலாறு தொடர்பாக அடியேன் ஒரு தொகுப்பு நூல் எழுதி வருகிறேன். உங்கள் இந்த பதிவில் உள்ள சில தகவல்களை பயன்படுத்தி கொள்ள விரும்புகிறேன்.

    இராசமு ஹமீது MGR TV Hameed 9941086586 (06-09-2024)

  3. அப்படியே தங்களது இதய அறுவை சிகிச்சை செய்திட உதவியர்களை பற்றியும்
    8 – அதிசியமாக போட்டிருக்கலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *