Fri. Apr 18th, 2025

தமிழக காவல்துறையின் அதிகாரமிக்க தலைமை பீடத்தில் கோலோச்கிக் கொண்டிருந்த சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் ஐ.பி.எஸ்.ஸுக்கு எதிராக பெண் ஐ.பி.எஸ். அதிகாரி துணிச்சலாக கொடுத்த பாலியல் தொந்தரவு புகார் இரட்டடிப்பு செய்யப்பட்டாலும், அதனை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து நடவடிக்கை எடுக்க வைக்கிற சக்தி, அதிகார வர்க்கத்தைவிட, அச்சு ஊடகங்களுக்கும், சமூக ஊடகங்களுக்கும் இருக்கிறது என்பது, நேற்று ஒரே நாளில் எடுக்கப்பட்ட அரசின் நடவடிக்கைகள் மூலம் வெளியுலகத்திற்கு தெரிய வந்தது.

ஆனால், ஊடகங்களில் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவு புகார்கள் மீது உரிய நடவடிக்கைகள் உடனுக்குடன் எடுக்காமல் காலம் தாழ்த்துவதும் அல்லது சத்தமில்லாமல் ஊடகங்களின் உரிமையாளர்களால் அப்படியே கைவிட்டு விடுவதாலும், ஊடகத்துறையில் தொடர்ந்து பணியாற்றவே பெண் பத்திரிகையாளர்கள் அச்சப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் இன்றைய கள யதார்த்தம்.

தற்போது மாலைமுரசு டிவியில் தலைமை செய்தி ஆசிரியராக பணியாற்றிக் கொண்டிருக்கும் கணேஷ் மரியதாஸுக்கு எதிராக பாலியல் தொந்தரவு, ஊழியர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல் மற்றும் பண மோசடி என பல புகார்கள் அடுக்கடுக்காக கூறப்பட்டு வருகிறது. ஆனால், ஒரு புகாரின் மீது கூட சட்ட ரீதியிலான நடவடிக்கைகள் எடுத்து அவரை தண்டனைக்குள்ளாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள எந்த ஊடக உரிமையாளரும் முன் வராததை கண்டு பாதிப்புக்குள்ளான தரப்பினர் கடும் மன உளைச்சலில் உள்ளனர். கணேஷ் மரியதாஸின் உண்மையான முகத்தை பற்றி, அவரோடு இணைந்து பணியாற்றிய உதவி ஆசிரியர் வி.ஜி.செல்வகுமார், தனது முகநூலில் கிழித்து தொங்கப் போட்டுள்ளார். அதை முன்னுரை மாதிரி வாசித்துக் கொள்ளுங்கள்.

https://www.facebook.com/vg.selvakumar.1/posts/3041393125989532

எந்தவொரு செய்தியையும் காட்சி ஊடகத்திற்கோ அல்லது அச்சு ஊடகத்திற்கோ ஏற்ற மாதிரி எழுத தெரியாத அரைவேக்காடுதான் இந்த கணேஷ் மரியாதாஸ். ஆனால், கடந்த நான்காண்டுகளாக, ஒரு நிறுவனத்தை விட்டு இன்னொரு நிறுவனத்திற்கு தாவும் போது, அந்த ஊடகத்தின் தலைமைப் பதவியை பிடிக்கிற வித்தையை மட்டும் நன்றாக கற்று வைத்திருக்கிறார் கணேஷ் மரியதாஸ். கடந்த நான்காண்டுகளுக்கு முன்பு இவர் புதிய தலைமுறையில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, அங்கு jதலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்த ஷ்யாமோடு நல்ல நட்பு ஏற்படுகிறது. அவரிடம் இருந்து தொழில் யுக்தியைக் கற்றுக் கொண்டிருந்த நேரத்தில், ஜெயா டிவியில், 2016 ஆம் ஆண்டு செய்தி ஆசிரியர் பணியில் அமர்த்தப்படுகிறார்.

ஓரிரு மாதங்களில் தனக்கு எடுபிடியாக பிரபாகரன் என்பவரை அழைத்துக் கொள்கிறார். அன்றைய நாளில் இருந்து கணேஷ் மரியதாஸ் எந்த நிறுவனத்திற்கு மாறுகிறாரோ, அவரோடு ஒட்டிக் கொண்டு செல்வதுதான் பிரபாகரனின் பழக்கம். எல்லா சேவைகளையும் செய்வதில் கணேஷ் மரியதாஸையே மிஞ்சக் கூடிய ஆற்றல் பெற்றவர் இந்த பிரபாகரன்.

கொஞ்ச நாளில், ஜெயா டிவியின் தலைமை நிர்வாக அதிகாரியான விவேக் ஜெயராமனை கைக்குள் போட்டுக் கொண்டு, செய்தியாளர்களை மிரட்டி பணம் சம்பாதிக்க ஆரம்பிக்கிறார், கணேஷ் மரியதாஸ். அதேபோல, விவேக் ஜெயராமனையும் ஏமாற்றி பணம் பறிக்க தொடங்கிவிடுகிறார். அந்த காலகட்டத்தில் ஜெயா டிவி உள்பட சசிகலா குடும்பத்தினருக்கு சொந்தமான நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, விவேக் ஜெயராமனுக்கு எதிராக மற்ற மீடியாக்களின் பார்வை படுவதை தடம் மாற்றுகிறேன் என்று கூறி லட்சக்கணக்கில் விவேக்கிடம் இருந்து பணத்தை கறந்துவிடுகிறார். அதை வைத்து, அசோக் பில்லர் அருகில் உள்ள எம்.ஜி.ஆர். நகரில், சூப்பர் மார்க்கெட் ஒன்றை தொடங்குகிறார். அதை விவேக் ஜெயராமனை வைத்தே திறக்க வைக்கிறார் கணேஷ் மரியதாஸ். அதாவது, விவேக் ஜெயராமனை ஏமாற்றி கறந்த பணத்தில், சூப்பர் மார்க்கெட்டை நிறுவி அதை அவரையே வைத்து திறக்க வைக்கிறார் என்றால், தில்லுமுல்லுகளில் எவ்வளவு கைத்தேர்ந்தவர் கணேஷ் மரியதாஸ் என்பதை , நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.

ஒருகட்டத்தில் கணேஷின் தில்லுமுல்லுகள் தெரியவர, அவரை மரியாதையாக ஜெயா டி.வி.யில் இருந்து வெளியேற்றிவிடுகிறார் விவேக் ஜெயராமன். அங்கிருந்து காவேரி டிவிக்கு தாவுகிறார். ஏற்கெனவே அந்த கப்பல், மூழ்கும் நிலையில்தான் தள்ளாடிக் கொண்டிருந்தது. அங்கு ஏற்கெனவே, தனக்கு தில்லுமுல்லுகளை கற்றுத்தந்த புதிய தலைமுறை ஷ்யாமுடன் கை கோர்த்து, ஊடகத்துறைக்கு அப்பாற்றபட்ட வேலைகளை இருவரும் செய்கிறார்கள். இதனால், பயந்துபோன காவேரி டிவி முதலாளிகள், ஷ்யாமையும், கணேஷ் மரியதாஸையும் வெளியேற்றுகிறார்கள்.

யார் காலிலோ விழுந்து, ஆளும்கட்சி தொலைக்காட்சியான நியூஸ் ஜெ. டிவிக்கு தாவுகிறார் கணேஷ். அங்கு செய்திப்பிரிவின் தலைமையில் அவருக்கு நன்கு பழக்கமானவர்கள் பணியில் இருந்ததால் அவர்களோடு நெருக்கமாகிறார். ஆளும்கட்சி டிவி என்ற தைரியத்தில், தங்களின் சமூக விரோத செயல்களை அரங்கேற்றத் தொடங்குகிறார்கள். காசு சேர, சேர, நண்டுகள் ஆட்டம் போட தொடங்குகின்றன. நாள்தோறும் இரவு நேரத்தில் மதுவில் மிதக்கும் கணேஷ் மரியதாஸ், பிரபாகரன் உள்ளிட்ட கும்பல், ஒரு நாள் நள்ளிரவில் குடிபோதையின் உச்சத்தில் நியூஸ் ஜெ டிவியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிக் கொண்டிருந்த பெண் ஒருவரை கைபேசியில் தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசி, பாலியல் தொந்தரவு கொடுக்கின்றனர். இவர்களின் அட்டகாசம் நாள்தோறும் தொடர்ந்ததால், மனஉளைச்சலுக்குள்ளான அந்த பெண் செய்தி வாசிப்பாளர், தனக்கு ஏற்பட்ட அநீதிக்கு நியாயம் கேட்டு, நியூஸ் ஜெ. டிவியின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றிருந்த சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தின் சகோதரர் சி.வி. ராதாகிருஷ்ணனிடம் முறையிட்டு கண்ணீர் வடிக்கிறார்.

அந்த புகாரின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல், பெண் செய்தி வாசிப்பாளரை சமாதானப்படுத்திவிட்டு, கணேஷ் மரியதாஸ், பிரபாகரன் உள்ளிட்ட 4 பேரை பணியில் இருந்து நீக்கி, அலுவலகத்தை விட்டே துரத்துகிறார். அப்போதும் திருந்தாத கணேஷ் மரியதாஸ், மாலை முரசு டிவிக்கு தாவுகிறார். நியூஸ் ஜெ. டிவில் பாலியல் புகார் என்றால், இங்கு, பண மோசடி புகாரில் சிக்கியுள்ளார், கணேஷ் மரியதாஸ்.

செய்திப்பிரிவில் தனக்கு பிடிக்காத உதவி செய்தி ஆசிரியர்களை எல்லாம் விரட்டிவிட்டு தனது கைத்தடிகளை பணியில் அமர்த்துகிறார் கணேஷ் மரியதாஸ். அப்படி வந்தவர்களில் ஒருவர் இஸ்மாஸில். இவரின் பின்னணி, கணேஷ் மரியதாஸின் பின்னணியை விட கேவலமானது, மாலை முரசு டிவியில் பணிபுரிந்து கொண்டே, இருவரும் க்யு 7 நியூஸ் என்ற ஆன் லைன் டிவியை ரகசியமாக தொடங்குகிறார்கள். மாலை முரசு டிவிக்கு மாவட்டங்களில் இருந்து நிருபர்கள் எடுத்து அனுப்பும் வீடியோவை, திருடி, தங்களுடைய ஆன் லைன் டிவிக்கு அனுப்புவதுடன், தனது எடுபிடிகளாக உள்ள உதவி ஆசிரியர்களைக் கொண்டு, சிறப்புச் செய்தி மாதிரி ஒவ்வொரு செய்தியையும் தயாரிக்க சொல்லி, அதை அப்படியே க்யூ 7 டிவியில் ஒளிபரப்பியுள்ளார்கள்.

இதன் மூலம் மாலை முரசுக்கு வர வேண்டிய 10 லட்சம் ரூபாய் வருமானத்தை, இஸ்மாயிலும், கணேஷ் மரியதாஸும் திருடி பங்கு போட்டுள்ளனர். தனது வங்கிக் கணக்குக்கு பணம் வந்தால் மாட்டிக் கொள்வோம் என்ற உஷாரில், இஸ்மாயில் வங்கிக்கு கணக்குக்கு பணம் வருமாறு ஏற்பாடு செய்துவிடுவார் கணேஷ் மரியதாஸ். இந்த தில்லுமுல்லு காலதாமதமாக, மாலை முரசு டிவி உரிமையாளருக்கு தெரியவருகிறது. அவர் கொதித்து போஸ், இஸ்மாயில் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்க தயாராகிறார். அப்படி காவல்துறையில் புகார் கொடுத்தால் தானும் மாட்டிக் கொள்வோம் என்று பயந்து போன கணேஷ் மரியதாஸ், உரிமையாளரிடம் போலீஸிடம் புகார் கொடுத்தால் மாலை முரசு டிவிக்குதான் கெட்ட பெயர் ஏற்படும். இஸ்மாயிலை மிரட்டி பணத்தை வாங்கிவிடலாம் என்று நாடகம் போட்டு, முதற்கட்டமாக 3 லட்சம் ரூபாயை மாலை முரசு நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறாதாம்.

உடம்பு முழுவதும் கிரிமினல் புத்தியோடு உள்ள ஒருவரை, அவரின் அத்தனை சமூக விரோத செயல்களையும் அறிந்திருந்தும், அவரின் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்காமல், அவரை காப்பாற்றுவதிலேயே குறியாக இருக்கும், ஊடக முதலாளிகளின் நேர்மை மீதுதான் பெருத்த சந்தேகம் ஏற்படுகிறது.

திருட்டு, மாமூல் வசூலிப்பு, பெண் செய்தி வாசிப்பாளர்களுக்கு பாலியல் தொல்லை என சமூக விரோதியை விட குரூரமான கணேஷ் மரியதாஸ், என்றாவது ஒரு நாள சிறைக்குப் போவார். அன்றைக்கு ஒட்டுமொத்த ஊடகத்துறைக்கே களங்கம் ஏற்படுவது உறுதி என்கிறார்கள், அவரின் அநீதிக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் உண்மையான பத்திரிகையாளர்கள்.