ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிப் பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில்தான் முதல்வர் எடப்பாடி பழனிசாமி துடிப்பாக இருக்கிறார் என்பது, நேற்றைய ஒருநாளில் வெட்ட வெளிச்சமாகிவிட்டது. விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கும் தேதியை அறிவித்ததில் இருந்த வேகமாகட்டும், நகைக்கடன் தள்ளுபடியாகட்டும், மகளிர் சுய உதவிக்குழுக்களின் கடன் தள்ளுபடியாகட்டும்..வன்னியர்களுக்கு 10.5 சதவிகித இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்வதற்கு எடுத்துக் கொண்ட முனைப்பு ஆகட்டும், எடப்பாடி பழனிசாமியின் வேகத்தைப் பார்த்து, தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் உயர் அதிகாரிகள் மயக்கம் போட்டு கீழே விழாத குறைதான்.
காலையில் உற்சாகமாகவும், ரிலாக்ஸாகவும் இருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மாலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ளது என்பது உறுதியானவுடன், பாவம் முதல்வர் துடித்துப் போய்விட்டார். வாக்காளர்களை கவர்வதற்காக எண்ணற்ற அறிவிப்புகளை வெளியிட தயாராகி வந்த அவருக்கு, தேர்தல் ஆணையம் முடடுக்கட்டை போட்டுவிட்டது. அவசர, அவசரமாக வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்து ஏற்கெனவே ஒத்திகை பார்த்தபடி, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அன்கோவை குளிர வைத்துவிட்டார். ஏற்கெனவே உள்ஒதுக்கீட்டிற்கு மேல்தான் கல்வியிலும்,வேலைவாய்ப்பிலும் வன்னியர்கள் பயனடைந்து வருகிறார்கள். அதனால், டாக்டர் ராமதாஸ் அன்கோ மகிழ்ச்சியடைவதற்கோ, எடப்பாடி பழனிசாமி அரசை கொண்டாடுவதற்கோ ஒன்றுமே இல்லை என்ற தருமபுரி தி.மு.க. எம்.பி. செந்தில்குமாரின் பரப்புரை எல்லாம், டாக்டர் அன்புமணியின் தேம்பி, தேம்பி அழுத காட்சிகள் பதிவு செய்யப்பட்ட வீடியோ முன்பு ஒன்றும் இல்லாமல் போய்விட்டது.
நேற்றைய ஒருநாளில் மட்டும் எடப்பாடி பழனிசாமி அறிவித்த அத்தனை அறிவிப்புகளும், சலுகைகளும், தேர்தல் ஆதாயத்திற்காக அரங்கேற்றப்பட்டவைதான் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டுவது ஒருபக்கம் இருந்தாலும், ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு அரசு வேலையை உருவாக்கி தரும் எந்தவொரு நடவடிக்கைக்கும் எடப்பாடி பழனிசாமி உத்வேகமே காட்டவில்லை என்று கொதிக்கிறார்கள், ஒன்றிரண்டு துறைகளைச் சேர்ந்த அமைச்சர்களின் அந்தரங்க விசுவாசிகள்..
அமைச்சரவையிலேயே அதிகபடி வருமானம் இல்லாத துறை என்று கூறப்படுவது, தொழிலாளர் நலத்துறையைதான். அந்த துறையின் அமைச்சராக சிறுபான்மைப் பிரிவைச் சேர்ந்த நிலோபர் கபில் இருந்தாலும், துறையில் ஒரு துரும்பைக் கிள்ளிப் போட வேண்டும் என்றாலும், அந்த துறையின் செயலாளரான நசிமுதினின் கடைக்கண் பார்வை கிடைக்க வேண்டும். அமைச்சருக்கும், நசிமுதினுக்கும் அலுவல் ரீதியாக பரஸ்பரம் மரியாதை இருந்த போதும், நாலு காசு பார்க்கும் அமைச்சரின் எந்த முயற்சிக்கும், தேர்தல் தேதி அறிவிக்கும் கடைசிநிமிடம் வரை நசிமுதின் ஒத்துழைக்கவே இல்லை, மனமே இரங்கவில்லை என்கிறார்கள் தொழில்துறையில் பணியாற்றி வரும் மூத்த அதிகாரிகள்.
நெகிழும்தன்மை இல்லாத நசிமுதினால், 500க்கும்மேற்பட்ட இளைஞர்களுக்கு நல்ல காலம் பிறக்காமலேயே போய்விட்டது என்கிறார்கள் அவர்கள். தொழிலாளர் துறையில், அலுவலக உதவியாளர், வாகன ஓட்டுனர் உள்ளிட்ட கீழ்நிலை பணியிடங்கள் ஆயிரக்கணக்கில் காலியாகி இருகிறது. மாநிலம் முழுவதும் உள்ள தொழிலாளர் துறை அலுவலகங்களில் ஆள் பற்றாக்குறை அதிகரிக்க, அதிகரிக்க கூடுதல் சுமையை தாங்க முடியாமல் தொழிலாளர் துறை அலுவலர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். அதுபற்றி, தொழிலாளர் துறை பணியாளர்கள் சங்கம் பலமுறை அமைச்சரிடம் கோரிக்கை மனு கொடுத்தது. நீண்ட பரிசீலனைக்குப் பின்னரே, பணியாளர் தேர்வுக்கு முன்வந்த அமைச்சர், உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திட, கடந்த நவம்பர் மாதம் அறிவிப்பை வெளியானது.
500 கீழ்நிலை பணியிடங்களுக்கு முதற்கட்டமாக எழுத்துத்தேர்வு நடத்தி நியமனம் செய்வதற்கான நடைமுறைகள் தொடங்கின. கொரோனோ தொற்றின் காரணமாக எழுத்துத்தேர்வு நடததுவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த விவகாரத்தில், எழுத்துத்தேர்வு இன்றி நேர்முகத் தேர்வு மூலம் பணியாளர்களை நியமித்துக் கொள்ளலாம் என உயர்நீதிமன்றமும் வழிகாட்ட, நிதித்துறை, முதலமைச்சர் அலுவலகம் என ஒப்புதல் வாங்குவதற்குள்ளாகவே, பிப்ரவரி மாதம் வந்துவிட்டது.
இந்த மாதத்திலாவது நேர்முகத் தேர்வை நடத்தி, பணி நியமனம் வழங்கிவிடலாம் என துடித்தார், அமைச்சர். ஆனால், அவரின் வேகத்திற்கு, துறை செயலாளர் நசிமுதின் ஈடுகொடுக்காததால், புதிதாக 500 பேருக்கு அரசு வேலை கிடைக்காமல் போய்விட்டது. இந்த நியமனங்கள் மூலம் தேர்தல் கால செலவுகளை ஈடுகட்டலாம் என கணக்குப் போட்டு வைத்திருந்த அமைச்சரின் கனவுக்கும் வேட்டு வைத்துவிட்டார், முதலமைச்சர் என்கிறார்கள் தொழிலாளர் துறை அதிகாரிகள்.
இதேபோல, ஆதிதிராவிடர் நலத்துறையிலும் இளநிலை பொறியாளர் பணிநியமனம் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. முதலமைச்சர் இ.பி.எஸ்.ஸின் வலது கரமான உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் துறையிலும் புதிய பணியாளர்கள் நியமனம் ரத்து செய்யப்பட்டுவிட்டது. மின்சார வாரியத்தில் கேங்மேன் பணி நியமனமும் படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறது.
கடந்த 6 மாத காலமாக, அரசு துறைகளில் காலியாக உள்ள பல்லாயிரம் பணியிடங்களை எழுத்துத்தேர்வு மூலமாகவோ, நேர்முகத் தேர்வு மூலமாகவோ பணி நியமனம் செயய, அந்தந்த துறையைச் சேர்ந்த அமைச்சர்கள் மும்மரம் காட்டி வந்தனர்.ஆனால், முதலமைச்சர் அலுவலகத்தின் ஒத்துழைப்பு முழுமையாக கிடைக்காததால், புதிதாக பணியாளர்களை தேர்வு செய்யும் நடைமுறையில் தொய்வு ஏற்பட்டு, கடைசியில் பணி நியமனம் செய்ய முடியாமலேயே போய்விட்டது எனறு புலம்புகிறார்கள், அமைச்சர்களின் விவவாசிகள்.
அந்தந்த மாவட்டத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகளின் வாரிசுகளுக்கு அரசு வேலை கிடைத்திருக்கும். அதற்கும் வழியில்லாமல் போனதால், சொந்த மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகளே, அமைச்சர் மீது கோபமாக உள்ளார்கள் என்றார் அவர். இதோடு முடிவடையாமல், அரசாங்கத்திற்கும், அமைச்சர்களுக்கும் புகழ் பாடும் செய்தி மக்கள் தொடர்புத் துறையிலும், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணியிடங்களுக்கு அ.தி.மு.க. நிர்வாகிகளின் வாரிசுகளை நியமிப்பதற்கு ஒப்புதல் வழங்காமலேயே காலத்தை கடத்தி விட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்று ஆதங்கப்பட்டுக் கொள்கிறார்கள், அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகள்..
சிறுக, சிறுக ஓட்டு வேட்டையாடுவதில் எல்லாம் முதல்வர் இ.பி.எஸ்.ஸுக்கு நம்பிக்கையில்லை. ஒட்டுமொத்த ஓட்டு வங்கியை அறுவடை செய்யும் திட்டம் ஏதாவது கைவசம் இருந்தால் சொல்லுங்கள், இப்போதும் ரெடியாக இருக்கிறார் முதலவர் எடப்பாடி பழனிசாமி. முன்தேதியிட்டு கூட அரசாணை வெளியிட தயாராக இருக்கிறது முதலமைச்சர் அலுவலகம் என்று முதலமைச்சருக்கு எல்லாமாக இருக்கும் அதிகாரிகள் கூறுவதாக கண் சிமிட்டுகிறார்கள், தலைமைச் செயலாக பணியாளர் சங்க நிர்வாகிகள்.