Sun. May 5th, 2024

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி வழக்கம் போல, ஆளும்கட்சியான திமுக, தேர்தல் களத்தை மிகுந்த உற்சாகத்துடன் எதிர்கொண்டு வருகிறது. 2019 முதல், 5 ஆண்டுகளுக்கு மேலாக திமுக தலைமையிலான கூட்டணியில் தொடர்ந்து அங்கம் வகித்து வரும் காங்கிரஸ் கட்சி, தொகுதி பங்கீடு குறித்து திமுக மூத்த தலைவர்களுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தையை நடத்தி முடித்துவிட்டது.
காங்கிரஸ் மேலிட பார்வையாளர்கள் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் தரப்பில் 21 தொகுதிகளை குறி வைக்க, திமுக தரப்பிலோ 7 தொகுதிகள் மட்டுமே வழங்க முடியும் என்று கறாராக தெரிவித்துவிட்டதால், அதிர்ச்சியில் உறைந்து இருக்கிறார்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள்.


காங்கிரஸைப் போல, இடதுசாரிகள் கட்சிகளும், திமுகவுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் முனைப்பு காட்டி வருகின்றன.
2019 மற்றும் 2021 ஆகிய இரண்டு பொதுத்தேர்தல்களில் திமுக தலைமையில் போட்டியிட்ட அனைத்துக் கட்சிகளும், எஸ்ஆர்எம் பச்சமுத்து நீங்கலாக, 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் திமுகவுடன் இணைந்தே தேர்தலை எதிர்கொள்வதற்கு தயாராகவே இருக்கின்றன.

திமுக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் ஒரே குறிக்கோள்தான். 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு மீண்டும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைந்துவிடக் கூடாது என்பதில் உறுதி காட்டி வருகிறது திமுக என்பதால், திமுகவின் சிந்தனையோடு ஒத்த கருத்துடைய காங்கிரஸ், இடது சாரிகள், மதிமுக, திருமாவளவன், முஸ்லீக் லீக் ஆகிய கட்சிகளும் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டை காலம் காலமாக முன்னெடுத்து வருவதால், திமுக தலைமையிலான கூட்டணி உறுதியாகவே இருக்கிறது.

அதிமுக மற்றும் அண்ணாமலை தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் எதிர்பார்ப்பை பொய்யாக்கும் வகையில்தான், ஆளும்கட்சியான திமுக தரப்பு, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளில், கூட்டணி கட்சிகளோடு இணக்கமான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக கூறுகிறார்கள் அண்ணா அறிவாலய மூத்த நிர்வாகிகள்.

2019 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட தொகுதிகளை விட தற்போது குறைவான இடங்கள் ஒதுக்கப்பட்டாலும், திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் உள்ளிட்ட எந்தவொரு கட்சியும் வெளியேற வாய்ப்பே இல்லை என்கிறார்கள் திராவிட சித்தாந்தவாதிகள்.


திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நேரத்தில், அதிமுக தலைமைக் கழகம் வெறிச்சோடி கிடப்பதை பார்த்து, அதிமுக மூத்த தலைவர்களே மனம் சோர்ந்து போய்வுள்ளார்கள்.
அதிமுகவின் தேர்தல் வரலாற்றிலேயே, எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக பதவி வகித்து வரும் இந்த நேரத்தில், கூட்டணியில் இணைவதற்கு கூவி கூவி அழைப்பதை போன்ற அவலம், இதற்கு முந்தைய எந்தவொரு தேர்தல் காலத்திலும் நடைபெற்றதே இல்லை என்று ரத்தக் கண்ணீர் வடிக்கிறார்கள் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலர்.

கடை விரித்தேன் கொள்வாரில்லை என்ற நிலையில்தான் அதிமுக தலைமை உள்ளது என்கிறார்கள், முந்தைய தேர்தல்களில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்த அரசியல் கட்சிகள்.
பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியது, தேர்தல் காலத்தில் வரலாற்றுத் தவறு என்று வேதனைப்பட கூறுகிறார்கள் அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்.
பாரதிய ஜனதாவுடனான உறவை தவிர்க்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் ஜி.கே.வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கூட, அதிமுகவுடன் தான் கூட்டணி என்று உறுதிபட கூறுவதற்கு தயக்கம் காட்டும் அளவிற்குதான் எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் வியூகம் அமைந்திருக்கிறது என்று கிண்டலடிக்கிறார்கள் எடப்பாடியாருடன் நெருக்கமான நட்பில் இருந்து வரும் அதிமுக முன்னணி தலைவர்கள்.


ஜி.கே.வாசனைப் போலவே, புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், இந்திய ஜனநாயக கட்சித் தலைவர் பச்சமுத்து போன்ற ஒரே ஒரு தொகுதியில் போட்டியிடுவதற்கே திணறும் சின்ன சின்ன கட்சிகள் கூட, தங்களுக்கு உரிய தொகுதியை பெறுவதற்கு கூட எடப்பாடியாரை நேரில் சந்திக்க கூட தயக்கம் காட்டி வருகிறார்கள் என்பதை பார்க்கும் போது வேதனையாக இருக்கிறது என்கிறார்கள் அதிமுக மூத்த தலைவர்கள்.

மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதா உயிரோடு இருந்த காலத்தில், அதிமுக தலைமை அலுவலகத்திற்கும் போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா இல்லத்திற்கும் நடையாக நடந்த அரசியல்கட்சிகளில், தேசிய அளவில் செல்வாக்கு மிகுந்த கட்சிகளை விட, தமிழ்நாட்டில் குறிப்பிட்ட மண்டலங்களில் செல்வாக்கு படைத்த ஒரே ஒரு அரசியல் கட்சி கூட, இன்றைய தேதியில் அதிமுக தலைமைக் கழகத்தை எட்டி பார்க்கவே இல்லை என்பதை வைத்தே, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவின் வெற்றி எப்படி அமையப் போகிறது என்பதை எளிதாக கணித்து விட முடியும் என்கிறார்கள் தேர்தல் கள ஆய்வாளர்கள்.

2019 மற்றும் 2021 ஆகிய இரண்டு பொதுத் தேர்தல்களில் அதிமுக தலைமையில் தேர்தலை சந்தித்த பாமக கூட, அதிமுகவுடன் இணைந்து 2024 நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க ஆர்வம் காட்டவில்லை என்பதை பார்த்து வேதனையில் துடிக்கிறார் எடப்பாடியார் என்கிறார்கள், அவருக்கு மிக மிக நெருக்கமான அதிமுக முன்னணி தலைவர்கள்.
அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட முன்வாருங்கள் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸுடன் அதிமுக முன்னணி தலைவர்கள் திரைமறைவில் நடத்திய பேச்சுவார்த்தைகள் கூட வெற்றிகரமாக அமையவில்லை என்பதால் விரக்தியின் உச்சத்திற்கே சென்று விட்டார் எடப்பாடியார் என்பதுதான் யதார்த்தம்.
அதிமுக தலைமையை ஏற்பதற்கு பாமக, தேமுதிக, தமாகா உள்ளிட்ட தோழமைக் கட்சிகள் தொடர்ந்து புறக்கணித்து வருவதால் கவலையில் ஆழ்ந்துவிட்டார் எடப்பாடியார் என்கிறார்கள்.

எடப்பாடியார் பொதுச் செயலாளராக பதவியேற்ற பிறகு நடைபெறும் முதல் பொதுத் தேர்தல் என்பதால், அதிமுகவின் செல்வாக்கை நிலை நிறுத்த படாதபாடு படுகிறார்கள் இரண்டாம் கட்ட அதிமுக தலைவர்கள்.
ஆளும்கட்சியான திமுகவைப் போல, 25 எம்பி தொகுதிகளில் அதிமுகவும் போட்டியிட வேண்டும் என்று தேர்தல் வியூகத்தை வகுத்துள்ள எடப்பாடியார், கூட்டணியில் சேர பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் முன்வராததால் பதற்றத்தில் உள்ளார் என்கிறார்கள் அதிமுக ஆதரவு மூத்த ஊடகவியலாளர்கள்.
அரசியல் களத்தில் நேர் எதிரியான திமுக தரப்பில், கூட்டணி கட்சிகளுடனான பேச்சுவார்த்தை விறுவிறுப்பாக நடைபெற்று வருவதால், அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுடனான நேர்காணலை நடத்தி, அதிமுகவும் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள ஆர்வமாக இருப்பதை போல காட்சிப்படுத்த துடிக்கிறார் எடப்பாடியார்.

2014 ல் மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதா தனித்து நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொண்டதைப் போல, தற்போதைய தேர்தலையும் தனித்தே போட்டியிட்டு ஒரு கை பார்க்கலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார் என்கிறார்கள் அதிமுக இரண்டாம் கட்ட தலைவர்கள்.

எம்பி தேர்தலில் அதிமுக வேட்பாளராக போட்டியிட விரும்பும் பிரபலங்கள், 25 கோடி ரூபாயை தலைமையிடம் ரொக்கமாக கொடுத்து விட வேண்டும்.
6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய எம்பி தொகுதியில், அனைத்து செலவினங்களையும் அதிமுக தலைமையே நேரடியாக செய்யும். திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை தோற்கடிப்பதற்காக, வேட்பாளர் தரும் 25 கோடி ரூபாயுடன், வெற்றி பெறுவதற்கு எத்தனை கோடி ரூபாய் செலவு செய்ய வேண்டும் என்றாலும் அதிமுக தலைமையில் இருந்து பணத்தை வாரி இரைப்போம் என எடப்பாடியாரே நேரடியாக கூறி வருவதாக கூறுகிறார்கள் அதிமுக முன்னணி நிர்வாகிகள்.

திமுக தலைமையிலான கூட்டணி, வலுவாக இருந்து வரும் நேரத்தில், அதிமுகவுக்கு ஆதரவான வாக்குகளில் சேதாரம் ஏற்படுத்தும் வகையில், பாரதிய ஜனதா கட்சியும் தனி அணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டால், அதிமுக தரப்பில் ஒரு தொகுதிக்கு 100 கோடி ரூபாய் செலவு செய்தால் கூட, அதிமுக வெற்றி என்பது கேள்விக்குறிதான் என்று அச்சப்பட்டுக் கொண்டிருக்கிறார் எம்பி தேர்தலில் போட்டியிட ஆர்வமுள்ள அதிமுக முன்னணி நிர்வாகிகள்.

திமுகவுக்கும் பாரதிய ஜனதாவுக்கும் தேர்தல் அச்சத்தை ஏற்படுத்த, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் அவர்களது வாரிசுகளை எம்பி தேர்தலில் நிறுத்த வேண்டும் என்று மற்றொரு நிபந்தனையும் விதித்துள்ளார் எடப்பாடியார்.
எடப்பாடியாரின் அடுக்கடுக்கான நிபந்தனைகளைப் பார்த்து மனம் நொந்து போயிருக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், திமுக அரசுக்கு எதிரான அதிருப்தி வாக்குகளை பாரதிய ஜனதா கட்சி, நாம் தமிழர் கட்சி ஆகியவை பிரித்துக் கொள்ளும் ஆபத்து உள்ள நேரத்தில், எம்பி தேர்தலில் டெபாசிட்டை பறிகொடுத்தால், அவரவர் சொந்த மாவட்டத்தில் அதிமுக நிர்வாகிகளிடம் செல்வாக்கை இழந்து விடுவோம் என்று வெளிப்படையாகவே கூறுகிறார்கள் அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.


எடப்பாடியார் அடிக்கடி கூறி வருவதைப் போல, திமுக கூட்டணியில் பிளவு ஏற்படும். தொகுதி பங்கீட்டில் உரிய தொகுதிகள் கிடைக்காத காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட சில கட்சிகள், அதிமுக தலைமையை தப்பி தவறி ஏற்றுக் கொண்டாலும் கூட, 2024 எம்பி தேர்தலுக்குப் பிறகு மோடிக்கு எதிராக அரசியல் செயல்பாடுகளை எடப்பாடியார் அமைத்துக் கொள்ள மாட்டார் என்று அதிமுகவை சந்தேகத்துடனேயே பார்க்கிறார்கள்.
அதிமுகவை நம்பி பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் வராததாலும், எம்பி தேர்தலில் போட்டியிட அதிமுக முன்னாள் அமைச்சர்களே தயக்கம் காட்டி வருவதாலும், மனம் நொந்து போய் இருக்கும் எடப்பாடியார், அவரின் ஒட்டுமொத்த அரசியல் வாழ்க்கையிலும் 2024 நாடாளுமன்றத் தேர்தல் போல, சவால் மிகுந்த நேரம் அமைந்ததே இல்லை என்கிறார்கள்.


பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் நேரடியாக தமிழகத்தின் மீது பார்வையை செலுத்துவார்கள். மத்திய பாஜக அரசின் மிரட்டல்களை எடப்பாடியார் நேரிடையாக சந்திக்க துணிந்தாலும் கூட அவருக்கு மிக மிக நெருக்கமான அதிமுக முன்னாள் அமைச்சர்களில் ஒருவர் கூட, எடப்பாடியாருடன் கரம் கோர்த்து, மத்திய பாஜகவை எதிர்க்க துணியவே மாட்டார்கள் என்கிறார்கள் அதிமுக மூத்த தலைவர்கள்.


நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கும் வரை எடப்பாடியாரை ஆட விட்டு வேடிக்கை பார்ப்பார்கள் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் என்று கூறும் டெல்லி மூத்த செய்தியாளர்கள், மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடர் முடிந்தவுடன், எடப்பாடியாருக்கு சரியான பாடத்தை அகில இந்திய பாரதிய ஜனதா கட்சி கற்று தரும் என்று உறுதிபட கூறுகிறார்கள் தேசிய அரசியலை உன்னிப்பாக கவனித்து வரும் அரசியல் ஆய்வாளர்கள்.
பாரதிய ஜனதாவிடம் சரணடைவாரா.. சங்கநாதம் முழங்குவாரா எடப்பாடியார்..
நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிப்பு வரும் வரை காத்திருப்போம்…