Sun. May 5th, 2024

தமிழக வெற்றிக் கழகத்தை அதிரடியாக துவக்கியுள்ள நடிகர் விஜயைப் பார்த்து, பரம்பரை அரசியல் தலைவர்களே ஆடிப் போய் இருக்கிறார்கள்.


ஆளும்கட்சியான திமுகவின் இளம் தலைவரும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின்….

தமிழ்நாட்டில் தாமரை மலரவே மலராது என்ற கூக்குரல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க துடித்துக் கொண்டிருக்கும் தமிழ்நாடு பாஜக தலைவர் கே.அண்ணாமலை….

திராவிட மண்ணை தமிழ் தேசமாக மாற்ற துடிக்கும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோருக்கு போட்டியாக அரசியல் களத்தில் காலூன்றி இருக்கும் நடிகர் விஜயால், தமிழக அரசியல் களம் அதகளமாகியிருக்கிறதா என்பதை பற்றிதான் இன்றைய சிறப்பு செய்தி தொகுப்பில் விரிவாக பார்க்க இருக்கிறோம்.

திரையுலகில் உச்சத்தில் இருந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய், திரைப்படத்துறைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு முழுநேர அரசியல்வாதியாக தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டிருப்பதை பார்த்து, திரையுலகம் மட்டுமல்ல, தமிழக அரசியல் களமும் அதிர்ச்சியில் உறைந்து கிடக்கிறது என்பதுதான் உண்மை.

தமிழக அரசியலில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் என்னவிதமான தாக்கத்தை ஏற்படுத்திவிடப் போகிறது என்பதற்கு, 50 ஆண்டுகளுக்கு மேலான அரசியல் பயணத்திற்கு சொந்தக்காரரான, மூத்த அரசியல்வாதி கே.எஸ். ராதாகிருஷ்ணன் முன் வைத்திருக்கும் வாதத்தை முதலில் பார்ப்போம்…

விஜய்க்கெல்லாம் அரசியல் பற்றி என்ன தெரியும்?” என்றும்…

“விஜயெல்லாம் வரட்டும்யா… வந்து என்ன பண்ணப்போறார்னு பார்ப்போம்..’’ என்றும் சொல்கிறார்கள்

உண்மையில் மிகமிக துல்லியமான திட்டமிடல், தெளிவான வியூகம், கண்ணியமான வார்த்தைப் பிரயோக அறிக்கை..

முதலமைச்சர் ஆகக்கூடிய சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளாமல் விட்ட ரஜினிகாந்த் மற்றும் ரஜினி அளவுக்கு செல்வாக்கு இல்லாத போதும் போதிய திட்டமிடல் இல்லாமல் அரசியலுக்குள் வந்து வீழ்ந்து போன விஜயகாந்த் இருவரது வாழ்க்கையில் இருந்தும் சரியான பாடங்களை கற்றுக் கொண்டிருக்கிறார், விஜய் என்பது தெளிவாக தெரிகிறது.

தனது ரசிகர்களை முழுமையான அரசியல்மயப்படுத்தி தயார்படுத்த 2 ஆண்டுகள் முன்னதாக கட்சியை அறிவித்திருப்பதும் மிகச்சரியான முடிவு…

எல்லாவற்றையும் விட மிக முக்கியமான முடிவு… சாதாரண மக்கள் மத்தியில் விஜய் மீது ஒரு ஈர்ப்பு கொண்டுவர வைக்கும் முடிவு… தனது மார்க்கெட் உச்சத்தில் … இன்றைக்கு ஒரு படத்திற்கு ₹150 கோடிகள் கொடுக்க தயாரிப்பாளர்கள் காத்திருக்கும் நிலையில்… விஜய் நினைத்தால் வருடத்திற்கு 2 படங்கள் என்று அடுத்த 10 ஆண்டுகளுக்கு சர்வ சாதாரணமாக ₹3000 கோடிகளை தாண்டி சம்பாதிக்க வாய்ப்பிருந்தும் அதனை விட்டுவிட்டு “அடுத்த படத்துடன் திரையுலகில் இருந்து விடைபெறுகிறேன்” என்று சொன்னது மிகப்பெரிய விசயம்… அந்த அறிக்கையின் மாஸ்டர் ஸ்ட்ரோக் அதுதான்…

இனி தமிழ்நாட்டில் திராவிடம் பேசி யாரும் பிழைக்க முடியாது… அதேபோல அதிதீவிர மதவாதம் வலதுசாரியும் இடதும் இங்கே எடுபடாது… “தமிழ்,தமிழ்நாடு முன்னுரிமை அதற்கடுத்து இந்திய தேசியம், தேசிய ஒருமைப்பாடு” இதுதான் இனி தமிழகத்தின் பாதையாக இருக்கும் என்பதை மிகச்சரியாக பிடித்துள்ளார் விஜய்…
அதுதான் வெற்றிக்கான பாதையும் கூட…

உதயநிதி, விஜய்க்கு அருகில் கூட வரமுடியாது… மொத்தத்தில் தமிழகத்தின் அத்தனை முக்கிய கட்சிகளுக்கும் பீதியை கிளப்பும் வகையில் தான் விஜய்யின் அரசியல் வருகை இருக்கிறது…

எம்ஜிஆர் தனிக்கட்சி தொடங்கிய பின்னரும் ஆட்சியை பிடிக்கின்ற வரை 5 ஆண்டுகள் தொடர்ந்து நடித்துக்கொண்டே இருந்தார்… அதன்மூலம் மக்களுடன் கனெக்ட் ஆகவே இருந்தார்… விஜய் உடனடியாக படங்களில் நடிப்பதை நிறுத்திவிடுகிறார்… அதேநேரம் மீடியாக்களை அடிக்கடி சந்தித்தாலும் விஜய் சொல்வதை வேறு மாதிரி வெட்டி ஒட்டி விஜய்க்கு எதிராகவே மக்களிடம் பரப்பிவிடும் சில பணம் பெறும் அயோக்கியர்களாக மீடியாக்காரர்கள் இருக்கிறார்கள்… அதனை எப்படி கையாளப் போகிறார் விஜய் என்று தெரியவில்லை…

1990 முதல் ரஜினி அரசியலுக்கு வருவார் என்று நம்பி ஏராளமான பணத்தை வாரி இறைத்து கடனாளி ஆகி காணாமல் போனவர்களும் அதிகம்… அந்த வகையில் உங்களை(விஜயை) நம்பி வரும் ரசிகர்களை சொந்த வாழ்க்கையில் தோற்க விட்டுவிடாதீர்கள்… ரஜினி அரசியலுக்கு வருவதாக முதல்முறை அறிவித்த 2017ல் தனது ரசிகர்களுக்கு சொன்ன “முதலில் உங்க குடும்பம், தொழில், வாழ்க்கை அதை நல்லபடியாக பார்த்துக்கொள்ளுங்கள்.. அதன்பிறகு நேரமும் ஆர்வமும் இருந்தால் அரசியலுக்கு வாருங்கள்” என்ற அறிவுரையை நீங்களும் உங்களை வெறித்தனமாக ரசிக்கும் ரசிகர்களுக்கு சொல்லுங்கள்…

இந்தியாவின் எல்லா மாநிலங்களும் இன்று வாரிசு அரசியலின் கீழ் தான் நிலைபெறுகின்றன. இப்படித் தொடர்ந்து வாரிசுகளின் பேரில் பதவியை பிடிக்கும் எவரும் அங்கே நல்லாட்சி கொடுத்ததாக வரலாறு இல்லை..

இப்படியாக, 40 ஆண்டுகளுக்கு மேலான அரசியல் களத்தில் அனுபவம் கொண்டமூத்த அரசியலாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணனின் கருத்துகளை ஆமோதிக்கும் வகையில்தான், 40 ஆண்டுகளுக்கு மேலாக ஆங்கில ஊடகத்துறையில், சமரசத்திற்கு ஆட்படாமல் இயங்கிக் கொண்டிருக்கும் மூத்த ஊடகவியலாளர் இளங்கோவன் ராஜசேகரனின் வாதமும் முன் நிற்கிறது…

I Welcome vijay. அண்ணாமலை போன்ற, சீமான் போன்ற கண்ணியம் முற்றிலும் துறந்து அரசியலை கீழ் நிலைக்கு நகர்த்த முயற்ச்சிக்கும் இந்த் கால கட்டத்தில், விஜய் போன்றவர் வருவது நலமே என்று நம்புகிறேன். பார்ப்போம். மாற்றம் என்றும் மாறாதது என்று சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார் இளங்கோவன் ராஜசேகரன்.

அரசியல் களத்தில் அனுபவமிகுந்தவர்களின் எண்ணவோட்டத்திற்கு ஏற்பவே, திரைப்பட விமர்சகரான புளு சட்டை மாறனும், நடிகர் விஜயின் அரசியல் பயணத்தை வரவேற்கவே செய்துள்ளார்.

ரஜினியை போல 25 வருடம் ரசிகர்கள் தலையில் மிளகாய் அரைத்து.. கடைசியில் கட்சி ஆரம்பிக்காமல் ஓடவில்லை. கமலைப்போல பார்ட் டைம் அரசியலும் செய்யப்போவது இல்லை. அந்த வகையில் இருவரையும் விட விஜய் எவ்வளவோ மேல் என்று தெரிவித்துள்ள புளு சட்டை மாறன்.,

யாருக்கு எதிரான அரசியலை விஜய் முன்னெடுப்பார் என்றும் என்ன கொள்கை என்பதைப்பொறுத்து பாராட்டவோ, விமர்சிக்கவோ படலாம் என்று கூறியிருக்கிறார் புளு சட்டை மாறன்.

நடிகர் விஜயின் அரசியல் அரிதாரம், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் எந்தவொரு தாக்கத்தையும் உடனடியாக ஏற்படுத்தாது என்றாலும் கூட, 2026 சட்டப்பேரவைத் தேர்தலை நோக்கி விஜய் பயணிப்பது, ஆளும்கட்சியான திமுகவுக்கு மிகப்பெரிய ஆபத்தாகவே முடியும் என்கிறார்கள் அரசியல் திறனாய்வாளர்கள்.

ஊழல் மலிந்துவிட்ட தமிழ்நாட்டில், எந்தவொரு அவதார புருஷர் தோன்றி ஊழலற்ற ஆட்சியை தருவார் என்று காலம் காலமாக ஏக்கத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ்நாட்டின் பெரும்பான்மையான நடுத்தர மக்களுக்கு, அரசியல் அரிதாரத்தை பூசியிருக்கும் நடிகர் விஜயின் அதிரடி வருகையால், ஒருவிதமான நிம்மதியையும், மாற்றம் வந்து விடும் என்று நம்பிக்கை கொண்டிருக்கும் அப்பாவிதனத்தையும் இன்றைய தேதியில் கேலி செய்வது சரியாக இருக்காது என்கிறார்கள் ஜனநாயகவாதிகள்.

ஆர்ப்பாட்டம் இல்லாத, அநாகரிக வார்த்தைகளை பொது தளங்களில் உச்சரிக்காத நடிகர் விஜய் மீது விழுந்திருக்கும் நல்ல மனிதர் என்ற பிம்பம், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதும், எந்தவொரு சூழலிலும் தன்னியல்பை இழந்து விடாத வகையில் பயிற்சி அளிக்கப்படும் காவல்துறையில் இருந்து அரசியல் களத்திற்கு வந்திருக்கும் தமிழ்நாடு பாஜக தலைவர் கே.அண்ணாமலை மீதும் படராத நேரத்தில், நடிகர் விஜயின் அரசியல் வருகையை ஏற்றுக் கொள்வதை தவிர வேறு வழியில்லை என்கிறார்கள், திராவிடத்திற்கும் தமிழ் தேசியத்திற்கும் மாற்றான அரசியல் பாதையை எதிர்நோக்கியிருக்கும் மேல்தட்டு மக்கள்..

2026 ல் முதல் அமைச்சர் வேட்பாளர் என்று மூவரை மட்டுமே முன் நிறுத்துகிறார்கள் அரசியல் கள ஆய்வாளர்கள். அந்த வரிசையில், வாரிசு அரசியல் எனும் குற்றச்சாட்டை சுமந்திருக்கும் திமுகவின் அடுத்த தலைவர் உதயநிதி ஸ்டாலின், மத்தியில் 2024லும் பாஜக ஆட்சி தான் அமையும் என்ற வாதம் உச்சத்தில் எழுந்திருக்கும் நிலையில், மத்திய அரசின் ஆதரவோடு முதல் அமைச்சர் பதவி மீது கண் வைத்திருக்கும் கே.அண்ணாமலை. திராவிடமும் வேண்டாம், தேசியமும் வேண்டாம்.. தமிழ் தேசம் அமைய வேண்டும் என்று முழங்கத்திற்கு ஆதரவு பெருகி வரும் இந்தநேரத்தில், தனித்து போட்டியிட்டே அரசியலில் வெற்றி பெற்று விடுவேன் என்ற மனவுறுதியோடு இருக்கும் சீமான் ஆகியோரின் கனவை, சில்லு சில்லாக உடைத்தெறியும் அரசியல் வியூகம், நடிகர் விஜயிடம் இருக்கிறதா என்ற கேள்வி, பலமுனைகளில் இருந்து எழுந்தாலும் கூட, 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தின் மீது படிந்திருக்கும் ஊழல் கறையை, அரசியலில் புரையோடியிருக்கும் ஒழுங்கீனத்தை துடைப்பதற்காக வாழ்க்கையையே இழந்து நிற்கும் சமூக ஆர்வலர்கள், அரசியல் உலகில் புதிய தலைவராக காலடி எடுத்து வைத்திருக்கும் விஜயை, தூக்கி சுமப்பதற்கு தயாராகவே இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை என்கிறார்கள் அரசியலில் இன்றைக்கும் நேர்மையுடன் பயணித்துக் கொண்டிருக்கும் மூத்த அரசியலாளர்கள்.

தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை என்னவென்றால் கேட்டால், அய்யோ தலைவலிக்கிறது ஆளை விடுங்கள் என்று புறமுதுகு காட்டும் திரையுலக ஜாம்பவான் போல, நடிகர் விஜய் இருக்க மாட்டார் என்பதற்கு, அரசியல் கட்சியை முறையாக பதிவு செய்து இருக்கும் நேர்த்தியிலும், புதிய கட்சி அறிவிப்பை வெளியிட்ட கையோடு, செய்தி தொடர்பாளர்கள் பட்டியலை அறிவித்திருக்கும் நுட்பத்திலும், விஜயின் அரசியல் வியூகம் வெளிப்படுகிறது என்றும் மாநில சுயாட்சி, இட ஒதுக்கீடு, மொழி ஆளுமை உள்ளிட்ட தமிழ்நாட்டின் உயிர்நாடியான அம்சங்களில் குறைந்தபட்ச தெளிவுடனாவது விஜய் இருப்பார் என்று ஆறுதல் அடையும் அளவுக்குதான் விஜயின் அரசியல் முதல் அடி அமைந்திருக்கிறது என்கிறார்கள், அரசியல் பயணத்தில் தோல்வியை தழுவியிருக்கும் திரையுலக பிரபலங்கள்.

59 thoughts on “3 ஆயிரம் கோடி ரூபாயை இழக்கும் விஜய்.. அரசியல் அரிதாரத்திற்கான விலை அதிகம்.. நடிகர்கள்,நாடாள ஆசைப்படுவது நியாயமா?என எகிறும் எதிர்ப்பு…”
  1. Woah! I’m really enjoying the template/theme of this blog. It’s simple, yet effective.
    A lot of times it’s very hard to get that “perfect balance” between usability and visual appeal.
    I must say you’ve done a awesome job with this. Also, the blog
    loads very fast for me on Firefox. Superb Blog!

Comments are closed.