ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அறிவிப்பாக வெளியிட்டு, எதிர்க்கட்சியினரை மட்டுமல்ல தமிழ்நாட்டு மக்களையும் ஒட்டுமொத்தமாக அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறார், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. வரும் சட்டமன்றத் தேர்தலில் எப்படியாவது வெற்றிப் பெற்று, தொடர்ந்து முதலமைச்சர் பதவியிலேயே நீடிக்க வேண்டும் என்ற வெறி, அவர் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது என்பதைதான் கடந்த சில நாட்களாக, அவர் அறிவித்து வரும் தொடர் அறிவிப்புகளின் மூலம் வெளிப்படுகிறது, என்கிறார்கள் அரசியல் கள ஆய்வாளர்கள்.
நாளைய சமுதாயத்தை வழிநடத்துக் கூடிய மாணவர்களையும், முதல்வர் தவறாக வழிநடத்துகிறார் என்பதற்கு உதாரணம்தான், 9,10 மற்றும் 11 வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து என்கிறார்கள் கல்வியாளர்கள். போட்டித் தேர்வு என்பதே, மாணவர்களுக்குள் மறைந்து கிடக்கும் தன்னம்பிக்கையை வெளிக் கொணருவதற்கான ஒரு பயிற்சி களம்தான் பொதுத்தேர்வு என்கிறார்கள் அவர்கள். எந்தளவுக்கு படித்திருக்கிறார்கள் என்பதைவிட, நெருக்கடியான நேரத்தில் கூட தன்னுடைய ஆற்றலை எப்படி வெளிப்படுத்துகிறார்கள் என்பதற்கான பரிசோதனை கூடம்தான் பொதுத்தேர்வு.
ஆண்டு முழுவதும் படிக்கும் மாணவர்கள், மாதந்தோறும் பள்ளிக்கூடங்களில் நடத்தப்படும் மாதத் தேர்வுகளை எதிர்கொண்டாலும் கூட, குறிப்பிடட 3 மணிநேரத்திற்குள் அவர்கள் ஆண்டு முழுவதும் என்ன கற்றுக் கொண்டுள்ளார்கள், எவ்வளவு நினைவுத் திறன் இருக்கிறது, நெருக்கடிகளை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பது பொதுத்தேர்வின் மூலம் வெளிப்பட்டுவிடும்.
அதற்காக உருவாக்கப்பட்ட பொதுத்தேர்வு, கடந்த பல ஆண்டுகளாக மதிப்பெண் அடிப்படையில் மாணவ, மாணவியர்களின் திறனை மதிப்பிடுவதாக அமைந்தது, அரசாங்கங்கள் கடைபிடித்து வரும் கொள்கைகளால்தான் என்று குற்றம்சாடடுகிறார்கள் கல்வியாளர்கள். ஒவ்வொரு மாணவருக்கும், எந்த படிப்பில் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறதோ, அந்த துறையில் அந்த மாணவனுக்கு வழியை ஏற்படுத்தி தவறுவிட்ட அரசுகள், மதிப்பெண் மூலம் மாணவர்களை வடிகட்டுவது, அரசாங்கங்களின் தோல்வியே தவிர, மாணவர்களிடம் அறிவுத்திறன் பற்றாக்குறையாக இருக்கிறது என்பது அர்த்தமாகாது என்கிறார்கள், பள்ளிக் கல்வியைக் கூட முழுமையாக முடிக்காத பிரபல எழுத்தாளர்கள்.
அறிவுக்கும், சிந்தனைத் திறனுக்கும் உள்ள வித்தியாசம், அரசியல்வாதிகளுக்கும், ஆட்சியாளர்களுக்குமே தெரியாத நேரத்தில், இவர்களிடம்தான் மாணவர்களை வழிநடத்துக் கூடிய பயணத்திட்டத்தை உருவாக்கும் சக்தி இருக்கிறது என்பது, இந்தியாவின் சாபக்கேடு என்பது புகழ் பெற்ற கல்வியாளர்களின் ஆதங்கம்.
கல்வி என்ற ஒரு விஷயத்திலேயே, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு தொடர்ந்து குளறுபடி செய்த வருவதை பொறுத்துக் கொள்ள முடியாமல், கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்கள், ஆகச் சிறந்த கல்வியாளர்கள்.
அடுத்து, விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன், நகைக்கடன் தள்ளுபடி போன்றவற்றையும் தொடர்ந்து அறிவித்துக் கொண்டிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அவருக்கு குறி, வரும் சடடமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தொடர்ந்து ஆட்சியில் அமர்வதுதான். அவர் அறிவித்த பயிர்க்கடன் தள்ளுபடியிலேயே, ஏகப்பட்ட குளறுபடிகள் இருக்கிறது என்கிறார்கள், விவசாய சங்கப் பிரதிநிதிகள்.
ஏற்கெனவே கூட்டுறவு சங்கங்களுக்கு நடத்தப்பட்ட தேர்தலில், அ.தி.மு.க.வினர்தான் அதிகளவில் வெற்றி பெற்று நிர்வாகத்திற்கு வந்துள்ளனர். கடந்த பல ஆண்டுகளாக, அந்தந்த பகுதியில் உள்ள அ.தி.மு.க.வினருக்குத்தான் அதிகளவு பயிர்க்கடன் வழங்கப்பட்டிருககும் நிலையில், தள்ளுபடி மூலம் கிடைக்கும் பணபலனையும் அ.தி.மு.க.வினரே அனுபவிப்பதற்கு மறைமுகமாக செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடுதான் இது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டவில்லை, ஆளும்கட்சியைச் சேர்ந்த விவசாயிகளே குற்றம் சாட்டுகின்றனர்.
சட்டப்பேரவையில் நிதியமைசசரும், துணை முதல் அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட் அறிக்கையின்படி, தமிழகத்தின் மொத்த கடன், 5,70,189.29 ஆக உயர்ந்திருக்கிறது. இந்தளவுக் கடன் தொகையை குறைத்து, தமிழகத்தின் நிதி ஆதாரத்தை பெருக்க, குறைந்தது 3 ஆண்டு காலம் தேவைப்படும் என்று நிதித்துறைச் செயலாளர் கிருஷ்ணனே கூறியிருக்கிறார்.
இபபடி தமிழகத்தின் நிதிநிலை அதலபாதாளத்தில் இருக்கும் போது, முதல்வர் அறிவிக்கும் ஒவ்வொரு தள்ளுபடிகளுமே, தமிழகத்தை மேலும், அழிவுபபாதைக்குதான் அழைத்துச் செல்லும் என்பது பிரபல பொருளாதார நிபுணர்களின் குற்றச்சாட்டு.
விவசாயிகள் கடனாளியாவதற்கு முக்கிய காரணமே, அவர்கள் உற்பத்தி செய்யும் உணவுப்பொருள்களுக்கு நியாயமான விலை கிடைப்பதில்லை என்பதுதான். அவர்களுடையே இடத்தில் இருந்து நியாயமான விலை கிடைக்கும் இடத்திற்கு கொண்டு செல்ல ஆகும் போக்குவரத்துக் கட்டணத்தை கண்டு பயந்துதான், தங்கள் இருப்பிடத்திலேயே வியாபாரிகளுக்கு குறைந்த விலைக்கு விளைப் பொருட்களை விற்று, நஷ்டத்தையே ஒவ்வொரு பருவத்திலும் சுமையாக்கிக் கொள்கிறார்கள் விவசாயிகள்.
விவசாயிகள் மீது உண்மையான அக்கறை, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இருக்குமானால், விளைப் பொருள்களை அரசு பேருந்துகளில் இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதி வழங்கட்டும் பார்க்கலாம். எவ்வளவோ கடன்களை ரத்து செய்கிற முதல்வர், இலவசங்களை அள்ளி வீசுகிற முதல்வர், விவசாயிகளின் விளைப் பொருட்களை, அவரவர் மாவட்டங்களின் தலைநகரத்திற்கோ, அல்லது சென்னைக்கோ இலவசமாக அரசு பேருந்துகளில் எடுத்துச் செல்லலாம் என்று அறிவிக்கிற துணிச்சல் இருக்கிறதா? என்று விவசாய சங்கங்களின் நிர்வாகிகள் ஆவேசமாக கேள்வி எழுப்புகின்றனர்.
மேலும், மீண்டும் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தால் இத்தனை திட்டங்களை செயல்படுத்துவோம் என்று அறிவித்துக் கொண்டிருக்கிற முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மக்களின் மீது உண்மையான அக்கறை இருக்குமானால், உடனடியாக பெட்ரோல் , டீசல் மீதான தமிழக அரசின் வரியை விலக்கிக் கொள்வாரா? அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் வசூலிக்கப்பட்டுக் கொண்டிருக்கிற சுங்க வரியை, விவசாயிகளின் விளைப் பொருட்களை ஏற்றி வருகிற சரக்கு வாகனங்களுக்கு மட்டுமாவது ரத்து செய்ய மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பேன் என்று சொல்கிற துணிச்சல் இருக்கிறதா என்று சிறு,குறு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பினர் கேள்வி எழுப்புகின்றனர்.
அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நெருங்கிய நேரத்திலும், தேர்தலிலும் தனக்கு தோல்வி உறுதி என்பதை அறிந்துக் கொண்ட டொனால்ட் டிரம்ப், பதவி போகிற கடைசி நேரத்தில் பைத்தியம் பிடித்த மாதிரி கத்திக் கொண்டு இருந்தாரே, அதுபோலதான் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஒவ்வொரு அறிவிப்புகளும் இருப்பதாக கடுமையாக குற்றம் சாட்டுகிறார்கள், சமூக ஆர்வலர்கள்.
எங்கே செல்லும் தமிழகம்?