குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று நண்பகல் 12 மணியளவில் அந்தமான் மண்ணில் பாதம் பதித்து இருக்கிறார். வரும் மார்ச் 1 ஆம் தேதி வரை அவர் அங்கு தங்கியிருந்து பல்வேறு தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
அவரின் வருகை அரசு முறைப் பயணமா, அல்லது தனிப்பட்டபயணமா என்பது தெளிவுப்படுத்தப்படாததால், அவரின் வருகையையொட்டி செய்யப்படும் செலவுகள் மற்றும் ஏற்பாடுகளை முன்வைத்து பல்வேறு கேள்விகளை எழுப்புகிறார்கள்,அந்தமானில் உள்ள அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்.
அவர்களின் கேள்விகள் எழுப்பும் கேள்விகளில் நியாயம் உள்ளதா? வாசிப்போரின் தீர்ப்புக்காக முன் வைக்கிறேன்…
சிறப்புச் செய்தியாளர்,,,
அதிருப்தி 1
குடியரசுத் தலைவரின் வருகை உறுதி செய்யப்பட்டவுடன், அந்தமான் தீவின் எல்லைப் பகுதியான (பர்மா எல்லை) இந்திரா பாயிண்ட் என்று அழைக்கப்படும் பகுதியில் ஹெலிகாப்டர் இறங்கும் தளம் அமைக்கும் பணிகள் தொடங்கின. குடியரசுத் தலைவரின் பயணத்திட்டத்தில், அந்த பகுதியும் இடம் பெற்றதால், ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அந்த இடத்தில், 250 க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரிய வகை மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டு, சமதளம் உருவாக்கப்பட்டு, ஹெலிகாப்டர் இறங்கும் வகையில் காங்கீரிட் தளமும் அமைக்கப்பட்டது. ஆனால், இப்படியொரு ஹெலிகாப்டர் இறங்கு தளம் அமைப்பதற்கு அந்தமான் நிகோபர் அரசு நிர்வாகத்தில் இருந்து எந்தவொரு அனுமதியும் பெறப்படவில்லை. அலுவலக ரீதியான கடிதப் போக்குவரத்து கூட இல்லாமல், எல்லாமே வாய்மொழி உத்தரவின் மூலமே நடந்திருக்கிறது. இதில் என்ன வேடிக்கை என்னவென்றால், இவ்வளவு மரங்களை வெட்டி ஹெலிகாப்டர் இறங்கு தளம் அமைக்கப்பட்டுள்ள அந்த பகுதிக்கு செல்வதாக அறிவிக்கப்பட்டிருந்த குடியரசுத்தலைவரின் பயணமே தற்போது ரத்து செய்யப்பட்டுவிட்டதுதான்.
அதற்கு காரணமாக கூறுவதுதான், மத்திய அரசை டெல்லியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் விவசாயிகளின் போராட்டம் எந்தளவுக்கு பயமுறுத்தி வைத்திருக்கிறது என்பது தெளிவாகிறகிறது. இந்திரா பாயிண்ட் என்ற இடத்தில், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவத்தினர் பெரும்பான்மையாக குடியமர்த்தப்பட்டுள்ளனர். ஜனவரி 26 ஆம் தேதி குடியரசுத் தினத்தன்று டெல்லியில் நடந்த டிராக்டர் பேரணியின் போது விவசாயிகள் மீது ஏவிவிட்ட வன்முறையால், இந்திரா பாயிண்டில் உள்ள பஞ்சாப் சமுகத்தினர் கடும் கோபத்தில் இருக்கிறார்கள் என்றும் இந்த நேரத்தில் குடியரசுத் தலைவர் அங்கு வரும் போது மத்திய அரசுக்கு எதிராக கண்டனம் தெரிவிக்கும் வகையில் அவருக்கு எதிராக கருப்புக் கொடி காட்ட திட்டமிட்டிருப்பதாகவும் அந்தமானில் உள்ள மத்திய அரசின் உளவுத்துறை அதிகாரிகள்,அனுப்பியுள்ள எச்சரிக்கை அறிக்கையைப் பார்த்துதான், குடியரசுத் தலைவரின் இந்திரா பாயிண்ட் நிகழ்வு ரத்து செய்யப்பட்டுவிட்டது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
அதிருப்தி 2
வழக்கமாக அந்தமானுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் அல்லது வெளிநாட்டு தலைவர்கள் வரும்போது, வி.வி.ஐ.பி. என்ற அந்தஸ்தின் அடிப்படையில், அந்த தீவின் தலைநகரான போர்ட் பிளேயரில் உள்ள விமான நிலையத்தில் பாதுகாப்பு கருதி பயணிகள் அனுமதிப்பதில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பது வழக்கமான ஒன்று. கடந்த காலங்களில், போர்ட் பிளேயர் விமான நிலையத்தில் உள்ள முக்கியமான வாசல் வழியாகதான் (கேட்) வி.வி.ஐ.பி.க்களை அழைத்துச் செல்லப்பட்டனர். தற்போது குடியரசுத் தலைவரின் வருகையையொட்டி, இந்த வழக்கத்திலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அந்தமானில் முதல் இடத்தில் உள்ள தொழில் மீன் ஏற்றுமதிதான். உயர்தரமான மீன்களை பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு அதிகமாக அனுப்பி வைக்கப்பட்டு வருவதால், அங்குள்ள மீனவர்கள் மேம்பாட்டுச சங்கம், சரக்கு விமானங்கள் போர்ட் பிளேயர் வந்து செல்வதற்கு என்று தனியாக ஒரு வளாகத்தை உருவாக்கி வைத்துள்ளனர். சர்வதேச விமான நிலையத்தையொட்டியேதான் இந்த பகுதியும் உள்ளது. இந்த பகுதியை ஏர் கார்கோ காம்ப்ளக்ஸ் (ஏசிசி) என்று அங்குள்ளவர்கள் அழைக்கிறார்கள். மீன் ஏற்றுமதிக்கென பிரத்யேகமாக இருக்கும் இந்த பகுதியில்தான், பதப்படுத்தப்பட்ட மீன் பெட்டிகள், லட்சக்கணக்கில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். அதுபோல, அந்தமான் நிகோபர் தீவுக்கு வரும் உணவுப் பொருள்கள், குறிப்பாக சென்னையில் இருந்து காய்கறிகள், அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் என எந்தவொரு உணவு தானியங்களும் சென்னையில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் சரக்கு விமானம் மூலம் போர்ட் பிளேயருக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
இப்படி அன்றாட தேவைக்கு பயன்பட்டு வரும் ஏர் கார்கோ காம்ப்ளக்ஸை, இன்று 1 மணி முதல், மார்ச் 1 ஆம் தேதி வரை முழுமையாக ராணுவத்தினர் தங்கள் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்துவிட்டனர். இதனால், இன்று காலை முதலே, அந்தமானின் போர்ட் பிளேயரில் இருந்து, சரக்கு விமானங்கள் சென்னை உள்பட இந்தியாவின் எந்த பகுதிக்கும் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. அதுபோல, வேறு எந்த நாட்டில் இருந்தும் சரக்கு விமானம், அந்தமானுக்கு வருவதற்கு இன்று முதல் வரும் நான்கு நான்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இடையில் 28 ஆம் தேதி ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தாலும், பாதுகாப்பு கருதி அந்த ஒருநாளும், மீன் ஏற்றுமதி தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களோ, அல்லது மற்ற உணவுப்பொருள் இறக்குமதி தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களோ எந்த மாதிரியான வணிக ரீதியிலான நடவடிக்கைகளிலும் ஈடுபடக் கூடாது என வாய் மொழி உத்தரவை ராணுவம் பிறப்பித்திருக்கிறது.
இந்த நான்கு நாட்களும், அந்தமானுக்கு தேவையான உணவுப் பொருள்கள் கொண்டு வருவது தடைபடும். வணிகர்கள் தங்கள் இருப்பு வைத்திருக்கும் உணவுப் பொருள்களைதான் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதேபோல, அந்தமானுக்கு நேற்று காய்கறிகள் இறக்குமதி செய்யப்பட்டிருந்தால்கூட, மார்ச் 1 ஆம் தேதிக்குப் பிறகுதான் காய்கறிகளை மீண்டும் இறக்குமதி செய்யப்படும். இந்த கட்டுப்பாட்டின் காரணமாக வர்த்தகர்கள் மட்டுமின்றி போர்ட் பிளேயர் மற்றும் அந்தமான் நிகோபர் தீவுகளில் உள்ள பல லட்சம் மக்களுக்கும் உணவுப்பொருள் கிடைப்பதில் கூட சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இந்த கட்டுப்பாட்டின் காரணமாக விலையும் அதிகரித்துவிட்டது என்று அங்குள்ள சமூக ஆர்வலர்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.
போர்ட் பிளேயர் விமான நிலையத்தின் முக்கிய நுழைவு வாயிலில் இருந்துதான் இந்திய பிரதமரோ, வெளிநாட்டு தலைவர்களோ , அழைத்துச் செல்லப்படுவார்கள். ஆனால், கடந்த முறை பிரதமர் மோடி வந்தபோது, அவரின் சிறப்பு விமானம் தரையிறங்கிய இடத்தில் இருந்து, நுழைவு வாயில் பகுதி குறைந்த தூரத்தில் இருக்கிறது. இந்த இடைபட்ட தூரத்தில் அவரை வரவேற்க வரும் வி.ஐ.பி.க்கள் காத்திருப்பதால், பிரதமரின் பாதுகாப்புக்கு நெருக்கடி ஏற்படுகிறது என்றுகூறி சரக்குப் பொருள்களை கையாள்வதற்காக அமைக்கப்பட்டுள்ள வளாகத்தின் வழியாக கடந்த 2018 ஆம் ஆண்டில் அந்தமான் வந்த பிரதமரை அழைத்துச் சென்றனர். அதே நடைமுறையை குடியரசுத் தலைவர் வருகையின் போதும், கார்க்கோ காம்ப்ளக்ஸ் பகுதியை ராணுவம் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டது.
அதிருப்தி 3
குடியரசுத் தலைவரின் வருகை, அரசு முறைப் பயணம் என்று சொல்லப்பட்டாலும், அவரது உறவினர்கள் 83 பேருடன் வருவதால், இது குடியரசுத் தலைவரின் தனிப்பட்ட சுற்றுப்பயணம் என்றுதான் அந்தமான் நிர்வாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அவரது உறவினர்கள் போர்ட் பிளேயரில் இருந்து அவர்கள் தங்கப்போகும் தீவுக்குச் செல்ல தனியாருக்கு சொந்தமான சொகுசு கப்பல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டள்ளது. அதில் 300 பேர் பயணிக்கக் கூடிய அளவுக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த கப்பலில் கடலில் செல்லும் போது, மற்ற சுற்றுலா பயணிகளின் படகுகள், மீன்பிடி படகுகள் அந்த வழித்தடத்தில் செல்ல வாய்மொழி உத்தரவாக அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.
அதிருப்தி 4
அந்தமானுக்கு வரும் வெளிநாட்டு பயணிகள், கொரோனோ தொற்று இல்லை என்பதை உறுதி செய்வதற்காக, 48 மணிநேரத்திற்கு முன்பாக (Reverse Transcription Polymerase Chain Reaction) எனும் ஆர்டி பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்ட மருத்துவ பரிசோதனை சான்றிதழை கொண்டு வர வேண்டும் என்பது கட்டாயம். அப்படியிருக்கும்போது, குடியரசுத்தலைவருடன் வரும் 83 உறவினர்கள் அனைவரும் கொரோனோ பாதிப்பு இல்லை என்ற இதுபோன்ற மருத்துவப் பரிசோதனை சான்றிதழை கொண்டு வருகிறார்களா என்பதை விமான நிலைய அதிகாரிகள் அல்லது சுகாதாரத்துறை அதிகாரிகள் பரிசோதனை செய்தார்களா ?என்று கேள்வியும் எழுந்துள்ளது.
ஏனெனில், குடியரசுத் தலைவரின் உறவினர்களை வரவேற்று வழியனுப்பி வைக்கும் வரை பணிவிடைகளை செய்ய, அந்தமான் நிர்வாகத்தின் கீழ் வரும் 40 அரசு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் கொரோனோ பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது. அந்தமான் அதிகாரிகளுக்கு கோவிட் 19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கும் போது, இந்த 40 பேர்தான் குடியரசுத் தலைவரின் உறவினர்களுக்கு தேவையான உதவிகளை செய்யப் போகிறார்கள். குடியரசுத் தலைவரின் உறவினர்களில் யாருக்காவது ஒருவருக்கு கொரோனோ தொற்று இருந்து, அவர் மூலம் அந்தமான் அதிகாரிகளுக்கு இந்த நான்கு நாட்களில், பரவினால், அதன் மூலம் அந்தமான் மக்களுக்குதானே பாதிப்பு ஏற்படும். கொரோனோ தொற்று கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ள நிலையில், குடியரசுத் தலைவரோடு வரும் குடும்ப உறுப்பினர்கள் மூலம் அந்தமானில் மீண்டும் கொரோனோ தொற்று பரவும் ஆபத்துள்ளதாக அச்சத்துடன் கூறுகிறார்கள் சுகாதாரத்துறை அதிகாரிகள்…
அந்தமான் மக்கள் கோபம்.
அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளை உள்ளடக்கிய எண்ணற்ற தீவுகளில் இணைய வசதி என்பது மிகவும் மோசமான நிலையில்தான் உள்ளது. இண்டர்நெட் என்ற இணைய சேவை, 2ஜி, 3ஜி என்ற அலைவரிசையில்தான் அங்கு பயன்பாட்டில் உள்ளது. இதனால், சென்னை உள்பட உலக நாடுகளில் சர்வசாதாரணமாக பயன்படுத்தப்பட்டு வரும் ஃபேஸ் புக், வாட்ஸ் அப் போன்ற சமூக ஊடகங்களை எளிதாக கையாள்வதில் சிரமப்பட்டு வருகின்றனர். இவர்களின் கஷ்டத்தை உணர்ந்து கொண்ட, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2019 ஆம் ஆண்டு, அந்தமான் மற்றும் அதனை சுற்றியுள்ள 7 தீவுகளில் இணைய சேவையை மேம்படுத்த, சென்னையில் இருந்து 2199 கிலோ மீட்டர் நீளத்துக்கு ஆப்டிக்கல் ஃபைபர் கேபிள் பதிக்கும் திட்டத்தை தொடங்கி வைத்தது. போர்ட் ப்ளேயர் வரை கேபிள் பதிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து, பிற பகுதிகளுக்கு கேபிள்களை கொண்டு செல்லும் பணி, முகேஷ் அம்பானி நிறுவனமாக ரிலையன்ஸுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் கடந்த ஓராண்டாக, நிலப்பகுதியில் கேபில் பதிக்கும் பணியில் ஆமை வேகத்தில்தான் செயல்பட்டு வருகின்றனர். திட்டமிட்ட காலத்திற்குள் இந்த திட்டம் முடிக்கப்பட்டு, குடியரசுத்தலைவர் வருகையின் போதுதான், அவர் இந்த திட்டத்தை அந்தமானுக்கு அர்ப்பணிப்பார் என்று சொல்லியிருந்தனர். ஆனால், குடியரசுத் தலைவர் வந்துவிட்டார். ஆனால், மேம்படுத்தப்பட்ட இணைய வழி சேவைதான் கிடைக்கவில்லை என்று கோபமாக பேசுகிறார்கள், வணிகர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்.
மேலும், புதிய திட்டங்கள் எதையும் துவக்கி வைப்பதாக குடியரசுத் தலைவரின் நிகழ்ச்சி நிரலில் இல்லை. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட ஒரு சில வளர்ச்சித் திட்டங்களின் பணிகளும் இன்னும் முழுமை பெறாததால், அரசு தொடர்பான எந்தவொரு நிகழ்ச்சியிலும் குடியரசுத் தலைவர் கலந்துகொள்வதாக அறிவிப்பு வெளியிடப்படவில்லை.
யாருடைய நிதியில் செலவு?
அந்தமான் மற்றும் நிகோபர் தீவு, முழுமையாக மத்திய அரசின் உள்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்குள்ள தீவுகளில் உள்ள அதிகாரிகள் அனைவருமே மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் வருபவர்கள். அந்தமான் வளர்ச்சிக்கு என்று ஆண்டுதோறும் நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. அந்த நிதியில் இருந்துதான் பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர் உள்ளிட்ட வி.வி.ஐ.பி.க்களின் வருகையின் போது செலவழிக்கப்பட்டு வருகிறது. தனியாக எந்தவொரு சிறப்பு நிதியையும் மத்திய அரசு அனுப்புவதில்லை. மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம், குடியரசுத் தலைவராக இருந்த போது அந்தமான் வந்தார். தனியொருவராக இரண்டு பெட்டிகளுடன் வந்தார். இரண்டு நாள் தங்கியிருந்து தீவுகளைச் சுற்றிப் பார்த்துவிட்டு, பொதுமக்களுக்கோ, அரசு நிர்வாகத்திற்கோ எந்த சிரமத்தையும் ஏற்படுத்தாமல், வந்த சுவடே தெரியாமல் டெல்லி திரும்பிவிட்டார். ஆனால், இன்று வரும் குடியரசுத் தலைவரின் சுற்றுப் பயணத்திற்காக, பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிக்கவும், மற்ற தேவைகளை நிறைவேற்றவும் டெல்லியில் இருந்து 200க்கும் மேற்பட்ட மத்திய அரசு அதிகாரிகள் ஒரு வாரத்திற்கு முன்பே அந்தமான் வந்துவிட்டார்கள்.
குடியரசுத் தலைவரின் பயண வழித்தடம் மற்றும் அவர் சுற்றிப் பார்க்கும் மையங்கள், தங்கியிருக்கும் இடங்கள் என அனைத்துப்பகுதிகளிலும் கடந்த ஒருவாரமாக மத்திய அரசின் அதிகாரிகள் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டது. இதைத்தவிர, முப்படையைத் சேர்ந்த நூற்றுக்கணக்கான அதிகாரிகளும் பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணித்து வருகின்றனர்.
மேலும், குடியரசுத் தலைவர் உறவினர்களின் உணவு தேவைகளை சமாளிக்க, தனிப்பட்ட சமையல் கலைஞர்களும் டெல்லியில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் இருக்கிறது. மொத்தத்தில் குடியரசுத் தலைவரின் வருகையை, அது அரசு முறைப் பயணமாக இருந்தாலும் சரி, தனிப்பட்ட முறையாக இருந்தாலும், அதற்கான செலவுள் எந்த அடிப்படையில் செய்யப்பட போகிறது. மத்திய அரசு நிதியில் இருந்து செய்யப்படப்போகிறதா?, அல்லது அந்தமான் நிதியில் இருந்து செலவு செய்யப்படப்போகிறதா? என்று எந்தவொரு ஒரு விவரத்தையும் வெளிப்படையாக அறிவிக்க அந்தமான் அரசு நிர்வாகம் மறுத்து வருகிறது என்று வேதனையோடுகூறுகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
வறுமையில் வாடும் மக்கள்
அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகள் முழுக்க, முழுக்க சுற்றுலாப் பயணிகளை நம்பிதான் இருக்கிறது. வேறு குறிப்பிட்டு சொல்லும்படியாக எந்த ஒரு வருவாயும் கிடையாது. இந்த நேரத்தில், கொரோனோ காலத்தில் கடந்த ஒரு வருடமாக கடுமையான பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான மக்களுக்கு, பொருளாதார ரீதியாக பயனளிக்கும் திட்டங்களையும் மத்திய அரசு நிறைவேற்றவில்லை, இதனால், அந்தமான் மக்கள் கடுமையான வறுமையில் போராடிக் கொண்டிருக்கும் போது, பல நூறு கோடி ரூபாய் செலவிடுவதற்கு வாய்ப்புள்ள ஒரு சுற்றுப் பயணத்தை, இந்திய திருநாட்டின் முதல் குடிமகனாக உள்ள குடியரசுத் தலைவரே மேற்கொள்ளலாமா ?என்று தேச பக்தியோடு கேள்வி எழுப்புகிறார்கள், அங்குள்ள பா.ஜ.க. நிர்வாகிகள்.
அப்துல் கலாம் பாதையை பின்பற்றுவாரா?
குடியரசுத் தலைவரின் சுற்றுப் பயணத்திற்காக நூறு கோடி ரூபாய்க்கு மேல் செலவிடப்படவுள்ளது என்று பொதுமக்களே பேசி வருகிறார்கள். குடியரசுத் தலைவர் மற்றும் திருமதி குடியரசுத் தலைவர் ஆகிய இருவரும் சைவம். மற்ற உறவினர்கள் அசைவ பிரியர்கள் என்பதால், இன்று பகல் மற்றும் இரவு உணவு, போர்ட் பிளேயரி உள்ள ராஜ் நிவாஸில் தயாராகி வருகிறது.
குடியரசுத் தலைவரின் குடும்ப உறவினர்கள், இன்று பகலில் அந்தமானில் புகழ் பெற்ற செல்லுலார் சிறைச்சாலையை பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் மற்றும் திருமதி குடியரசுத் தலைவர் ஆகிய இருவரும் இன்று இரவு பார்வையிடுகிறார்கள். தொடர்ந்து, நாளை சுவராஜ் திவிப் தீவுக்கு செல்கிறார்கள். அங்குள்ள புகழ்பெற்ற நட்சத்திர அந்தஸ்து பெற்ற தாஜ் டால்பின் ரிசார்ட்டில தங்குகிறாகள். 28 ஆம் தேதி ராதாநகர் கடற்கரைக்குச் செல்கிறார்கள். மார்ச் முதல் தேதி டெல்லி திரும்புகிறார்கள். இப்படி நான்கு நாட்களும், குடியரசுத் தலைவர் தனது குடும்ப உறுப்பினர்களுடன்தான் செலவிடவுள்ளார். ஏற்கெனவே பிரதமரின் வருகையின் போது பல நூறு கோடி ரூபாய் செலவிடப்பட்டதாக அரசு புள்ளி விவரங்கள் சொல்கின்றன. இந்த ஒரு விவகாரத்தில் மட்டுமாவது மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமின் வழியை தற்போதைய குடியரசுத் தலைவர் பின்பற்ற வேண்டும் என்று ஆதங்கத்தோடு பேசுகிறார்கள் அந்தமான் வளர்ச்சியில் அக்கறையில் உள்ள வர்த்தகர்கள்.
ராமேஸ்வரத்தில் உள்ள தனது உறவுகள், குடியரசுத் தலைவர் மாளிகை, டெல்லி உள்ளிட்ட புகழ் பெற்ற சுற்றுலா இடங்களை பார்க்கவேண்டும் என்று ஆசைப்பட்ட போது, ரயில் மற்றும் பேருந்துகள் மூலம் அழைத்து வரச் செய்து, அரசு நிதியை பயன்படுத்தாமல் தனது சொந்த நிதியில் இருந்து செலவழித்தார் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர்.
அவரின் பாதையைப் பின்பற்றி, தற்போதைய குடியரசுத் தலைவரும்,அரசுப் பணத்தை சொந்த பயன்பாட்டிற்கு செலவழிப்பதற்கு தடை விதித்தால், அந்தமான் மக்கள் மட்டுமல்ல, இந்திய நாடே குடியரசுத் தலைவரை கொண்டாடும்…
Special correspondent from chennai for nallarasu tamil seithilgal
Pompous Planning of the President’s trip to Andaman and Nicobar Islands
President Ram Nath Kovind is visiting Andaman and Nicobar Islands from today, February 26th to March 1st. When the details of his visit have not been officially announced, the preparatory measures in the Andaman and Nicobar Islands have created a stir among the public. Sources say that originally the President’s stay was planned in the Campbell area, also known as Indira Point. Work was underway to set up a landing platform for the helicopter to land there. More than 250 coconut trees and more than a thousand rare species of trees have been cut down on the site, which is owned by the military to set up the helipad. However, no formal permission has been obtained from any official in the Andaman city administration. In this connection, it is said that everything has been done by verbal order, without even official correspondence between the forest department or the Andaman city administration.
The President’s visit to Indira Point was later canceled, as the central government is intimidated by the ongoing farmers’ struggle in Delhi. Moreover, most ex-servicemen from the state of Punjab have settled in the area and the federal intelligence officials were warned by the report that they were planning to show black flags against the President.
The arrangements made in the Port Blaire airport to invite the President have been planned via Air Cargo Complex (ACC). This area is exclusively for fish exports and is home to millions of stacks of processed fish boxes. The military has issued a verbal order to stop any food import/export activities during the four days of the President’s visit. Traders are forced to use only the stocked-up food. Social activists are concerned that prices have risen because of the restrictions.
Even though the President’s visit has been announced as official, there is no mention in his program list about the launch of any new schemes. Since the work of some of the development schemes already announced has not yet been completed, the President has not been announced to attend any government-related function.
Sources also mention that 83 of the President’s relatives are traveling with him. A private luxury boat with a capacity of 300 people has been arranged. Other tourist boats and fishing boats are denied permission to go on the route through verbal orders.
Forty government officials under the Andaman administration have been appointed to take care of the guests who travel with the President. This has raised concern among the public about the possibility of an increase in the Covid-19 numbers in the area. People also have raised concern over the transparency of the precautious measures taken in the prevention of Covid-19 spread, as the people in the area are already dissatisfied about the lack of economical schemes when millions of people affected by the due to the pandemic. Also, it has been mentioned by the local BJP party members that over Rs 100 crore will be spent on the President’s tour, creating more disappointments among the public!