Mon. Apr 29th, 2024

தாரை.வே.இளமதி., சிறப்புச் செய்தியாளர்…

கோலாகலமாக நடைபெற்ற முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு.கருணாநிதியின் நினைவிடத் திறப்பு விழா, தமிழகம் முழுவதும் உள்ள திமுக தொண்டர்களை உற்சாகத்தில் மிதக்க வைத்துள்ளது.

புதுப்பிக்கப்பட்ட பேரறிஞர் அண்ணா நினைவிடம் மற்றும் கலைஞர் மு.கருணாநிதி ஆகியோரின் நினைவிடத்தை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் மிகவும் நெகிழ்ச்சியுடன் காணப்பட்டார் என்று அவருக்கு மிகமிக நெருக்கமான மூத்த அமைச்சர்கள் மனம் திறந்து கூறுகிறார்கள்.

நினைவிடத் திறப்பு விழாவிற்கு நேற்று இரவு (பிப்.26) 7 மணியளவில் மெரினா கடற்கரைக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினை மூத்த அமைச்சர்கள் உற்சாகமாக வரவேற்றார்கள். நுழைவு வாயில் அருகே அமைக்கப்பட்டிருந்த மேடைக்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், கூட்டணிக் கட்சித் தலைவர்கள், திக தலைவர் வீரமணி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கவிப்பேரரசு வைரமுத்து உள்ளிட்டோருக்கு வணக்கம் தெரிவித்தார். தமது சகோதரியும், தூத்துக்குடி எம்பியும், மாநில திமுக மகளிரணித் தலைவருமான கனிமொழி கருணாநிதியிடம் பாசத்துடன் நலம் விசாரித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

பின்னர், ரஜினியை கையோடு தனது இருக்கைக்கு அருகே அழைத்து அமர வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், கலைஞர் நினைவிடத்தின் சிறப்புகளை பகிர்ந்து பூரிப்படைந்தார். வழக்கத்திற்கு மாறாக கருப்பு மேல்சட்டை அணிந்து (ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு பரிகாரம் தேடிக் கொள்ளவோ..) வந்திருந்த ரஜினிகாந்த் மு.க.ஸ்டாலின் பகிர்ந்து கொண்ட தகவல்களைக் கேட்டு, நெகிழ்ச்சியடைந்ததை தமிழகமே வியப்போடு பார்த்தது.

பேரறிஞர் அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடம் மற்றும் கலைஞரின் நினைவிடங்களில் மரியாதை செலுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன் பக்கத்திலேயே இருக்குமாறு சிறப்பு கவனம் செலுத்தியதைப் பார்த்து, திமுக பொதுச் செயலாளரும் மூத்த அமைச்சருமான துரைமுருகன் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் வியப்பில் ஆழ்ந்தனர்.

முதல்வருடன் ஒட்டிக் கொண்டிருந்த திமுக பொதுச் செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன், பல நேரங்களில் தனக்கு பின்பக்கம் ரஜினிகாந்த் நின்று கொண்டிருந்ததை கவனித்த போதும் கூட, அவர் மீது சிறப்பு கவனம் செலுத்தாமல், மு.க.ஸ்டாலினுடன் ஒட்டியவாறே நிற்பதற்குதான் ஆர்வம் காட்டினார். ஆனால், அந்த நேரங்களில் கூட ரஜினிகாந்த், தனது அருகிலேயே இருக்குமாறு பார்த்துக் கொண்டதில் மு.க.ஸ்டாலின் காட்டிய அக்கறை என்பது, கலைஞர் நினைவிட திறப்பு விழாவில் ரஜினிகாந்த் கலந்துகொண்டதை வரலாற்று சிறப்புமிக்க தருணமாகவே முதல்வர் மு.க.ஸ்டாலின் கருதியிருக்கிறார் என்பதை அறிந்து கொள்ள முடிந்தது என்கிறார்கள் திமுக மூத்த தலைவர்கள்.

அண்ணா நினைவிடம் மற்றும் கலைஞர் நினைவிடங்களில் மரியாதை செலுத்தப்பட்ட போது, முதல்வரின் புதல்வரும் மாநில திமுக இளைஞரணி செயலாளரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதிக்கு வழக்கமாக கொடுக்கப்படும் மரியாதை கூட, நேற்றைய நிகழ்வில் பெரிதாக வழங்கப்படவில்லை. அமைச்சர் உதயநிதியும் கூட மூத்த தலைவர்களுக்கு உரிய மரியாதை கிடைப்பதற்கு வழிவிட்டு, ஒதுங்கிக் கொண்டதை, விழா நிகழ்ச்சிகள் முழுவதிலும் பார்க்க முடிந்தது.

நினைவிட திறப்பு விழாவில் கலந்து கொண்ட மூத்த அமைச்சர்கள் உள்பட முதல்முறை அமைச்சர்களானவர்கள் மரியாதை நிமித்தமாக முதல்வருக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு, கலைஞர் நினைவிடத்தின் சிறப்புகளை பார்வையிடுவதில் ஆர்வம் காட்டினார்கள்.

நினைவிடங்கள் திறப்பு விழா மற்றும் மரியாதை செலுத்தும் நிகழ்வுகள், அருங்காட்சியகம் பார்வையிடல் என ஒரு மணிநேரத்திற்கு மேலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் செலவிட்ட நேரத்தில், அவரை விட்டு விலகாத வகையில், இரட்டை சகோதரர்கள் போல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் நடந்து கொண்டார்.

திமுகவின் புதுவரவான திண்டுக்கல் லியோனி கூட தனக்கு வழிவிடாமல் முந்திச் சென்றபோது கூட ரஜினிகாந்த் பெருந்தன்மையாக எடுத்துக் கொண்டார் என்பதில் இருந்து, கலைஞர் நினைவிட திறப்பு விழா சிறப்பாக நடைபெற வேண்டும் என்ற எண்ணம்தான் ரஜினிக்கும் மேலோங்கி இருந்திருக்கிறது என்கிறார்கள் விழா நிகழ்ச்சியில் முழுமையாக பங்கேற்ற திமுக மூத்த நிர்வாகிகள்.

நினைவிடத்தை சுற்றிப் பார்த்த போதுகூட, பேட்டரி காரில் தனது வாகனத்திலேயே ரஜினிகாந்த் பயணிக்கும் படி முக்கியத்துவம் கொடுத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். விழா நிகழ்ச்சிகளில் மட்டுமின்றி புறப்பட்டு செல்லும் நேரத்திலும் கூட ரஜினிகாந்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கிய தனித்த முக்கியத்துவத்தை, மூத்த அமைச்சர்கள் மட்டுமின்றி, திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்களும் கூட பெரிதாக ரசிக்கவில்லை என்கிறார்கள் திமுக எம்எல்ஏக்கள்.

ரஜினி தன் அருகிலேயே இருக்க வேண்டும் என்பதில் தனித்த ஆர்வம் காட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தமது சகோதரி கனிமொழி கருணாநிதி எம்பி தன்னுடனேயே இருக்க வேண்டும் என்றவகையில் துளியளவும் ஆர்வம் காட்டவில்லை என்பதை பார்த்து மனம் நொந்து போனார்கள் கலைஞர் குடும்பத்து மூத்த உறவினர்கள்.

விழா நிகழ்ச்சிகளில் ஒரு மணிநேரத்திற்கு மேலாக நெகிழ்ச்சியுடனேயே காணப்பட்ட மு.க.ஸ்டாலினுக்கு கனிமொழியை பற்றிய சிந்தனை இல்லாமல் போனதைக் கூட ஏற்றுக் கொள்ளலாம்.

ஆனால், மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு உள்ளிட்டவர்களும் முன்னாள் மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராஜா, தயாநிதி மாறன் உள்ளிட்டவர்களும் கூட, பேரறிஞர் அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மரியாதை செலுத்தியபோதும், பேரறிஞர் அண்ணா, கலைஞர் திருவுருச்சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய போதும் கனிமொழி எம்பியை அழைக்க வேண்டும் என்ற சிந்தனை துளியும் இல்லாமல் போனது எந்தவகையில் நியாயம் என்கிறார்கள்.

கலைஞர் நினைவிடத்தில், அமைச்சர் உதயநிதி மற்றும் முதல்வரின் மருமகன் சபரீசன் ஆகியோருடன் புகைப்படம் எடுப்பதற்கு ஆர்வம் காட்டிய இளம் அமைச்சர்கள், திமுக எம்பி, எம்எல்ஏக்கள், மாவட்டச் செயலாளர்கள், கனிமொழி எம்பிக்கு உரிய மரியாதை வழங்காமல் புறக்கணித்ததை பார்த்து மிகவும் மனம் நொந்துப் போனோம் என்கிறார்கள் கலைஞரோடு நெருங்கி உறவாடிய திமுக கூட்டணிக்கட்சித் தலைவர்கள்.

மு.க.ஸ்டாலின், உதயநிதி, சபரீசன் ஆகியரோடு நெருக்கம் காட்டுவதற்கு துடித்த திமுக அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள், கனிமொழி கருணாநிதி எம்பிக்கு உரிய மரியாதை தராமல் புறக்கணித்ததைப் பார்த்து, கலைஞர் ஆத்மாவே வருத்தமடைந்திருக்கும் என்கிறார்கள் கலைஞர் குடும்பத்து வாரிசுகள்.

கலைஞர் நினைவிடத்தில் உரிய முக்கியத்துவம் கொடுக்காததால் வருத்தத்தில் இருக்கிறார் கனிமொழி கருணாநிதி எம்பி என்று கூறும் கலைஞரின் விசுவாசிகள், தமது வருத்தத்தை வெளிப்படையாகவே வெளிப்படுத்தும் வகையில்தான், கலைஞர் நினைவிட திறப்பு விழா குறித்த எந்தவொரு புகைப்படங்களையும், திமுக சார்பில் தயாரிக்கப்பட்ட கலைஞர் நினைவிடம் குறித்த சிறப்பு வீடியோ தொகுப்பையும் கூட தமது முகநூல், எக்ஸ் தளம் உள்ளிட்டவற்றில் நேற்று இரவே பகிரவில்லை கனிமொழி எம்பி என்கிறார்கள்.

மறைந்த திமுக தலைவருக்குரிய விழா என்பதாலும், தந்தை என்ற ஸ்தானத்திற்காக மட்டுமின்றி தமது அரசியல் ஆசானாகவும் திகழ்ந்தவர் கலைஞர் என்பதாலும், கலைஞரின் புகழுக்கு சிறப்பு சேர்க்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தினாலும் ஒருநாள் இரவு முழுவதும் மனதை அழுத்திக் கொண்டிருந்த வருத்தத்தில் இருந்து குறுகிய நேரத்தில் மீண்டிருக்கிறார் கனிமொழி எம்பி. அதன் வெளிப்பாடாகதான், இன்று காலைதான் (பிப்.27) கலைஞர் நினைவிட திறப்பு விழா புகைப்படங்களை சமூக வலைதளங்களில் கனிமொழி கருணாநிதி எம்பி பகிர்ந்துள்ளதை பார்க்க முடிகிறது என்று கூறும் கலைஞர் குடும்பத்து உறவுகள், கனிமொழி எம்பி முழுமையாக மனத்துயரில் இருந்து இன்றைக்கும் கூட மீளவில்லை என்பதை உணர்ந்து கொள்ளும் வகையில்தான், விழா நிகழ்வுகள் குறித்து கனிமொழி எம்பி பகிர்ந்துள்ள புகைப்படங்கள் வெளிப்படுத்துகின்றன என்கிறார்கள்.

நினைவிடத்தை முதல்வர் திறந்த வைத்ததோ.. பேரறிஞர், கலைஞர் நினைவிடங்கள் மற்றும் திருவுருச்சிலைகளுக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தியது தொடர்பான எந்தவொரு புகைப்படங்களும் கனிமொழி எம்பியின் சமூக ஊடக தளங்களில் பகிரப்படவில்லை.

மு.க.ஸ்டாலினுக்கு கலைஞர் எப்படி தந்தையோ, தலைவரோ.. அதுபோலவே கனிமொழி எம்பிக்கும் கலைஞர் தந்தை., தலைவர்.

கலைஞர் மு.கருணாநிதி உயிரோடு இருந்த காலத்தில் கனிமொழி எம்பிக்கு கிடைத்த முக்கியத்துவம், கலைஞரின் மறைவுக்குப் பிறகு, அதே அளவுக்கு, முதல்வராகவும், திமுக தலைவராகவும் மு.க.ஸ்டாலின் பதவி வகித்து வரும் காலத்தில் கிடைக்கவில்லை என்றாலும் கூட, இருவருக்கும் தந்தையான கலைஞர் நினைவிட திறப்பு விழாவில், கனிமொழியை காயப்படுத்தும் அளவுக்கு புறக்கணிப்புகள் நடைபெறுவதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலினும் தெரிந்தோ, தெரியாமலோ காரணமாக அமைந்துவிட்டாரோ என்ற வருத்தம் தான் தூங்க விடாமல் செய்துவிட்டது என்கிறார்கள் திமுக மூத்த நிர்வாகிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *