திமுக மற்றும் அதிமுகவுக்கு மாற்றாக, 2018 ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கிய உலகநாயகன் கமல்ஹாசன், 6 ஆண்டு காலத்திற்குப் பிறகு ஒரே ஒரு எம்பி தொகுதி சீட்டுக்காக, திமுகவிடம் கையேந்தி நிற்கும் பரிதாபத்தைப் பார்த்து, கமல்ஹாசன் ரசிகர்கள் மனம்நொந்து போய் இருக்கிறார்கள்..
திரையுலகில் உச்சத்தில் இருக்கும் நவரச நாயகன் கமல்ஹாசன், தேர்தல் அரசியலில் அடைந்திருக்கும் படுதோல்வியைப் பற்றி இன்றைய சிறப்பு செய்தி தொகுப்பில் விரிவாக பார்ப்போம்..
அரசியல் கட்சியைத் தொடங்குவதாக 35 ஆண்டுகளுக்கு மேலாக உதார்விட்டு வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உடல்நிலை காரணம் காட்டி அதிரடியாக விலகிவிட்டார்.
திராவிட ஆட்சிகளின் ஆளுமைகளாக திகழ்ந்து வந்த திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி, அதிமுக பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா ஆகியோர், 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக மறைந்துவிட்டதையடுத்து, தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை பயன்படுத்தி, தமிழக அரசியலில் மாபெரும் அரசியல் தலைவராக உயர்ந்துவிட முடியும் என்று நம்பிக்கைக் கொண்டிருந்த ரஜினிகாந்த், அரசியலில் இருந்து முழுமையாக விலகிவிட்டார்.
ரஜினியின் பின்வாங்கலை தனக்கு சாதகமாக நினைத்து, 2018 ம் ஆண்டில் மக்கள் நீதி மய்யத்தை தொடங்கினார் உலகநாயகன் கமல்ஹாசன். தேசியமும் இல்லை, திராவிடமும் இல்லை.. இரண்டுக்கும் மய்யத்தில் இருப்பதுதான் தனது கட்சியின் கொள்கை என்று அறிவித்தார் நடிகர் கமல்ஹாசன். 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் 2021 சட்டமன்றத் தேர்தலிலும் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு திராவிட கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்தார் கமல்ஹாசன்.
36 எம்பி தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம், ஒட்டுமொத்தமாக 15 லட்சத்து 75 ஆயிரத்து 640 வாக்குகளைப் பெற்று, தேர்தல் அரசியலில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி பெற்ற வாக்குகளை விட 69 ஆயிரத்து 582 ஓட்டுகள் தான் குறைவாக பெற்றிருந்தது, நடிகர் கமல்ஹாசனின் கட்சி என்கிறார்கள் தேர்தல் திறனாய்வாளர்கள்.
2019 நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், 2021 சட்டமன்றத் தேர்தலில் பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சி உள்பட 6 கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்ட போதும், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற வாக்குகளை விட மிகமிக குறைவாகவே பெற்றது மக்கள் நீதி மய்யம். கமல்ஹாசனின் கட்சிக்கு 3 சதவீதத்திற்கு குறைவாக வாக்குகளே கிடைத்திருக்கிறது.
2021 சட்டமன்றத் தேர்தல், கமல்ஹாசனுக்கு சரியான பாடத்தை புகட்டியதால், கட்சி தொடங்கிய 6 ஆண்டுகளில், மய்யத்தின் பிரதான நடுநிலை எனும் கொள்கையை கைவிட்டு, திமுகவிடம் சரணாகதி அடையும் நிலைக்கு தள்ளிவிட்டது. கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட கமல்ஹாசன், பாஜக மற்றும் திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் ஆகிய இரண்டு தேசிய கட்சிகளையும் எதிர்த்து கடுமையாக தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை எதிர்த்துப் போட்டியிட்ட கமல்ஹாசனுக்கு கோவை தெற்கு தொகுதி வாக்காளர்கள் பெருவாரியான ஆதரவு அளித்தனர். வாக்கு எண்ணிக்கை இறுதிக் கட்டத்தை எட்டியபோது, கமல்ஹாசன் வெற்றிக்கொடியை தூக்குவது உறுதி என்று கூறப்பட்டு வந்த நேரத்தில், மாயாஜாலம் போல, பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் வெற்றி பெற்றுவிட்டதாக தேர்தல் அதிகாரிகள் அறிவித்ததைப் பார்த்து, கமல்ஹாசன் அதிர்ந்து போய்விட்டார்.
தேர்தல் அரசியல் என்பது தூய்மையான அரசியலுக்கு கை கொடுக்காது என்ற ஞானம் கமல்ஹாசனுக்கு புரிய வைத்தது 2021 சட்டமன்றத் தேர்தல். சட்டமன்றத் தேர்தலில் செலவிட்ட பணத்தை ஈடு கட்டுவதற்காக கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்தை வெளியிட்டு, கமல்ஹாசனே வியந்து போகும் அளவுக்கு நூறு கோடி ரூபாய்க்கு மேல் வாரி வழங்கினார், முதல்வர் மு.க.ஸ்டாலினின் புதல்வர் உதயநிதி.
உதயநிதியின் நேர்மையை மனதார பாராட்டிய கமல்ஹாசன், அன்றைய தேதியில் இருந்து திமுகவுக்கு ஆதரான நிலைப்பாட்டை எடுத்தார். தமிழ்நாட்டில் திராவிட கட்சியுடன் சமரசம் செய்து கொண்ட கமல்ஹாசன், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர் ராகுல்காந்தியின் அழைப்பை ஏற்று, காங்கிரஸின் நாடு தழுவிய முதற்கட்ட நடைப்பயணத்திலும் கலந்துகொண்டார்.
ராகுல்காந்தியின் மனதை வென்ற கமல்ஹாசனுக்கு, காங்கிரஸ் கட்சியிடம் இருந்து நேரடியாகவே, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று அழைப்பு, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே விடுக்கப்பட்டது.
ராகுல்காந்தியின் அரவணைப்பால் காங்கிரஸ் கட்சியில் இணைந்துவிடுவார் கமல்ஹாசன் என்று கடந்த ஓராண்டுக்கு மேலாக தகவல்கள் கசிந்து வந்த நேரத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலினின் அன்பும், அவரின் புதல்வரும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதியின் ஆதரவாலும், மக்கள் நீதி மய்யத்தின் கொள்கைகளை தூக்கியெறிந்துவிட்டு, திமுக மேடைகளில் அடிக்கடி பங்கேற்றார் கமல்ஹாசன்.
மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஆகியோரிருடன் இதற்கு முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு நெருக்கம் ஏற்பட்டதையடுத்து, திமுக கூட்டணியில் இணைந்து நாடாளுமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு தயாராகிவிட்டார் கமல்ஹாசன். இன்றைய தேதி வரை மக்கள் நீதி மய்யம் எந்த கூட்டணியோடு தேர்லை சந்திக்கப் போகிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
நாடாளுமன்ற உறுப்பினராகிவிட வேண்டும் என்று தீராத ஆசையில் இருந்து வரும் கமல்ஹாசன், திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட ஆர்வம் காட்டி வருகிறார். அதற்காக, உதயநிதி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என்று மக்கள் நீதி மய்யத்தின் மூத்த நிர்வாகிகள் தகவல்களை கசியவிடுகிறார்கள்.
திமுக கூட்டணியில் தென் சென்னை தொகுதியில் போட்டியிடுவதற்கு முதற்கட்டமாக கமல்ஹாசன் விருப்பம் தெரிவித்துள்ளார். சென்னை கோட்டையை எந்த தேர்தலிலும் கூட்டணி கட்சிகளுக்கு திமுக தாரை வார்த்ததே இல்லை என்பது மட்டுமின்றி தற்போதைய தென்சென்னை திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியனின் கடந்த 5 ஆண்டுகள் செயல்பாடுகள் மீது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மிகப்பெரிய அளவில் திருப்தியை தந்துள்ளதால், தமிழச்சிக்கு மீண்டும் கிடைக்க கூடிய வாய்ப்பை ஒருபோதும் பறிக்க மாட்டார்கள் மு.க.ஸ்டாலினும், உதயநிதியும் என்று கூறும் தமிழச்சி ஆதரவாளர்கள், தென் சென்னையில் மீண்டும் தமிழச்சியே போட்டியிடுவது ஏற்கெனவே உறுதியான ஒன்று என்கிறார்கள்.
தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்கு வாய்ப்பு இல்லை என்பதை தாமதமாக உணர்ந்து கொண்டிருக்கும் கமல்ஹாசன், கோயம்புத்தூர் எம்பி தொகுதியை மக்கள் நீதி மய்யத்திற்கு ஒதுக்க வேண்டும் என்று கமல்ஹாசன் திமுகவுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
கோவை தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிடுவது குறித்து திமுக தலைமை தீவிரமாக யோசித்து வரும் நிலையில், உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனையை கேட்டு கமல்ஹாசன் அதிர்ச்சியடைந்திருக்கிறார் என்கிறார்கள் மக்கள் நீதி மய்ய மூத்த நிர்வாகிகள்.
நாம் தமிழர் கட்சியின் பிரபலமான விவசாயி சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் பறித்துக் கொண்ட நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் பிரபலமான டார்ச் லைட் சின்னத்தை மீண்டும் வழங்கியுள்ளது.
டார்ச் லைட் சின்னம் பொதுமக்களிடம் பிரபலமாகியிருக்கும் நேரத்தில், மக்கள் நீதி மய்யத்தின் சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்று கமல்ஹாசன் விரும்புகிறார். திமுக தலைமையிடம் டார்ச் லைட் சின்னத்திலேயே போட்டியிட அனுமதிக்க வேண்டும் என்று கமல்ஹாசன் வைத்துள்ள கோரிக்கையை ஏற்பதற்கு தயக்கம் காட்டி வருகிறது.
திமுக கூட்டணியில் ஏற்கெனவே இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்யும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கும் தலா ஒரு தொகுதிகளை திமுக தலைமை ஒதுக்கிவிட்டது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்த பிறகுதான் கமல்ஹாசனுக்கு தொகுதியை திமுக தலைமை ஒதுக்கீடு செய்யும் என்று இரண்டாம் கட்ட தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்ற திமுகவின் நிபந்தனையை ஏற்றால்தான், கோவை தொகுதி கமல்ஹாசனுக்கு ஒதுக்கப்படும் என்பதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிகாட்டி வரும் நேரத்தில், டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிடுவதற்காக அனுமதியை பெற்று தருமாறு உதயநிதி ஸ்டாலினிடம் முறையிட்டுள்ளார் கமல்ஹாசன் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மனம் மாறி, டார்ச் லைட் சின்னத்திலேயே போட்டியிடுவதற்கு சிக்னல் கிடைத்தால்தான், திமுக கூட்டணியில் இணைந்து மக்கள் நீதி மய்யம் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கவுள்ளது என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் கமல்ஹாசன் என்கிறார்கள் அவரது கட்சியின் மூத்த நிர்வாகிகள்.
கமல்ஹாசனுக்கு ஒரு தொகுதியை ஒதுக்கீடு செய்ய முன்வந்திருக்கும் திமுக தலைமை, அதற்கு பரிகாரமாக திமுக கூட்டணி போட்டியிடும் 39 தொகுதிகளிலும் கமல்ஹாசன் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள வேண்டும் என்று நிபந்தனையும் விதித்திருப்பதாக கூறுகிறார்கள் திமுகவின் மூத்த தலைவர்கள்.
2018 ல் அரசியல் கட்சியை தொடங்கி, ஓராண்டிற்குள் நாடாளுமன்றத் தேர்தலை சந்தித்த கமல்ஹாசன், பத்து ஆண்டு காலம் தேர்தல் அரசியலை எதிர்கொண்டிருக்கும் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு இணையான வாக்குகளை பெற்றார். நாடாளுமன்றத் தேர்தலின் போது கமல்ஹாசனை திராவிட இயக்கங்களுக்கு மாற்று சக்தியாக வாக்காளர்கள் பார்த்தார்கள். ஆனால், பொதுமக்களின் நம்பிக்கையை தகர்த்து எறியும் வகையில், கமல்ஹாசனின் அரசியல் செயல்பாடுகள் அமைந்திருந்தது மட்டுமின்றி பொதுமக்களிடம் பரவலாக கடும் கோபத்தை ஏற்படுத்தியிருந்த பிக் பாஸ் டிவி நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் கமல்ஹாசனை அதுவரை தாங்கி பிடித்திருந்த தேசியவாதிகளும் கைவிட்டு விட்டனர்.
2019 மற்றும் 2021 ஆகிய இரண்டு தேர்தல்களில் பெற்ற வாக்குகளை கூட 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கமல்ஹாசனால் பெற முடியாது என்று உறுதிபட கூறுகிறார்கள் தேர்தல் கள திறனாய்வாளர்கள்.
அரசியல் கட்சி தொடங்கி 7 ஆண்டுகளிலேயே கமல்ஹாசனின் வீழ்ச்சி படுபாதாளத்திற்கு சென்றுவிட்டது என்று கூறும் தேர்தல் திறனாய்வாளர்கள், திரையுலகில் இருந்து கமல்ஹாசனுக்கு முன்பே அரசியலுக்கு வந்த சீமானின் வளர்ச்சி, தேர்தலுக்கு தேர்தல் அதிவேகமாக உயர்ந்து வருவதாக கூறுகிறார்கள்.
திராவிட இயக்கங்களுக்கு மாற்றாக ஜனநாயகம் மிகுந்த அரசியல் மீது நம்பிக்கையை ஏற்படுத்துவார்கள் திரையுலக அரசியல் தலைவர்கள் என்பது மீண்டும் ஒருமுறை தோல்வியை தழுவதற்கு நடிகர் கமல்ஹாசனின் அரசியல் பயணமும் அமைந்துவிட்டதுதான் சோகம் என்கிறார்கள் தேசிய அரசியல் மீது நம்பிக்கை வைத்துள்ள ஜனநாயகவாதிகள். ஒரே ஒரு எம்பி தொகுதிக்காக, தன்னுடைய ஒட்டுமொத்த திரையுலக உச்சத்தையும் அடகு வைத்துவிட்டாரே கமல்ஹாசன் என்று வேதனைப்படுகிறார்கள் அவரது ஆரம்ப திரையுலக நண்பர்களான இன்றைய அரசியல் தலைவர்கள்.