கொரோனா தொற்று ஆட்டிப் படைத்த காலத்திலும், மெல்ல, மெல்ல அடங்கிய காலத்திலும், உயிருக்கு அஞ்சாமல் ஊர் சுற்றித் திரிந்த ஒரு அரசியல் தலைவர் தமிழகத்தில் உண்டென்றால், அதில் முதல் இடத்தை நிச்சயம் பிடிப்பார், முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதுவும், கொரோனோ தொற்றுக் காலத்தையே தனது அரசியல் வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொண்ட ராஜதந்திரி, அவர் ஒருவரே என்றும் அவரை பாராட்டுகிறார்கள், எதிர்க்கட்சிகளில் உள்ள ஜனநாயகவாதிகள்.
பிரதமர் மோடியின் சகவாசத்தால், இ.பி.எஸ்.ஸுக்கும் இந்த குணம் வந்திருக்கிறது என்று கூடுதலாக அவர்கள் கிண்டலடித்தாலும் கூட, பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., ஏன் தந்தை பெரியாரிடம் கூட பழகுகிற வாய்ப்பு கிடைத்த போதும், அரசியல் பயணத்தில் என்ன பாடத்தை கற்றுக் கொண்டிருக்கிறார், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் என்றுதான் கேள்வி மேல் கேள்வி எழுப்புகிறார்கள், மாவட்டங்களில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் தி.மு.க. தலைவர்கள்.
வாத்தியார் மகன் மக்காகதான் இருப்பான் என்று சொல்லும் பொதுமொழிக்கு ஏற்பதான், இந்தியாவையே, தமிழகத்தை திரும்பி பார்த்து வியந்துப் போகிற, வியர்த்துப் போகிற அளவுக்கு வாழ்ந்து மறைந்த வல்லமை மிக்க அரசியல் ஞானி கலைஞரின் மகனா இப்படி என்று சாதாரண மனிதர்கள் கூட நொந்து போகிற அளவுக்குதான் மு.க.ஸ்டாலின், அண்மைக்கால செயல்பாடுகள் இருக்கின்றன என்கிறார்கள், அவரோடு பயணிக்கும் தி.மு.க. முன்னணி நிர்வாகிகள்.
மு.க.ஸ்டாலினோடு சம காலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், அவருக்கு முன்பாக மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும், தொடர்ந்து பல ஆண்டுகள் அமைச்சர் பதவியை வகிப்பவராக இருந்தாலும் கூட, 2016 க்கு முன்பு வரை எடப்பாடி பழனிசாமி, ஒரு ஆளுமையாக யாருடைய கண்ணுக்கும் தெரிந்திருக்கவில்லை.
தமிழக அரசியலில் எந்த அங்கீகாரமும் இன்றி, பத்தோடு ஒன்றாகதான் இருந்தார். மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதா என்ற ஆளுமையின் முன்பு சப்த நாடியும் அடங்கியவராகதான் அவர் வாழ்ந்தார் என்பது அவரின் 2017க்கு முந்தைய அரசியல் வரலாறு. ஆனால், பிறப்பு முதலே, தமிழக அரசியலையும், இந்திய அரசியலையும் ஒரு சேர ஆளுமை செய்கிற கோபாலபுரத்தில் வளர்ந்த மு.க.ஸ்டாலினுக்கு, அவரை பல்லக்கில் வைத்து தூக்கிக் கொண்டு அரசியல் களத்திற்கு அழைத்து வருகிற வாய்ப்பு கிடைத்தும், ஜொலிக்கவே இல்லையே என கவலைபடுகிறார்கள், திராவிட சித்தாந்தவாதிகள்.
உலகில் உள்ள சிறந்த பல்கலைக்கழகங்களை விட, தனிச் சிறப்புக் கொண்ட உயர்ந்த பல்கலைக்கழகம் என்று சொல்கிற அளவுக்கு கலைஞர் மு.கருணாநிதி வாழ்ந்த கோபாலபுரம் இல்லத்தில் அரசியல் மட்டுமா கோலோச்சியது, இயல், இசை, அறிவியல், தகவல் தொழில் நுட்பம், விளையாட்டு என பல்துறை வல்லுனர்கள் எல்லாம் கால் பதித்த அந்த இல்லத்தில், காதுகளை இறுக்க மூடிக் கொண்டிருந்தாலும்கூட, அதையும் மீறி, வெற்றி வரலாறு, தோல்வி தந்த சறுக்கல் என வாழ்வை உரமாக்கும் அத்தனை பாடங்களையும் கற்றிருக்க முடியும்.
இப்படியொரு வாழ்க்கை, தமிழகத்தில் எந்த ஒரு மனிதருக்கும் வாய்ந்திருக்க வாய்ப்பே இல்லை என்று வெம்புவார் மத்தியில், கலைஞரின் புதல்வராகவும், அவரின் அடியொற்றி அரசியல் பயணத்தை மேற்கொண்ட மு.க.ஸ்டாலின், நேற்று முளைத்த காளான் என்று சொல்வதைப் போல, நான்காண்டு காலம் மட்டுமே அரசியல் ராஜதந்திரத்தை கற்றுக்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் முன்பு வெத்து வேட்டு மு.க.ஸ்டாலின் என்று சொல்கிற அளவுக்கு பரிதாபமாக நிற்கிறாரே என வருத்தப்படுகிறார்கள், கலைஞரின் பக்தர்கள்.
கடந்த 26 ஆம் தேதி தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படுகிறது. அன்றைய தினம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஓடிய ஓட்டத்தைப் பார்த்தவர்கள், என்ன மனுஷன்ய்யா இந்த ஆளு..இவ்வளவு வேலைகளையா தலையில் தூக்கிப் போட்டுக் கொண்டு ஓடுவாரு என்று ஆச்சரியப்படும் அளவுக்கு, அன்றைய நாளின் ஒவ்வொரு நொடியையும், தன்னுடைய அரசியல் எதிர்காலத்திற்காக செலவு செய்து இருக்கிறார் இ.பி.எஸ். திட்டமிட்ட எந்தவொரு பணியையும் மிஸ் செய்யாமல் செய்து முடித்திருக்கிறார்.
தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பு, வன்னியர்களுக்கான தனி உள்ஒதுக்கீடு மசோதாவை அவர் சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய காட்டிய வேகம், ஓ.பி.எஸ். வட்டாரத்தையே ஆச்சரியப்பட வைத்துள்ளது. அதேவேகத்தில், மறுநாள் (நேற்று) பாமக.வுடன் தொகுதிப் பங்கீட்டையும் உறுதி செய்தார். அன்றிரவே, சுயகௌரவத்தையெல்லாம் பார்க்காமல், தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை, அவரது இல்லத்திற்கே சென்று சந்தித்த அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட குழுவினர், கூட்டணி பற்றியும், தொகுதி பங்கீடு பற்றியும் பேச்சுவார்த்தை நடத்தி, அதிமுக கூட்டணியிலேயே தேமுதிக நீடிக்கப் போகிறது என்ற நிலையை உருவாக்கியிருகிறார்கள்.
இப்படி அதிமுக கூட்டணியை வலுப்படுத்திக் கொள்வதிலும், சேதாரம் இல்லாமல் பார்த்துக் கொள்வதிலும், அதிகமாக மெனக்கெடுகிறார் எடப்பாடி பழனிசாமி. அவருக்கு வலது,இடது என இருக்கும் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோரை உள்ளடக்கிய இந்த மும்மூர்த்திகள் போடும் ரகசிய திட்டங்கள் எதுவும், வெற்றிப் பெறும் வரை ஓ.பி.எஸ்.ஸுக்கே தெரியாது என்கிற வகையில்தான் இருக்கிறது எடப்பாடி பழனிசாமியின் ராஜதந்திரம்.
இதேபோல, மூவர் அணியாகதான் இருக்கிறது தி.மு.க.தலைவர் ஸ்டாலினுக்கும். ஆனால், என்ன கொடுமை என்றால், அங்கு இருப்பவர்கள் தேர்ந்த அரசியல் வாதிகள். ஸ்டாலினோடு இருப்பவர்கள் சோளக்காட்டு பொம்மைகள். ஸ்டாலினோடு வலது இடதாக இருப்பவர்கள் உதயநிதியும், சபரீசனும். இந்த இரண்டு பேர்தான், தி.மு.க.வுடனான கூட்டணி கட்சிகளின் தேவைகளையும், அபிலாஷைகளும் தீர்த்து வைக்கப் போகிறவர்கள். இந்த இரண்டு கத்துக்குட்டிகளால், ஒற்றை இலக்கத்தில் தொகுதிகளை எதிர்பார்க்கிற கூட்டணி கட்சிகளுடன்கூட தொகுதி பங்கீட்டை வெற்றிகரமாக முடிக்க முடியவில்லை.
கூட்டணி விஷயத்திலும், தொகுதி பங்கீட்டு விஷயத்திலும் சூப்பர் பாஸ்ட் வேகத்தில், பிஎஸ்எல்வி சி51 ராக்கெட கணக்காக சென்றுக் கொண்டிருக்கிறது அ.தி.மு.க. ஆனால், திமுகவோ, தத்துப்பிள்ளையைப் போல இப்போதும் தள்ளாடி தள்ளாடி சென்றுக் கொண்டிருக்கிறது.
செல்வி ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கடந்த நான்காண்டுகளில் அரசியல் பாடத்தையும், தேர்தல் ராஜதந்திரத்தையும் கற்றுக் கொண்டு தமிழகம் முழுவதும் அனைத்து தரப்பு மக்களிடமும் பெயர் பெற்றவராக முன்னணி இடத்தை நோக்கி வேகமாக சென்றுக் கொண்டிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
கூட்டணி விஷயத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸை அடக்கி ஆள்வது என்பது மதயானையை அடக்குவதற்கு சமமானது. அந்த வித்தையிலேயே வெற்றி பெற்று வீரத்திருமகனாக நிற்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், நீர்யானைகளாக தலையை தூக்கிக் கொண்டிருக்கும் காங்கிரஸை கூட தன் வலைக்குள் வீழ்ந்த தடுமாறிக் கொண்டிருக்கிறார் மு.க.ஸ்டாலின். அவர் கொஞ்சம் ஏமாந்தாலும் கூட, ஆழ்வார்ப்பேட்டை ஆண்டவர் தயாராக இருக்கிறார்..
டெல்லிக்கு மனசாட்சியை அனுப்பி வைத்து, அரசியல் சதுரங்கத்தில் வெற்றிப் பெற்ற கலைஞர் மு. கருணாநிதி வழியில், கனிமொழி எம்.பி.யையும் டெல்லி காய்நகர்த்தல்களில் விளையாட அனுமதித்து இருந்தால், மு.க.ஸ்டாலினுக்கு இன்றைய பரிதாப நிலை வந்திருக்காது என்று கூறும் அவரது அபிமானிகள், சொந்த சகோதரியையே நம்பாதவர், இரண்டாம் கட்ட தலைவர்களையா நம்ப போகிறார் என்று ஆதங்கப்படுகிறார்கள்.
அரசை வழிநடத்துவதிலாகட்டும், கூட்டணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வதிலாகட்டும், இதுவரை தமிழகம் பார்த்திராத அரசியல் தலைவராக ஒவ்வொரு நொடியும் விஸ்வரூபம் காட்டிக் கொண்டிருக்கிறார், முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அவரை பார்த்தாவது அரசியல் பாடத்தையும், தேர்தல் வியூகங்களையும் மு.க.ஸ்டாலின் கற்றுக் கொள்ளவில்லை என்றால், தி.மு.க. எனும் மாபெரும் இயக்கத்தை அழிக்க பா.ஜ.க. தேவையில்லை. எடப்பாடி பழனிசாமி ஒருத்தரே போதும் என்கிறார்கள் அண்ணா காலத்து அரசியல்வாதிகள்…