Sat. May 18th, 2024

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், காஞ்சிபுரம் மாவட்டம், தாம்பரம் – படப்பை – கரசங்காலில் நடைபெற்ற, “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற மக்களின் குறைகேட்கும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் பங்கேற்று, மக்கள் அளித்த கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு, அவர்களிடம் நேரிலும் குறைகளைக் கேட்டறிந்தார்.

அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்களிடம் அவர் பேசினார்.

தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சி முடியப் போகிறது. இதுவரை அவர்கள் அளித்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. ஆட்சி முடியப் போகிறது என்பதால் தினந்தோறும் ஏதோ திட்டம் தொடங்குவதைப் போல நாடகம் ஆடிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால், அவற்றுக்கு நிதி ஒதுக்கினார்களா? இல்லை.

குடிமராமத்துப் பணி என்பதற்கு பதிலாக சவுடு மண் கொள்ளை தான் நடந்துள்ளது. இப்படி தூர்வாரும் மண்ணை விவசாயிகளுக்குத் தர வேண்டும். ஆனால் விவசாயிகளுக்குத் தருவது போல போலி பில் போட்டு தனியாருக்கு லாப நோக்கத்தோடு விற்பனை செய்கிறார்கள். குறிப்பிட்ட அளவுக்கு தான் மண் எடுக்க வேண்டும் என்று இருக்கிறது. ஆனால் அதைத் தாண்டி, மண் எடுக்கிறார்கள்.

முன்பெல்லாம் மண் எடுத்தால், மணல் கொள்ளை நடக்கிறது என்று எளிதாக கண்டுபிடிக்கலாம். இப்போது யார் மண் எடுத்தாலும், ‘குடிமராமத்துப் பணி நடக்கிறது’ என்று சொல்லி திருட்டை மறைத்துவிடுகிறார்கள். தூர் வாருவதற்காக மணல் எடுக்கவில்லை, மணல் கொள்ளைக்காக மணல் எடுக்கப்படுகிறது. இதுதான் உண்மை. விவசாயி, விவசாயி என்று சொல்லி இதைத் தான் பழனிசாமி செய்து கொண்டு இருக்கிறார்.

அண்மையில், கோவையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தான் ஒரு பிரதமர் என்பதை மறந்து தரம் தாழ்ந்த அரசியல் விமர்சனத்தை தி.மு.க மீது செய்துள்ளார். தி.மு.க ஆட்சியில் இருந்தபோது அனைத்து மாவட்டங்களிலும் அராஜகம் கட்டவிழ்த்துவிடப் பட்டது எனவும், அதில் அதிகம் பாதிக்கப்பட்டது தமிழக பெண்கள்தான் என்றும் சொல்லி இருக்கிறார் மோடி. எந்த ஆதாரத்தை வைத்துக் கொண்டு அவர் அப்படி பேசினார்?

பா.ஜ.கவினர் இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் நடத்திய வன்முறைகளை நான் சொல்லவா? அதற்கு ஒரு நாள் முழுக்க வேண்டும். பழனிசாமி உத்தமர் என்றும், பன்னீர்செல்வம் புனிதர் என்றும் நரேந்திர மோடி சொல்லிக் கொள்ளட்டும். எனக்கு ஆட்சேபணை இல்லை. இதனால் தமிழ்நாட்டு மக்கள் மனதில் பிரதமர் பற்றிய தரம்தான் தாழும். அது பற்றி அவர் தான் கவலைப்பட வேண்டும். அரசியல் ரீதியாக தி.மு.கவை மோடி விமர்சனம் செய்யட்டும்.அதற்கு பதில் தருவதற்கு நான் தயாராக இருக்கிறேன்.

அவர் ஆரியத்தை புகுத்த நினைப்பவர். நாங்கள் அதனை திராவிடத்தால் தடுத்துக் கொண்டு இருப்பவர்கள். இந்த மோதல் என்பது காலம் காலமாக நடந்து வரும் மோதல்தான். அதற்காக திமுகவை கொச்சைப்படுத்தும் வகையில் மோடி பேசுவது, அதுவும் பிரதமர் பதவியில் இருந்து கொண்டு பேசுவது கண்டிக்கத்தக்கது.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.