Sat. Nov 23rd, 2024

பெங்களூரில் இருந்து சென்னைக்கு திரும்பிய வி.கே.சசிகலா, பிப்ரவரி9ம் தேதியில் இருந்து தியாகராய நகரில் தங்கியுள்ளார். கடந்த 14 நாள்களுக்கு மேலாக அந்த வீட்டிலேயே தங்கியிருக்கும் அவர், இடைப்பட்ட நாள்களில் வெளியே எங்கும் செல்லவில்லை. பிப்.24 மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, வெளியுலகத்திற்கு காட்சி தந்தார். அப்போது ஒன்றுபட்டஅ.தி.மு.க.வின் வெற்றிக்கு அனைவரும் பாடுபட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார் சசிகலா. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், தன்னை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் என்றே அவர் தன்னை குறிப்பிட்டுள்ளார். இதுதொடாபான வழக்கு, நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், இந்த செயல் எதற்கும் துணிந்துவிட்டார் சசிகலா என்பதை காட்டுவதாகதான் இருக்கிறது.

நேற்றைய தினம், அவரை அதி.மு.க. கூட்டணியில் உள்ள நடிகர் சரத்குமார் சந்தித்து பேசியுள்ளார். அவரது மனைவி நடிகை ராதிகாவும் உடன் சென்றிருந்தார். சசிகலாவுடனான சந்திப்பு, அரசியல் ரீதியானது அல்ல, தனிப்பட்ட நலம் விசாரிப்பு மட்டுமே என்று உஷராக நிருபர்களிடம் கூறிவிட்டு சென்றார் நடிகர் சரத்குமார். இதேபோல, இயக்குனர்கள் பாரதிராஜா, அமீர் ஆகியோரும் சசிகலாவை சந்தித்து பேசியுள்ளனர். சசிகலாவுடனான சந்திப்பு குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இயக்குனர் பாரதிராஜா, அரசியலில் உள்ள வெற்றிடத்தை நிரப்பவே சசிகலா வந்துள்ளார் என்று குறிப்பிட்டார். அரசியல் சர்ச்சைகளுக்குள் அதிகமாக சிக்கிக் கொள்வதை விரும்பாத பாரதிராஜா, சசிகலாவுடனான சந்திப்பு குறித்து உற்சாகமாக, மிகுந்த எழுச்சியாகவே வெளிப்படுத்தினார்.

அடுத்து, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும், சசிகலாவை சந்தித்து ஒரு மணிநேரத்திற்கு மேலாக பேசியிருக்கிறார். வரிசையாக திரையுலகத்தைச் சேர்ந்த மூன்று பேரும் சசிகலாவை சந்தித்து இருந்தாலும், சீமானின் சந்திப்புதான், சமூக ஊடகங்களில் அனல் கக்கும் விவாதத்தை கிளப்பி வருகிறது. தற்போதை அ.தி.மு.க. அரசு, கடந்த நான்கு ஆண்டுகளில் திரையுலகம் வைத்த கோரிக்கைகளை எல்லாம் உடனுக்குடன் நிறைவேற்றி தந்த போதும், பாரதிராஜாவின் பேச்சு, இப்போதைய அ.தி.மு.க. தலைமையை விட, சசிகலாவின் அரசியல் பிரவேசம்தான், திரையுலகத்திற்கும், தமிழகத்திற்கும் ஏன் அ.தி.மு.க.வுக்கும் நன்மையளிக்கும் விதமாக அமையும் என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறார்கள் என்கிறார்கள் அவரது மனதை அறிந்த திரையுலக வி.ஐ.பி.க்கள்.

“அரசியல்வாதிகள் நன்றியை நினைத்துப் பார்க்க மாட்டார்கள் என்று சொல்வார்கள். ஆனால், இந்த மூவரும் அடுத்தடுத்து வந்து சென்றது, திரையுலகத்தைச் சேர்ந்தவர்களும் நன்றி கெட்டவர்கள்தான் என்பதை வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறது” என்று ஆவேசப்படுகிறார் மேற்கு மண்டல அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஒருவர்.

இந்த மூன்று பேரின் சந்திப்பு குறித்து மாறுபட்ட தகவலும் பரவி வருகிறது. மூன்று பேருக்குமே பண நெருக்கடி இருக்கிறது. இவர்களில் சாதிப் பாசம் கொண்டவர்களும் உண்டு. ஆகவே, கடந்த 15 நாள்களில் அ.தி.மு.க.வில் இருந்து முக்கிய நிர்வாகி ஒருவர் கூட சசிகலாவை வந்து சந்திக்காத இந்த நேரத்தில், சசிகலாவுக்கு எந்த செல்வாக்கும் இல்லை என்பது வெளிப்படையாக தெரிந்துவிடக் கூடாது என்று கருதியே, சசிகலா தரபபிலேயே சில காய் நகர்த்தல் நடந்ததாகவும், அதனால் பண தேவையை பூர்த்தி செய்கிறோம் என்று ஆசை வார்த்தை கூறி, சசிகலா தரப்பே வலிந்து சென்று அழைத்து, மூவரின் சந்திப்புக்கு ஏற்பாடு செய்துள்ளதாகவும் அ.தி.மு.க. தரப்பில் இருந்து தகவல் கசிய விடப்படுகிறது.

எடப்பாடி யுக்தியையே சசிகலாவும் கையில் எடுத்துள்ளதாகவும், அவரின் விளையாட்டு எந்தளவுக்கு அ.தி.மு.க.வில் சலசலப்பை ஏற்படுத்தப் போகிறது என்பதையும் அடுததடுத்த நாட்களில் பார்த்து விடலாம் என்று நமட்டுச் சிரிப்பு சிரிக்கிறார்கள், அ.தி.மு.க. முக்கிய புள்ளிகள்.

தி.மு.க.வுக்கு எதிராக தீவிரமான பிரசாரத்தை முன்னெடுத்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தனது தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியை மீணடும் தக்கவைத்துக் கொள்ள, மக்களை கவரும் எண்ணற்ற இலவச அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இந்த அறிவிப்புகள் எல்லாம் கிராமப் புற மக்களை ஈர்த்து வரும் நிலையில், தனது ஆட்சிக்கு எதிராக அதிருப்தி மனநிலையில் உள்ள நகரப் பகுதி வாக்காளர்களை, விலை கொடுத்து வாங்கி விட முடியும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில்தான், தனியொருவனாக நின்று, மு.க.ஸ்டாலினை எதிர்த்து விட முடியும் என ஓடிக் கொண்டிருக்கிறார்.

அதேபோல, கூட்டணி விஷயத்தில் முரண்டு பிடிக்கும் கூட்டணிக் கட்சித் தலைவர்களையும் பணத்தின் மூலம் சரிகட்டிவிட முடியும் என்று கணக்கு போட்டுதான், மிகுந்த தைரியமாக தேர்தல் களத்தை எடப்பாடியார் எதிர்நோக்கியிருக்கிறார் என்று கூறும் அவரது விசுவாசிகள், ஓ.பி.எஸ். மட்டும் தன்னுடன் தேர்தல் வரை இருந்தால் போதும், அ.தி.மு.க. ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று உறுதியாக நம்புவதால், சசிகலாவைப் பற்றியோ, டிடிவி தினகரனின் காய் நகர்த்தல்கள் பற்றியே அவர் துளியளவும் பயம் கொள்ளவில்லை என்கிறார்கள் அவர்கள்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருந்த வரை முழு மூச்சாக எதிர்த்தவர் டிராபிக் ராமசாமி. ஜெயலலிதாவின் பேனர் எங்கு வைக்கப்பட்டாலும் அங்கு ஓடிச் சென்று, அதை கிழித்து சட்டம் ஒழுங்குப் பிரச்னையை ஏற்படுத்தி, ஜெயலலிதாவுக்கு தலைவலி கொடுத்தவர் டிராபிக் ராமசாமி. அப்படிபட்ட ஒருவரே தன்னை வந்து சந்திக்க சசிகலா அனுமதி கொடுக்கிறார், விருமபுகிறார் என்றால், அவர் ஆளும்கட்சிக்கு மட்டுமல்ல, எதிர்க்கட்சியினருக்கும் எனன மாதிரியான செய்தியை சொல்ல முனைப்பு காட்டுகிறார் என்பதை புரிந்துகொள்ளவே முடியவில்லை என்று புலம்புகிறார் அ.தி.மு.க. தலைமைக் கழக நிர்வாகி ஒருவர்.

சசிகலா மற்றும் எடப்பாடி தரப்பில் முன்னெடுக்கும் விஷயங்களைப் பார்த்து தி.மு.க. வின் இரண்டாம் கட்ட தலைவர்களும் ஆடிப்போய்வுள்ளனர்.

“எடப்பாடி பழனிசாமியாக இருந்தாலும் சரி, சசிகலாவாக இருந்தாலும் சரி, பணத்தின் மூலமே எல்லா வற்றையும் சாதித்துவிட முடியும் என்று நினைக்கிறார்கள். இந்த இருவரில் யாருடைய கையை பிரதமர் மோடி உயர்த்திப் பிடிக்கிறாரோ, அப்போதுதான் அ.தி.மு.க. வின் வெற்றி உறுதியாகும். பிரதமர் மோடியின் அறிவுரைகளை மீறி எடப்பாடி பழனிசாமியால் ஒரு அடி கூட எடுத்து வைத்துவிட முடியாது. இன்றைக்கு அ.தி.மு.க.வுக்குள் நிலவும் உட்கட்சி குழப்பத்தால், தி.மு.க.எளிதாக வெற்றிப் பெற்றுவிடும் என்று மு.க.ஸ்டாலின் கணக்குப் போட்டால், அதற்கும் பங்கம் வந்துவிடும். பத்தாண்டு கால அதிமுக. ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களை, புள்ளி விவரங்களோடு மக்களிடம் எடுத்துச் சென்றால்தான் தி.மு.க.வின் வெற்றி உறுதியாகும்.

கடந்த பல வருடங்களாகவே ஆளும்கட்சியான அ.தி.மு.க.வை விமாச்சிப்பதைவிட, தி.மு.க.வை தான் நடிகர் சீமான், அதிகமாக விமர்ச்சித்து வருகிறார். இப்போது சசிகலாவுடன் அவர் நெருங்கி செல்வதால், இருவரின் மனநிலையுமே தி.மு.க.வுக்கு எதிராகதான் இருக்கும். எனவே, திமுக.வுக்கு எதிராக அணி திரளும் பெருங்கூட்டத்தை சமாளித்து, ஆட்சி கட்டிலை அடைய, மு.க.ஸ்டாலின் பொதுமக்களிடம் இன்னும் நெருக்கமாக செல்ல வேண்டும். அப்போதுதான், அதிமுக ஆதரவு மனநிலையில் உள்ள வாக்காளர்களை தி.மு.க. பக்கம் இழுக்க முடியும் என்று எச்சரிக்கை மணி அடிக்கிறார், தி.மு.க. இரண்டாம் கட்ட தலைவர்.

சந்திப்பு ஏற்பாடுகளுக்காக, கோடிகள் கை மாறுகிறதா என அ.ம.மு.க. வட்டாரத்தில் உள்ள முக்கிய புள்ளியிடம் பேசினோம்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுடன் வாழ்ந்த காலத்திலேயே சசிகலாவின் எந்தவொரு செயலையும் முன்கூட்டியே யூகித்து விட முடியாது. ஜெயலலிதாவை விட, சசிகலாவுக்குதான் அதிகமாக பயந்தார்கள் இன்றைக்கும் அமைச்சர்களாக இருக்கும் பெரும்பாலானவர்கள். அதனால், ஒவ்வொரு அமைச்சரின் பலம், பலவீனம் என்ன என்பது சசிகலாவுக்கு நன்றாக தெரியும். எங்கே தட்டினால், எங்கே அதிரும் என்பது சசிகலாவுக்கு கை வந்த கலை. அதனால், தான் ஓய்வில் இல்லை. அரசியல் விளையாட்டை ஆடிக் கொண்டுதான் இருக்கிறேன் என்பததை காட்டுவதற்கான நிகழ்வுதான், பிப்.24 அன்று நடந்த சந்திப்புகள். இதற்கெல்லாம் கோடிக்கணக்கில் பணம் செலவழிக்க வேண்டிய அவசியம் சசிகலாவுக்கு கிடையாது. தேர்தல் தேதி அறிவிக்கட்டும். அ.தி.மு.க.வையும் ஆட்சியையும் கையில் வைத்திருக்கும் இரட்டையருக்கு சசிகலா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட் என்ன என்பது வெளியுலகத்திற்கும் தெரிந்துவிடும் என்று மர்ம புன்னகையோடு பேசினார் அவா.

தேர்தலில் சூடு பறக்க தொடங்கிவிட்டது போல…