தமிழக சடடப்பேரவைத் தவலைர் ப.தனபாலை பற்றி யார் பேசினாலும், “ஏம்பா, அவர் எம்.ஜி.ஆர். காலத்து அரசியல்வாதி” என்பதுதான், அவரின் பலம்.
சேலம் மாவட்டம் கருப்பூரில் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்தவர், அவரது காலத்தில் இருந்த ஆதிக்க சாதியினிரின் கட்டுப்பாடுகளை எல்லாம் தகர்த்தெறிந்து, பள்ளிக்கல்வியை, கல்லூரிக் கல்வியை வெற்றிக்கரமாக கடந்து, சென்னை வந்து வரலாற்றில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார். அமைதியானவர், எந்த வம்பு தும்புக்கும் போகதாவர், ஆர்ப்பாட்டம் இலலாதவர் என பல நற்பண்புகளுக்குக் சொந்தக்காரரான ப.தனபால், அரசியலுக்குள் கால் எடுத்து வைத்தது அவருக்கு அதிர்ஷ்டமாகவும், அவர் சார்ந்த சமுதாயத்திற்கு துரதிர்ஷ்டமாக மாறிப்போனதுதான், காலக்கொடுமை.
தி.மு.க.வில் இருந்து பிரிந்து அ.தி.மு.க.வை மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர். தொடங்கிய காலத்திலேயே அவர் மீதான ஈர்ப்பின் காரணமாக அ.தி.மு.க. எனும் அரசியல் ஆடையை விரும்பி உடுத்திக் கொண்டவர் ப.தனபால். அவரின் அமைதியையும், கல்வித்தகுதியையும், அரசியல் ஆர்வத்தையும் பார்த்து, 1977 ல், இவரது பிறந்த ஊரை உள்ளடக்கிய சடடமன்றத் தொகுதியில் வாய்ப்பு தராமல், சங்ககிரி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக களமிறக்கினார், எம்.ஜி.ஆர்.
போட்டியிட்ட முதல் தேர்தலியே ப.தனபால் வெற்றிப் பெற்று எம்.எல்.ஏ ஆனார். அதே தொகுதியில் கடந்த 1980, 1984, 2001 ஆகிய மூன்று முறையும் போட்டியிட்டு எம்.எல்.ஏ. வானார். 1989ல் அ.தி.மு.க. ஜெ. அணி சார்பில் போட்டியிட்டு தோல்வியை சந்திதுள்ளார்.
2001 ஆம் ஆண்டில் அவரை கூட்டுறவு அமைச்சராகவும் பதவி கொடுத்து அழகுப் பார்த்தார், செல்வி ஜெயலலிதா. 2011ல் ராசிபுரத்திலும், 2016 ல் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி தொகுதியிலும் நின்று வெற்றி பெற்றார். 2012 ஆம் ஆண்டு பேரவைத்தலைவர் பதவியில் இருந்து தற்போதைய அமைச்சர் டி.ஜெயக்குமார் விலகியதை (நீக்கப்பட்டார் என்பதுதான் உண்மை, அது தனிக்கதை) அடுத்து, பேரவைத்தலைவராக நியமிக்கப்பட்ட ப.தனபால், இன்று வரை அதே பதவியில் தொடர்ந்து நீடித்து வருகிறார்.
தனித்தொகுதிகளாக தேர்வு செய்து தேர்தலில் வெற்றிப் பெற்று வரும் ப.தனபால், வரும் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டு, தனது புதல்வர் தமிழ்ச்செல்வனை எம்.எல்.ஏ.வாக்க தீவிரமாக முயற்சித்துக் கொண்டிருக்கிறார் என்கிறார்கள், அவருக்கு நெருக்கமான அ.தி.மு.க. தலைமைக் கழக நிர்வாகிகள். நீண்ட அரசியல் வாழ்க்கைக்கு ஓய்வுக் கொடுத்துவிட்டு, இளம்தலைமுறைக்கு வழிவிடலாம் என்ற நல்லெண்ணத்தினாலா, இந்த முடிவை எடுத்துள்ளார் ப.தனபால் என்று கேட்டு விடாதீர்கள்.
அவர் சார்ந்த சமுதாய மக்கள், அவருக்கு எதிராக கொந்தளிப்பு மனநிலையில் உள்ளதால், அவர்களின் சாபத்தை எதிர்கொண்டு, இந்த முறை தேர்தலில் போட்டியிடாமல், சுயமரியாதை காப்பாற்றிக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில்தான் அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொள்ள முடிவெடுத்துள்ளார் என்கிறார்கள், அவரது தொகுதி அ.தி.மு.க. நிர்வாகிகள்.
ஏறக்குறைய 45 ஆண்டு காலத்திற்கு மேலான அரசியல் பயணம், அதிகாரத்தை அனுபவித்த தருணம் என தொடர்ந்து உச்சத்திலேயே இருந்த ப.தனபால், தான் சார்ந்த சமுதாயத்திற்கு ஒரு நன்மையும் செய்தததில்லை என்பதுதான் அருந்திய சமுதாய தலைவர்களின் ஒட்டுமொத்த குற்றச்சாட்டு.
தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் உள்ள உட்பிரிவுகளில், இன்றைக்கும் கல்வி, அரசியல் தளங்களில் முன்னேற்றத்தை காண முடியாமல் விளிம்பு நிலைக்கு கீழே உள்ள சமுதாயம் ஒன்று உண்டு என்றால், அது, அருந்ததி சமுதாயம்தான். மற்ற பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியும், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியனும் செல்வாக்கு மிக்க தலைவர்களாக, அரசியலில் கோலோச்சி வந்தாலும், அருந்ததியர் சமுதாயத்தில் அப்படியொரு தலைவருக்கு தனிப்பட்ட அரசியல் செல்வாக்கு கிடைக்காமல் போனதற்கு ப.தனபாலும், தி.மு.க.வில் இருந்து விலகி அண்மையில் பா.ஜ.க.வில் இணைந்த வி.பி.துரைசாமியும்தான் முக்கிய காரணம் என்கிறார்கள்.
வி.பி.துரைசாமியாவது, அரசியல் அதிகாரத்தில் குறுகிய ஆண்டுகள்தான் இருந்தார். ஆனால், ப.தனபால், அதிகாரத்தை தொடர்ந்து அனுபவித்த போதும், மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர், செல்வி ஜெயலலிதா ஆகியோருடன் நெருக்கமாக இருந்தபோதும், தான் சார்ந்த சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக தனிப்பட்ட முறையில் ஒரு துரும்பையும் கிள்ளிப் போடவில்லை என்று குமறுகிறார்கள், அருந்ததிய சமுதாய மக்கள். அதுபோல, உதவியென்று அவரை தேடி சென்ற ஒரு சமுதாய மக்கள் கூட, அவரின் அனல் கக்கும் வார்த்தைகளை கேட்டு கண்ணீர் வடிக்காமல் ஊர் திரும்பிய வரலாறு இல்லை என்கிறார்கள் அவர்கள்.
அவர் எம்.எல்.ஏ.வாக இருந்த காலங்களில், ஒவ்வொரு முறையும் நூறு பேரின் முன்னேற்றத்திற்கு உதவியிருந்தால்கூட, இன்றைக்கு அருந்ததி சமுதாயத்தில் செல்வாக்குமிக்க தலைவராக உருவெடுத்திருப்பார் ப.தனபால் என்று கூறும் அவர்கள், தேர்தல் வெற்றிக்கு அருந்ததியர் மக்களை தேடி வரும் அவர், வெற்றிப் பெற்று சென்னைக்கு வந்த பிறகு, தன் சமுதாய மக்கள் தன்னை தேடி வந்து உதவி கேட்டால், தீண்டதகாதவர்களாக பார்க்கும் வேதனையை வெளியே சொல்வதற்கு எங்களுக்கே அவமானமாக இருக்கிறது என்கிறார்கள், அவரை அடிக்கடி சந்தித்து பேசும் அவரின் சமுதாய தலைவர்கள்.
கடந்த 2011 ல் நடைபெற்ற சட்டபேரவைத் தேர்தலின்போது, அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த தலைவர்களுக்கும், மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதா மரியாதை கொடுத்து அழைத்து பேசியதுடன், அவரவர் சமுதாயத்தின் கோரிக்கைகளையும் காதுகொடுத்து கேட்டு, தீர்த்து வைப்பதாக உறுதியளித்தார். மேலும், தன்னை தேடி வந்த சமுதாய தலைவர்களுக்கு பொருளாதார உதவி கிடைக்கவும் ஏற்பாடு செய்தார். அந்த நேரத்தில், தன் சமுதாயத்தை சேர்ந்த ஒரு தலைவரைக் கூட மறைந்த முதல்வரிடம் அறிமுகப்படுத்தவோ, அவர்கள் வழியாக தன் சமுதாய மக்களின் முன்னேற்றத்திற்கு உதவும் கோரிக்கைகளையோ செல்வி ஜெயலலிதாவின் கவனத்திற்கு கொண்டு செல்ல ப.தனபால், துளியும் ஆர்வம் காட்டாததை கண்டு மனம் நொந்துபோனோம் என்கிறார்கள் அவர்கள்.
தான் சார்ந்த சமுதாயத்தின் அடையாளத்தை சுமக்க இன்றைக்கும் தயங்கும் அவர், அந்த சமுதாயத்தைச் சேர்ந்த தலைவர்களையும், தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடம் அறிமுகப்படுத்தி, அவரவருக்கு உள்ள செல்வாக்கின் அடிப்படையில், ஓரிரு சட்டமன்றத் தொகுதிகளை வழங்குங்கள் என்று சொல்கிற அளவுக்கு மனப்பான்மை கூட இல்லாதவராகதான் இருக்கிறார்.
ஒவ்வொரு தேர்தலின்போதும், பழைய அவமானங்களையெல்லாம் துடைத்தெறிந்துவிட்டு, புதிய கனவுகளுடன் அவரை சந்திக்க வருவோம். ஆனால், அவரின் மனமே இளகாது. இந்த தேர்தலையொட்டி கூட அவரைச் சந்தித்து கேட்டோம். எங்கள் மீதே எரிந்து விழுந்ததுதான் மிச்சம். இ.பி.எஸ். ஓ.பி.எஸ். என்னை மதிக்கவே மாட்டேன் என்கிறார்கள். அவர்கள் முன் நானே செல்லாக்காசாகதான் இருக்கிறேன். இந்த நேரத்தில் எனது சமுதாயத்திற்கு ஏதாவது செய்து கொடுங்கள் என்று கேட்டால், நல்லா செய்வார்கள் என்று அக்னி வார்த்தைகளை கொட்டுகிறார் என நொந்து போய் பேசுகிறார்கள், அந்த சமுதாய தலைவர்கள்.
தி.மு.க. கூட்டணியிலாவது, விடுதலைச் சிறுத்தைகளுக்கு முக்கியத்துவம் கிடைக்கிறது. ஆனால், அதிமுக.வுக்கு காலம் காலமாக தாழ்த்தப்பட்ட மக்களின் ஆதரவு அளித்து வரும் நிலையில், அதுவும் குறிப்பாக அருந்ததியர் மக்களுக்கு இரட்டை இலைச் சின்னத்தை தவிர வேறு ஒரு சின்னமே அவர்களுக்கு தெரியாது என்ற நிலையில், அ.தி.மு.க. கூட்டணியில் அருந்ததியர் சமுதாயத்திற்கு ஒரு செல்வாக்கும் இல்லை.
காசு கொடுத்தால் ஓட்டு போடப்போகிறார்கள் என்ற மனநிலையையும் நிரந்தரமாக உருவாக, ப.தனபால் போன்றவர்கள்தான் காரணம். அவரை எங்கள் சமுதாயத்தின் பிரதிநிதி என்று சொல்லிக் கொள்வதே எங்கள் சமுதாயத்திற்கு அவமானம், அவரை தேர்ந்தெடுத்த தொகுதி மக்களுக்கு மட்டுமல்ல, அருந்ததி சமுசாயத்திற்கும் 5 பைசா அளவுக்குக் கூட பிரயோசனம் இல்லாதவர், சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால் என்று ஆவேசம் அடங்காமல் பேசுகிறார்கள்,அருந்ததியர் சமுதாயத் தலைவர்கள்.
வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் பெரும்பான்மையாக உள்ள அருந்ததியர் சமுதாய மக்களின் வேதனைகளை, ஆதங்கத்தை காது கொடுத்து கேட்பார்களா, இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்.. ஆகியோர். அ.தி.மு.க. வில் எளிய தொண்டனும் முதல்வராகலாம் என்று பெருமையாக கூறும் தலைவர்களே, அருந்ததியர் சமுதாய மக்கள் அரசியல் அங்கீகாரம் பெற முன்வருவீர்களா?